முனைவர் ஏஜே டி ஜான் சிங், ஆரம்ப காலங்களில் டாக்டர் கேவுடன் முதுமலையில் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் யானைத் திட்டத்தில் இணைந்திருந்தார். காரணம், அவரை சிவகாசி கல்லூரியில் இருந்து வன உயிர் ஆராய்ச்சிக்கு கொண்டு வந்தது இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் ஜே சி டேனியல். அதனால், அவரையும் யானை ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினார். அந்த நேரத்தில் அவருக்கு டெஹ்ராடூனில் உள்ள இந்திய அரசு நிறுவனமான வன உயிர் ஆய்வு மையத்தில் வேலைக்கு சேர வாய்ப்பு கிடைத்தது. டாக்டர் கே, ஜான் சிங்கை அங்கு சேருமாறு அறிவுறுத்தினார். நல்ல வேலை என்பதுடன், சர்வதேச பரிட்சயம் கிடைக்கும் என்பதால், டாக்டர் கே அவரை அங்கு சேரச் சொன்னார். இப்படி இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு டாக்டர் கே சரியான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவார். அதில் சேர்ந்த ஜான் சிங், பின்னர் அந்த மையத்தின் உதவி இயக்குனராக உயர்ந்து ஓய்வு பெற்றார். உலகம் போற்றும் வன உயிரின ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்தார். ஜான் சிங் டாக்டர் கேவுடன் வன உயிர் ஆய்வு மையத்தின் யானை காலரிங் பணி செய்யும்போது ஏற்பட்ட அனுபவத்தை, அவர் சொன்னது போல், கீழே தருகிறேன்.
‘யானை மருத்துவருடன் எனக்கு மிகவும் மறக்கமுடியாத நேரம் 1991ஆம் ஆண்டு நாங்கள் ராஜாஜி தேசியப் பூங்காவில் யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் போதுதான். இந்திய வன உயிர் ஆய்வு நிறுவனத்தின் அப்போதைய இயக்குநரான ஸ்ரீ. எச்.எஸ். பன்வார், ரேடியோ காலர் பொருத்தி யானைகளைக் கண்காணிக்க யானை மருத்துவர் திரு. கிருஷ்ணமூர்த்தியை ஈடுபடுத்துமாறு ஆலோசனை தந்தார். எங்களுக்கு உதவ, டாக்டர் கே டேராடூனுக்கு வந்தார். இத்தனைக்கும், யானை மருத்துவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, காலில் ஒரு பெரிய அறுவை செய்திருந்தார். (ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதையைப் படித்தவர்களுக்கு டாக்டர் கேவுக்கு ஏற்பட்ட கால் முறிவு பற்றி தெரியும்) ஆனாலும், மகிழ்ச்சியாக இருந்தார். அவரது தாய்த் துறை கால்நடை பராமரிப்பு என்றாலும், முதுமலை தேசியப் பூங்காவின் யானை முகாமில் அவர் பணியாற்றியதன் மூலம் அவரது பெயரும் புகழும் மலர்ந்தது. யானை டாக்டர் என்று அவர் எல்லோராலும் அறியப்பட்டார். யானைகளைப் பிடிக்கவும் சிகிச்சையளிக்கவும் ‘மனிதாபிமான’ முறைகளை அறிமுகப்படுத்தியதற்காக அறியப்பட்டவர். இன்றுவரை பின்பற்றப்படும் கோயில் யானைகளுக்கு ‘யானை புத்துணர்ச்சி முகாம்களை’ முதலில் பரிந்துரைத்தவர் இவர்தான். அவரது எழுத்துக்கள் மற்றும் வெளியீடுகள் மென்மையான அரக்கர்களான யானைகளின் பராமரிப்பிற்கான தகவல் களஞ்சியம் ஆகும்.
