Skip to content
Home » டார்வின் #30 – புத்துயிர்ப்பு

டார்வின் #30 – புத்துயிர்ப்பு

சிகிச்சை காரணமாக இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்தது டார்வினின் மூளையை மந்தமாக்கி இருந்தது. சிந்தனைகள் கொஞ்சம் தடைப்பட்டன. ஆனால் வீட்டிற்குத் திரும்பி புத்தகங்களைப் பார்த்தவுடன் மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. உற்சாகமாகத் துள்ளிக் குதித்து ஆய்வுகளைத் தொடங்கினார். ஒருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே ஆய்வு சார்ந்த பணிகளில் ஈடுபட வேண்டும் என கல்லி எச்சரித்து அனுப்பி இருந்தார். டார்வினுக்கு இருந்த உற்சாகத்தில் எச்சரிக்கைகள் எல்லாம் மறந்துபோயின.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அறிவியல் சங்கங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார் டார்வின். நான்கைந்து ஆண்டுகள் இடைவெளியில் அங்கிருந்தவர்களுக்கு டார்வினின் முகமே மறந்துபோயிருந்தது. ஆனால் டார்வின் திரும்பி வந்த சந்தோஷத்தில் அவரைக் கட்டியணைத்து வரவேற்றனர்.

புதிய அறிவியலாளர்கள் அறிமுகப்படுத்திக்கொண்டு டார்வினிடம் தங்கள் கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்தனர். விவாதம் நடத்தினர். புதிய ஆய்வுகளில் போதாமைகளே தென்பட்டன. பல ஆய்வுகள் அவசரம் அவசரமாக முடிக்கப்பட்டிருந்தன. ஆய்வாளர்களின் நோக்கம் இயற்கையின் புதிர்களை விவரிப்பதாக இருக்கவில்லை. தங்கள் பெயரைக் கண்டுபிடிப்புகளுக்குச் சூட்டுவதில்தான் அவர்களுடைய வேகம் இருந்தது.

அப்போதைய அறிவியல் ஆய்வுகளில் ஒரு அரசியலும் கலந்திருந்தது. விலங்குகளைப் பெயரிடுவதற்குப் பின்னும் ஓர் அரசியல் இருந்தது. பெயரிடுவது என்பது உடமை ஆக்குவது. சொந்தம் கொண்டாடுவது. ஒரு புதிய உயிரியைக் கண்டுபிடித்து பெயரிடுவது அறிவியலுக்கு உதவும் அதேசமயத்தில் அதன் சந்தை மதிப்பையும் உயர்த்தும். இதனாலேயே பலர் வேகம் வேகமாக ஆய்வு செய்து தங்கள் பெயரைச் சூட்டிக்கொண்டனர். ஆனால் டார்வினுக்கு ஒரு புதிய உயிரினத்தில் மற்றொருவருடைய பெயரை இணைப்பது பிடிக்காது. இத்தனைக்கும் டார்வினின் பெயரே பல உயிரிகளுக்குச் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் அவர் பெயரிடுவதை வெறுத்தார். பெயரிடுவதற்காக வேகமாக ஆய்வுகளை செய்யக்கூடாது. மெதுவாக, கவனமாக செய்வதே ஆய்வுகளை மேம்படுத்தும் என்று உரையாற்றினார்.

டார்வினின் இத்தகைய வாதங்களைக் கேட்டு பழைய டார்வின் வந்துவிட்டதாக மகிழ்ந்தனர் நண்பர்கள்.

பிரிட்டிஷ் அரசு தாமாக முன்வந்து டார்வினின் உதவியை நாடியது. அப்போது இங்கிலாந்திலிருந்து எல்லா நாடுகளுக்கும் கப்பல்கள் பாய்ந்துகொண்டிருந்தன. அதில் பயணிக்கும் மாலுமிகளுக்கு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள பயிற்சி அளிக்குமாறு டார்வினைக் கேட்டுக்கொண்டது அரசு.

டார்வினுக்கு ஏற்கெனவே இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முடிக்க வேண்டி அவசரம் இருந்தது. எப்போதோ கண்டடைந்த முடிவுகள் பல ஆண்டுகளாக பிரசூரம் ஆகாமல் இருந்தன. அலசிகள் ஆய்வு வேறு இன்னொரு பக்கம் பல ஆண்டுகளாக நீண்டு கொண்டிருந்தது. இதில் அரசுக்கு வேறு உதவ வேண்டுமா?

