Skip to content
Home » டார்வின் #32 – புதிய யுகம்

டார்வின் #32 – புதிய யுகம்

1851. உலகின் பணக்காரப் பேரரரசாக உருவெடுத்தது விக்டோரியா கால இங்கிலாந்து. சூரியன் மறையாத ராஜ்ஜியம். ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் இருந்து எல்லாம் வளங்கள் கொட்டிக் கொண்டிருந்தன. தொழில்நுட்பத்திலும் அசாத்திய முன்னேற்றம். அந்தப் புதிய யுகம் வாய்ப்புகளின் வாயில்களைத் திறந்து வைத்திருந்தது.

சுதந்திர வணிகம் ஊக்குவிக்கப்பட்டது. வணிகத்தில் அரசின் தலையீடுகள் குறைக்கப்பட்டன. அரசியல் காட்சிகளும் மாறிக்கொண்டிருந்தன. விக்குகளிடம் இருந்து புதிய லிபரல் கட்சி உருவானது. இங்கிலாந்தை உலுக்கிய உள்ளூர் புயல்களும் கரையைக் கடந்திருந்தன. இப்போது போராட்டங்கள் இல்லை. புரட்சிகள் இல்லை. பிரச்னைகள் இல்லை. எல்லாமும் சுகம்தான்.

பிரிட்டன் அரசு தனது வெற்றியைப் பறைசாற்றும் விதமாகப் பெரிய கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. லண்டனில் இருந்த ஹைட் பார்க்கில் பிரமாண்ட கண்ணாடி அரண்மனை திறக்கப்பட்டது. இங்கிலாந்தின் பொருளாதார ஆதிக்கத்தைப் பறைசாற்றும் விதமாக அந்த அரண்மனை இருந்தது. அதனுள் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டன.

கண்காட்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்தும் மக்கள் அலை திரளாய் வந்துகொண்டிருந்தனர். கவிஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், நாவலாசிரியர்கள், இயற்கையாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் இப்படிப் பலரும். இதில் பலரும் பணக்காரர்கள். சிலர் வேலை வாய்ப்புகள் தேடி வந்தவர்கள். எல்லா விதச் சிந்தனைகளும் அங்கே சங்கமாகின. முற்போக்குச் சிந்தனை, பிற்போக்குச் சிந்தனை, பொருள்முதல்வாதிகள், மதச்சார்ப்பவற்றவர்கள், ஜனநாயகவாதிகள் இப்படிப் பலவும். ஆனால் எல்லோருக்கும் இருந்த பொதுவான பார்வை இயற்கை என்பது போட்டிகள் நிறைந்த சந்தை என்பதுதான். முதலாளித்துவ சிந்தனையையொட்டிய முற்போக்கு கொள்கைகள் அப்போது உருவாகி வந்தன.

இவர்கள்தான் பரிணாமக் கொள்கையின் முதல் ஆதரவாளர்கள். முன்னேற்ற விரும்பிகள். தொழில்நுட்ப காதலர்கள். சமூகத்தையும் அறத்தையும் மதத்தின் சாயலில் இல்லாமல் தர்க்க ரீதியில் ஆராய்ந்தவர்கள்.

இந்தச் சிந்தனையாளர்கள் குழு ஜான் சேப்மேன் என்பவரது வீட்டில்தான் கூடும். சேப்மான் ஒரு மருத்துவர். பதிப்பாளரும்கூட. முப்பது வயதுக்குள்ளேயே ஏகப்பட்ட செல்வாக்கு மிக்க படைப்புகளைப் பதிப்பித்திருந்தார். இவருடன் இணைந்து படைப்புகளைத் தொகுத்தவர் மரியன் ஈவன்ஸ். ஜார்ஜ் எலியட் என்றால் நம்மில் பலருக்குத் தெரியும். புகழ்பெற்ற பெண் நாவலாசிரியர். சேப்மென் புகழ்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் ரிவீவ் என்கிற பத்திரிகையை வாங்கி, அதை முற்போக்குவாதிகளுக்கான தளமாக உருவாக்கி இருந்தார்.

அந்தப் பத்திரிகை மூலம் முற்போக்குச் சிந்தனைகளை ஊக்குவிக்க விரும்பினர். இந்த இதழ்தான் முதன்முதலில் பிரிட்டனில் உருவாகி இருந்த மத்தியதர மக்களை ஈர்க்கும் ஜனரஞ்சகப் பொருள்முதல்வாதக் கருத்துக்களையும், பரிணாம கருத்துக்களையும் ஆதரவளிக்கும் இதழாக இருந்தது.