இந்தக் காலகட்டத்தில், மாணவர்களுக்கும், வனத்துறை பயிற்சி அதிகாரிகளுக்கும், கற்பித்தல் மற்றும் பயிற்சி அளிப்பதோடு ராஜாஜி தேசியப் பூங்காவில் (இப்போது புலிகள் சரணாலயம்) யானைகள் குறித்த ஆராய்ச்சியும் செய்து கொண்டிருந்தேன். இந்த முயற்சியில், மிகவும் அர்ப்பணிப்புள்ள இரண்டு நபர்கள், ஜஸ்டஸ் ஜோசுவா மற்றும் கிறிஸ்டி வில்லியம்ஸ். இருவரும் எனக்கு திறமையாக உதவினார்கள். இந்த ஆராய்ச்சி எனக்கு பன்னிரண்டு யானைகளை ரேடியோ-காலர் பொருத்திக் கண்காணிக்கும் வாய்ப்பை அளித்தது. காலர் போடும்போது, பல அற்புதமான விஷயங்களும் அவற்றைக் கண்காணிக்கும்போது கற்றுக்கொண்ட பாடங்களும் நிறைய இருந்தன. இந்த அனுபவங்கள் யானை பாதுகாப்புக்குச் சில முக்கிய பாடங்களைக் கொடுத்துள்ளன. இது அடுத்த 2 ஆண்டுகளுக்கு யானைகளின் பரவல் குறித்த சில மதிப்புமிக்க தகவல்களை எங்களுக்கு வழங்கியது. ஆனால், டாக்டர் கேவுடன் இரண்டு மூன்று யானைகளைத்தான் நாங்கள் காலரிங் செய்தோம் (1991இல்).
1991இல் பிக் பாஸ் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய ஆண் யானைக்கு காலர் போடும் நிகழ்வு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதன் எடை 5 டன்களுக்கு மேல். பத்து அடிக்கு மேல் உயரமாக இருந்தது. அந்த யானைக்குக் கிட்டத்தட்ட 50 வயது. ஜஸ்டஸ் அதை அடிக்கடி அருகில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்ததால், அவரை ஒருபோதும் ஆக்ரோஷமாகப் பார்க்கவில்லை; விரட்டவும் செய்யவில்லை. காலர் போடும் திட்டத்தில் எங்களுக்கு உதவிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல யானை மருத்துவர் மறைந்த டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தியின் கூற்றுப்படி, அவர் தனது வாழ்க்கையில் பார்த்த இரண்டாவது பெரிய ஆண் யானை இது. அந்த நாட்களில் யானைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய இம்மோபிலானின் அளவைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. பெரிய கொம்பன்களுக்குக்கூட நாங்கள் 3 மில்லி இம்மோபிலான் மருந்தை மட்டுமே கொடுத்தோம். இதனால், கொம்பன்கள் சில கிலோமீட்டர் தூரம் ஓட ஆரம்பித்து, பின் மயங்கி கீழே விழுந்தன. நாட்டின் நல்ல கால்நடை மருத்துவர்களில் ஒருவரான என் வி கே அஷ்ரஃப், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகளுக்கு வழங்கப்படும் இம்மோபிலான் அளவுகள் குறித்த ஆய்வை பின்னர் மேற்கொண்டபோது, அளவை மாற்றியமைக்க வேண்டும் என்பதைக் கண்டறிந்தார். அது வரையில் டாக்டர் கேதான் இந்த விஷயத்தில் அறுதி நிபுணர்.
அந்த காலர் செய்யப்பட்ட நாளில், ஷியாம்பூர் மலைத்தொடரில் (கங்கைக்கு கிழக்கே, ராஜாஜி தேசியப் பூங்காவிற்கு அருகில்) பிக் பாஸைக் கண்டுபிடித்தோம். காலை நேரம், பிக் பாஸ் ஒரு மூங்கில் தூரின் அருகே அமைதியாக உண்டு கொண்டிருந்தது. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி டார்ட் துப்பாக்கியில் 3 மில்லி இம்மோபிலானை ஏற்றி, யானையின் மேல் தொடுக்க என்னிடம் கொடுத்தார். ஏனெனில், அவரது கால் இன்னும் சற்று பிரச்னையாக இருந்தது. சடுதியில் திரும்பி ஓடவோ அல்லது மிக அருகில் செல்லவோ இயலாது என்பதால், என்னைச் சுடச் சொன்னார். என்னுடன் துணைக்கு வர பூங்காவின் ஆயுதமேந்திய காவலரைத் தேர்ந்தெடுத்தேன். அவரிடம் இரட்டைக் குழல் கிட்டிக்கும் (குண்டு ஏற்றும்) துப்பாக்கி இருந்தது. நான் துப்பாக்கியைச் சரி பார்த்தேன். அது சரியாக ஏற்றப்பட்டு இருப்பதைக் கண்டேன். நடந்து பிக் பாஸை நெருங்கினோம். காற்று யானையிடமிருந்து வந்ததாலும், காலை சூரியன் எங்களுக்குப் பின்னால் இருந்ததாலும், நான் உடனடியாக அந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். இதன் விளைவாக, புதர் மறைவில் நான் நெருங்கும்போது யானை என்னைக் கண்டறிய மிகக் குறைந்த வாய்ப்புதான் இருந்தது. நாங்கள் சுமார் 15 மீட்டர் தொலைவில் இருந்தபோது, நான் டார்ட் (மயக்க மருந்து) துப்பாக்கியால் சுட்டேன். ஏதோ தெரியாத காரணத்தால், டார்ட் ஒரு ராக்கெட்போல பறந்து, பிக் பாஸின் பின்னங்கால்களுக்கு இடையில் விழுந்தது. இது யானையைத் திரும்பி எங்கள் திசையைப் பார்க்க வைத்தது. நானும் காவலரும் சம்பவ இடத்திலிருந்து ஒரே ஓட்டமாக ஓடி, தப்பி விட்டோம். மீண்டும், சற்று நேரம் சென்ற பின், யானையைப் பின் தொடர்ந்தோம்.
துப்பாக்கியில் மீண்டும் 3 மில்லி டார்ட் நிரப்பப்பட்டது. இந்த முறை டார்ட், யானையின் வலது காலில் தாக்கியது. யானை திரும்பி, எங்களைப் பார்த்து விட்டு, அருகிலுள்ள சில்லா மலைத்தொடரின் திசையில் காட்டுக்குள் ஓடியது. நாங்கள் சிறிது நேரம் காத்திருந்து, பின்னர் யானை விட்டுச் சென்ற தெளிவான தடத்தைப் பின்பற்றினோம். ஐந்து கி.மீ தொலைவில் பக்கவாட்டு சரிவின் கீழே தரையில் யானையைக் கண்டோம். அது முன்பக்கத்தில் விழுந்திருந்தால், சரியான நேரத்தில் அதைக் கண்டுபிடிக்காவிட்டால், மூச்சுத் திணறலால் இறந்திருக்கலாம். கொம்பன் முழுமையாக மயங்கவில்லை. நாங்கள் அதை அணுகியபோது, எங்களைத் தாக்க முயற்சிப்பதுபோல் தனது தும்பிக்கையை எங்களை நோக்கி வீசியது. இடது தொடையில் ஏற்பட்ட எலும்பு முறிவிலிருந்து மீண்டு வந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்தை அடைய சிறிது நேரம் ஆனது. ஒரு மில்லி இம்மோபிலான் கூடுதலாக ஒரு டோஸ் கொடுக்கப்பட்டதன் மூலம் யானை முழுமையாக மயங்கியது. உடனே காலர் சீராக போடப்பட்டது.
சுவாரஸ்யமாக, அடுத்த நாள் நாங்கள் மேலும் யானைகளைத் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு யானை ஆக்ரோஷமாக எங்களை நோக்கி வந்தது. முந்தைய நாள் என்னுடன் வந்த காவலர், யானையைப் பயமுறுத்துவதற்காக தனது இரண்டு குண்டுகளையும் வானத்தை நோக்கிச் சுட முயன்றார். ஆனால் இரண்டு தோட்டாக்களும் தவறாக வெடித்தன. நாங்கள் ஒரு குழுவில் இருந்தோம், அதில் ஒரு கும்கி யானையும் இருந்தது. நாங்கள் கூட்டாக கத்தியும், கோஷமிட்டும், அந்த யானையைத் திருப்பி அனுப்ப முடிந்தது. இல்லையென்றால், அதோகதிதான். ஜஸ்டஸ் பிக் பாஸைப் பின் தொடர்ந்தபோது, ஷ்யாம்பூர் மலைத்தொடரில் கணிசமான நேரம் செலவிட்டதைக் கண்டறிந்தார். அங்கு ஏராளமான மூங்கில்கள் இருந்தன. ஆனால் இந்த இடம் ராஜாஜி தேசியப் பூங்காவிற்கு வெளியே இருந்தது. இந்த கட்டத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதியைத் திட்டமிடும்போது, அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்காக, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் முதன்மை இனங்களின் வரம்பின் சுற்றுச்சூழல் எல்லையையும் சேர்ப்பது சிறந்தது என்பதை நாங்கள் உணர்ந்தோம். இப்படி காலர் இடுதல் பல நல்ல விஷயங்களை அறிய உதவியது.’
இவ்வாறு முனைவர் ஏஜே டி ஜான் சிங் தனது அனுபவங்களைப் பதிவு செய்கிறார்.

