Skip to content
Home » டார்வின் #34 – போரும் வாழ்வும்

டார்வின் #34 – போரும் வாழ்வும்

அலசிகள் குறித்த டார்வினின் ஆய்வுகள் முடிந்த அதே நேரத்தில் கிரீமியப் போர் தொடங்கியது. ரஷ்யா ஒருபக்கத்திலும், ஐரோப்பிய நாடுகள் மற்றொரு அணியிலும் நின்று சண்டையிட்டுக்கொண்டன. ஓட்டோமான் பேரரசின் கீழ் உள்ள புனிதமான கிறிஸ்தவ இடங்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் போர் என்று சொல்லப்பட்டது. ஆனால் மத்தியத்தரைக் கடலையும், இந்தியா, அண்மை கிழக்கு உள்ளிட்ட முக்கிய வணிகப் பாதைகளையும் கட்டுக்குள் வைக்கவே ஏகாதிபத்தியங்களுக்கு இடையே இந்தப் போர் நடைபெற்றது.

இங்கிலாந்தில் இருந்த பலரும் போருக்கு ஆயத்தமாகினர். எல்லா இடங்களிலும் போர் பயிற்சிகள் நடைபெற்றன. டார்வின் உறவினர்கள், வெட்ஜ்வுட் குடும்பத்தினர்கூடப் பயிற்சிகளில் கலந்துகொண்டனர். டார்வினின் விஞ்ஞான நண்பர்கள்கூடப் போர் தயாரிப்புகளில் ஈடுபட்டனர்.

‘போர்’ என்ற ஒற்றை வார்த்தையே எட்டு திசைகளிலும் ஒலிக்க, போர்களை இயற்கையுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துகொண்டிருந்தார் டார்வின். ஒருவரது எல்லையில் புதியவர் நுழைந்து வளங்களுக்காகப் போட்டியிடுவதுதான் போர் என்றால் தாவரங்களும் விலங்குகளும் செய்வதுகூட போர்தான் என்றார் டார்வின். அவையும் உணவுக்காகப் புதிய எல்லைகளில் நுழைகின்றன, போராடுகின்றன, இதனால் போர் என்பது பிழைத்திருப்பதற்கான போராட்டம். போர் உயிரினங்களிடையே அழிவை உண்டாக்கும் அதேவேளையில் பன்முகத்தன்மையையும் உருவாக்குகிறது என்று புதிய பார்வையை முன்வைத்தார் டார்வின்.

எப்படி உயிரினங்கள் பல்வேறு வடிவங்களில் பரிணமித்தன? எப்படி ஓர் உயிரினம் கிளைவிட்டு பல உயிரினங்களாகிறது? சிறிய வேறுபாடுகளின் மூலமாகத்தான் இயற்கைத் தேர்வு நடைபெறுகிறது என்பது டார்வினுக்குத் தெரியும். ஆனால் இயற்கைத் தேர்வு நடைபெறுவதற்குப் புறச்சூழல்களின் பங்களிப்பு என்ன என்கிற கேள்வியும் அவருக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

லைலும் ஹூக்கரும் அடிக்கடி டார்வினைச் சந்தித்து இயற்கைத் தேர்வு குறித்து உரையாடினர். ஆனால் ரகசியமாக வெளியே தெரியாதபடி பார்த்துக்கொண்டனர். டார்வின் அவர்களுக்குள் இருந்த தயக்கத்தைப் புரிந்துகொண்டார். தான் உயிரியல் கோட்பாட்டைக் கண்டடைந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கே அதனை வெளியே சொல்வதற்குத் தயக்கம் இருக்கும்போது, இத்தனை நாட்கள் பழைமைவாத முகாமில் இருந்த அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்களா என்ன?

லைலையும் ஹூக்கரையும் உதவிக்கு வைத்துக்கொண்டே பரிணாமக் கோட்பாட்டை செழுமைப்படுத்தும் வேலையில் இறங்கினார். இதன்மூலம் நேரடியான சான்றுகளை அவர்கள் பார்க்க இயலும் என நினைத்தார்.

பரிணாமக் கோட்பாட்டை முன்வைக்கும்போது அதைச் சுற்றி இருக்கும் விஷயங்களையும் சரிபார்க்க வேண்டும் என விரும்பினார் டார்வின். இயற்கைத் தேர்வுக்கும் புவியியலுக்கும் இடையேயுள்ள தொடர்பு, தொல்லுயிர் எச்சங்களின் ஆதாரங்கள், இயற்கைத் தேர்வின் அடிப்படையில் உயிர்களை வகைப்படுத்துதல், கலப்பினங்கள் குறித்த அவதானிப்புகள் என எல்லா உண்மைகளையும் தன் கோட்பாட்டுக்கு ஏற்பவாறு அடுக்க வேண்டும் என நினைத்தார். தம் கோட்பாட்டை முன்வைக்கும்போது எந்தப் பக்கம் வேண்டுமானாலும் தாக்குதல்கள் வரலாம். எல்லாவற்றையும் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். இதையடுத்து அதுவரை நிறுவப்பட்டிருந்த அறிவியல் உண்மைகள் எங்கே பரிணாமக் கொள்கையுடன் பொருந்திப்போகின்றன, எங்கே முரண்படுகின்றன என்று தெளிவுப்படுத்தத் தொடங்கினார்.

முதலில் பரிணாமம் பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களையும் படித்தார். அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களுடன் தன்னுடைய கோட்பாட்டை ஒப்பிட்டுப் பார்த்தார். அதில் தன்னுடைய கருத்துக்களுக்குச் சவால்விடும் இடங்களைக் கண்டறிந்து பதில்களை உருவாக்கினார்.

அப்போதுதான் உயிரினங்களின் பன்முகத்தன்மை பற்றிய விளக்கம் டார்வினுக்குத் தேவைப்பட்டது.

உயிரின எண்ணிக்கை குறித்த கருத்தக்கம் மால்தஸிடம் இருந்து கிடைத்ததுபோல், பன்முகத்தன்மை குறித்த பார்வை இங்கிலாந்தின் தொழிற்சாலை அமைப்புகளில் இருந்து கிடைத்தது. டார்வின் தொழிற்சாலைகள் இயங்கும் விதத்தை ஆராய்ந்தார். தனித்தன்மையும், உழைப்புப் பிரிவினையும் தொழிற்சாலைகளின் செயல்திறனையும் உற்பத்தியையும் அதிகரிப்பதைக் கண்டார். இதே செயல்பாடுதான் இயற்கையிலும் நடைபெறுகிறதா எனக் கேட்டுக்கொண்டார்.

ஜனங்களுக்கு இடையில் ஏற்படும் போட்டி தனிநபர்களை மாற்றுகிறது. அவர்கள் புதிய புகலிடம் தேடிச் செல்கின்றனர். தங்கள் நடத்தைகளை மாற்றிக்கொள்கின்றனர். பயன்படாமல் இருக்கும் வளங்களைப் பயன்படுத்த முயல்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் ஒரே வளத்திற்காகப் போட்டியிடாமல் புதிய வளங்களைக் கண்டறிகின்றனர். அந்தப் புதிய சூழலுக்கு ஏற்ப அவர்களுடைய பண்பாடும் பூர்வீகத்தன்மையில் இருந்து மாறி பன்முகத்தன்மையை அடைகிறது. இதேதான் உயிர்களிடமும் நடைபெறுகிறது என டார்வின் கருதினார். உணவுக்காகப் போட்டியிடும்போது ஒரு உயிரினத்தில் இருந்து வேறு உயிரினம் தோன்றினால் இரண்டு விலங்குகளும் ஒரே உணவுக்குப் போட்டியிடத் தேவையில்லை அல்லவா? உதாரணமாக கலாபகஸில் ஃபிஞ்ச் பறவைகள் மாற்றம் அடைந்து வெவ்வேறு இனங்கள் உருவானவுடன் அவை வெவ்வேறு உணவை உண்பதற்கு ஏற்றவாறு இருந்தன. இப்படித்தான் பன்முகத்தன்மை உருவாகிறது என்றார் டார்வின்.

ஒரு பெரிய நகரத்தில் பல்வேறு தொழிற்பிரிவினர் இருக்கின்றனர். பொருள் ஈட்டுவதற்கு எல்லோரும் ஒரே வேலையைச் செய்வதில்லை. மாறாக வெவ்வேறு தொழில்களில் ஈடுபடுவதன்மூலம் அவர்களால் வளங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இயற்கையிலும் உயிரினங்கள் பன்முகத்தன்மையை அடைவதன்மூலம் வளங்களைப் பகிர்ந்துகொள்கின்றன என்றார் டார்வின்.

போராட்டமும் போட்டியும் துன்பத்தை ஏற்படுத்தும் என்பதை டார்வின் ஒப்புக்கொண்டார். ஆனால் அவைதான் முன்னேற்றத்தையும் பன்முகத்தன்மையையும் ஏற்படுத்தும் என்பது டார்வினின் கருத்து. டார்வினின் இந்தக் கருத்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வுடன் பகிரப்பட்டிருக்கும் வளங்களை நியாயப்படுத்துவதாக இருந்தது என்பது அவர் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

அடுத்ததாக உயிரினங்கள் எப்படிக் கடல் கடந்து எல்லா இடங்களிலும் பரவின என்பதையும் ஆராயத் தொடங்கினார் டார்வின். இதற்கு முன் விலங்குகளின் பரவலை விளக்கும் சில கருத்தாக்கங்கள் இருந்தன. இதன்படி சில காலங்களுக்கு முன் எல்லா நிலங்களும் இணைந்திருந்தன என்றும், அப்போது உயிர்கள் எல்லா இடங்களுக்கும் தடையில்லாமல் பயணித்தன என்றும், திடீரென நிலங்கள் கடலில் மூழ்கிவிட்டதால் இப்போது அவற்றுக்கு இடையில் இடைவெளி உண்டாகி அவை தனித்திருக்கின்றன. இப்படித்தான் விலங்குகளின் பரவல் ஏற்பட்டது என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் டார்வின் இந்தக் கூற்றை மறுத்தார். கலாபகஸ் தீவுகளை எடுத்துக்கொள்வோம். அங்கே இருந்த நிலவியல் அம்சங்களை ஆராய்ந்ததில் பல லட்ச வருடங்களாக அவை பெரிதாக மாற்றம் அடைந்ததற்கான தடையங்களே இல்லை. பிறகு எப்படி உயிர்கள் அங்கே சென்றிருக்கும்? இதனால் நிச்சயம் தாவரங்களும் விலங்குகளும் கடல்களைக் கடந்திருக்க வேண்டும் என உறுதியாக நம்பினார் டார்வின். அதற்கான ஆதாரங்களைத் திரட்டத் தொடங்கினார்.

பரிசோதனைகளை ஆரம்பித்தார். முதலில் அவர் விதைகளை எடுத்துக்கொண்டார். அவற்றை உப்புத் தண்ணீரில் சில வாரங்களுக்கு ஊற வைத்தார். பின் அவற்றைப் பயிரிட்டார். ஒரு வாரத்தில் அவை முளைத்தன. அதேபோல சிலவற்றைப் பனிப்பொழிவில் புதைத்து வைத்தார். அவற்றையும் பயிரிட்டார். பிழைத்தன. இப்படியாகக் கடல்நீர், பனிப்பொழிவைத் தாங்கி விதைகளுக்குத் துளிர்க்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டுகொண்டார் டார்வின்.

இதன்பின் அந்நிய நிலங்களின் விதைகளைச் சோதனைக்கு உட்படுத்தினார் டார்வின். தனக்குத் தெரிந்த நண்பர்கள் வட்டாரத்தில் எல்லாம் கேட்டு விதைகளைச் சேகரித்தார். அவற்றைப் பயிரிட்டுப் பார்த்தார். சில விதைகளை 42 நாட்கள் வரை உப்பு நீரில் மூழ்க வைத்துப் பயிரிட்டார். அவையும் வளர்ந்தன. இதன்மூலம் விதைகள் அந்நியத் தீவுகளுக்குப் பயணித்து வளர முடியும் என்று ஊர்ஜிதம் கொண்டார். இது எப்படி? அட்லாண்டிக் நீரோட்டம் 42 நாட்களில் அசோர்ஸ் தீவுகளை அடைந்தது. 42 நாட்களுக்கு விதைகள் உப்பு நீரில் பிழைக்க முடியும் என்பதால் அவை இப்படியாகப் பயணித்து தீவுகளில் வளர்ந்திருக்கலாம் என்ற புரிதலுக்கு வந்தார் டார்வின். பிரிட்டனில் விளையும் பயிர்களின் விதைகளை அசோர்ஸ் தீவுகளுக்கு அனுப்பி அவை வளர்கின்றனவா எனச் சோதிக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.

இதேபோல வெப்பமண்டல காடுகளின் விதைகள், பனிப்பிரதேச விதைகள் என ஒவ்வொன்றையும் எடுத்து, அவை சேகரிக்கப்பட்ட இடங்களில் உள்ள கடல் நீரோட்டம் எங்கெல்லாம் தொலைதூர நிலங்களுக்குச் செல்கிறதொ அங்கெல்லாம் விதைகளை ஊன்றி விளைகிறதா எனச் சோதித்தார். இதன்மூலம் சில விதைகள் 85 நாட்கள்கூட பிழைத்திருந்து வளர்கின்றன எனத் தெரியவந்தது. சில விதைகள் காய்ந்து இருப்பதைவிட கடல்நீரில் இருந்து மண்ணில் புதையும்போது வேகமாக வளர்கிறது என்பதும் தெரியவந்தது. சில மிளகு விதைகள் ஐந்து மாதங்கள் குளிர்ந்த நீரில் இருந்தும் வளர்ந்தது. இப்படியான டார்வினின் சோதனைகள் விதைகள் தொலைதூரம் சென்று வளரும் என்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கொடுத்தன.

இப்படி விதைகள் புதிய இடங்களுக்குச் சென்று வளர்கின்றன என்பதை ஊர்ஜிதம் செய்தபின், இந்த விதைகளைப் புதிய இடங்களில் ஏற்கெனவே இருக்கும் தாவரங்களும் விலங்குகளும் வாழ விடுமா என்கிற சோதனையும் நடத்தப்பட்டது.

அதேபோல் விலங்குகளின் முட்டைகளை வைத்தும் கருத்தரிப்புச் சோதனைகளை நடத்தினார் டார்வின். பல்லி முட்டைகள், பாம்பு முட்டைகளை எல்லாம் கொண்டு வந்து அவை வீட்டுத் தோட்டத்தில் வளர்கின்றனவா எனச் சோதித்தார். இப்படியாக மற்றவர்கள் குழந்தைத்தனமாக இருக்கிறது என நினைக்கும் சோதனைகளைக்கூட தீவிரமாக மேற்கொண்டு தரவுகளைச் சேகரித்தார் டார்வின்.

விலங்கினங்களின் கருத்தரிப்பை ஆராய்ந்தபோது மேலும் சில ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்தன. பாலூட்டிகள், ஊர்வனங்கள், மீன்கள் எனப் பல்வேறு விலங்குகளின் சிசுக்களும் ஆரம்பகட்டத்தில் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதாகத் தோன்றின. அவை பெரிதாக வளரும்போதுதான் வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. இது ஏன் என்று யோசித்தபோது, ஒரே மூதாதையரில் இருந்து அவை வந்திருப்பதே ஏன் காரணமாக இருக்கக்கூடாது எனத் தோன்றியது.

இந்தக் கேள்வி விலங்குகளில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்த டார்வினின் பார்வையையும் மாற்றியது. வேறுபாடுகள் என்பது கருப்பையிலேயே தோன்றிவிடும் என அதுவரை டார்வின் நினைத்துவந்தார். ஆனால் சில பண்புகள் விலங்கினங்கள் வளர்ந்தபின் சில காலங்கள் கழித்து ஏன் வெளிப்படக்கூடாது எனத் தோன்றியது. இதன் மூலம் இயற்கைத் தேர்வு என்பது வெளிப்படையாகத் தெரியும் பண்புகளில் மட்டும் நிகழ்வதில்லை. ஒளிந்திருக்கும் பண்புகளிலும் நிகழ்கிறது. அதேபோல சில பண்புகள் ஓர் உயிரினம் பிறந்தவுடன் வெளிப்படுவதில்லை. அவை ஒளிந்திருந்து பின்னால் வெளிப்படுகின்றன எனக் கண்டுகொண்டார் டார்வின். தனக்கு வந்த பரம்பரை நோய் ஒளிந்திருந்து தன் மகள் ஆனிக்கு வெளிப்பட்டதை இதற்கு உதாரணமாக அவர் எடுத்துக்கொண்டார்.

ஆனாலும் வேறுபாடுகளும் தேர்வுகளும் ஏன் நிகழ்கின்றன என்பதற்குக் காரணம் தேவைப்பட்டது. மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வே விலங்கினங்களில் மாறுபாடுகள் ஏற்படுவதற்குக் காரணம் என்று இன்றைக்கு நாம் எளிதாகச் சொல்லிவிடுகிறோம். அன்றைய காலகட்டத்தில் ஏன் வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதை அறிய உள்ளுக்குள் நடைபெறும் மாற்றங்களை அவதானிக்கும் தொழில்நுட்பங்கள் இல்லை. இதனால் ஊகங்களின் அடிப்படையில் புரிந்துகொள்ள பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார் டார்வின்.

வேறுபாடுகளை ஆராய வீட்டு விலங்குகளிடம் கவனம் செலுத்தினார் டார்வின். வீட்டை ஏற்கெனவே பண்ணைபோல மாற்றி நாய்கள், பட்டுப்புழுக்கள், வாத்துக்கள், வான்கோழிகள் என ஏராளமான விலங்குகளை ஆராய்ந்தார். மற்ற விஞ்ஞானிகள் பண்ணை விலங்குகளை எல்லாம் முக்கியமில்லாதது எனக் கருதிய காலம் அது. அவற்றை ஆராய்வது கீழ்மையான, இழிந்த விஷயமாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் டார்வின் உண்மை அங்கிருந்துதான் வெளிப்படுகிறது என உறுதியாக நம்பினார். விவசாயக் கண்காட்சிகளுக்குச் சென்றார். பாரம்பரியமாகப் பண்ணை விலங்குகளை இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தும் நிபுணர்களைச் சந்தித்து அவர்களது அறிவுரைகளைப் பெற்றார்.

புறாக்கள் டார்வினின் ஆய்வுகளில் முக்கியப் பங்கு வகித்தன. புறாக்களுக்கு என்று தனியாகக் குடில் அமைத்து அதில் பல வித்தியாசமான புறக்களை ஆராய்ந்தார். அவற்றின் உடலை எப்படி அளவீடு செய்ய வேண்டும்? அவற்றின் தோற்றத்தை எப்படி ஆராய வேண்டும்? நமக்கு வேண்டிய அலகு, இறக்கைகளை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் புத்தகங்களிலும் நேரிலும் சென்று அறிந்துகொண்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினார்.

புறாக்களின் வெளித்தோற்றம், உள்தோற்றம் இரண்டையும் ஆராய்ந்தார் டார்வின். புறாக்களைக் கொன்று உள்ளுறுப்புகளில் ஏற்படும் வித்தியாசங்களைக்கூட குறித்துக்கொள்வார். எலும்புகளின் அமைப்பை வரைவார். பின் புதிதாகப் பிறந்த புறாக்களை வளர்த்து, அவற்றின் பெற்றோருடைய உடல் அமைப்புடன் ஒப்பிடுவார். இதன் மூலம் நுண்ணிய வேறுபாடுகளையும்கூட அவதானித்தார் டார்வின்.

சில சமயங்களில் விலங்குகளைக் கொல்வது பாவமாக இருக்கும். மனம் வலிக்கும். ஆனால் அறிவியலுக்காகச் சோதனைகளைச் செய்வதாகத் தன்னைத் தானே தேற்றிக்கோள்வார் டார்வின்.

டார்வினின் ஒரே இலக்கு, இயற்கை ஏராளமான சிறிய வேறுபாடுகளை உருவாக்குகிறது என்பதை நிரூபிப்பதுதான். அந்த வேறுபாடுகள் பலருக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றன என்பதை நிறுவுவதுதான். இந்தச் சிறிய வேறுபாடுகள், பல தலைமுறைகளாக நடக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் பெரிதாக மாறி ஆச்சரியமூட்டும் வடிவங்களை உருவாக்குகிறது என்று நிறுவ வேண்டும் என டார்வின் நினைத்தார்.

இந்த இடைவிடாத தேடல் அவர் எதிர்பார்த்த விடைகளைக் கொடுக்கத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு உண்மைகள் புலப்படத் தொடங்கின. டார்வின் வளர்த்த புறா வகைகளில் மாற்றம் நிகழ்வது தெரிந்தது.  தனி இனம் என்று சொல்லும் அளவுக்கு சில உருமாறி இருந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளை ஆராய்ந்து சிவப்பணுக்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக்கூட டார்வின் கண்டுகொண்டார். இதுவே முயல்களிலும் நிகழ்ந்தது. இதன்மூலம் சிறிய வித்தியாசங்களை வைத்து முழுமையான தனி இனத்தையே வடிவமைக்க முடியும் என நேரடியான சோதனைகள் மூலம் நிறுவினார் டார்வின். இதில் இன்னொரு விஷயம். இந்தச் சோதனைகளை எல்லாம் லைலையும் ஹூக்கரையும் வைத்துக்கொண்டே செய்தார். உருமாற்றத்தை ஆபத்தான கருத்தாகப் பார்த்து வந்த லைலும் ஹூக்கரும் நேராகவே மாற்றங்கள் நிகழ்வதைப் புரிந்துகொண்டார்.

இயற்கைத் தேர்வும் இப்படித்தான் செயலாற்றும் என டார்வின் தரவுகளை அடுக்கினார். பலவீனமான அல்லது சரியாகத் தகவமைக்கத் தெரியாத உயிர்கள் மறைந்துவிடுகின்றன. தகுதிவாய்ந்தவை பிழைத்து இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் பண்பு அடுத்தடுத்த தலைமுறைகளில் பெரிதாகி தனித்துவமான வடிவத்தைப் பெறுகிறது என்பதை லைலுக்கும் ஹூக்கருக்கும் புரிய வைத்தார் டார்வின்.

இந்தமுறை முழுமையாக டார்வினிடம் சரணடைந்தார் ஹூக்கர். இனியும் உயிரினங்கள் மாறாது என்று என்னை நானே ஏமாற்றிக்கொள்ள மாட்டேன். உயிரினக் கோட்பாட்டை ஏற்கிறேன் என உறுதியளித்தார் ஹூக்கர்.

ஆனால் லைல் இன்னுமே அரை மனதாகவே டார்வின் பக்கம் நின்றார். பரிணாமக் கொள்கையை ஏற்பதில் லைலுக்குத் தயக்கமில்லை. ஆனால் அதை மனிதர்களுக்குப் பொருத்திப் பார்ப்பதில்தான் தயக்கம். இதனால் ரகசியமாக ஆதரவு தருவதாகத் தெரிவித்தார்.

டார்வினுக்கு இதுவே பெரிய முன்னேற்றமாக இருந்தது. பழமைவாதக் கருத்துக்களை விடாபிடிப்பாகப் கடைபிடித்து வந்த நண்பர்களுக்கு மத்தியில் லைலும் ஹூக்கரும் தன் கோட்பாட்டை ஆதரிக்கத் தொடங்கியதே அவருக்குப் போதுமானதாக இருந்தது. இதன் மூலம் இளம் தலைமுறை ஆட்களிடமும் தம் கருத்தைச் சொல்லலாம் என்கிற தைரியம் டார்வினுக்கு வந்தது.

0

செப்டம்பர் 1854 அலசிகள் பற்றிய டார்வினின் இரண்டாவது தொகுப்பு வெளியானது. மொத்தம் 684 பக்கங்கள். முதல் தொகுப்பே பெரிதாய் பேசப்பட்ட நிலையில் இரண்டாம் தொகுப்பு வெளியாகி டார்வினை ஆய்வுலகின் முக்கியஸ்தர்களில் ஒருவராக நிறுத்தியது. இந்த ஆய்வின் வெற்றியும், ராயல் பதக்கமும் டார்வினைச் சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்றன. ஹார்வெர்ட் உள்ளிட்ட இடங்களுக்குப் பேசுவதற்காக அழைக்கப்பட்டார் டார்வின். ஆனால் இவற்றை எல்லாம் தன் தனிப்பட்ட வெற்றியாகவோ, பெருமிதமாகவோ டார்வின் கருதவில்லை. இந்த அங்கீகாரங்களை எல்லாம் உயிரினக் கோட்பாட்டை தாம் பொதுவில் பேசுவதற்கு அதிகாரப்பூர்வமான உரிமையைத் தரும் கூறுகளாகவே பார்த்தார் டார்வின்.

லைல், ஹூக்கரைத் தொடர்ந்து புதிய நண்பர்களான ஹக்ஸ்லி, ஸ்பென்சர் இருவரிடமும் பரிணாமக் கொள்கையை விவரித்தார் டார்வின். ஸ்பென்சர் டார்வினின் கோட்பாட்டைக் கேட்டு வாயடைத்து நின்றார். பரிணாமக் கொள்கையை சமூக முன்னேற்றத்தில் பொருத்தி ஆராய்ந்து வந்த அவர், உயிரியல் துறையில் அவற்றின் முக்கியத்தை உணர்ந்தபோது அதிசயித்துப்போனார்.

ஆனால் ஹக்ஸ்லி டார்வினின் கருத்தை ஏற்கவில்லை. அவருக்கு ஏற்கெனவே பரிணாமக் கோட்பாடு பற்றிய ஒவ்வாமை இருந்தது. அதனைப் புரட்சிகரவாதிகள், இடதுசாரிகள் கொண்டாடுவதால் வந்த ஒவ்வாமை அது. அதற்காக டார்வினின் கோட்பாட்டை அவர் முழுவதும் நிராகரிக்கவும் இல்லை. இன்னும் சான்றுகள் இருப்பின் ஒப்புக்கொள்கிறேன் எனச் சமாளித்தார். டார்வினுக்கு இப்போது ஹக்ஸ்லியைச் சம்மதிக்க வைப்பதுதான் பெரும்பாடாகத் தோன்றியது. ஆனால் பின்னால் நடைபெற்ற விஷயங்கள் ஹக்ஸ்லியை இயற்கைத் தேர்வை ஏற்றவைக்க மட்டும் அல்ல, டார்வினின் பிரச்சார பீரங்கியாகவே மாற்றியது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *