பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட யானைகளின் ஆய்வு, டாக்டர் கே பணி ஓய்வு பெற்ற பின் ஏற்றுக்கொண்ட ஒரு பொறுப்பு என்று முன்பே பார்த்தோம். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நடந்த அந்தக் கள ஆராய்ச்சி, காட்டு யானைகளைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள உதவியது. அதுவரை தெரியாத பல உண்மைகளை அது வெளிக்கொணர்ந்தது. இந்தியாவிலேயே முதன் முறையாக இது போன்ற ஒரு ஆய்வு முதுமலையில்தான் தொடங்கப்பட்டது. அதன் பின், பலர் இன்று வரை ஆய்வுகளைத் தொடர்ந்து செய்தாலும், அவற்றுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்தது டாக்டர் கே தலைமையில் நடந்த கள ஆய்வே. கே, அதன் தலைவராக இருந்தது, இன்னும் அந்த ஆய்வு பரிமளிக்க உதவியது. காரணம், டாக்டர் கே ஒரு குழுவாகப் பணி புரிவது எப்படி என்பதில் தேர்ச்சி பெற்றவர். இன்னின்ன வேலைகள், இன்னின்னார் செய்ய வேண்டும் என்று நிர்ணயம் செய்வதில் வல்லவர். இன்னாருக்கு இன்ன வேலையைத் தர வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனை கொண்டவர். அதனால், அவரவர் வேலை நன்கு வரையறுக்கப்பட்டு, குழப்பமில்லாது, அவரவர் வேலை செய்ய எளிதாக இருந்தது. அதில்தான் அவர் திறமை அடங்கி இருந்தது. பலர் நினைப்பதுபோல, மிரட்டி வேலை வாங்குவதில் அல்ல. அல்லது, தன் பதவியை வைத்து எல்லோரையும் விருப்பமின்றி வேலை வாங்குவதிலும் இல்லை.
எந்த யானையைப் பிடித்து காலர் (கழுத்துப்பட்டி) இட வேண்டும் என்பதை டிராக்கர்கள் (வழிகாட்டி அல்லது காட்டறிவு மிக்க பழங்குடிகள்) மற்றும் இளம் ஆய்வு மாணவர்களும் காட்டில் சில நாட்கள் அலைந்து திரிந்து கண்டுபிடிப்பார்கள். ஒரு யானைக் கூட்டத்தை, அதற்காகச் சில நாட்கள் பின் தொடர்ந்து செல்வார்கள். எல்லாம், நடந்துதான். காரணம், இந்தப் பகுதியில் உள்ள காடு, ஒரு தொட்டில்போல. மேடு பள்ளங்கள் நிறைந்தது; புதர்களும், மரங்களும் மண்டிக் கிடக்கும்; குறுக்கே பல நீரோடைகள் செல்லும்; பாறைகள் மற்றும் கற்கள் விரவிக் கிடக்கும். ஒரு நாள் குறித்து, இன்ன இடத்தில் அந்தக் கூட்டத்தை எதிர்கொண்டு குறிப்பிட்ட யானையை மயக்க ஊசி செலுத்தி, பிடிக்க முயற்சி செய்வர்.
அந்த இடத்துக்கு, டாக்டர் கே இரண்டு மூன்று கும்கி யானைகளுடன் செல்வார். கும்கிகள், மயக்கமடைந்த யானையைப் புரட்டிப் போட அல்லது வேறு பணிகளுக்குத் தேவைப்படும். கூடமாட உதவ, சில பழங்குடி மக்களும் செல்வர். யானை மயங்கி விழுந்ததும், டாக்டர் கேயின் ராஜ்ஜியம் தொடங்கும். அதன் உடல் நிலை, மருந்தால் ஏற்பட்ட வெப்பம், மற்றும் ஆரோக்கிய அலகுகள் சரியாக உள்ளனவா என்று சரிபார்த்தபின், காலரை மாட்ட உதவுவார். மாட்டி முடிந்ததும், யானையை மீண்டும் எழச் செய்ய மாற்று மருந்தை ஊசி மூலம் செலுத்துவார். அதன் பின், விரைவாக கும்கியின் மேல் ஏறி சற்று தூரம் விலகிச் சென்று விடுவார். வேகமான நடையில் ஒரு நூறு மீட்டர் தொலைவு சென்று பாதுகாப்பாக இருந்து கொள்வார். மற்றவர்களும் அவருடன் பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விடுவார்கள். அதன்பின் யானை எழுந்ததும், ஒரு சில டிராக்கர்கள் மட்டும் இருந்து, யானை என்ன செய்கிறது என்று பார்த்து விட்டு வருவார்கள். அவர்கள் பாதுகாப்புக்கு அருகில் உள்ள ஏதாவது பெரிய உயரமான மரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள்.
இப்படி, இந்தப் யானை பிடிக்கும் வேலை, பலரை உள்ளடக்கியது. எல்லோரும், ஒன்றாக இணைந்து, ஒரே ஒத்திசைவில் வேலை செய்தால்தான், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல், இந்தப் பணி வெற்றி பெறும். ஆகவே, அவரவர் பணியை நன்றாக எண்ணை இடப்பட்ட இயந்திரம்போல சீராகச் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். அதற்கு டாக்டர் கே, சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து அமர்த்தி இருப்பார். டிராக்கர்கள், நல்ல அனுபவம் வாய்ந்த கிருஷ்ணன், பொம்மன் மற்றும் சென்னன். இவர்கள், மொத்தக் காட்டையும், அவர்கள் உள்ளங்கைபோல அறிந்தவர்கள். எல்லா மூலை, முடுக்கையும் அறிந்தவர்கள். அத்துடன், யானைகளைப் பற்றியும், அவற்றின் பழக்க வழக்கங்கள், குணங்கள் குறித்தும் நன்கு அறிந்து உணர்ந்தவர்கள். யானையைப் பின்தொடர்வது, அவர்களுக்குக் காதலியைப் பின் தொடர்வது போன்ற ஒரு ஜாலியான சமாசாரம். இந்தக் காட்டிலேயே பிறந்து, தினமும் யானைகள், மற்ற விலங்குகளுடன் வாழ்ந்து பழகியவர்கள். அதனால், பயம் என்பது அவர்கள் அறியாத ஒன்று. இதனால்தான், சிறந்த யானை ஆராய்ச்சியாளரான அஜய் தேசாய், தனது நன்றியுரை குறிப்பில், ‘ யானையை எப்படிப் பின் தொடர்வது என்று கற்றுக் கொடுத்த எனது டிராக்கர்கள் கிருஷ்ணன், பொம்மன் மற்றும் சென்னன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்’ எனக் குறிப்பிடுகிறார்.
நான் முன்பே சொன்னதுபோல, இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கிருஷ்ணன் தான் வழிகாட்டி. மற்ற இருவரும் இன்று உயிருடன் இல்லை. மற்றொரு யானை ஆராய்ச்சியாளர் சிவகணேசனும், கிருஷ்ணனின் திறமையை மிகவும் சிலாகித்து சொல்வார்.
அடுத்தது, மருத்துவக் குழு. டாக்டர் கே தலைமையில், திரு. மணி, ஆய்வாளர் மற்றும் ஓர் உதவியாளர் கொண்டது இந்தக் குழு. இவர்கள் கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஒன்றாகப் பணி புரிந்ததால், அவர்களுக்குள் இருந்த ஒத்திசைவு, காணக் கிடைக்காது. அடுத்து என்ன என்பதை டாக்டர் கே சொல்லவே தேவை இல்லை. அந்தளவிற்கு அவர்களுக்குள் புரிதல் இருந்தது. மயக்க ஊசி செலுத்த, சில நேரங்களில், கேரளாவில் இருந்து மருத்துவர் சீரன் வருவார்; சில நேரங்களில் கேவே செய்வார்; சில நேரங்களில் மணியும் செய்வார். இந்தத் திட்ட காலத்தில், கர்நாடகாவில் இருந்து மருத்துவர் காதிரியும் சில நேரங்களில் உதவியதுண்டு. திட்ட ஆய்வாளர் என்ற முறையில், சில சந்தர்ப்பங்களில், அஜய் தேசாயும் மயக்க ஊசி செலுத்தியதுண்டு. ஏனெனில், ஆராய்ச்சியாளர்களும், இந்தப் பயிற்சி பெற்றிருப்பது நல்லது என்ற காரணத்தால். அதன் பின், ஒன்றிரண்டு உதவியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் எடுபிடி வேலைகளுக்குப் பயன்படுவார்கள். இறுதியில், கும்கிகளும், அதன் மாவுத்தர்களும், மயங்கி விழுந்த யானையை வேண்டிய நிலையில் கிடத்தவும், தூக்கிப் பிடிக்கவும், இதர சிறிய பணிகளுக்கும் பயன்படும். இப்படியாக இது கோலாகலமாக, ஒரு திருவிழாபோல இருக்கும். ஆனால், நடப்பது ஒரு முனைப்பான ஆராய்ச்சி. இது பற்றி அடுத்த அத்தியாயத்தில் முனைவர் ஜே.சி. டானியலின் அனுபவத்தைச் சொல்லும்போது புரியும்.
யானைத் திட்டத்திற்கு இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடம், அந்நாட்களில் கரடி பங்களா என்று எல்லோராலும் வேடிக்கையாகக் குறிப்பிடப்படுவதுண்டு. காரணம், அது அந்தக் காலத்தில் கரடிகள் வாழ்ந்த ஒரு கைவிடப்பட்ட சிதிலமான அரசு கட்டடம். எல்லா இடங்களிலும் நாம் அரசுக்குச் சொந்தமான இதுபோன்ற கட்டிடங்களைப் பார்க்கலாம். காட்டில் இது சகஜம். கார்குடி குடியிருப்பில் இருந்து காட்டின் உள்ளே செல்லும் வழியில் மேல்கார்குடியில் மூங்கில் பண்ணையை அடுத்து இருந்த ஒரு பாழடைந்த கட்டடம். அங்கிருந்து பென்னே மற்றும் தெப்பக்காடு போக காட்டு வழிகள் உண்டு. எந்நேரமும் அங்கு காட்டு விலங்குகளின் நடமாட்டம் இருந்ததில் வியப்பில்லை. இந்த பங்களாவை எடுத்து, வனத்துறை உதவியுடன் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் புனரமைத்தது. அங்கு நான்கு படுக்கை அறைகள், ஒரு சமையலறை அமைத்து, சில அத்தியாவசிய தேவைகள் உள்ள ஒரு காட்டு பங்களாவாக மாற்றினர். அந்த இடமும் சூழலும் எப்படி இருந்தது என்பதை நண்பர் திரு. கோகுலா விளக்குவதைக் கேட்டால், ஓரளவு புரியும். ‘ டிசம்பர் 1990 ஒரு நாளின் மாலை நேரத்தில் முதுமலை சரணாலயத்தில் மேல்கார்குடியில் அமைந்துள்ள ‘கரடி பங்களா’வின் வெளியில் உள்ள சாலையில் நானும் பாஸ்கரனும் அமர்ந்து பென்னேவுக்குச் செல்லும் மற்றொரு சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். டாக்டருக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். அச்சாலையில் மேல்கார்குடியைத் தங்கள் இடமாக்கி கொண்டிருக்கும் ஒரு செந்நாய்க் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்தது. இது ஒரு வழக்கமான நிகழ்வு என்று பாஸ்கர் என்னிடம் கூறினார். எனக்கு இது புதிது. நான் ஒருநாள் முன்தான் முதன்முதலாய் முதுமலைக்கே வந்தேன். அவை ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்தன. சாலையில் துள்ளுவதுமாய், ஒன்றை ஒன்று துரத்துவதுமாய், ஆங்காங்கே சாலையில் கழிவுகளைப் போடுவதுமாய் இருந்தன. ஒரு அரை மணி நேரத்திற்குப் பின் அவை இடம் பெயர்ந்தன’ எனச் சொல்கிறார் அவர்.
இரவில் யானைகள் சர்வ சாதாரணமாக அங்கு உலாவும். ஏனென்றால், அந்தக் குடியிருப்பை அடுத்து ஒரு பலா மரம் இருக்கும். அந்தப் பலாவை ருசிக்க யானைகள் வருவது இயல்புதானே. இந்த பங்களாதான், ஆராய்ச்சியாளர்களும், டாக்டர் கேவும் தங்கியிருந்த இடம். டாக்டர் கே தன்னுடைய மாதாந்திர வருகையின்போது, அங்குள்ள எல்லோருக்கும் தானே சமைத்து வைப்பார். மற்ற நாட்களில், பொம்மன்தான் நிரந்தர சமையல்காரர். கிருஷ்ணன் சிவகணேசனுக்கு டிராக்கர்; சென்னன் அஜய்க்கு டிராக்கர். அப்போது சூப்பரின்டெண்டன்ட் ஆக இருந்த திரு.பத்மநாபன் இது பற்றி என்னிடம் மிகவும் விளக்கமாக பேசினார். ‘டாக்டர் கே, சுத்த சைவம். ஆனால், அசைவம் மிக அருமையாகச் சமைப்பார். அதற்கு வேண்டி, தனியாக ஒரு குக்கர் வாங்கி வைத்திருந்தார். 1988, 1989 புது வருடம் அங்குதான், அவருடன் கொண்டாடப்பட்டது. புது வருடத்தன்று காலையில் எங்கள் எல்லோருக்கும் பூரி, மசாலா, சிக்கன் என்று அமர்க்களப் படுத்தினார். நாங்கள் இருவரும் புகை பிடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் ஆதலால், சிகரட்டுகளை நாங்கள் பகிர்ந்து கொள்வோம். அவர் அங்கிருக்கும் மற்ற நாட்களில், காலை பத்தரை மணிக்கு எல்லோருக்கும் சுடச் சுட காப்பி கொடுப்பார். ஏனெனில், அதிகாலை ஐந்தரைக்கெல்லாம் எழுந்து காட்டுக்குச் சென்று களப் பணி செய்து திரும்பி வந்தவர்கள் களைப்பு தீர, இந்தக் காப்பி உதவும். எனக்கும் அதில் பங்கு கிடைக்கும். அதேபோல, மாலை மூணரைக்கு சுடச் சுட காப்பியும் வடையும் தருவார். அவர் இருக்கும் நாட்களில் இந்த முறைமை தப்பாது’ என்கிறார். இப்போது, உங்களுக்கு, இந்த கரடி பங்களாவில், டாக்டர் கே எப்படி இளம் ஆராய்ச்சியாளர்களுடன் இனிமையாகப் பணி புரிந்தார் என்பது புரியும். ஒரு குழு எப்படி வேறுபாடுகள், அகங்காரம் மற்றும் பதவி மோகம் இல்லாமல் இணைந்து வாழ்வது என்பதன் எடுத்துக்காட்டு.
கிரிஸ் வெம்மர், மற்றொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் சொல்கிறார். கரடி பங்களாவை ஒட்டி இருந்த காட்டில் வாழ்ந்த ஒரு மலை அணில், இந்தக் கூட்டத்துடன் நன்றாகப் பழகி விட்டது. அது கரடி பங்களாவையும் தனது மற்றொரு இருப்பிடமாகச் செய்து கொண்டது. அது அந்த பங்களாவில் போகாத இடமில்லை. தொல்லை செய்யாத ஆளில்லை. மிகச் சுவாதீனமாக அந்த மலை அணில், டாக்டர் கேயின் தோளில் ஏறி அமர்ந்து கொள்ளும். அதன் முன்னங்கால்களால், டாக்டர் கேயின் வழுக்கைத் தலையைத் தடவிப் பார்க்கும். உடனே, டாக்டர் கே, ‘என் வழுக்கைத் தலையை அது தேங்காய் என்று நினைத்து விட்டது,’ என்று சொல்லி சிரிப்பார். அணிலுக்கும், அங்கு செய்யப்படும் எல்லா உணவும் கொடுக்கப்படும். என்னுடைய ஒரே வருத்தம், யாரும் மலை அணில் டாக்டர் கேயின் தோளின் மேல் இருக்கும் புகைப்படம் எடுக்கவில்லையே என்பதுதான். எடுத்திருந்தாலும், பத்திரப்படுத்தவில்லையே என்பதுதான். அது ஓர் அற்புதமான நிகழ்வின் சாட்சியாக இருந்திருக்கும். அதுபோல, சென்னனின் பேய்க் கதையும் சுவாரஸ்யமானதுதான் என்றாலும், நம் தலைப்புக்கு தொடர்பில்லை என்பதால், விட்டு விடுகிறேன்.
(தொடரும்)
