பெரம்பலூரின் வாலிகண்டபுரம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளை, சோழ மன்னன் பராந்தக சோழரின் காலத்திலிருந்து, சோழர்களின் இறுதிக் காலம் வரையிலும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் வண்ணாடுடையார் எனும் இனக்குழுவினர். இவர்கள் திருக்கோவலூர் மலையமான் குடும்பத்தினருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர். விச்சிமலை என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய பச்சைமலை பகுதியில் வன்னாடு எனும் ஓர் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அப்பகுதியிலிருந்து ஆட்சி புரிந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முதலாம் பராந்தக சோழரின் மூன்றாம் ஆட்சியாண்டான 910இல் முதன்முதலில் வன்னாடு எனும் ஊர் வரலாற்றில் இடம்பெறுகிறது. இக்கல்வெட்டில் வன்னாட்டு பிரதிசூரமங்கலத்தில் இருந்த திருச்சிலாக்குன்றத்து கோவிலில் உள்ள தவ்வைக்கு திருவமுது வழங்கவும், திருமெழுக்கு நடத்தவும் கடம்பன் நாகன் என்பவர் 5 கழஞ்சு பொன்னை வன்னாட்டு ஊர்ச்சபையிடம் அளித்துள்ளார். இதிலிருந்து வன்னாடு எனும் ஊர் இருந்தமையும் அங்கு ஓர் ஊர்சபை இருந்ததும் தெரியவருகிறது. (ஆவணம் இதழ்-18) இவர்கள் குறித்த குறிப்புகள் பெரம்பலூர் வாலிகண்டபுர சிவன் கோவிலில் உள்ளன.

தூங்கானை மறவன்
வன்னாடுடையார் எனும் சீறூர்த் தலைவர் இனத்தில் கல்வெட்டில் முதன்முதலாக தூங்கானை மறவன் என்பவர் இடம்பெறுகிறார். பராந்தக சோழரின் மூன்றாம் ஆட்சியாண்டில் இவர் அறிமுகமாகிறார். இவர் தனது வன்னாடுடையார் குலம் தழைக்க, புளியூர் ஏரியின் (இன்றைய கீழப்புலியூர்) நான்கு திசையில் உள்ள நிலங்களை வாலிகண்டபுரம் கோவிலுக்கு இறையிலியாக அளித்துள்ளார்.
(ARE.1943-44.NO.256)
வன்னாடுடையார் அக்கோபுகழறையர்
முதலாம் ஆதித்தன் காலமான 885இல் இருந்தே இப்பகுதியில் திருக்கோவிலூரிலிருந்து மக்கள் குடியேற்றம் நிகழ்ந்ததைக் காண முடிகிறது. திருக்கோவலூரைச் சேர்ந்த அரும்பாக்கிழான் இக்கோவிலிற்கு 885ஆம் ஆண்டு இங்கே தானமளித்துள்ளார்.
வீரசோழமிலாடுடையார் என்பவரின் மனைவியும், வன்னாடுடையார் அக்கோபுகழறையர் என்பரின் மகளுமான நாட்டடிகள் என்பவர் இக்கோயிலில் ஒரு நொந்தா விளக்கு எரிய வைக்க 71/2 கழஞ்சு பொன்னை வாலிகண்டபுரத்துச் சங்கரப்பாடியார் (எண்ணெய் வாணிகர்)வசம் கொடுத்து தினமும் நெய் வழங்கும்படி செய்துள்ளார். இக்கல்வெட்டு (ARE.1943-44.NO.241) வன்னாட்டு சிற்றரசர், மிலாடுடையார் (மலைநாடுடையார்) குடும்பங்களுக்கிடையே நிலவிய திருமண உறவைக்காட்டுகிறது.
வன்னாட்டுப் பகுதியை ஆட்சிசெய்த அக்கோபுகழறையர், முதலாம் பராந்தகசோழரின் பிற கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறார். இக்கல்வெட்டு குறிப்பிடும் வீரசோழன் என்பது முதலாம் பராந்தக சோழரின் பட்டப் பெயர்களில் ஒன்றாகும். இவரது அதிகாரி திருவடிக்கன்னன் இக்கோவிலுக்கு உழக்கு எண்ணெய் ஊற்றி எரிக்க, ஐந்து கழஞ்சு பொன்தானம் அளித்துள்ளார். மேலும் நக்கன் அரட்டன் என்பவர் அக்கோபுகழறையர் சார்பாக இக்கோவிலுக்கு ஏழரை கழஞ்சு பொன் பெற்று விளக்கெரிக்க ஒப்புக்கொண்டார். மேலும் இக்கோவிலுக்குத் தேவதானமாக மங்கலம் என்ற ஊரினை அளித்துள்ளார். இவ்வூரிலிருந்து கண்ணாலக்காணம் (கல்யாணம் செய்துகொள்ள செலுத்தும் வரி, இவ்வரி பின்னாளில் முதலாம் ராஜராஜனின் காலத்தில் அவரது அதிகாரியான பஞ்சவன் மாராயன் என்பவரால் விலக்கு அளிக்கப்பட்டது), ஆட்டுக்கறை (ஆட்டின் மீதான வரி), சிற்றிரை (சிறுவரிகள்) முதலிய வரிகள் இவரால் வசூலிக்கப்பட்டன. இவ்வரி மற்றும் இதர வருமானங்கள் முழுதும் இவர் கோவிலுக்காக அளித்துள்ளார். பராந்தக சோழரின் 4ஆம் ஆட்சியாண்டில் அறிமுகமான இவர் பராந்தகரின் 44ஆம் ஆட்சியாண்டு வரையிலும் இடம்பெறுகிறார். அதன்பின் கண்டராதித்த சோழரின் 6ஆம் ஆட்சியாண்டில் இவரது மனைவி திருநிலை நங்கை குறித்த தகவலும், அக்கோபுகழறையர் விளக்கெரிக்க 7 கழஞ்சு பொன் தானம் அளித்த தகவலும் கிடைக்கிறது. இதன்பின் இவர் குறித்த தகவல்கள் கிடைத்தில. கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலமாக வன்னாட்டுப் பகுதியின் சிற்றரசராக அக்கோபுகழறையர் திகழ்ந்துள்ளார்.
மாகாளன் ஆதித்தன் செம்பியன் வன்னாட்டுக்கோன்
அக்கோபுகழறையரின் ஆட்சியின்போது, மற்றொரு வன்னாட்டுக்கோனும் இடம்பெறுகிறார். ஒருங்கால் இவர் அக்கோபுகழறையரின் சகோதரனாக இருக்கக்கூடும், இவர் மாகாளன் என்றும், செம்பியன் என்றும் அடையாளங்களைத் தன்பெயரின் முன்னோட்டாக சேர்த்துக் கொள்கிறார். இவரது மாகாளன் என்ற பெயரிலிருந்தே இவர் சைவ மதப்பிரிவுகளில் ஒன்றான காளாமுகத்தினைத் தீவிரமாகப் பின்பற்றியவர் என தெரியவருகிறது. வாலிகண்டபுரம் சிவன் கோவிலின் தென்புறம் ஓர் சகஸ்கர லிங்கம் உள்ளது. அதாவது ஆயிரம் லிங்கங்களை ஒரே லிங்கத்தில் வடித்து வணங்குவது சகஸ்கர லிங்கம் எனப்படும். இரண்டாம் நந்திவர்மன் மற்றும் அவர்கள் கீழ் அரசாண்ட முத்தரையர்களும் ஆயிரங்கள் லிங்கங்கள் வைத்து வணங்கும் மரபினைத் தோற்றுவித்தனர். இவை நந்திபுரத்து ஆயிரத்தளி மற்றும் நியமத்து ஆயிரத்தளி என அழைக்கப்பட்டன. பின்னாளில் ஆயிரம் லிங்கங்கள் தோற்றுவிப்பது கடினம் என்பதால் ஒரே லிங்கத்திற்குள் ஆயிரம் லிங்கங்கள் தோற்றுவிக்கும் மரபு தோன்றியது. இத்தகைய லிங்கங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே உண்டு. திருவாரூர், திருவாசி போன்ற தலங்களில் இத்தகைய லிங்கங்களைக் காணலாம். இவ்விரு மன்னர்களும் காளாபிடாரிக்கு கோவில் எழுப்பியுள்ளனர். காளாமுகமும், காபாலிகமும், பாசுபதமும் வெவ்வேறு தோற்றமாயிருப்பினும் நாளடைவில் இவை ஒன்றாகக் கலந்தன. இம்மன்னர்களை அடியொற்றியே வன்னாட்டுக்கோன் ஆயிரத்தளி வழிபாட்டினை மேற்க்கொண்டிருக்க வேண்டும். இன்று வாலிகண்டபுரத்தில் நாம் காணும் சகஸ்கரலிங்கம் மாகாளன் ஆதித்தன் செம்பியன் வன்னாட்டுக்கோனால் எழுப்பப்பட்டிருக்கலாம். இவர் குறித்து வேறு தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.


வன்னாடுடையார் இலாடராயர்
இவர் எந்த சோழமன்னரின் கீழ் ஆட்சி செய்தார் என்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இவரது கல்வெட்டில் இடம்பெறும் திருக்கோவலூர் பகுதியைச் சேர்ந்த மிலாடுடையார் கயிறூர் பெருமானார் என்பவர், பராந்தக சோழனின் 38ஆம் ஆட்சியாண்டு (ARE.279.NO.1902) கல்வெட்டில் இடம் பெறுவதால். வன்னாட்டு இலாடராயர் பராந்தக சோழரின் இறுதிக் காலத்தில் ஆட்சிபுரிந்தவர் எனக் கூறலாம். ஆகவே இவர் அக்கோபுகழறையரின் மகனாகவோ அல்லது சகோதரனாகவோ இருக்கலாம். இவர் திருவாலீஸ்வரர் கோவிலின் இறைவருக்கு திருவமுது படைக்க ஆய்ப்பாடி ஏரி (இன்றைய ஆலம்பாடி) பகுதியின் நிலங்களை வழங்கியுள்ளார். (ஆவணம்-18)

மறவன் தூங்கானையான பராந்தக வன்னாடுடையான்
வன்னாட்டு இலாடராயருக்குப் பின் இப்பகுதியை ஆட்சி செய்தவர் மறவன் தூங்கானையான பராந்தக வன்னாடுடையான் ஆவார். இவர் கண்டராதித்தி சோழனின் 4ஆம் ஆட்சியாண்டு முதல் வருகிறார். இவருக்கும், இவருடைய மைத்துனன் வாணராயன் அரவிந்தன் இராசாதித்தன் ஆகிய இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகின்றது. இதில் மைத்துனன் தோற்றார். பராந்தகன் வன்னாடுடையான் வெற்றி பெற்றார். இதன்பொருட்டு கோயிலுக்கு ஒரு விளக்கு எரிக்க ஏழுகழஞ்சு பொன் வழங்கப்பட்டது. இதனை சங்கரப்பாடி நகரத்தார் பெற்றுக் கொண்டு தினமும் உழக்கு எண்ணை வழங்கியுள்ளனர். இதற்காகச் செப்பு விளக்கு ஒன்றும் கொடுத்துள்ளார். இருவரும் சண்டையிட்டனர் என்பதை ‘கோழிபொருத்தி’ என்ற தொடர் குறிப்பிடுகிறது. இராசாதித்தன் தோற்றார். ஆனால் விளக்கு பராந்தக வன்னாடுடையாருக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே இது வெற்றி பெற்றதன் பொருட்டு வைக்கப்பட்டதா அல்லது மைத்துனர் போரில் இறந்ததற்காக வைக்கப்பட்டதா என அறிய முடியவில்லை. கண்டராதித்தனின் 6ஆம் ஆட்சியாண்டில் வன்னாடுடையார் துங்கவன் வீரட்டர் என ஒருவர் இடம்பெறுகிறார் (ARE.304.NO.1964-65) எனவே இக்காலகட்டத்தில் வன்னாடு பகுதியைப் பலர் ஒருங்கிணைந்து ஆட்சி புரிந்திருக்கலாம். சுந்தர சோழரின் 11ஆம் ஆட்சியாண்டில் வன்னாட்டிற்கும், வள்ளுவப்பாடி (இன்றைய துறையூர் பகுதி) நாட்டிற்கும் நிலவி வந்த வரிச்சுமை பிரச்னையை மறவன் தூங்கானை தீர்த்து வைத்து, வரிச்சுமையைக் குறைத்துள்ளார். இவர் வன்னாடுடையார் குலத்தின் குலதெய்வமாக பகவதியை குறிப்பிடுகிறார். வாலிகண்டபுரம் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மனே இவர் குறிப்பிடும் பகவதியாக இருக்கலாம் என அறிஞர்.இல.தியாகராசன் கருதுகிறார்.

சுத்தமல்லனான ஜெயங்கொண்ட சோழ வன்னாடுடையான்
கண்டராதித்த சோழன் காலத்திற்குப் பின் சுமார் 220 ஆண்டுகளுக்கு வன்னாடுடையார்களின் ஆட்சியார்கள் குறித்த எந்தவொரு தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. மூன்றாம் குலோத்துங்க சோழரின் 20ஆம் ஆட்சியாண்டான 1198இல் சுத்தமல்லனான ஜெயங்கொண்ட சோழ வன்னாடுடையார் என்பவர் வரலாற்றில் அறிமுகமாகிறார். இவர் வன்னாடு முழுவதும் காணி உடையவர். இவர் வாலீஸ்வரர் கோவிலுக்கு 20 ஊர்களிலிருந்து தலா ஒரு வேலியைத் தானமாக அளித்தார். இவரது கல்வெட்டு வேறொரு சுவாரஸ்யமான தகவலை அளிக்கிறது. இவருக்குப் பிள்ளைப் பேறு இல்லை. எனவே இவர் திருவாலீஸ்வரமுடைய நாயனார் திருப்பாதங்களில் விழுந்து வணங்கித் தனக்குப் பிள்ளை வரம் அருளும்படி வேண்டிக் கொண்டார். மேலும் தனக்குப் பிள்ளை பிறந்தால் இறைவனுக்குப் பொன்னால் பட்டம் செய்து சாத்துவதாகவும் நேர்ந்து கொண்டார். அதன்படியே இறைவனருளால் அவருக்குப் பிள்ளை பிறந்தது. தான் நேர்ந்து கொண்டபடியே பொள் பட்டம் சாத்த, தனக்குச் சொந்தமாக இருந்த புகழறைப் பூண்டி என்ற ஊர் முழுவதையும் கோயிலுக்குக் காணியாகக் கொடுத்தார். அக்கல்வெட்டு வரிகளை காண்போம்:
- ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவற்கு யாண்டு இருபத்தொன்பதாவது வடகரை கரிகா
- லகன்ன வளனாட்டு வன்னாட்டு வாலிகண்டபுரத்து உடையார் திருவாளீஸ்வரமுடைய னாயனர்
- ற்கு இன்னாடு காணிஉடைய சுத்தமலன் செயங்கொண்ட சோழ வன்னாடுடையானேன் இன்னாயனார்
- சீபாதத்தியே சென்று எனக்குப் பிள்ளை பிராஸாதித்தருள வேணும் நான் பொன்னாலே பட்டஞ் செய்து சா
- த்துகிறேனென்றிசைந்து போன விடத்து இந்த இசையின்படி பிள்ளை பிரசாதித்தருளுதலால் நாந் சாத்தக் கட
- வநாத பொத்திந் பட்டத்துக்கு செலவாக எனக்கு காணியாய் வருகிற ஊர்களில் புகழறை பூண்டியை ஊர்மை உ
- ள்பட காணியாக நீர்வார்த்துக் கல்வெட்டிக் குடுத்தேந் செயங்கொண்ட சோழ வன்னாடுடையாநேந்
- இது பந்மாஹேஸ்வர ரக்க்ஷை

சுத்தமல்லனான ஜெயங்கொண்ட சோழ வன்னாட்டுடையாருக்குப் பின் இப்பகுதியை ஆட்சி செய்த வன்னாடுடையார் எனும் சீறூர்த் தலைவர்கள் குறித்த தகவல்கள் யாதும் கிடைக்கப்பெவில்லை.
(தொடரும்)

