‘தனி மனித வாழ்க்கை விளக்கமும் ஒருவகையில் வரலாறு போன்றதே ஆகும். ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது நிலையான புகழுடைய பெருமக்களுடன் நாம் கூடிச்சேர்ந்து சிறிது நேரமாவது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்ச்சியைப் பெறுகிறோம். ஆகையினால் மற்ற வரலாற்றை விடவும் வாழ்க்கை வரலாறு பன்மடங்கு சிறப்புடையது.’ – புகழ்பெற்ற ஜெர்மன் கவிஞரும் சிந்தனையாளருமான… வோல்ஃப்காங் கதே
மேற்கூறிய அறிஞரின் கூற்றில் நான் உடன்படுகிறேன். ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு என்பது வெறும் நிகழ்வுகளின் பட்டியல் அல்ல. அது அந்த காலத்தின் சமூக நிலை, பண்பாடு, நாகரிகம், கல்வி வளர்ச்சி, அரசியல் சூழல், மனிதர்களின் சிந்தனை ஆகியவற்றை நமக்குத் தெரியப்படுத்தும் வரலாற்றின் ஒரு சிறிய ஜன்னலாகக் கருதலாம். ஒவ்வொரு ஆளுமைகளின் வாழ்க்கையைப் படிப்பதன் மூலம் அவர்கள் சந்தித்த சவால்கள், அவர் எடுத்த முடிவுகள், அவருடைய தியாகங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் நாமும் நம் வாழ்க்கையில் முன்னேற வேண்டிய வழிகளைப் புரிந்துகொள்ளலாம்.
ஆளுமைகள் தேசபக்தராகவோ, விடுதலை வீரராகவோ, அரசராகவோ, சுல்தானாகவோ, தொழிலதிபராகவோ, விளையாட்டு வீரராகவோ இருக்க வேண்டிய கட்டாயமில்லை. அவர்கள் நமக்கு அருகிலேயே இருக்கலாம். ஆனால் அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக இருப்பதை நாம் உற்று நோக்கினால் புரிந்துகொள்ளலாம். இன்றைய நிலையில் நம் வீட்டுச் சொந்தங்களின் வாழ்க்கை நிலையைக் கூட நமக்குத் தெரிந்துகொள்வதில் ஆர்வமில்லை. நமது பாட்டனார் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்கிற ஆசை கூட இல்லை இந்தத் தலைமுறையினருக்கு. சரி, நம்மில் எத்தனை பேர் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறோம்?
முந்நாட்களில் நமது வீட்டுப் பெரியோர்களின் வீட்டிற்கு நுழைந்தால் முதலில் கண்ணில் படுவது சுவரில் தொங்கும் ஃபிரேம் போட்டு தொங்கும் புகைப்படங்கள். அதில் அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள், வீட்டின் பெரியவர்கள் என ஒரு வரிசையைப் பார்த்திருக்கிறோம். அப்படி புகைப்படங்கள் இல்லையெனினும் அவர்களிடம் கூறுவதற்கு நினைவுப் பெட்டியில் ஏராளமான செய்திகள் குவிந்து கிடக்கும். ஒவ்வொரு புகைப்படத்திலும் அவர்களது நினைவுகளை அடைத்து வைத்துள்ளனர்.
நமது நாட்டின் வரலாற்றை, மொழியின் பெருமையை, பாரம்பரியத்தை, வீரமும் தியாகமும் நிறைந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மறந்து விட்டோம். பள்ளிப் பாடங்களில் படிக்கும் புத்தகங்களின் வாயிலாக நாம் அறிந்து கொண்டது சிறு துணுக்களவே. அதையும் மதிப்பெண் எடுப்பதற்காக மட்டுமே படித்து வைத்தோம்.
இப்படியாக வரலாற்றில் எந்தவொரு அக்கறையும் பிடிப்புமின்றி வாழும் நம்மிடையே, ஒரு தலைவரை பல தலைமுறைகளுக்குப் பிறகும் ஒருவரை நினைவில் வைத்துப் போற்றுகின்றோமெனில் அவரின் வாழ்க்கை இந்த உலகத்திற்கு எடுத்துரைத்த செய்தி மிகப் பெரிது எனக் கொள்ளலாமா?
குறிப்பாக நாம் படித்த, கேட்ட இந்திய விடுதலை வீரர்கள் மற்றும் தலைவர்களின் கதைகள் பெரும்பாலும் வட இந்திய தலைவர்களின் பெயர்களாகவே இருக்கும். நம் மாநிலத்தில், தென்னிந்தியாவில் தொடங்கிய சுதந்திரப் போராட்டம் குறித்தும் அதில் எழுந்த தலைவர்கள், வீரர்கள் குறித்தும் மிகச் சொற்பமாகவே கேட்டிருக்கிறோம். அவர்களையும் இன்று அரசியல், மதம் மற்றும் சாதி சாயம் பூசப்பட்டு அந்தந்தக் கூட்டத்திற்குரிய தலைவர்களாகவே கொண்டாடி வருகிறோம் என்பது வருந்தத்தக்க ஒன்று. அவர்களின் சிந்தனைகள், வாழ்க்கைப் போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை எடுத்துரைப்பதன் வழியாக அவை இன்றைய தலைமுறைக்கு ஒரு பெரிய பாடமாக இருக்க முடியும்.
இந்தக் கட்டுரைத் தொடர் அதற்கான ஒரு சிறிய முயற்சியாக இருக்கும். தமிழ்நாட்டின் விடுதலை வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களின் சிந்தனை மற்றும் தியாகங்களை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க இந்த முயற்சி உதவும் என்று நினைக்கிறேன். கடந்த காலத்தின் அந்த ஒளியை மீண்டும் நினைவுகூர்ந்து, நமது எதிர்காலத்தை நல்வழியில் அமைப்பதே இந்தத் தொடர் கட்டுரையின் நோக்கமாகும்.
0
வெள்ளையரகள் கொஞ்சமும் யோசிக்காமல் நம் நாட்டின் வளத்தை நேரடியாகவும், மறைமுறையாகவும் அவர்கள் நாட்டிற்கு கப்பல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பிரிட்டிஷாரின் ஆட்சியில் இந்தியா பொருளாதாரம், கல்வி, தொழில் என அனைத்திலும் பிரிட்டிஷாரின் வஞ்சகத்தால் பின் தள்ளப்பட்டிருந்தனர். பண்டைய காலத்தில் கிரேக்கம், ரோம், எகிப்து, சீனா என அந்நிய நாடுகளில் கடல் வழியே வாணிபம் செய்த தமிழர்களின் பெருமை குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் மறைந்து போனது.
அதன் பின்னர் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை, இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் அடங்கித்தான் போவார்கள். அவர்களால் ஒன்றிணைந்து போராடத் துணிச்சல் இல்லை. குழு மனப்பான்மை அறவே கிடையாது என்றிருந்த காலத்தில்தான் ‘வானமென்ன உங்க அப்ப வீட்டு சொத்தா…’ எனும் திரைப்பட வசனத்திற்கு ஒப்ப, ‘கடலும், கப்பலும் உங்க அப்ப வீட்டு சொத்தா..?’ எனக் கப்பலைக் கடலில் இறக்கி வெள்ளையர்களின் கண்களில் சுதேசியெனும் ஊசியை இறக்கியவர் வ.உ.சிதம்பரனார்.
சுதேசம் எனும் வார்த்தையைத் தெற்கில் பரவச் செய்த புரட்சி நாயகன் வ. உ .சி. ஆவார். தலைவன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல, வாழ்ந்த காலத்தில் என்ன விதைத்துச் சென்றான் என்பதே முக்கியம். அப்படிப் பார்க்கையில் நம் நல்லூழ் வ.உ.சி விதைத்துச் சென்ற விதை சுதேசி.
‘இந்த வெள்ளை கொக்குகளை விரட்ட ஆயுதம் ஏந்தத் தேவையில்லை. உங்கள் மூச்சு காற்று ஒன்றே போதுமானது. இங்குள்ள 30கோடி ஜனங்களும் சேர்ந்து ஒரே மூச்சில் சேர்ந்து ஒரு மூச்சு வெளியிட்டால் போதும். அந்த காற்றுக்கே பறந்துவிடுவார்கள். ஆனால் எல்லோரும் சேர்ந்து அந்த மூச்சு விடத் தயாரா என்பதுதான் கேள்வி.’
இப்படியொரு கேள்வியைக் கேட்ட, கேட்கத் துணிந்த மனிதன் வேறெங்கோ வட மாநில போராளி இல்லை. தென் மாவட்டதை சேர்ந்த வ .உ. சி யே. நமக்கு அவர் செக்கிழுத்த கதை மட்டுமே பாடப்புத்தகங்களின் வழி தெரியும். அவர் கப்பல் இழுத்த சாகசத்தையோ, நல்ல மொழிபெயர்ப்பாளர் என்பதையோ, கட்டுரையாளர், உரையாசிரியர், எழுத்தாளர், பதிப்பாளர், வழக்கறிஞர் என பன்முகங்கொண்ட மாமனிதர் என்பதையோ யார் அறிவார்?
கப்பலோட்டிய தமிழன் எனும் பெயரைக் கேட்டாலே வ.உ.சியின் முகம் நினைவுக்கு வருவதுபோல, திலகர், அரவிந்த கோஷ், சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி , விபின் சந்திர பால் முதலானத் தலைவர்களின் பெயர்களும் நம் கண் முன் வரவேண்டும். நம் போதாத நேரம் மேற்கூறிய தலைவர்களின் பெயர்களை மறந்துவிட்டோம். அல்லது, இதுவரை இந்தப் பெயர்களை கேட்டே இருக்க மாட்டோம்.
சுதேசி இயக்கம் பற்றிய கருதுகோளை அவருள் விதைத்தவர் யார்? அவரின் குரு யார்? சுதேசி இயக்கத்திற்கும் வ.உ.சிக்கும் உள்ள தொடர்பு என்ன? கப்பல் வாங்க வேண்டியதன் அவசியம் யாது? சிறையில் நடந்த கொடுமைகள் என்ன? இவையெல்லாம் அவர் சுதந்திரப் போராட்டக் களத்திற்குள் நுழைந்து முழுதாக நான்கு ஆண்டுகளிலேயே அவர் எரி நட்சத்திரமாய் எழுந்து மின்னி மறைந்தார் என்பது உண்மை. அதற்கு காரணமனவர்கள் யார்?
ஃப்ரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப்புரட்சி, சிப்பாய் கலகம் என அமைந்த சரித்திர சம்பவங்களுக்கு இணையான ஒரு எழுச்சியை உருவாக்கியவர் வ.உ.சி. என்பதை இனி வரும் அத்தியாங்களின் மூலம் புரிந்துகொள்வீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
காந்தியடிகள் ஆங்கிலேயருக்கெதிராக நிலத்திலும், நேதாஜி வானில் விமானம் கொண்டு போராடினார்கள் எனில் வ.உ.சி கடலில் கப்பல் கொண்டு சுதேசமெனும் ஆயுதமேந்திப் போராடத் துவங்கினார். இதனால் வ.உ.சிக்கு நிகழ்ந்ததென்ன என்பதை இனி காண்போம்.
(தொடரும்)