ஆனால் அறிவியல் மேல் உள்ள ஆர்வத்தில் ஒப்புக்கொண்டார் டார்வின். வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் மாலுமிகள் எப்படி அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசின் அதிகாரப்பூர்வ வழிகாட்டல்களை எழுதினார். எப்படி அதிகாரிகள் புவியியலை ஆராய வேண்டும், இயற்கையைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும், எப்படி இயற்கை பூமியை வடிவைத்து வருகிறது. நில அரிப்பு, படிமங்கள், பவளத் திட்டுகள் எப்படி உருவாகின? தொல்லுயிர் எச்சங்களை எப்படிச் சேகரிக்க வேண்டும்? மாதிரிகளை எப்படிப் பாதுக்காக்க வேண்டும்? இப்படி அடிப்படையில் இருந்து எழுதி, அதற்கான வழிகாட்டுதல்களையும் கொடுத்தார் டார்வின். எதிர்கால விஞ்ஞானிகளுக்கு உதவும் என்பதால் சிரமம் பார்க்காமல் செய்து முடித்தார்.

0

1848 மீண்டும் பாரிஸில் புரட்சி ஏற்பட்டது. ராணுவம் கலகத்தில் ஈடுபட்டது. பிரான்ஸ் தன்னைத்தானே குடியரசாக அறிவித்துக்கொண்டது. இங்கிலாந்துக்கும் செய்தி பரவியது. இங்கிலாந்திலும் புரட்சிகரவாதிகளின் எழுச்சி ஏற்படலாம் என்கிற வதந்தி பரவியது. செல்வந்தர்கள் சொத்துக்களைப் பாதுகாக்கவும், தங்கள் உயிர்களைப் பாதுகாக்கவும் நகரங்களில் இருந்து வெளியேறினர். டார்வினின் விஞ்ஞான நண்பர்கள்கூட புரட்சி வந்தால் சண்டையிடுவதற்கு ராணுவப் பயிற்சி பெற்று வந்தனர். எல்லாப் பொது இடங்களிலும் ராணுவம் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லா இடங்களும் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டன.

டார்வின் எந்த அரசியலிலும் தலைகாட்டாமல் அமைதியாகத் தன் அறிவியல் ஆய்வுகளை டவுனில் மேற்கொண்டு வந்தார். ஜனவரி 15ஆம் தேதி டார்வினுக்கு எட்டாவது குழந்தை பிறந்தது. புதிய உறுப்பினர் வந்த மகிழ்ச்சியுடன் அலசிகளை ஆராய்ந்து வந்தார்.

உலகம் முழுவதிலும் இருந்தும் நண்பர்கள் அலசிகளை அனுப்பி வந்தனர். அலசிகளின் தொல் எச்சங்களும்கூட வந்திருந்தன. அதை ஆராய்ந்தபோது ஒவ்வொரு மாதிரிகளிலும் ஏராளமான வேறுபாடுகள் காணக் கிடைத்தன. இதன் மூலம் விலங்கினங்களின் உடலில் எல்லா இடங்களிலும் வேறுபாடுகள் நிகழ்கின்றன என டார்வினுக்குப் புரிந்தது. பத்தாண்டுகளுக்கு முன் வேறுபாடுகள் அரிதாக நிகழக்கூடியது என டார்வின் நம்பிக்கொண்டிருந்தார். இப்போது எல்லா உயிரினங்களும், அவற்றின் எல்லாப் பகுதிகளும் மாற்றம் காண்கின்றன என்பதை டார்வின் அவதானித்தார். வெளியே தெரியும் மாற்றம் மட்டுமல்ல, உள்ளார்ந்துகூட வேறுபாடுகள் தொடர்சியாக நிகழ்கிறது எனக் கண்டுகொண்டார்.

உயிரினங்கள் உருமாறுகின்றன என்கிற கருத்தை டார்வின் கண்டடைந்து இப்போது பத்தாண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் பல இயற்கையாளர்களும் விலங்கினங்களில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன என ஒப்புக்கொண்டனர். ஆனால் பெரிய உருமாற்றம் நிகழும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. டார்வினோ இந்தச் சிறிய மாறுபாடுகள்தான் புதிய உயிரினம் தோன்றுவதற்கான ஆரம்பக்கட்டம் என வர்ணித்தார். உருவாக்கத்தில் இருக்கும் புதிய உயிரினத்தின் ஆரம்பக்கட்டம்தான் மாறுபாடுகள் என்றார்.

இப்படி விலங்கினங்களில் அறியப்படும் ஒவ்வொரு விஷயமும் தன்னுடைய இயற்கைத் தேர்வு கோட்பாட்டில் போதாமைகள் இருப்பதைக் காட்டிக்காட்டின. இதுபோன்ற இன்னும் பல சான்றுகளைச் சேகரித்து, பல அவதானிப்புகளைத் தொகுத்து தம் கோட்பாட்டை மேலும் செழுமைப்படுத்திதான் வெளியிட வேண்டும் என்று தீர்மானம் கொண்டார்.

வீடுகளிலேயே சிறிய பண்ணை ஒன்றை அமைத்து அங்கே புறாக்களில் இருந்து புழுக்கள் வரை கிடைக்கும் எல்லா உயிர்களையும் வளர்த்து மாறுபாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

இப்படியாக இயற்கைத் தேர்வு கோட்பாடு மேலும் செழுமை அடைந்துவந்த நேரத்தில் டார்வினால் மீளவே முடியாத ஒரு சோகம் நிகழ்ந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *