Skip to content
Home » குறுநிலத் தலைவர்கள் #14 – வித்ய விநீத பல்லவன்

குறுநிலத் தலைவர்கள் #14 – வித்ய விநீத பல்லவன்

காஞ்சி மாநகருக்கு அருகில் உள்ள ஊர் ‘கூரம்’. இங்குள்ள பழமையான கோவில் தமிழகத்தின் முதல் கற்றளி கோவிலாய் கருதப்படுகிறது. சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தலம், காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.

கூரம் செப்பேடு

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்தச் செப்பேட்டுச் சாசனம், காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள, கூரம் என்ற கிராமத்தின் கோயில் தர்மகர்த்தாவிடமிருந்து அன்றைய ஆங்கிலேய அரசால் விலைக்கு வாங்கப்பட்டது. ஒரு வளையத்தில் கோர்க்கப்பெற்ற ஏழு மெல்லிய ஏடுகளைக் கொண்டது இந்தச் செப்பேட்டுச் சாசனம். இச்செப்பேடு தமிழ், சமஸ்கிருதம் என்ற இரு பகுதிகளையும் கொண்டுள்ளது. முதலாம் நரசிம்மவர்மனின் பேரனும், இரண்டாம் மகேந்திர வா்மனின் மகனுமான ‘பரமேஸ்வரவா்மன்’, பல்லவ தேசத்தை கி.பி.670 முதல் கி.பி. 685 வரை ஆண்டு வந்தார். வெற்றி வீரனான இம்மன்னர் இலட்சக் கணக்கான வீரர்களைக் கொண்ட சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தனைப் போரில் வென்று கந்தையைச் சுற்றிக் கொண்டு ஓடும்படி செய்தார் என்று குறிப்பிடுகின்றது கூரம் செப்பேடு. இந்த வெற்றியை உதயேந்திரம் செப்பேடும் உறுதிப்படுத்துகின்றது. இம்மன்னனின் ஆட்சியின் கீழே பல்லவரின் கிளையில் வந்த ஓர் அரசனும் சிற்றரசராக விளங்கியிருக்கிறார். அவர் பெயர் வித்யா விநீத பல்லவரசன் என்பதாகும். இம்மன்னர் குறித்து கூரம் செப்பேடு சில தகவல்களை அளிக்கிறது.

கூரம் செப்பேடு

இதுதவிர ஊற்றுக்காட்டுக் கோட்டத்தில் நீா்வேளூா் என்ற அவாந்தர ராஷ்டிரத்தில், கூரம் என்ற கிராமத்தில் வித்ய வினீத பல்லவாதிராஜன் என்பவர், தன் பெயரால் எழுப்பிய ‘வித்ய வினீத பல்லவ கிருகத்தில்’ எழுந்தருளி அருளும் ஈசன் ‘பினாகபானியின்’ பூஜைக்கும், பாரதம் பாராயணம் செய்யவும் பரமேஸ்வரமங்கலம் எனும் கிராமத்தைப் பிரம்மதேயமாக வழங்கியதையும் செப்பேட்டின் மூலம் அறியமுடிகின்றது.

கூரம் செப்பேடு ஏழு ஏடுகளைக் கொண்ட பதினான்கு பக்கங்களை உடையதாகும். இதில் பத்துப் பக்கங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. நான்கு பக்கங்கள் மட்டும் தமிழில் உள்ளன. இந்த நான்கு பக்கங்களில் மட்டும் உள்ள தமிழ் எழுத்துக்களில்தான் பரமேஸ்வரமங்கலம் உருவாக்கப்பட்ட விதம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னா்கள் பற்றிய பல வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கான அரிய ஆதாரமாக கூரம் செப்பேடுகள் விளங்குகின்றன.

சிவபக்தியில் திளைத்த மன்னன் பரமேஸ்வரவா்மன், தான் பெற்ற வெற்றிகளுக்காக ஈசனுக்கு நன்றியறிதலைத் தெரிவிக்கும் வண்ணம் கூரத்தில் அழகிய ஒரு திருக்கோயிலை நிர்மாணித்து அதற்கு ‘வித்யா விநீத பல்லவ பரமேஸ்வர கிருகம்’ எனப் பெயரிட்டு வணங்கினான். பல்லவா் காலக் கட்டடக் கலைப் பாணிக்கு புராதனச் சான்றாகத் திகழும் இத்திருக் கோயிலின் கருவறை கஜபிருஷ்ட வடிவில் உள்ளது.

மாமல்லபுரத்தில் ஒரே கல்லினால் ஆன கணேசா் கோயிலையும் தருமராஜா் திருத்தோளின் மூன்றாம் தளத்தையும் நிர்மாணித்தவன் இம்மன்னனே ஆவான்.

கூரம் பகுதியை ஆண்ட பரமேஸ்வரவா்மனின் சிற்றரசன் ‘வித்ய வினீத பல்லவன்’ என்பவன் நிலம் தானமாக அளித்ததால் இத்தலத்திற்கு ‘வித்ய வினீத பல்லவ பரமேஸ்வர கிருகம்’ என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது.

கூரம் கோவில்

வித்யா விநீதனின் சிறப்புகள்

 தமிழகத்தின் முதல் கற்றளியாக இக்கோவில் அன்று விளங்கியிருக்கிறது. அழியும் பொருட்களால் கட்டப்பட்ட செங்கல் மற்றும் மரத்தால் கட்டுவிக்கப்பட்ட அன்றைய சங்ககாலக் கோவிலிற்கு மாற்றாக பாண்டிய நாட்டைச் சேர்ந்த எருக்காட்டூர் கோன் பெருந்தசன் முதன்முதலாக தமிழர்களுக்கு குடைவரையில் கோவில் கட்டும் வழமையை அறிமுகப்படுத்தினார். அவரைப் பின்பற்றி மகேந்திரவர்மன், நரசிம்மவர்மனும், பாண்டியர்களும் 7ஆம் நூற்றாண்டின் மத்திம பகுதி வரையிலும் குடைவரைகளை தொண்டை மண்டலம் மற்றும் பாண்டி மண்டலங்களில் கட்டினர். இவற்றில் இன்னும் புதுமையாக குடைவரை புழக்கத்தில் இருந்த காலத்தில், தமக்குத் தேவையான இடத்தில் கற்களை வைத்து கட்டி, கற்றளிகள் எழுப்பும் வழக்கத்தை தமிழகத்தில் முதன்முதலாக புகுத்தியவர் வித்யா விநீத பல்லவரைசன். இவரைப் பின்பற்றியே ராஜசிம்ம பல்லவன் காஞ்சி கைலாசநாதர் கோவிலையும், பனைமலை கோவிலையும் கட்டினர். அதனையொற்றி பல்லவர்களும் பாண்டியர்களும் முத்தரையர்களும் வேளிர்களும் சோழர்களும் கற்றளிக் கட்டிடக்கலையில் உச்சம் பெற்றனர். ஆக, அந்த வகையில் தமிழக அளவில், கற்றளி கோவில்களின் பிதாமகன் என நாம் வித்யா விநீத பல்லவரைசரைக் குறிப்பிடலாம்.

திருக்கோயில் அமைப்பு

இக்கோவிலின் கருவறை தூங்கானை மாட வடிவில் உள்ளது. தமிழகத்தில் கிடைக்கும் தொன்மையான தூங்கானை மாடக்கோவிலும் இதுவே.

மண்ணார் முழவதிரும் மாடவீதி

  வயற்காழி ஞானசம் பந்தன்நல்ல

பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்

  பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்..

 என சம்பந்தர் பெண்ணாகடம் கோவில் தொன்மையான தூங்கானைமாடம் குறித்து பாடியிருப்பினும், அக்காலத்தில் அக்கோவில் செங்கல் தளியாகவே இருந்திருக்கும். பிற்காலத்தில் செம்பியன் மாதேவி இக்கோவிலைக் கற்றளியாக மாற்றியமைக்கிறார். யானை ஒன்று அமர்ந்திருந்தால் அதன் பின்புறம் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறு தோற்றத்தில் அமைந்திருப்பதால் இந்த வகை கோவிலுக்கு இப்பெயர். இவ்வகை கோவிலை வடிவமைப்பது கடினம், ஏனெனில் வட்ட வடிவில் கற்களை செதுக்கி பொருத்த தனித்திறமை வேண்டும். கஜபிருஷ்டக் கோவில் அமைப்பைச் சேதியகிருஹம் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பிராகிருத மொழியில் இது ‘சேதியகர’ என்று கூறுப்படுகிறது. தமிழில் இது யானைக் கோவில் என்று பெயர் கூறப்படுகிறது. சிற்பசாஸ்திர நூல் இந்தக் கட்டடங்களை கஜபிருஷ்டம் என்றும், ஹஸ்தி பிருஷ்டம் என்றும் குஞ்சர பிருஷ்டம் என்றும் கூறுகின்றன. கஜம், ஹஸ்தி, குஞ்சரம் என்னும் சொற்களின் பொருள் யானை என்பது. யானையைப் பக்கங்களிலிருந்தும் பின்புறத்திலிருந்தும் பார்த்தால் எவ்விதமான தோற்றமாகக் காணப்படுகிறதோ அப்படிப்பட்ட வடிவமுடையது இந்தக் கட்டடங்கள். ஆகவேதான் இக்கட்டடங்களுக்குக் கஜபிருஷ்டக் கோவில், ஹஸ்திபிருஷ்டக் கோவில், குஞ்சரக்கோவில் என்று பெயர்கள் கூறப்படுகின்றன. குஞ்சரக்கோவில் என்பதை மணிமேகலை காவியத்தில் குச்சரக்குடிகை என்று கூறப்படுகிறது. குச்சரம் என்பது குஞ்சரம் என்பதன் வலித்தல் விகாரம். காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த பௌத்தக் கோவிலாகிய சம்பாபதிக் கோவில் இந்த அமைப்பாக இருந்தது. ஆகவே இக்கோவில் குச்சரக்குடிகை என்று பெயர் பெற்றிருந்தது.

அழகிய தூங்கானை மாட வடிவில் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் கருவறையில் சதுரமான பீடத்தில் உயரமான லிங்கத் திருமேனியாக ஈசன் திருக்காட்சி தருகின்றான். ஈசனின் முன்பாக நந்தி திருமேனியும் அதன் பின்னால் பாணலிங்கமும் பலிபீடமும் அமைந்துள்ளது.

கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டபம் மற்றும் திருச்சுற்றுப் பிரகாரம் ஆகிய அமைப்புடன் திகழ்கின்றது இப்புராதன சின்னம். மகா மண்டபத்தில் பொய்யாமொழி விநாயகரும், சுப்ரமணியப் பெருமானும் எழுந்தருளியுள்ளனா். சுப்ரமணியா் தனது திருக்கரங்களில் அக்கமாலையும் கமண்டலமும் கொண்டு நான்முகனையொத்த படைப்புக் கோலத்தில் அருள்பாலிப்பது அதிசயமாகும். தினமும் அந்திசாயும் நேரத்தில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இத்தல ஈசனை வழிபடுவதாகவும் ஶ்ரீராமபிரான் இத்தல ஈசனை வழிபட்டுள்ளதாகவும் இத்தலத்தின் புராண வரலாறு தெரிவிக்கிறது.

கல்வெட்டுச் செய்திகள்

இத்திருக்கோயிலில் மொத்தம் 9 கல்வெட்டுகள் உள்ளன. இவையாவும் இக்கோவில் எழுப்பிய வித்ய விநீத பல்லவனுக்குp பிற்பட்டதே, அவற்றில் இரண்டாம் நந்திவா்மன், நிருபதுங்கன் மற்றும் இராஜராஜ சோழன் ஆகிய மன்னா்களின் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். பராந்தகன், பார்த்திவேந்திரவா்மன், விக்ரம சோழன் கல்வெட்டுகளும் இத்தலத்தில் உள்ளன. தெலுங்கு மொழியில் சில கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் இத்தலத்தின் பூஜைகள் தடையின்றி நடைபெறவும் விளக்கு எரிக்கவும் அளித்த கொடைகள் குறித்து தெரிவிக்கின்றன.

பூசலார் புராணம்

 தொண்டை மண்டலத்திலுள்ள பழமையான ஊரில் ஒன்று திருநின்றவூர். இவ்வூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பூசலார் நாயனார். ஈசனின் அன்பிற்கு உகந்த அடியார்களுக்கு செய்யும் தொண்டே ஈசனுக்கு செய்யும் தொண்டு என்று நினைத்து வாழ்ந்து வந்தார். ஈசனுக்குத் தாம் கோவில் கட்டியே தீருவேன் என்று மனதில் ஓர் எண்ணம் கொண்டு அந்த நினைப்பாகவே வாழ்ந்து வந்தார். அவ்வாறு கோவில்கட்ட அவருக்கு பெருநிதி  இல்லையெனினும், எப்படியும் கட்டியே ஆவது என உறுதிபூண்டார். ஒரு கோவில் கட்ட தேவையான பொருட்களை தன் உள்ளத்திலேயே சேர்த்துக்கொண்டு வந்தார்.

சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி 

நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே  

ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால் 

காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்

மனதளவிலேயே எல்லா பொருட்களையும் சேர்த்தபின், ஆகமப்படி கோவில் எழுப்ப தச்சரை அழைத்துக்கொண்டு வந்து நல்லநாளில் அஸ்திவாரம் தோண்டினார். அல்லும் பகலும் அயராது அடிமுதல் உபானம் வரையில் கோவில் கட்டினார். விமானத்துடன் சிகரமும் கட்டி முடித்தார்.

(நிஜம் எது? கற்பனை எது? என உணரா நிலை மாயபுலன் உணர்வுகள், என்றும், பிறழ்நம்பிக்கை (hallucination, delusion) என்றும் அழைக்கப்படுகிறது)

ஒருவாறு கோவிலுக்கு மதில்கள், சுண்ணம் முதலான சாந்துகள் பூசி, திருக்குளம் எழுப்பி அனைத்து விதமான பணிகளையும் முடித்து இறைவனையும் பிரதிஷ்டை செய்ய எண்ணும் வேளையில், காடவர்கோன் காஞ்சியில் பெரும் பொபெருட்செலவில் கோவில் ஒன்றை எடுப்பித்திருந்தான்.

காடவர்கோன் கட்டிய கோவில் எது என்பது தெளிவாக விளங்கவில்லை. ராஜசிம்மன் கட்டிய கைலாசநாதர் கோவிலே அது என்பது பொதுவான எண்ணம். அவருக்கு முன்பே வித்யவிநீதன் கட்டிய இக்கோவிலாக ஏன் அது இருக்கக்கூடாது?  என்ற ஓர் ஐயமும் தோன்றுகிறது. ஏனெனில் வித்யா விநீதனும் காடவர் கோன் என அழைக்கப்படும் பல்லவரின் கிளைத் தோன்றலே.

அன்று இரவு மன்னர் கனவில் தோன்றிய ஈசன், பூசல் எனும் பெயருடைய எம் அன்பன் ஒருவன் இடைவிடாத சிந்தனையால் எமக்கொரு கோவில் கட்டியுள்ளான். ஆகவே யாம் நாளை அங்கு எழுந்தருளவுள்ளோம்! நீ இங்கு குறித்துள்ள செயலை நாளை மறுநாள் வைத்துக்கொள்வாயாக! எனக் கூறி மறைந்தார்.

திடுக்கிட்டு விழித்த மன்னன், உடனே பூசலாரின் இல்லம் தேடி விசாரித்து சென்றான். பூசலாரை அடைந்து அவரிடம் தாம்கண்ட கனாவை கூறினான். அதைக்கேட்டு ஆனந்தமடைந்த பூசலார், இந்த எளியோரின் மேல் இருந்த ஈசனின் கருனையை எண்ணி வியந்து போற்றினார். ஈசனே விரும்பி உறையும் அக்கோவிலைத் தான் பார்க்க எண்ணி பூசலாரிடம் மன்னன் கேட்க,  தான் கோவில் கட்ட எண்ணியதையும், அதற்குரிய பொருள் இல்லாமையால் மனதில் தான் கட்டிய கோவிலினையும் கோவில் கட்டிய விதத்தினையும் விரிவாக எடுத்துகூறினார்.

பூசலாரின் பக்தியை மெச்சிய காடவர்கோன், அவரின் திருவடியைப் பணிந்து வணங்கினார். அதன்பின் தன்மூதூரை அடைந்தார்.

ஈசன் கூறிய அந்நாளில் பூசலாரின் மனக்கோவிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்தார். மேலும் அடுத்தடுத்து ஆற்றவேண்டிய பூசைநெறிகளைத் தவறாது செய்து முடிவில் தில்லைக்கூத்தனின் திருவடிநிழலை அடைந்தார் என்கிறது பூசலார் புராணம்.

பூசலார் ஓவியம் (திரு.ராஜம் வரைந்தது)

பூசலார் குறிப்பிடும் காடவர் வித்ய விநீதனாகவும், அவர் கட்டிய கோவில் வித்ய விநீத பல்லவேஸ்வர கிருஹ கோவிலாகவும் இருக்கலாம்.

மேலும் இத்தலத்தின் மண்டபத்தில் மகாபாரதம் பிரசங்கம் செய்வதற்காக அளித்த கொடையினையும், பிராமணருக்கு இவ்வூா் நிலங்களில் அளிக்கப்பட்ட பங்கு குறித்தும் நீா்ப்பாசன வசதி ஏற்பாடு செய்தது குறித்தும் கூரம் செப்பேடு குறிப்பிடுகின்றது. மகாபாரதம் பிரசங்கம் மூலம் மக்களுக்கு நீதிக் கதைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தலாம் என்று மன்னா்கள் நினைத்ததால் திருக்கோயில்கள் மக்களை நல்வழிப்படுத்தும் மையங்களாகச் செயல்பட்டதையும் அறிய முடிகின்றது. கோயிலின் பூஜைகளுக்காக இரண்டு வேதம் ஓதும் பிராமணா்கள் ‘அனந்த சிவாச்சாரியார் மற்றும் ‘புல்லசர்மன்’ நியமிக்கப்பட்டது குறித்தும் கூரத்தில் உள்ள நிலம் முழுவதையும் 25 பங்குகளாகப் பிரித்து அவற்றில் இவா்களுக்கு இரண்டு பங்குகள் வழங்கப்பட்டது குறித்தும் செப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவன் கோயில் மண்டபத்தை தினமும் தண்ணீா் விட்டு சுத்தம் செய்யவும், விளக்குகள் வைப்பதற்கு ஏற்பாடு செய்த விபரமும் செப்பேட்டில் உள்ளது. கோயிலில் பூஜை செய்யும் அந்தணா்களுக்கு வீட்டு மனையும் நிலங்களும் இறையிலியாக அளிக்கப்பட்டுள்ளது.

கூரம் தலத்தில் ‘பரமேஸ்வர தடாகம்’ என்ற பெயரில் மிகப்பெரிய ஏரி ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு பாலாற்று நீா் வருவதற்காக ‘பெரும்பிடுகுக்கால்’ என்ற வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது . தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமைகள் அனைத்தும் இப்பகுதி விவசாயிகளிடம் அளிக்கப்பட்டதால் தண்ணீா் தாவாக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதனால் அக்காலத்தில் மன்னா்கள் நீா் மேலாண்மையில் சிறந்து விளங்கியதையும் விவசாயம் தழைக்க உதவியதையும் அறியமுடிகின்றது.

பல்லவரின் கிளையினராக இருப்பினும், கட்டிடக்கலையில் புதுமைப் புகுத்திய வகையில் வித்ய விநீதன் குறிப்பிடத்தக்கவராகிறார்.

(தொடரும்)

பகிர:

1 thought on “குறுநிலத் தலைவர்கள் #14 – வித்ய விநீத பல்லவன்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *