‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கை பிடிப்புடன் இயங்கிய சுவாமி வேதாசலனார், தமிழ் மொழியில் அயல் சொற்கள் பல கலந்து பொதுவெளிகளில், இலக்கியங்களில் பேசப்படுவது கண்டு வருத்தமுற்றார். தம் மகன், மகள்களுக்குத் தமிழ் மொழியின் பெருமையினை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கற்றுக் கொடுத்து வந்தார்.
ஒருமுறை மாலை நேரத்தில் தம் மகள் நீலாம்பிகை உடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அருட்பா இயற்றிய இராமலிங்க அடிகளாரின் பாடல் ஒன்றைச் சொல்லி கொண்டிருந்தார்.
’பெற்றதாய்தனை மகமறந்தாலும், பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்
உற்றதேகத்தை உயிர்மறைந்தாலும் உயிரைமேவிய உடல்மறந்தாலும்
கற்றநெஞ்சக் கலைமறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தார் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே’
மேற்கூறிய பாடலின் பொருளை விளக்கி இதில் தேகம் என்பதற்குப் பதிலாக யாக்கை என்ற சொல் இடம்பெற்றிருந்தால் சிறப்பானதாக இருக்கும் என்று கூறினார்.
இவ்வாறு தமிழில் பல இடங்களில் பிறமொழிச் சொற்கள் கலந்து தமிழின் ஓசையின்பத்தை மாற்றுகின்றன என்றார். இதனைக் கேட்ட மகள், அப்படியெனில் நாம் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து நாளடைவில் தனித்தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்தலாம் என்றார்.
மகளின் அன்பான வேண்டுகோளை ஏற்ற சுவாமி வேதாசலனார், நல்ல சிந்தனையாக இருக்கின்றது. குறைபட்டுக் கொள்வதை விட நாமே மாற்றத்தின் விதையாக இருப்போம் என்று முயன்றார்கள்.
வேதாசலம், வேதாசலனார், சுவாமி வேதாசலம் என்ற அழைக்கப்பட்டு வந்து தன் பெயரை, ‘மறைமலையடிகள்’ என்று மாற்றிக் கொண்டார்.
தனித்தமிழைத் தன் குடும்பத்தில் இருந்து தொடங்க எண்ணி, தன் பெயரை மாற்றினார். பின்னர் தன் குடும்ப உறுப்பினர்களின் பெயரை, திருஞானசம்பந்தம் என்ற தன் மகனின் பெயரை ‘அறிவுத்தொடர்பு’ என்றும், மாணிக்கவாசகன் என்னும் பெயரை ‘மணிமொழி’ என்றும், சுந்தரமூர்த்தி என்னும் பெயரை ‘அழகுரு’ என்றும் அன்னைத் தமிழில் மாற்றினார். தன் மகள் திரிபுரசுந்தரி என்பாருக்கு ‘முந்நகரழகி’ என்று மாற்றி அவ்வாறே அழைக்க வேண்டும் என்பதிலும் உறுதியாய் இருந்தார்.
மறைமலையடிகள் நடத்தி வந்த ‘ஞானசாகரம்’ என்ற இதழுக்கு ‘அறிவுக்கடல்’ என்று பெயர் மாற்றி நடத்தினார்.
மறைமலையடிகள் தான் பொறுப்பேற்றி நடத்தி வந்த சமரச சன்மார்க்க நிலையத்திற்குப் ‘பொதுநிலைக் கழகம்’ என்று பெயர் மாற்றினார். அத்தோடு மட்டுமின்றி பொதுநிலைக் கழகத்தின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்றாக ‘தனித்தமிழ்’ சொற்கள் எழுதப்படவும் பேசப்படவும் வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.
தொல்காப்பியர் காலந்தொட்டு தமிழில் பிறமொழிச் சொற்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. குறிப்பாக திருக்கோயில்களில் இறைவனின் பெயர்கள் கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் பிறமொழிச்சொற்களாலேயே அழைக்கப்பட்டு வருகின்றதை மறைமலையடிகள் தம் நூல்களிலும் உரையிலும் தெரிவித்தார்.
தமிழ் மொழியின் பல சொற்கள் அயல் மொழிச்சொற்களா? தமிழ்ச்சொற்களா? என்பதை ஆய்ந்தறியும் நோக்கில் பல கட்டுரைக்களை எழுதத் தொடங்கினார். தமிழ் மொழியில் காலந்தோறும் பல தமிழ்ச்சொற்கள் பெயர் மாற்றம் பெற்று மக்களின் இயல்பு வாழ்க்கையோடு கலந்து பேசப்படுவதை மாற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் மறைமலையடிகள்.
இந்திய நாட்டின் சடங்கு மொழியாய் சமசுகிருதம் இருப்பதால் நாட்டின் அனைத்து இடங்களிலும் இதன் ஆதிக்கம் மிகுதியாய் இருப்பதாக எடுத்துரைத்தார். மேலும் பண்பாட்டு ரீதியாக, மொழி ரீதியாக, சடங்கு முறைகள் வாயிலாக மக்களிடம் பிறமொழிச்சொற்கள் கலப்பு ஏற்பட்டு வந்தன. அவ்வாறு தோன்றிய பிறமொழிச் சொற்கள் தமிழ் மொழியின் தனித்தன்மையை சிதைத்தன.
தனித்தமிழில் பண்டைய காலத்தில் அரசு செலுத்திய அரசர்கள் இருந்த தமிழ்நாட்டில் பிற்காலத்தில் தோன்றிய அரசர்கள் தம் பெயர்களை வடமொழியில் சூட்டும் அளவுக்குத் தமிழோடு வடமொழிச்சொற்கள் கலந்திருப்பதைப் பொதுநிலைக்கழகக் கூட்டங்களில் எடுத்துரைத்தார்.
மறைமலையடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கப் புரட்சி பரவலாக பல்வேறு இடங்களில் கிளைவிடத் தொடங்கியது. அதன் காரணமாக மக்கள் ஆங்காங்கே தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். தம் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதையும் தனித்தமிழில் சூட்டி அழகு பார்த்தனர். ஆனால் அவ்வளவு எளிதில் தனித்தமிழ்ச் சொற்களைப் பிரித்தரியாத வகையில் பல சொற்கள் தமிழ் மொழியில் தமிழ்ச் சொற்கள் போலவே கலந்திருந்தன.
ஜமின்தார், தாலுக்கா, ஜட்ஜ், மேசை, இராமன், சுப்ரமணியம், சத்யம், உற்சவம், அலங்காரம், நவராத்திரி போன்ற பல சொற்கள் அதாவது 10க்கு 6க்கும் மேற்பட்ட பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து பண்பாட்டு ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி வந்தன.
சடங்கு மொழியாய் நுழைந்த சமசுகிருத மொழிச் சொற்களின் தாக்கம், உருது சொற்கள், தெலுங்கு சொற்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி செலுத்தியபோது புகுத்திய பல சொற்கள் தமிழ் மொழியில் நீக்கமற நிறைந்து ஆட்சி செலுத்தியதை மாற்ற மறைமலையடிகள் தீவிரமாக முனைந்தார்.
தமிழ் மொழியில் அனைத்துத் துறைகளிலும் பிறமொழிச் சொற்கள் இயல்பான தமிழ்போல கலந்து மக்களாலும் பேசப்பட்டு வந்தன.
வடமொழி மூலம் தமிழக மக்கள் காலம்காலமாக பல்வேறு சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்டு வாழ்ந்து வந்தனர். மக்களைச் சடங்குகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதில் மறைமலையடிகள் உறுதியாய் இருந்து அதற்கான செயல்திட்டங்களை வகுத்தார்.
செந்தமிழ் முறையில் தேவார பாடல்களின் மந்திரங்கள் ஓதி திருமணங்கள் நடத்த வேண்டும் என்பதில் சில முறைகளை ஏற்படுத்தினார். வடமொழி இன்றி, தமிழ்த் திருமணம், தமிழர் ஆண்டு முறை, தமிழர் சமயம் ஆகிய கோட்பாடுகளை மறைமலையடிகள் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தினார்.