வெஸ்ட்மின்ஸ்டர் சிந்தனையாளர்கள் அதுவரை மதத்தின் பார்வையில் வரையறுக்கப்பட்டு வந்த சமூக விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்தினர். எல்லாவற்றையும் கோட்பாடு ரீதியாக ஆராய முற்பட்டனர். பரிணாமக் கொள்கையையும் சமூகத்தில் பொருத்திப் பார்த்து விளக்கம் கொடுத்தது வெஸ்மின்ஸ்டர் ரிவீவ்.

இந்த இதழ், பரிணாமக் கொள்கையை வளர்ச்சியின் விதி என்றது. அதாவது மனித சமூகமும் சரி, இயற்கையும் சரி தொடர்ந்து மாற்றம் அடைகிறது. இந்த மாற்றம் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. நம்மை வலுப்படுத்துகிறது என்பதுதான் அவற்றின் கருத்து.

ஆனால் எந்த வகையான முன்னேற்றம்? அவர்கள் எல்லோரும் பரிணாம மாற்றம் என்பதைத் தொடர்ச்சியான இயற்கைச் செயல்பாடு என்பதை ஒப்புக்கொண்டனர். ஆனால் அதற்கு மேல் குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை. இதனால் பரிணாமக் கொள்கையை அறிவியல்பூர்வமாக அணுகும், எல்லோராலும் அங்கீகரிக்கப்படும் கோட்பாடுகள் அவர்களுக்குத் தேவையாக இருந்தன. மனித வாழ்க்கை, தொழில், முன்னேற்றம் மூன்றையுமே இணைத்து விளக்க வேண்டிய பரிணாமக் கொள்கை அவர்களுக்குத் தேவைப்பட்டது.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் என்பவர் அதையொட்டிய கருத்துகளைத் தொடர்ந்து எழுதத் தொடங்கி இருந்தார். ஹெர்பர்ட் ஸ்பென்ஸர், இங்கிலாந்தைச் சேர்ந்த தத்துவவாதி, அரசியல் கோட்பாட்டாளர், பரிணாமக் கொள்கையை உயிரியல் துறையைத் தாண்டி சமுகத்தில் பொருத்திப் பார்க்கும் கருத்தாக்கங்களை எழுதிக்கொண்டிருந்தார். பரிணாமத்தைத் தலைமுறை தலைமுறையாக நடைபெறும் மாற்றத்தின் தொகுப்பாகக் கண்டார் ஸ்பென்சர். முன்னேற்றத்தை தவிர்க்க முடியாததாகப் பார்த்தார். பரிணாம மாற்றம் மூலம் தீயவை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மனித சமூகம் உன்னத நிலையை அடைந்துவிடும் எனக் குறிப்பிட்டார்.

இந்த முன்னேற்றத்தின் ஒருபகுதியாக அப்போது உருவாகி இருந்த உழைப்புப் பிரிவினையைக் கண்டார் ஸ்பென்சர்.

அப்போது ஹென்ரி மில்னி – எட்வர்ட்ஸ் என்பவர் உழைப்புப் பிரிவினை எனும் கோட்பாட்டை உயிரியல் துறையில் அறிமுகம் செய்திருந்தார். அதன்படி உயிரினங்கள் பரிணாமம் அடையும்போது அதன் உடலும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து பல்வேறு உறுப்புகள் உருவாகுகின்றன. ஒவ்வொரு உறுப்பும் பிரத்யேக சிறப்பைக் கொண்டுள்ளன. குறிப்பிட்ட பணியை செயலாற்றுக்கின்றன. உதாரணமாக உயிரினங்களில் பொதுவாக ஏற்படும் மாற்றம் பிரத்யேகமாக பறக்க உதவும் இறக்கைகளுக்கோ, நீரில் நீந்த உதவும் செதில்களையும் தருகின்றன என்பது அவரது கருத்து. ஸ்பென்சர் இதையே சமூகத்திற்கும் பொருத்திப் பார்த்தார். முன்னேற்றமும் சமூகம் பொதுத்தன்மையில் இருந்து பிரதியேகத் தன்மையை அடைவதுதான். அதுதான் உழைப்பு பிரிவினை. உழைப்புப் பிரிவினை உருவாவதால்தான் சமூகம் சிறந்து விளங்குகிறது. பிரிட்டனின் கண்காட்சி உழைப்புப் பிரிவினையின் வலிமையைக் காட்டுகிறது என்றார்.

இப்படியாக பரிணாமக் கோட்பாடு வெவ்வேறு விஷயங்களின் அடிப்படையில் எல்லோரையும் சென்றடைந்து கொண்டிருந்தது.

இந்தச் சமயத்தில்தான் டார்வின் மீண்டும் லண்டனுக்குத் திரும்ப நேர்ந்தது. நிரந்தரமாக இல்லை. தற்காலிகமாகத்தான். மகளின் இறப்புக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து குடும்பத்துடன் பொருட்காட்சியைக் காண லண்டனுக்கு வந்தார் டார்வின்.

கடந்த 10 ஆண்டுகளாகவே அலசிகள் குறித்த ஆய்வு, நடைப்பயிற்சி, பரிந்துரைக்கப்பட்ட உணவு, மதியம் கொஞ்சம் ஓய்வு என்று கட்டுக்கோப்புடன் நாட்கள் கழிந்துகொண்டிருந்தன. ஒருவழியாக அலசி ஆய்வுகள் முடிந்து பதிப்புக்குச் சென்றிருந்தது. இனி பரிணாமக் கொள்கையில் முழுக் கவனம் செலுத்த வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டார் டார்வின்.

எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் வேறு கவலைகளைக் கொடுத்தன. இப்போது டார்வினுக்கு ஏழு குழந்தைகள். எல்லோரும் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்திற்குத் திட்டமிட வேண்டும். பெண் குழந்தைகளை எம்மா பார்த்துக்கொள்வார். ஆண் வாரிசுகளுக்கு நாம்தான் வழிகாட்ட வேண்டும்.

பணத்தைப் பற்றி பெரிய கவலை இல்லை. ஏராளமான முதலீடுகளை டார்வின் செய்திருந்தார். இங்கிலாந்தில் வளர்ச்சிக்கு ஏற்ப ரயில்வே துறை, கட்டடத் துறை எனத் திட்டமிட்ட முதலீடுகள் அவரிடம் இருந்தன. இதன் மூலமாகவே ஆண்டுக்கு 3000 பவுண்டுகள் வருமானம் வந்துகொண்டிருந்தது. இதைத்தவிர பண்ணை வீடு, நிலங்கள் எனச் சொத்துப்பத்துகளும் ஏராளம். உள்ளுரிலும் கொடை வள்ளலாக உயர்ந்துகொண்டிருந்தார் டார்வின். உள்ளூர்வாசிகளுக்கு இலவச மருத்துவம், முதியவர்களுக்கான நிதி, இறப்பு நேர்ந்தால் இறுதிச் சடங்குகளைப் கவனித்துக்கொள்வது எனப் பல்வேறு திட்டங்களைப் பிரபுவாகத் தமது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அமல்படுத்தி இருந்தார். இதைத்தவிர வெளிநாடுகளிலும் முதலீடு செய்யலாம் என்ற எண்ணம் உருவாகி இருந்தது.

கலிஃபோர்னியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதையொட்டி ஏகப்பட்ட பிரிட்டனியர்கள் அந்நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். சந்தையும் அதற்கு ஏற்றவாறு அசைந்தாடியது. தானும் அமெரிக்காவுக்கே குடிபெயர்ந்துவிடலாம் என்ற எண்ணமும் டார்வினுக்கு இருந்தது. அங்கே நிலம், உணவுப் பொருட்களின் விலை, முதலீடுகள், வாய்ப்புகள் எல்லாவற்றையும் நண்பர்களிடம் கேட்டு அறிந்துவந்தார். ஆஸ்திரேலியாவுக்குச் செல்லலாம் என்ற யோசனையும் இருந்தது.

டார்வின் இங்கிலாந்தைவிட்டு வெளியேற நினைத்ததற்கு இன்னொரு காரணம், டிசம்பர் 2, 1851. லூயி நெப்போலியன் புரட்சியின் மூலம் அதிகாரத்தை அடைந்தார். இதனால் இங்கிலாந்து மேல் எப்போது வேண்டுமானாலும் பிரான்ஸ் படையெடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. கிராமப்புறங்கள் வழியாக பிரெஞ்சுப் படைகள் இங்கிலாந்துக்குள் நுழைய இருப்பதாக வதந்திகள் பரவின. அப்படியென்றால் முதலில் பாதிக்கப்படப்போவது டார்வினின் பண்ணை வீடு இருக்கும் டவுன்தான். இதனாலும் வேறு தேசத்துக்குச் சென்றுவிடலாமா என்ற எண்ணம்.

மேலும் பிரிட்டனின் அதிகார வர்க்கத்தின் இன்னமும் தன் கொள்கைகளை எதிர்க்கும் மதவாதிகள்தான் இருந்தனர். அறிவியல் கழகங்கள் பலவும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. இதனாலும் அமெரிக்கா சென்று அங்கே சுதந்திரச் சிந்தனையாளர்களுடன் இணைந்து பணியாற்றலாமா என்ற எண்ணம்.

இப்படி டார்வின் பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் தள்ளாடிக்கொண்டிருந்த வேளையில்தான் பிரிட்டனில் உருவாகி இருந்த புதிய மத்தியதர முற்போக்கு வர்க்கம் டார்வினிடம் வந்து தம்மை அறிமுகம் செய்துகொண்டது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *