அன்று தமிழக முதன்மை வன உயிரினப் பாதுகாவலர் திரு.சித்திரப்பு அலுவலகம் வந்ததும், முதல் அவசர அழைப்பாக தொலைபேசியில் வந்தது, மேற்குவங்க முதன்மை வன உயிரினப் பாதுகாவலர் சுபிமல் ராயின் அழைப்பு. சுபிமல் ராய், அங்கு மிதுனபூர் சரகத்தில், காட்டு யானைகள் பயிர் நிலங்களை நாசம் செய்வது கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்றும், மேற்கு வங்க அரசு ஏதேனும் உடனடி நடவடிக்கை எடுக்க அவருக்கு ஆணையிட்டதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் யானைகளைக் குறித்து பல ஆராய்ச்சிகள் நடப்பதாலும், மற்ற மாநிலங்களில் இல்லாத செயல்பாடுகள் இங்கு நடைபெறுவதாலும், சித்திரப்புவின் உதவியை நாடினர். இது 1995ஆம் ஆண்டின் ஆரம்ப காலம். நாட்டில் முதல் முறையாக, காலரிங் மற்றும் பிரச்னைக்குரிய விலங்குகளை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தல் போன்ற நடவடிக்கைகளால், டாக்டர் கேவும், தமிழக வனத்துறையும் இந்திய அளவில் புகழ் பெற்றிருந்ததை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதன் விளைவுதான் இந்தத் தொலைபேசி அழைப்பு. திரு.சித்திரப்பு, டாக்டர் கேயின் நெருங்கிய நண்பர் என்பதை நாம் முன்னரே பார்த்தோம். அவரும் உடனே டாக்டர் கேவை அழைத்து, கலந்தாலோசிக்க முடிவு செய்தார். ஆலோசனையின் முடிவில், டாக்டர் கே ஒரு முன் பயணம் சென்று, பிரச்னையின் தீவிரத்தையும் தீர்க்கும் வழிமுறைகளையும் கண்டறிவது என்று முடிவாயிற்று. அதன்படி, அடுத்த சில தினங்களில் டாக்டர் கே மிதுனப்புர் நோக்கி, கொல்கத்தா வழியாகச் சென்றார். அப்படியே, அங்கு மேற்குவங்க முதன்மை வன உயிரினப் பாதுகாவலர் சுபிமல் ராய் அவர்களையும் சந்தித்து விட்டுச் சென்றார்.
நிலைமை கவலைக்கிடம்தான் என்பதை டாக்டர் கே உணர்ந்தார். காரணம், வறுமையில் வாடும் ஏழை விவசாயிகள் தங்கள் பயிரை யானைகளுக்குத் தாரை வார்க்க வேண்டிய நிலை; அது அரசியலிலும் பிரதிபலித்தது. டாக்டர் கே மனதில் ஒரு திட்டத்துடன் திரும்பினார். அங்கு கும்கி யானைகளோ, யானை முகாம்களோ இல்லை. ஆனால், அடுத்த மாநிலமான அசாமில், கும்கிகள் இருந்தன. ஆனால், யானைகளைத் திறம்பட பழக்கும் மாவுத்தர்கள் இல்லை. மேலும், தமிழகம் போன்ற யானைகள் முகாம் இல்லை. அங்கங்கு, யானை உரிமையாளர்கள்தான் யானைகளைப் பராமரித்து வந்தனர். மாவுத்தர்களும், நம் முகாமில் உள்ளவர்களைப் போல யானைகளைப் பழக்கவில்லை. சற்று வன்முறையாகத்தான் அவர்களது பழக்கும் முறை இருந்தது. தமிழகம் திரும்பி, திரு.சித்திரப்புவிடம் பேசி, ஆவன செய்வதாக உறுதி அளித்து விட்டு, டாக்டர் கே திரும்பி வந்தார். திரு. சித்திரப்புவிடம், தன் மனதில் இருந்த திட்டத்தைச் சொன்னார். அதாவது, கும்கிகளும், அதன் பாகன்களும், அசாமில் இருந்து வர வேண்டும்; அவர்களைக் கொண்டு, பிரச்னைக்குரிய யானைகளைப் பிடிப்பது; பிடித்த யானைகளை நம் பாகன்களைக் கொண்டு பழக்கிய பின், அவற்றை மேற்குவங்க வனத்துறையிடம் ஒப்படைத்துவிடுவது; ஓரிரு ஊழியர்களுக்கு, யானையைப் பழக்கவும் கற்றுத் தருவது. இப்படி ஒரு திட்டத்தை அவர் முன்மொழிந்தார். அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்த பின் திரு. சித்திரப்புவும், அதற்கு ஒப்புக் கொண்டார். மேற்குவங்க முதன்மை வன உயிரினப் பாதுகாவலர் சுபிமல் ராய்க்கு இது உடனே தெரிவிக்கப்பட்டது. அவரும், அதை ஆராய்ந்த பின், ஒப்புக் கொண்டார். இப்படியாக, ஒரு அதிசயப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் முன், டாக்டர் கே டாப்ஸ்லிப் சென்று பாகன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏனெனில், கிட்டத்தட்ட ஆறு முதல் ஒன்பது மாதங்கள் பாகன்கள் மேற்கு வங்கத்தில் தங்க நேரிடும். மொழி தெரியாத, மற்றும் வித்தியாசமான சூழலில் அவர்கள் பணி செய்ய வேண்டும். சில அசௌகரியங்கள் கட்டாயம் இருக்கும். பாகன்கள் டாக்டர் கேவின் மேலிருந்த அபார நம்பிக்கை காரணமாக, வருவதற்கு ஒப்புக் கொண்டனர். மேலும், அவரும் உடனிருப்பதால், அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது என்று அவர்கள் உணர்ந்தனர். இப்படியாக, நான்கு பாகன்கள் தயாராயினர். எல்லோரும் இளைஞர்கள். அதாவது முப்பது வயதிற்குள். குமார், பிரசாத், தினேஷ் மற்றும் மணி (தற்போது இவர் யானை கலீமின் மாவுத்தன்) மிதுனப்புர் செல்லத் தயாராகினர். எல்லோரும், ஆறு நாள் பயணமாக, ரயிலில் மிதுனப்புர் சென்றடைந்தனர். அங்கு எல்லாமும் அவர்களுக்குப் புதிதாக இருந்தது. காளிதான் பிரதான தெய்வம். சாப்பாடு நம் ஊர்போல இல்லை. அரிசிதான் என்றாலும், குழம்பு, ரசம் போன்றவை அவர்களால் செய்யப்படுவது இல்லை. அவல் அதிகமாக பயன்பாட்டில் இருந்தது. நான் டாப் ஸ்லிப்பில் சந்தித்த பாகன்கள் சொன்னபோது வேடிக்கையாக இருந்தது. ‘சார், காலையிலே அவலும் பூரியும், வெல்லமும் கொடுத்தாங்க. நீங்க சாப்பாடு செஞ்சுக்கங்கன்னிட்டு. அதெல்லாம் நாங்க பூஜைக்குத்தான் வெப்போம், சாப்பாட்டுக்கில்லன்னு சொல்ல எங்களுக்கு பாஷ தெரியல்லே. நல்லவேளையா, டாக்டர் வந்து, எங்களுக்கு நம்ம ஊர் மாதிரி மளிகை சாமான் கொடுக்கச் சொன்னாரு. அப்புறம், சரியாச்சு. இருந்தாலும், டாக்டர் அப்பப்போ வந்து எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்குவாரு. அவர் கூட இருந்தாருன்னா, எங்களுக்கு எந்தக் கொறையும் இருக்காது,’ என்று சொல்லும்போது, எப்படிச் சின்னச் சின்ன விஷயங்கள் ஒருவரைப் பாதிக்கும்; அவர்களது பணியை பாதிக்கும்; மனநிலையை மாற்றும் என்று அறிய இயன்றது.
இங்குதான் டாக்டர் கே மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டுத் தெரிகிறார். உயர் அதிகாரி என்ற தோரணையில், அவர் பாகன்களிடம் இருந்து விலகி நிற்கவில்லை. மாறாக, அவர்களில் ஒருவன் என்ற எண்ணத்தை விதைத்தது மட்டுமல்லாது, அவர்களது சின்னச் சின்னத் தேவைகளைக்கூட நிறைவேற்றி அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வழி செய்தார். அதை ஒரு மகிழ்வுடன் செய்தது, அதைவிட விசேஷம். ‘எலிபன்ட் மென்’ என்ற அந்த ஆவணப் படம், மிக அருமையாக எடுக்கப்பட்ட ஒரு வன உயிரின டாக்குமெண்டரி. அங்கிருந்த முகாம் சூழ்நிலைகள், பொது மக்களின் அணுகுமுறை, டாக்டர் கேவின் ஆளுமை, படம் பிடித்த குழுவினரின் அனுபவங்கள் என ஒரு நல்ல இலக்கியம்போல இருக்கும். இவர்கள் போய்ச் சேரும் சமயத்தில், அசாம் மாவுத்தர்கள் தங்கள் கும்கிகளுடன் வந்து சேர்ந்தனர். அவர்களது சிறப்பு, யானைகளைச் சுருக்கிட்டுப் பிடிப்பது. அதாவது, இதற்கு, ஹிந்தியில் ‘மேல்ஷிகார்’ என்று பெயர். கும்கி யானையின் மேலிருந்து சுருக்குக் கயிற்றைப் பிடிக்க வேண்டிய யானையின் மேல் எறிவர். அதை அனிச்சையாக அந்த யானை விலக்க நினைத்து தும்பிக்கையால் தள்ளும்போது, சுருக்கு கழுத்தில் விழுந்து விடும். அதன் பின், அதை கும்கி யானையைக் கொண்டு இழுத்துக் கொண்டு வந்து விடுவர். யானை கூட்டமாக இருந்தால், பிடிபட்ட யானை தவிர மற்ற யானைகளை துப்பாக்கியால் வானத்தில் சுட்டு விரட்டி விடுவார்கள். இங்கு, பயிர்களைச் சேதம் செய்யும் சில தலைமை அல்லது விடலை யானைகளை மட்டும் பிடிப்பது என்று ஏற்பாடு. அதற்கு, கும்கிகளில் ஏறி, அவர்கள் ரெக்கி (முன்னோடி நடவடிக்கை) சென்று கூட்டத்தில் உள்ள பிரச்னைக்குரிய யானைகளை அடையாளம் காண்பர். அது இல்லாது, விவசாயிகளுக்கு எந்தெந்த யானைகள் தொல்லை தருபவை என்று தெரியும். பல காலமாக அவற்றால் அவதிப்படுவதால்.
யானையைப் பிடிக்க டாக்டர் கே போகும்போது, இங்கே தமிழ்நாட்டுப் பாகன்கள், கிராலைக் கட்டிக் கொண்டிருப்பார்கள். கிராலைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். இப்படியாக, நான்கு யானைகளைப் பிடித்த பின்பு, நம் நான்கு பாகன்களும், அவற்றைப் பழக்க ஆரம்பித்தனர். இந்த நடவடிக்கை ஜூன் 1995இல் தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை தொடர்ந்திருக்கிறது. மேற்கு வங்க வனத்துறை ஆட்களும், யானையைப் பழக்கும் முறைகளைக் கற்றனர். யானை முகாமை எப்படி அமைப்பது, நடத்துவது என்றும் கற்றனர். பாகன்கள் எல்லோரும், பேசியபடி சம்பளம் மற்றும் இதர படிகள் கிடைக்கவும் டாக்டர் கே உதவி செய்தார். நான் முன்பே சொன்னதுபோல, அந்த ஆவணப்படம் இதைக் குறித்து மிக விரிவாகவும், விளக்கமாகவும் சொல்கிறது. இது போன்ற ஆவணப்படங்கள், நாம் இழந்து கொண்டிருக்கும் பாரம்பரிய மற்றும் பழங்குடிகளின் கலைகளைப் பற்றி எடுத்துரைக்க, ஒரு நல்ல ஊடகம். அதனால்தான், நான் இது குறித்து மிக விளக்கமாக எழுதவில்லை. இதில், டாக்டர் கே எப்படி ஒரு தந்தையைப்போல, பாகன்களையும் மற்றவர்களையும் கவனித்துக் கொண்டார் என்பதுதான் என் நோக்கம். எப்படி வழக்கம்போல், ஓர் அக்கறையுள்ள, பரிவு கொண்ட தலைவராக இருந்தார் என்று உணர்த்தும் ஒரு சம்பவம் இது. தற்போது, போன வருடமும், இந்த வருடமும், டாப்ஸ்லிப் பாகன்கள், தாங்கள் தாய்லாந்து சென்று வந்த அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது, இதைப் போன்ற ஒரு தலைவர் இன்று இல்லையே என்று ஏங்கியதைக் கண்டேன். காலத்தின் கோலம் மற்றும் அணுகுமுறையில் மனிதர்களின் வேறுபட்ட தன்மை.
‘எலிபன்ட் மென்’ ஆவணப்பட ஒளிப்பதிவாளர் திரு. அல்போன்ஸ் ராய், என்னிடம் இந்த அனுபவம் குறித்துப் பேசும்போது, மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் போனார்! ‘டாக்டர் கே போன்ற மனிதர்களைப் பார்ப்பது மிக அரிது; அதைவிட அவருடன் பழகும் பேறு கிடைப்பது அதனினும் அரிது. எனக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தது. சில நேரங்களில் நாங்கள் உயிரைப் பணயம் வைத்து அந்த ஆவணப்படத்தை எடுத்தோம். டாக்டர் கேயின் மருத்துவ ஞானத்தை நான் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது,’ என்று அவர் அந்த இரண்டையும் என்னிடம் விவரித்தார். நான் அதை அவரிடம் இருந்து கேட்கும் (ஆவணப்படத்தை நூறு முறை பார்த்திருந்தாலும்!) அனுபவத்தைச் சொல்லில் விவரிக்க இயலாது. அந்த அளவிற்கு உணர்வுபூர்வமானது. நானே அந்தக் காலத்திற்குச் சென்றதுபோல உணர்ந்தேன். முதல் நிகழ்வு, வயிற்றில் வாயு அடைத்துக் கொண்டு மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பசு மாட்டிற்கு அவர் எவ்வாறு இரைப்பைத் துளையிடுதல் செய்து குணமாக்கினார் என்பது; மற்றொன்று சண்டையில் வயிறு கிழிந்து, குடல் சரிந்த ஜாத்ரா பிரசாத் என்ற கொம்பனுக்கு எப்படி அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார் என்பது. இரண்டாம் நிகழ்வு ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. முதல் நிகழ்வு வெகு வேகமாக, உடனடித் தீர்வாக செய்யப்பட்டதால், படமாக்க இயலவில்லை என்று தெரிகிறது. இங்கு முதல் நிகழ்வைப் பார்ப்போம்.
முதல் நாள் ஏற்பட்ட மோசமான அனுபவத்தால், எல்லோருமே மிகவும் களைத்துப் போய் திரும்பி இருந்ததால், அடித்துப் போட்டது போல் உறங்கி விட்டனர். காரணம், முன் தினம் அவர்களால் பயிரை மேயும் காட்டு யானைகளைப் பிடிக்க முடியவில்லை. போதாததற்கு, அல்போன்ஸ் மற்றும் ஹாரி மார்ஷல் இருவரும் சகதியில் விழுந்து, யானைகளிடம் இருந்து தப்பித்ததே பெரிய காரியமாகிவிட்டது. கிராமத்து மக்கள் இவர்கள் மேல் நம்பிக்கை இழந்து, அவர்களைச் சிறை பிடித்து ஓர் இடத்தில் அடைத்து விட்டனர். ஏனெனில், யானைகள் மிகுந்த கோபத்துடன் பயிர்களை மேலும் நாசம் செய்யும் என்று எண்ணினார்கள். பின், வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இவர்களை விடுவித்தனர். இப்படியாக இரவு நேரம் கழித்து இவர்கள் வந்து உறங்கும்போது நள்ளிரவு தாண்டிவிட்டது. காலையில், ஒன்பது மணி வாக்கில் எழுந்த அல்போன்ஸ், டாக்டர் கேவைச் சந்தித்து, அடுத்துச் செய்ய வேண்டியது குறித்துப் பேச அவரது குடியிருப்பை அடைந்தார். டாக்டர் கே குளித்து, பூஜை செய்து விட்டு, எப்போதும்போல பிரசன்ன வதனமாக (இனிய முகத்துடன்) அவரை வரவேற்றார். முதல் நாள் முயற்சி தோல்வி அடைந்த ஓர் அறிகுறி அவரிடம் தென்படவில்லை.
அப்போது, அந்தக் குடியிருப்பின் பின் இருந்த கிராமத்து வீட்டின் கொட்டடியில் ஒரு பசு, ஈனக் குரலில் கத்திக் கொண்டிருப்பதை அல்போன்ஸ் பார்த்தார். ‘டாக்டர், இந்த மாட்டுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. ஈனஸ்வரத்தில் முனகுகிறது. படுத்துவிட்டது. மிகவும் கஷ்டப்படுவது போலத் தெரிகிறது. ஏதாவது செய்யுங்களேன்,’ என்றார். டாக்டர் கே, ‘நானும் பார்த்தேன். அதுக்குதான் வெளியே வந்தேன். நீயும் வந்துட்டே. வாயுவால் (தொல்லையால்) இரைப்பை நிரம்பி அந்த வாயு மேலே உள்ள இதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாயை அமுக்குவதால், மூச்சு விட சிரமப்படுகிறது. உடனே பன்க்சர் செய்யனும். ஆனா, நம்ம கிட்ட அதற்கான உபகரணம் இல்லையே’ என்றார். அல்போன்ஸ், ‘வேற ஒண்ணும் செய்ய முடியாதா?’ என்று கேட்டார். டாக்டர் கே சற்று யோசித்துவிட்டு, உள்ளே போனார். பின், யானைகளுக்கு போடும் ஊசியில் பெரிதாக உள்ள ஒன்றை எடுத்துக் கொண்டு பசுவிடம் சென்றார். பசு, நிலைகொள்ளாமல், படுத்து புரண்டு கொண்டு இருந்தது. டாக்டர் கே பசுவின் முதல் இரைப்பை இருக்கும் இடத்தில், அதாவது முன்னக்கால்களை அடுத்துள்ள வயிற்றுப் பகுதியை ஊசியால் குத்தினார். ஒரு விளைவும் இல்லை. அடுத்த முறை முழுப் பலத்தையும் கொடுத்து சற்றுக் கீழே குத்தினார். உடனே, பலூனில் இருந்து காற்று போவதுபோல உள்ளே இருந்து காற்று சீறிக் கொண்டு வந்தது. அல்போன்ஸ், டயரில் இருந்து காற்று வெளியேறுவதுபோல என்று சொன்னார். இரண்டு நிமிடங்களில், பசு எழுந்து நின்றது. எதுவும் நடக்காததுபோல டாக்டர் கே விடுதிக்குள் சென்று மற்ற வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், டாக்டர் கேவின் சமயோசிதமான செயல்பாடு. மாட்டுக்குப் போடும் ருமனோசெண்டசிஸ் ஊசி அல்லது டிரோகார் அவரிடம் இல்லை என்றபோதும், அவரிடம் இருந்த வேறொரு ஊசியைப் பயன்படுத்தி, மாட்டின் வேதனையை நீக்கிய அந்த உடனடி சிந்தனை, மற்றொன்று, மாட்டின் பிரச்னை இன்னது என்பதைச் சடுதியில் புரிந்துகொண்டு செயலாற்றியது. காரணம், அந்தப் பிரச்னை நீண்டு கொண்டு போனால், மாடு இறப்பதற்கும் வாய்ப்பு உண்டு. கடைசியாக, செயல்பாட்டில் அவர் காட்டிய தன்னம்பிக்கை. சந்தேகத்துடன் அணுகாமல், தேர்ந்த மருத்துவ அறிவுடன் செயல்பட்டது. இதுதான் நிபுணருக்கும், மற்றவருக்கும் உள்ள வேறுபாடு. இதை எழுத எனக்கு உதவிய கம்பம் கால்நடை மருத்துவர் திரு.மஹேந்திரனுக்கு என் நன்றிகள் பல உரித்தாகும்.
(தொடரும்)

