எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த வேதாசலனார் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றி வந்தார்.
1910ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம், தம் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களும் கட்டாயம் தமிழ் கற்க வேண்டியது இல்லை என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது.
தாய்மொழிப் பாடங்கள் விருப்பப் பாடங்கள் என்ற முறைமையில் தீர்மானம் வந்தபோது உறுப்புக் கல்லூரிகளில் ஒருவரும் அந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் பல தமிழாசிரியர்கள் பணி இழக்க நேரிடும். அதில் வேதாசலனாரும் ஒருவர். இதனால் பலரும் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர்.
கிறித்தவக் கல்லூரி தாளாளர் மில்லர் அவர்கள் வேதாசலனாரைப் பணியில் இருந்து மாற்றாமல் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றிட கூறினார். வேறு சில நண்பர்களும் நிர்வாகத்தினரும் தங்கள் கல்வி நிறுவனங்களுக்குப் பணியாற்ற வருமாறு அழைத்தனர்.
தமிழ்நாட்டில் தாய்மொழியாகத் திகழும் தமிழ், விருப்பப் பாடமாக இருந்தால் வரக்கூடிய காலங்களில் தாய்மொழி படிப்போரின் நிலை மாறிவிடும் என்று வேதாசலனார் வருந்தினார்.
பணியைத் துறந்து துறவு மேற்கொள்ளலாம் என்ற எண்ணமும் வேதாசலனாரின் எண்ணத்தில் தோன்றி வந்தது.
1898ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 1911 வரை சிறப்பான மாணவர் கூட்டத்தை உருவாக்கி வந்தார். 13 ஆண்டுகால தமிழாசிரியர் பணியைத் துறந்து, துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் வேதாசலனாருக்கு வாய்த்தது.
1911ஆம் ஆண்டு சென்னை கிறித்தவக் கல்லூரி பணியைத் துறந்து சென்னைக்கு வெளியே அமைந்துள்ள பல்லாவரத்தில் குடியேற முனைந்தார்.
சென்னை நகருக்கு வெளியே புறநகர்ப் பகுதியாக விளங்கிய பல்லாவரம் மிக அமைதியான இடமாக இருந்தது. அதனால் அவ்வூரில் குடியேற விரும்பி பல்லாவரம் மாளிகையில் குடியேறினார்.
சில மாதங்களில் அங்கே அவருக்கு திரிபுரசுந்தரி என்ற அழகிய மகவு பிறந்தது. ஆறு நன் மகவுகளுக்குத் தந்தையாய், குடும்பத்திற்குத் தாயுமானவராக விளங்கிய வேதாசலனாருக்கு வயது 35. அந்த முப்பத்தைந்து வயதில் துறவு எண்ணத்தில் இருந்த வேதாசலனார், மகள் பிறந்த சில மாதங்களில் துறவு வாழ்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.
வேதாசலனார் சிவராசயோக இராசானந்த அடிகளிடம் மந்திர உபதேசம் பெற்றிருந்தார். மேலும் தம் உள்ளக் கோயிலில் மூவர் பெருமக்களில் ஒருவரான திருஞானசம்பந்த சுவாமிகளைக் குருவாக எண்ணினார். அதனை நினைவுறுத்தி தன் மகன் திருஞானசம்பந்தனை, காவியாடைகளையும் உருத்திராக்க மாலையையும் எடுத்துத் தரச் சொல்லி துறவு பூண்டார்.
வேதாசலனார் என்ற பெயர், சுவாமி வேதாசலம் என்ற முறைமையில் மாறியது. தன் தாயார் கண்ணீர் சிந்த, மனைவி வருந்த, அவரின் மக்கள்களுக்குத் துறவு என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் வேதாசலனார் துறவியானார்.
சென்னை கிறித்தவக் கல்லூரி பணியில் இருந்தபோது, பல ஊர்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு உரையாற்ற செல்ல இயலாமல் இருந்தது. தற்போது துறவியானதால் பல ஊர்களில் நடைபெறும் கூட்டங்களுக்கு எவ்வித தடையும் இன்றி செல்ல இயன்றது.
தமிழகம் முழுமையும் பல ஊர்களில் சுவாமி வேதாசலனாரை அழைத்து உரையாற்ற வைத்தனர். சில ஊர்களில் பல்லக்கில் அமர வைத்து ஊர்வலம் வரச்செய்து சிறப்பும் செய்தனர்.
ஒருமுறை ஒரு நிகழ்வுக்கு வேதாசலனாரை உரையாற்ற அழைத்தால் அவரின் செம்பொருள் தமிழ் உரையில் மகிழ்ந்து மீண்டும் மீண்டும் அவரை அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
வேதாசலனார் தம் நாட்குறிப்பில், ‘தற்போதைய நிலையில் துறவு பூண்டு மிக நல்ல நிலையில் தமிழ் வளர்க்கும் பாங்கு இறையருளால் எனக்கு வாய்த்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் மிக முக்கியப் பேச்சாளராக மாறிய வேதாசலனார் தமிழகம் முழுவதும் சென்று உரையாற்றி பற்பல கருத்துகளைப் பரப்பினார்.
எந்த ஊருக்குச் சென்றாலும் தன் விழாக்களிலும் நேர மேலாண்மை மிகச்சரியாகக் கடைபிடித்து விழா நடப்பதை உறுதி செய்வார். நிகழ்வு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அவ்வூரில் சென்று தனி இல்லத்தில் தங்கி ஆயத்தமாகுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
வேதாசலனாரின் புகழால் அவரின் நூல்கள் பன்மடங்கு விற்பனையாகின. எங்கும் தமிழ் பரப்பிய வேதாசலனார் தமிழ் பரப்பும் பணியைத் தம் உணர்வாக உணர்ந்து செய்து வந்தார்.
(தொடரும்)

