Skip to content
Home » யானை டாக்டரின் கதை #29 – அட்மிரலின் கதை

யானை டாக்டரின் கதை #29 – அட்மிரலின் கதை

பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் யானை ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவராக டாக்டர் கே நியமிக்கப்பட்டது குறித்து போன அத்தியாயத்தில் பார்த்தோம். அவர்கள் ஐந்து யானைகளை ரேடியோ காலர் செய்ய அனுமதி பெற்று அதைச் செய்து முடித்தனர். எல்லா யானைகளையும் செய்தது பற்றி எழுதினால் ராமாயணம்போல ஆகி விடும் என்பதால், நன்றாக அறியப்பட்ட மற்றும் தெளிவான குறிப்புகள் உள்ள ஒரு நிகழ்வை நாம் இங்கே பார்க்கலாம். அது ஒரு மோழை (மக்னா) ஆண் யானை. முதுமலையை ஒட்டியுள்ள கிராமங்களில் பயிரை மேய்ந்து ஊர் மக்களின் வெறுப்புக்கு உள்ளாயிருந்த யானை. இது போன்ற பிரச்னைக்கு உரிய யானைகளை நாம் ஆராய்வது நல்லது, இதை ஆராய்வதன் மூலம் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்றறியலாம்; மனித மிருக மோதலின் காரணங்களை அறியலாம்; என்றெல்லாம் கருதி இந்த யானையைக் கடைசி யானையாக காலர் இட்டனர். அது பற்றி மிகத் தெளிவாக முனைவர் ஜே சி டேனியல் எழுதி உள்ளார். அதன் சாரத்தை நான் கீழே தருகிறேன்.

இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற இடம் ஆயிரத்தில் இருந்து ஆயிரத்தைந்நூறு அடி உயரத்தில் இருந்தால் நலம். ஏனெனில், அங்குதான் அதிக வெப்பமோ குளிரோ இருக்காது. முதுமலை அது போன்ற ஓர் இடம். அதனால்தான், புத்திசாலிகளான யானைகள் அங்கே அதிகம் வசிக்கின்றன. ஒரு நவம்பர் மாத குளிரான காலைப் பொழுதில், சில மனிதர்களும் கும்கி யானைகளும் இந்த முதுமலை காட்டுப் பிரதேசத்தில் இருந்த பசும் புல் வெளியில் நின்று கொண்டு இருந்தனர். யானைகளைக் குறித்த பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் கள ஆய்வின் இறுதிக் கட்டத்தில் அவர்கள் இருந்தனர். யானைகளைக் குறித்து கள ஆய்வாளர்கள் முன்பே, சமுதாய அமைப்பு, வாழ்வியல், குடும்ப முறை போன்ற பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்றாலும், அவற்றின் அன்றாட வாழ்வு மற்றும் இடம் பெயர்தல் குறித்து முடிவாக அறிய, யானைகளுக்குக் கழுத்துப்பட்டி இட்டு கண்காணிப்பது ஒரு பெரிய முன்னேற்றம்தான். காட்டில் உயிரைப் பணயம் வைத்து மரஞ்செடிகளின் ஊடே, மலை, பாறைகளைக் கடந்து இலக்கில்லாமல் அலைந்து திரிய வேண்டியதில்லை. அவை இருக்கும் இடத்தைத் தெளிவாக கழுத்துப் பட்டியில் உள்ள ட்ரான்ஸ்மிட்டர் காட்டிக் கொடுத்துவிடும்.

