ஆடம்பரத்தின் சின்னமா? அழிவின் நிழலா?
1875ஆம் ஆண்டில் வேல்ஸ் இளவரசர் எட்வர்ட் (பின்னாளில் எட்வர்ட் VII) இந்தியாவில் ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அந்த 8 மாத கால இந்திய பயணத்தின்போது, மகிழ்ச்சிக்காகப் புலி வேட்டை ஒன்றில் அவர் ஈடுபட்டார். இதன் விளைவாக ’ராஜ வங்கப் புலி’ (Royal Bengal tiger) என்கிற புதிய பெயரை இந்தியப் புலி பெற்றது.
முதலில் கல்கத்தா பத்திரிகைகள் இந்தப் பெயரைப் பயன்படுத்தின; பின்னர் உலகமும் அதைp பின்பற்ற தொடங்கியது. ’ராஜ’ எனும் சொல் பிரிட்டிஷ் இளவரசர் புலி வேட்டையில் ஈடுபட்டதால் பயன்படுத்தப்பட்டது. புலிகளின் வீரத்துக்காக அல்ல. பெரும்பாலும் இளவரசர் எட்வர்டின் வருகையை இந்தியப் புலிகளின் அழிவுக்கான தொடக்கம் என இயற்கை ஆர்வலர்கள் குறிப்பிட்டாலும், அவர் வருவதற்கு முன்பாகவே புலி வேட்டை என்பது காலனி ஆட்சியாளர்களுக்குப் பிடித்த விளையாட்டாக இருந்ததை மறுக்க முடியாது.
பிரிட்டிஷ் கிழக்கத்திய வேட்டை பத்திரிகை, வங்காள விளையாட்டு பத்திரிகை, இந்திய விளையாட்டு விமர்சனம் போன்ற வேட்டை தொடர்புடைய இதழ்கள் இளவரசரின் வருகைக்கு முன்பாகவே ஆவலுடன் வாசிக்கப்பட்டன. வேட்டையாடும் செயலைத் தங்களது வாழ்க்கையில் மறக்கமுடியாத, தவிர்க்கமுடியாத தருணம் என்றே அவர்கள் கருதி வந்தனர்.
இளவரசர் எட்வர்டின் இந்திய வருகை, ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒரு மகிழ்ச்சியான விளையாட்டிற்கு மிகப்பெரிய விளம்பரத்தைக் கொடுத்துவிட்டது. அவ்வளவுதான்! ஆனால் எட்வர்டின் பயணத்துக்குப் பிறகு ஓர் ஆபத்தான போக்கு இந்தியாவில் உருவானது. வெற்றுப் பெருமைக்காக ’ராஜ வங்கப் புலி’ கணக்கின்றி கொல்லப்பட்டது. அதனால் நாட்டில் புலிகளின் எண்ணிக்கைப் பெருமளவில் குறைவதற்கு அதுவே காரணமாகிவிட்டது.
இதற்குப் பின்னணியில் மற்றுமொரு காரணமும் இருப்பதாகக் குறிப்பிடப்படுவது உண்டு. ஜார்ஜ் ஈஸ்ட்மேன் உருவாக்கிய, கனமாக இருந்தாலும் எடுத்துச் செல்லக்கூடிய புகைப்படக் கருவி (கேமரா), அப்போது பரவலாக எங்கும் கிடைக்கத் தொடங்கியது. இதனால் கொல்லப்பட்ட புலியுடன் நிற்கும் தங்களது புகைப்படங்களை எடுக்க இந்தியா முழுவதும் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆர்வமுற்றனர். ’கொல்லப்பட்ட புலியுடன் நிற்கும் புகைப்படம்’ வேட்டைக்காரரின் தனிப்பட்ட வெற்றிச் சின்னமாகவும், ஐரோப்பிய வீட்டில் வைக்கப்படும் பெருமைக்குரிய பொருளாகவும் மாறியது.
அதே சமயம், ரோலண்ட் வார்டின் ’வேட்டையாடப்பட்ட விலங்குகளைச் சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் கலை ரீதியாக அமைப்பதற்கான விளையாட்டு வீரரின் கையேடு’ (1880 முதல் வருடந்தோறும் வெளியிடப்பட்டது) போன்ற புத்தகங்கள், புலியின் நீளம், அகலம், எடை போன்ற விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்து, அந்த வேட்டையை அறிவியல் வெற்றியாகவும் கலை சாதனையாகவும் காண்பித்தன.
இந்நிலையில், மற்றொரு விஷயமும் சத்தமில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெரும்பாலான வேட்டைக்காரர்களின் திறமையின்மையாலும் அவசரத்தினாலும், அதிக எண்ணிக்கையிலான புலிகள் காயமடைந்தன. இத்தகைய புலிகள் கால்நடைகள் மற்றும் மனிதர்களைக் கொல்லும் ஆட்கொல்லிகளாக மாறி பொதுமக்களுக்குத் துன்பம் விளைவிக்கத் தொடங்கின.
சாதனையாகக் கொல்லப்பட்ட புலிகளைப் பற்றிய செய்திகளைக் காட்டிலும், காயமடைந்து, ஊனமுற்று, இறுதியில் கால்நடைகள் மற்றும் மனிதர்களையே இரையாக உட்கொண்ட புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 1920 மற்றும் 1930-களில் இந்த எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. 1922ஆம் ஆண்டில், சுமார் பதினாறாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆட்கொல்லி புலிகளால் கொல்லப்பட்டனர்.
இந்தப் புலிகளுக்குப் பயந்து கிராமங்கள் மட்டுமல்லாமல் முழு மாவட்டங்களும்கூட முடங்கின. ஏற்கனவே தனிமையில் இருந்த கிராமங்கள் இதனால் மேலும் தனிமைப்படுத்தப்பட்டன. தொலைதூர இடங்களில் இருந்த ரயில்வே மற்றும் சாலைப் பணியாளர்கள் ஒவ்வொரு தினத்தையும் அச்சத்துடன் கழித்தனர். ’மனிதர்களை வேட்டையாடும் புலிகளின் கதைகள்’ மக்கள் மனதை ஆட்கொண்டன; புலிகளுடனான நேரடி சந்திப்புகள் பற்றிய அனுபவக் குறிப்புகள் அதை மேலும் தூண்டின. ஜிம் கார்பெட், கென்னத் ஆண்டர்சன் அத்தகைய அனுபவங்கள் குறித்து எழுதி தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள்.
காலனி அரசு மைசூர் ஆட்சியாளர் திப்புவைக் கொன்ற பிறகு, ஒரு பெரிய சிங்கம் புலியுடன் போராடி வெற்றி பெறும் காட்சி இடம்பெற்றிருந்த பதக்கங்களை வெளியிட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் வெற்றிக்கான அடையாளமாக புலிகளின் புதுப் பயணம் தொடங்கியது. ஏறக்குறைய எந்தவொரு பிரிட்டிஷாரும் புலியின் தோல், நகங்கள் அல்லது பற்கள் ஆகியவற்றோடு இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்குத் திரும்பிச் செல்லும் நிலை ஒரு கட்டத்தில் ஏற்பட்டது.
இந்தியாவில் நடைபெற்ற புலி வேட்டைகளில், கவர்னர் ஜெனரல் கேனிங்குக்காக ஏற்பாடு செய்யப்பட்ட புலி வேட்டைதான் ஒருங்கிணைப்பின் உச்சமாகும். 1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க அவருடைய மிதமான அதேநேரம் உறுதியான அணுகுமுறை பயன்பட்டது. காலனி ஆட்சியின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என அனைவருமே அவரை மதித்தனர்.
தவறுகளுக்கான தண்டனைகள் முடிந்த பிறகு பிரிட்டிஷாரின் உணர்வு இயல்பு நிலை மீண்டும் திரும்பிவிட்டது என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நாடியது. 1861இல், அதாவது கேனிங் பதவியில் இருந்த கடைசி ஆண்டில் இந்திய மாகாணங்கள் முழுவதும் ஒரு சுற்றுப் பயணத்தை அவர் மேற்கொண்டார். அது ஒரு சாதாரண பயணமாக இருக்கவில்லை. அவரது தலைமையில் 80 யானைகள், 1,000 ஒட்டகங்கள், நூற்றுக்கணக்கான மாடுகள், 20,000 ஆட்கள் எனப் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தேறியது. இதன் நீளம் சுமார் 24 மைல்களாக இருந்தது.
17ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இது போன்ற பிரமாண்ட வேட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர் இந்த வகையான ‘முகலாய பாணி’ பிரமாண்ட நிகழ்ச்சிகள், பிரிட்டிஷ் ஆட்சிக்காக மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டன.
கேனிங்கின் பயணப் பாதையில் ஜபல்பூர் (மத்திய இந்தியா) இருந்தது. புகழ்பெற்ற கேப்டன் ஜேம்ஸ் ஃபோர்சித், கவர்னர் ஜெனரலுக்காக ஒரு புலி வேட்டையை ஏற்பாடு செய்ய அழைக்கப்பட்டார். அந்தப் பகுதியில் புலிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அப்போது குளிர்காலமாக இருந்ததால் அவற்றைப் பின்தொடர்வதில் சிரமம் இருந்தது. ஏனென்றால் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் புலிகள் காட்டிற்குள் வெகு தூரம் சென்றுவிட்டன. இப்படிப்பட்ட விழாக்கால வேட்டைக்காக, குறைந்தபட்சம் ஒரு புலியாவது வேட்டையாடப்பட வேண்டும் என்ற நோக்கில் ஜேம்ஸ் ஃபோர்சித் சிரமப்பட்டு ஒரு புலியை கண்டுபிடித்து அதைச் சிறைபிடித்து வைத்திருந்தார். தனது நினைவுக் குறிப்புகளில் இந்த நிகழ்வைப் பற்றி ஃபோர்சித் கூறியதாவது,
’அந்தப் புலியை ஒரு சிறிய மலைப்பகுதியில் ஒரு வாரம் காவலில் வைத்திருந்தேன். பின்னர் கேனிங் வந்தவுடன் அரை நூறு யானைகள் அந்தப் புலியை அவர் வேட்டையாடுவதற்காக சமவெளிக்கு விரட்டின; அந்தப் புலி அனைவருக்கும் நடுவில் வந்தவுடன் அடுத்த சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் தெறித்தன. வெளிவந்த தோட்டாக்களால் அந்தப் புலி சிதறிப்போனது’ என்று குறிப்பிட்டுள்ளார். மிகவும் குரூரமான வேட்டை அது!
காலனி ஆட்சிக்காலத்தின் உன்னத படைப்புகளை நெருங்கிப் பார்த்தால் பெரும் ஏமாற்றங்கள் தெரிய வரும். கேப்டன் தாமஸ் வில்லியம்சனின் ’கிழக்கத்திய கள வேட்டைகள்’ (லண்டன், 1807) அதற்கான மிகச்சிறந்த உதாரணம். கிழக்கிந்திய கம்பெனி பணியில் சேர விரும்பிய பிரிட்டிஷ் இளைஞர்களுக்காக எழுதப்பட்ட இந்த நூல், அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகவும் மதிக்கப்பட்ட ஆவணமாக இருந்தது.
வங்காள மாகாணத்தின் காடுகளில் 20 ஆண்டுகளைக் கழித்த அனுபவத்தின் அடிப்படையில், ’சமூகச் செயல்பாடுகளும், பொது பொழுதுபோக்குகளும் இல்லாத தனிமை வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள், நேரத்தைக் கழிக்க எவ்வாறு வேட்டையை நாடினர்’ என்பதை வில்லியம்சன் இதில் விளக்கினார்.
இரண்டு தொகுதிகள் அடங்கிய அவரது நூல், ’ஆற்றைக் கடந்து புலியைத் துரத்துதல்’, ’கரடியைக் கரும்புத் தோட்டத்திலிருந்து விரட்டுதல்’, ’மயில்களை வேட்டையாடுதல்’ போன்ற தலைப்புகளில் 40 அத்தியாயங்களாக எழுதப்பட்டிருந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தோடும் வில்லியம்சனின் நண்பரும் வேட்டையில் ஈடுபட்டவருமான பிரிட்டிஷ் ஓவியர் சாமுவேல் ஹோவிட் வரைந்த நீர்வண்ணப் படங்கள் இணைக்கப்பட்டிருந்தன. ஆரம்ப கால காலனித்துவ இந்திய வாழ்க்கை மீதான ஆர்வத்தைத் தூண்ட வைக்கும் விதமாக இவை சித்தரிக்கப்பட்டிருந்தன.
நூற்றாண்டு கடந்தபோது, இந்த ஆரம்ப காலகட்டத்தை மேலும் காதலுடன் பிரிட்டிஷார் நினைத்துப் பார்த்தனர்; அதனால் இந்நூல் ’உன்னத இலக்கியம்’ ஆக மாறியது. இதில் மிகப்பெரிய நகைமுரண் என்னவென்றால், ஓவியர் சாமுவேல் ஹோவிட் இந்தியாவுக்கு வந்ததே இல்லை.
புலிகளையும், யானைகளையும், வெப்ப மண்டல காடுகளையும், வில்லியம்சனின் விளக்கங்களின் அடிப்படையில்தான் அவர் வரைந்தார். அதனால் ஹோவிட்டின் படங்களில் உயிரியல் தவறுகள் நிறைந்திருந்தன. லண்டனில் இருந்த முக்கியமான விலங்குக் கூடங்களைப் பார்வையிட்டுச் சித்திரங்களைத் துல்லியமாக வரைவதற்கான முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை. ஹோவிட்டின் அலட்சியம் வில்லியம்சனின் எழுத்தைப் பாதித்தது. அவர் ஒருபோதும் புலி வேட்டையை நேரில் கவனிக்காதவர் என்பதை அவரது எழுத்து புலியின் வேட்டையாடும் தன்மையை எழுதியிருக்கும் விதத்தில் இருந்தே அறியப்படுகிறது.
இந்திய மன்னர்களும் பிரிட்டிஷாரைப் பின்பற்றி புலி வேட்டையில் களமிறங்கியதுதான் காலனி ஆட்சிக்காலத்தின் மற்றொரு கொடுமையான விஷயமாகும். உதய்பூர் மன்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகளை வேட்டையாடிக் கொன்றார்; அதைவிட அதிக எண்ணிக்கையில் வேட்டையாடியதாகப் பெருமையாகச் சொன்னவர்களும் உண்டு. ஆனால் வேட்டையின் ஆடம்பரத்திலும், கொலை எண்ணிக்கையின் பெருமையிலும் புகழ்பெற்றவர் வட கிழக்கு இந்தியாவின் சிறிய சமஸ்தானமான கூச் பிஹாரின் மன்னர் நிருபேந்திர நாராயண பூப் பகதூர்.
1908இல் வெளியான அவரது வேட்டை நாள்குறிப்பு (Thirty-seven Years of Big Game Shooting in Cooch Behar, the Duars and Assam: A Rough Diary) இந்திய அரச குடும்பங்கள் தங்கள் பாதுகாப்பின்மையை, ஆங்கிலேய பாணியை அளவுக்கு மீறி பின்பற்றியதன் மூலம் எவ்வாறு தணித்தன என்பதற்கான சான்றாகும். அவரது முன்னோர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்ததால், கூச் பிஹார் சமஸ்தானம் கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக வங்காள மாகாணத்தின் பின்தங்கிய எல்லையை ஒட்டிய பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே இருந்தது.
நிருபேந்திரா இளவரசராக இருந்தபோதே வங்காள ஆளுநரின் பராமரிப்பில் கல்வி பயின்றார். பிரிட்டிஷ் சட்டத்தையும் பழக்க வழக்கங்களும் நன்கு அறிந்துகொண்டார். அதன் பின்னர் கல்வி கற்க இங்கிலாந்துக்குச் சென்றார். இந்தப் பயிற்சிகளின் விளைவாக, கூச் பிஹார் பிரிட்டிஷ் பேரரசின் எல்லையில் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட வேட்டைகளுக்குப் பெயர் பெற்றது.
மானாஸ் மற்றும் காஸிரங்கா வனவிலங்கு சரணாலயங்களுடன் எல்லையைப் பகிர்ந்த சுமார் ஆயிரம் சதுர மைல் பரப்பளவிலான இந்த இயற்கைச் சொர்க்கம், எர்ல்கள் – கவுண்டுகள் உள்ளிட்ட பிரிட்டிஷ் சீமான்கள், ஐரோப்பிய அரசர்கள், பேரரசின் உயரதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்கள் உள்ளிட்டோர் வருகை புரிந்த ’கன்வாஸ் நகர’ வேட்டை முகாம்களின் மேடையாக இருந்தது.
அவருடைய வேட்டை யானைகள் விலைமதிப்புமிக்கதும், துணிவும் கட்டுப்பாடும் கொண்டவையாகும்; அதில் சில நேபாள யானைச் சண்டைகளில் சோதிக்கப்பட்டவை. அடர்ந்த காடுகளையும் புல்வெளிகளையும் சுற்றி 20 யார்டு இடைவெளியில் யானைகள் வரிசையாக முன்னேறுவதைப் பார்க்கும்போது அது ராணுவம் முன்னேறும் காட்சியைப்போல் இருக்கும்.
புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், எருமைகள், மான்கள், காண்டாமிருகங்கள், பாம்புகள் உள்ளிட்டவை தெரிந்தவுடனே, யானை மேல் இருந்த பிரிட்டிஷாரின் துப்பாக்கிகளுக்கு அவை பலியாகின. இந்த வேட்டைகள் ஒருவித ’கொலைச் சாதனைகளை’ நிகழ்த்தும் போட்டிகளாகவே இருந்தன.
37 ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் 300 புலிகள், 433 சிறுத்தைகள், 38 கரடிகள், 30 காண்டாமிருகங்கள், 11 யானைகள், 30 காடு மாடுகள் ஆகியவற்றுடன் எண்ணற்ற மான்கள், காட்டுப் பன்றிகள், முதலைகள், பறவைகள் ஆகியவற்றையும் வேட்டையாடி கொன்றதாக நிருபேந்திரா குறிப்பிட்டுள்ளார். அவரது நாட்குறிப்பில் ஒவ்வொரு வேட்டையிலும் பங்கேற்ற விருந்தினர்களின் பட்டியலுடன், சுட்டுத் தள்ளப்பட்ட விலங்குகளின் துல்லிய எண்ணிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெற்றிகரமான வேட்டையின் மகிழ்ச்சி விருந்தினர்களுடன் பகிரப்பட்டாலும், அந்தச் சாதனையின் மையத்தில் எப்போதும் மன்னரே இருந்தார்.
இந்தப் பெருமைமிகு ஆடம்பரமான கொலையை ’விளையாட்டு’ என்று அழைப்பது, வேட்டைக்காரர்களுக்கும் அவர்களுடன் இணைந்திருந்த காலனி அரசுக்கும், ஒரு நாகரிகத் தோற்றத்தை அளித்தது. பிரிட்டிஷாருக்குப் புலியைச் சுடுவது வெறும் சாகசமல்ல, அது இயற்கையையும் அதில் வாழும் ’ஆபத்தான’ விலங்குகளையும் அடக்கிக் கட்டுப்படுத்தும் பேரரசின் சக்தியாகத் திகழ்ந்தது.
பிரிட்டிஷ் பேரரசு முழுவதும் புலி வேட்டை என்பது ஒரு தனித்துவமான புகழுக்கான அடையாளமாக வளர்ந்தது. ஆளுநர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் பணக்கார ஐரோப்பியர்கள், இந்தியாவில் தங்களது நேரம் வீணாகச் செலவிடப்படவில்லை என்பதை நிரூபிப்பதற்கான சான்றாக புலித் தோல்கள், நகங்கள், பற்கள் மற்றும் தலைகளை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றனர்.
இந்த வகையான வேட்டைகள் பெரும்பாலும் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளாகவே இருந்தன. முன்னரே கண்டறியப்பட்ட புலிகள் குறிப்பிட்ட இடங்களில் இருந்து வெளியேறிவிடாமல் தடுத்து வைக்கப்பட்டு, வேட்டையாடும் நாட்களில் அவை விருந்தினர்களுக்கு எளிதில் கிடைக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வேட்டைக்காரர்களிடம் ’துணிச்சல்’ உண்மையிலேயே மிகக் குறைவாக இருந்தது. ஏனென்றால் புலிகள் பலமுறை மனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வேட்டைக்காக வழங்கப்பட்ட விலங்காக இருந்தன. இவை அனைத்தும், இயற்கையை வென்று அதைக் கட்டுப்படுத்தும் பிரிட்டிஷ் பேரரசின் கதைச்சொல்லலின் ஒரு பகுதியாகவே இருந்தன.
ஆனால் புலி வேட்டை தொடர்பான இந்த ’வீரக் கதைகளின்’ பின்னணியில் இருந்த உண்மையான வரலாறு வேறு விதமாக இருந்தது. அது மிகப்பெரிய அளவிலான அழிப்பு, உள்ளூர் சூழலியல் அமைப்பின் பாதிப்பு மற்றும் புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஆகியவற்றின் வரலாறாகும். மேலும், இருமுகச் சின்னமாகவும் புலி மாறியது: அது அடக்க வேண்டிய ஆபத்தான வனவிலங்காகவும், அடக்கிய பிறகு வெற்றியை நினைவூட்டும் கௌரவப் பரிசு என்ற கோணத்திலும் பார்க்கப்பட்டது.
இதனால், பேரரசின் வெற்றிக் கதையின் சின்னமாகப் புலி இருந்த போதிலும், இந்திய சூழலியலின் சோகச் சின்னமாகவும் அது மாறியது. இந்த முரண்பாடு காலனி ஆட்சிக்கால இயற்கை வரலாற்றின் முக்கிய பாடமாகும் — இது வெற்றி மற்றும் அழிவு ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் குறிப்பதாக உள்ளது.
புலி வேட்டையின் இந்த இருண்ட வரலாறு, அழிந்துபோன குரல்களாகக் காற்றில் ஒலிக்கும் எச்சரிக்கை. கடந்த காலத்தின் ரத்தச் சுவடுகளை நினைவில் வைத்து, எதிர்காலத்தில் அதே தவறுகளைத் தவிர்த்து, உயிர்களின் சுதந்திரத்தையும் காடுகளின் அமைதியையும் காக்கும் விழிப்புணர்வோடு முன்னேறுவதே, இதில் இருந்து நாம் பெற வேண்டிய ஓர் உன்னத பாடமாகும்.
(தொடரும்)