மறைமலையடிகளால் தமிழ் வளர்ந்தது. தமிழால் அவர் வளர்ந்தார். தனித்தமிழ் நடை வளம் பெற்றதோடு தனித்தமிழ் மரபும் வளர்ந்தது. எந்தவொரு துறையையும் தனித்தமிழில் எழுத முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டினார் மறைமலையடிகள்.
கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் மறைமலையடிகள் பற்றி, ‘தனித்தமிழிலே தேனும் பாலுங் கலந்தனைய தீஞ்சொற் சுவைமிக்க இழுமெனும் இனிய உயரிய உரைநடை எழுதுவதிலும் சொன்மாரி பொழிவதிலும் இவர்க்கு ஒப்பாவார் எவருமிலர்’ எனப் பாராட்டுவது முற்றிலும் பொருந்துவதாகும். இவருடைய தமிழ்த் தொண்டால் தமிழ் உரைநடை, செறிவு மிக்க பெருமித நடையாக வளர்ந்தது.
மறைமலையடிகளின் உரைநடை நீண்ட வாக்கியங்களைக் கொண்டதாக இருப்பினும், எளிமையும் இனிமையும் வாய்ந்ததாக இருந்தது. தனித்தமிழில் எழுதமுயன்றதன் விளைவாகப் புதுச் சொல்லாக்கங்களைப் படைத்து, தமிழ் மொழியை வளம் பெறச் செய்தார். மறைமலையடிகளாரைத் தனித்தமிழ் நடைக்குத் தந்தை என்று கூறலாம்.
மறைமலையடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் தமிழ் மக்களால் பல இடங்களில் பரவலாக விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழ் மக்கள் தம் குழந்தைகளுக்கு இனிய தமிழ் மொழியில் பெயர் சூட்டத் தொடங்கினர். பொதுநிலைக் கழகம் மூலம் தம் கொள்கைகளைப் பல இடங்களிலும் வலியுறுத்தத் தொடங்கினார்.
மணிப்பிரவாள நடை மூலமே தமிழ்மொழி அழகோடு திகழ்கின்றது என்று பலரும் பலவிதமான அர்த்தங்களைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அதாவது மணி, முத்து, பவளம் சேர்ந்தால் அழகு மாலை கிடைப்பதுபோல தமிழும் தெலுங்கும் சமசுகிருதமும் இணைந்து மணிப்பிரவாள நடையே தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றது என்று தமிழறிஞர்கள் என்ற பெயரில் பலர் இந்தக் கருத்தை முன்வைத்தனர்.
வைணவ நூல்களின் உரைகள் பெரும்பாலும் மணிப்பிரவாள நடையில் இருக்க, சைவ தோத்திரங்கள், சாத்திரங்களின் உரைகள் தமிழ் இருந்தன. மறைமலையடிகளின் இந்த முன்னெடுப்பை சைவ, வைணவ வேறுபாடாகவே பலர் எடுத்துக்கொண்டனர்.
மறைமலையடிகள் தெளிவான திட்டமிடலுடன் தமிழரின் கொள்கைகள், தமிழர் திருமணம், தமிழ் ஆண்டுமுறை ஆகியவற்றை உருவாக்கி அதனை மக்களின் வாழ்வியல் நடைமுறையாக மாற்ற வேண்டும் என்பதில் முன்முனைப்புக் காட்டினார்.
தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டு இயங்கிய மறைமலையடிகள் 1916ஆம் ஆண்டு தொடங்கிய ‘தனித்தமிழ் இயக்கம்’ மெல்ல மெல்ல மக்களிடம் மாறுபாட்டை உருவாக்கத் தொடங்கியது. தமிழ் மக்களின் வாழ்வியலில், சொல்லில், எழுத்தில் தமிழே மிளிர வேண்டும் என்று மறைமலையடிகள் பெரிதும் விரும்பினார்.
(தொடரும்)