கழுத்துப்பட்டி ஒரு சாதாரணமான உபகரணம்தான். உறுதியான நைலான் பட்டியின் உள்ளே ஒரு ட்ரான்ஸ்மிட்டர், கோந்து (எபாக்ஸி) கொண்டு, நீர் புகாதவாறு அடைக்கப்பட்டிருக்கும். அது வெளிப்படுத்தும் நிலையான அலகு சமிக்ஞைகளை நாம் ஒரு ஆண்டெனா (Antennae) கொண்டு  உள்வாங்க முடியும். இந்த ஆண்டெனா, அந்தக் கால டிவி ஆண்டெனாவைப் போன்றதுதான். அதை வைத்து நாம் களத்தில் யானை எங்கே இருக்கிறது என்று எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இதற்கு முதலில் நாம் யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து, அதன் பின் பட்டியை மாட்டி, பின் திரும்ப காட்டில் செல்ல விட வேண்டும். இதுதான் இந்தத் திட்டத்தில் மிக முக்கியமான அங்கம். இதற்கென்று தனியாக மார்பைன் குடும்பத்தைச் சேர்ந்த மருந்தான இம்மொபிலான் பயன்படுத்தப்படும். ஐந்து டன் எடையுள்ள யானைக்குச் சுமார் ஐந்து சிசி மருந்து போதுமானது. ஆனால், இந்த மருந்தைக் கையாளும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்; கையுறை போட்டுக்கொண்டுதான் செயலில் இறங்க வேண்டும். இந்த மருந்து ஊசி யானையின் உடலில் தைத்ததும், பின்னால் இருக்கும் மருந்தை உடலில் செலுத்துமாறு வடிவமைக்கப்பட்டது.

முன் அத்தியாயத்தில் சொன்னதுபோல, மயக்க ஊசி போடும் குழு, டாக்டர் கேயின் தலைமையில் உள்ள மூன்று நான்கு பேர் அடங்கியது. இம்முறை, அதில் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தைச் சேர்ந்த ஜேசி டேனியலும் சேர்ந்து கொண்டார். வனத்துறை காவலர்கள் மற்றும் காப்பாளர், ஆராய்ச்சியாளர்கள் அஜய், சிவகணேசன், ஹேமந்த், மற்றும் கும்கிகள், அவற்றின் பாகன்கள், என ஒரு கூட்டமே அங்கிருந்தது. இவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு, நம் பழங்குடியின டிராக்கர்களான கிருஷ்ணன், சென்னன் மற்றும் பொம்மன் ஆகியோர் தந்தனர். ஏனென்றால், யானைகளின் அசைவு, மன நிலை இவற்றைச் சடுதியில் கணித்து, மற்றவர்கள் பாதிக்கப்படாமல் நடத்திச் செல்லும் திறமை படைத்தவர்கள் இவர்கள். ஆபத்தை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப மாற்று முறைகளைச் சொல்ல வல்லவர்கள். அன்று அவர்களுடன் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் சீரனும் இருந்தார். இவர் கால்நடை மருந்துகளைப் பற்றி நன்கு அறிந்தவர். குறி பார்த்து சுடக் கூடியவர். இந்தக் கள ஆய்வின் நாயகன்கள், இளம் அஜய் மற்றும் சிவாதான். அவர்தான் பட்டி போட வேண்டிய யானையைத் தேர்ந்தெடுத்தார். அது ஒரு மோழை (மக்னா). பல நாட்களாகப் பின் தொடர்ந்தும், போக்குக் காட்டிய ஐந்து டன் எடையுள்ள மிகப் பெரிய யானை. அது படுத்துறங்கிய உண்ணிச் செடி புதரின் மறு பக்கம் வரை சென்றும், அதை மடக்க முடியவில்லை. முக்கியமாக அது ஊருக்குள் புகுந்து பயிர்களை மேயும் ஒரு காட்டு யானை. அதனால், சுற்றுப்புற விவசாயிகள் பெரும் கவலையில் இருந்தனர். மற்ற கும்கி யானைகளைக் கொண்டு செல்லவும் யாரும் தயாரில்லை. ஏனெனில், அத்தனை பெரிய உருவமும், எடையும் கொண்ட காட்டு யானை இந்த மோழை.

இவர்கள் அல்லாது,  பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தைச் சேர்ந்த திட்டக்குழுத் தலைவர் அட்மிரல் (கடற்படை தளபதி) அவடி, சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு குழுமத்தின் பீட்டர் ஜாக்சன் ஆகியோரும் இருந்தனர். அவர்கள் நமது இளம் ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு களப் பணி ஆற்றுகிறார்கள் எனப் பார்க்க வந்திருந்தனர். அஜய் மற்றவர்களோடு கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். சிவகணேசன் அவரைப் பின் தொடர்ந்து செல்வதென முடிவாயிற்று. சிவாவும் சிறந்த கள நிபுணர். கும்கிகள், பாகன்கள், மருத்துவக் குழு, டிராக்கர்கள் எனப் பத்து பதினைந்து பேர் தவிர மற்றுமுள்ளோருக்கு என்ன வேலை என்று தெரியவில்லை. ஆனாலும், ஒரு கூட்டம் அங்கே இருந்தது. அஜய்யும் டிராக்கர்களும், யானையைப் பின் தொடர்ந்து சென்றனர். ஊருக்கு அருகில் பயிர்களை மேய்ந்து பழக்கப்பட்டதால், மக்னாவுக்கு மக்கள் பின்தொடர்வது புதிதாகத் தெரியவில்லை. ஏனெனில், ஊர் விவசாயிகள் அதை விரட்டிப் பழக்கப் பட்டதால், யானை ஒன்றும் பெரிதாகக் கவலைப்படவில்லை. மனிதப் பதர்கள் மிஞ்சிப் போனால், வழக்கம் போல் பெரிதாகக் கூச்சல் போடுவார்கள். ஆனால் அருகில் வர மாட்டார்கள் என்று நினைத்து, அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. அஜய், சிவா, டிராக்கர்கள் தவிர ஏனையோர் பாதுகாப்பாக, தொலைவில் (சிலர் கும்கிகளின் மேல்) இருந்து கொண்டு மெதுவாகப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

அது கடைசியாக காலர் இடப்படும் யானை என்பதால், அஜய் மயக்க ஊசி போடுவதென முடிவு செய்யப்பட்டு, அவர் மயக்க ஊசி நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன், மக்னாவைப் பின் தொடர்ந்தார். மருந்து, டாக்டர் கேவால் அளவு பார்த்து நிரப்பப்பட்டுவிட்டது. அவரை அடுத்து டிராக்கர்கள் சென்றனர். முதல் ஊசி, யானையின் வாலில் பட்டு கீழே விழுந்தது; அடுத்தது பக்கவாட்டில், வகையில்லாமல் பட்டுத் தெறித்தது; இத்தனை கலாட்டாவுக்கும், மக்னா கவலைப்படவில்லை. காரணம், மக்கள் பல இடங்களில் அதன் மேல் கற்கள், பாட்டில் போன்ற பொருட்களை எறிவதைக் கண்டிருக்கிறது. அது போல இங்கும் நடக்கிறது என்று அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. அஜய்யின் மூன்றாவது ஊசி, சரியாக யானையின் பின்புறத்தில் சென்று தைத்தது. யானை தன் வேகமான நடையை நிறுத்தவில்லை. ஆனால், சற்றுத் தூரம் சென்றதும், ஒரு ஐநூறு  மீட்டர் சென்றதும், அங்கிருந்த ஒரு சிறிய ஓடைக் கரையில், மயக்க மருந்தின் தாக்கத்தால் சரிந்தது. முன்னால் சென்ற அஜய், சிவா மற்றும் டிராக்கர்கள் குழு, வெற்றி முழக்கம் இட்டனர். அது வரை பின்னால் சென்று கொண்டிருந்த டாக்டர் கே, உடனே வேகமாக, கிட்டத்தட்ட ஓடிச் சென்றார். காரணம், யானை முன்பக்கம் தலைகீழாக விழுந்து விட்டால், (Sternal recumbent pose) அதன் இதயம் செயலிழந்து போகும் வாய்ப்பு உண்டு. எனவே, அவர் மிக விரைவில் சென்று அதுபோல ஆயிருந்தால், உடனே மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று விரைந்தார். கும்கி யானைகளை உடனே வரச் சொல்லி கட்டளையிட்டார்.

அங்கே டாக்டர் கேயின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. ‘யானையின் வெப்ப அளவைப் பாருங்க; இருதயத் துடிப்பைக் கணக்கிடுங்க; தலையில் தண்ணீர் ஊத்துங்க,’ என்று அத்தனை பேரின் பேச்சையும் மீறி அவர் குரல் ஓங்கி ஒலித்தது. ஒருவர் நனைத்த கைக்குட்டையால் யானையின் கண்களை மூடினார் (ஏதேனும் தூசி புகாமல் இருக்க); மற்றொருவர் தண்ணீரை யானையின் தலையில் ஊற்றிக் கொண்டே இருந்தார் (உடல் சூடாகாமல் இருக்க). ஏனெனில், மயக்க மருந்தின் பக்க விளைவாக உடல் வெப்பம் அதிகரிக்கும். ஒரு கும்கி யானை, விழுந்த மக்னா யானையின் தலையைச் சற்று தூக்கிக் கொடுத்தது. காரணம், சரிவில் யானை பக்கவாட்டில் விழுந்திருந்தது. கழுத்தில் பட்டி மாட்டிவிட, யானையைத் தூக்குவதைக் காட்டிலும், இது எளிது. அஜய்யும் சிவாவும் உடனே பட்டியை மோழையின் கழுத்தில் நுழைத்து, அதை, வெளியில் வராதவாறு பூட்டினர். அடுத்த வேலை, யானைக்கு மாற்று மருந்து செலுத்துவது. அதை டாக்டர் கே மட்டும்தான் செய்ய முடியும். டாக்டர் கே எல்லோரையும் பின்னால், பத்திரமான தூரத்தில் சென்று நிற்கச் சொன்னார். அவர்கள் சென்ற பின், அவர் மாற்று மருந்தான ரிவைவானைச் செலுத்தி விட்டு, வேகமாக தானும் ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார். யானை ஏழாவது நிமிடம் எழுந்து நின்றது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, நடந்து சென்று காட்டுக்குள் மறைந்தது. அப்போதே, பட்டியில் இருந்த டிரான்ஸ்மிட்டரில் இருந்து பீப், பீப் என்ற ஒலி எழுந்தது. அன்று மாலை அந்தி சாயும் வரை நமது ஆராய்ச்சியாளர்கள் அதைப் பின்தொடர்ந்து சென்று சங்கேத ஒலி நன்கு வேலை செய்கிறது என்ற திருப்தியுடன் திரும்பினர்.

இதுதான், டாக்டர் கேவின் திறமையான செயல்பாடு. சரியான நேரத்தில், அவருக்குரிய வேலைகளைச் செவ்வனே செய்து, மற்ற நேரங்களில் பிறரை அவரவர் வேலையைச் செய்ய விட்டு, செயல்பாட்டின் பலன் சரியாக அமையச் செய்வது; குழுவை நன்கு வழி நடத்துவது எனத் தெளிவுடன் இருப்பது அவரது தனித் திறன். டிராக்கர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுத்தும், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கம் கொடுத்தும், வந்திருந்த முக்கியஸ்தர்களைப் பாதுகாப்புடன் நடத்தியும், வெளி மாநில மருத்துவர்களை இதைக் குறித்து அறிந்து கொள்ளச் செய்தும், அவர் இதை ஒரு விழா போலச் செய்தார். மிகக் கடினமான ஒரு பணியை அவர் தனது உயரிய குணத்தால், எளிதான ஒரு நிகழ்வாக மாற்றி விட்டார். ஆயினும், இதில் பெரும் பங்கு டேனியல் குறிப்பிட்டதுபோல, பழங்குடியின டிராக்கர்களுடையதும், டாக்டர் கேவுடையதும்தான். ஏனெனில், இந்த மொத்த நடவடிக்கையும் அவர்களது வழி காட்டுதல் சரியாக இல்லை எனில், பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், இன்று வரை அந்தப் பழங்குடிகளின் காட்டறிவு, நம்மால் ஒரு கலையாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. அதேபோல், டாக்டர் கே சரியான அளவு மருந்தை நிரப்பித் தந்தும், விழுந்த யானையை உடனே கவனித்து காலர் இட உதவி செய்யாவிட்டால், எல்லாம் வீணாகப் போயிருக்கும்.

(தொடரும்)

 

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *