தந்தைக்கு உபதேசம் வழங்கிய சுப்பையா குறித்து நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால், தாய்க்கு உபதேசம் அருளிய கபிலரைப் பற்றி அறிந்தவர் இங்கு வெகு சிலரே. தன்னுடைய தந்தைக்கு உபதேசம் அருளிய சுப்பையாவான முருகப்பெருமானைப்போல், தன் தாய்க்கு உபதேசம் வழங்கியவர் கபிலர் என்னும் கபில முனிவர். புராண காலகட்டத்தில் வாழ்ந்த மிக முக்கியமான முனிவராக இவர் கருதப்படுகிறார்.
‘கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே’
‘உங்கள் வாழ்வானது உங்களது எண்ணப்படியே அமையும்.
எண்ணத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருங்கள்’
இந்த வரிகளை எங்கோ படித்ததுபோல் தோன்றுகிறதா? அப்படியென்றால் உங்களது எண்ணம் சரிதான். இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறிய வரிகள்தான் இவை.
துவாபர யுகத்தின் இறுதியில் நடைபெற்ற மகாபாரதப் போரில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் அருளிய உபதேசங்களான பகவத் கீதையைவிட கபில கீதை பழமையானது. புராண காலத்தில் வாழ்ந்த தேவஹூதி என்கிற பெண்ணுக்கு அவரது மகன் கபில முனிவர் உபதேசமாகக் கூறியதுதான் இந்தக் கபில கீதை.
ஆதி காலத்தில் விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றி படைப்புத் தொழிலில் ஈடுபட்டார் பிரம்ம தேவர். அவரது மனதில் இருந்து சனகாதி முனிவர்கள் என்றழைக்கப்படும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வர் தோன்றினார்கள்.
படைப்புத் தொழிலுக்குத் தனக்கு உதவியாக இருப்பார்கள் என நினைத்த குமாரர்கள் நால்வரும், தன் சொல்லைக் கேளாமல் முற்றும் துறந்து முனிவர்களாகிவிட, அவர்கள் மீது பிரம்மனுக்குக் கடும் சினம் ஏற்பட்டது. அந்தச் சினத்தின் காரணமாக அவரது புருவ மத்தியில் இருந்து ருத்ரர் உருவானார். தந்தை பிரம்மனுக்கு உதவியாக இருந்து படைப்புகளைப் பெருக்குவதில் ருத்ரர் ஈடுபட்டார். ஆனால் ருத்ரர் மூலம் தோன்றிய படைப்புகள் அனைத்தும் அழிவையே பிரதானமாகக்கொண்டு செயல்பட்டன. அதைக் கண்ட பிரம்மன் படைப்புத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து ருத்ரரை தடுத்தார்.
அதன்பின்னர் தனது உடலில் இருந்து நாரதர், பிருகு, வசிஷ்டர், புலஸ்தியர் முதலான பத்து பேரைப் பிறக்கும்படி செய்தார் பிரம்மன். ஆனால் அவர் அனைவரும் முனிவர்களாக மாறினார்கள். இதனால் மனம் வருந்திய பிரம்மன், தன் உடலை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை மனு என்னும் ஆண் மகனாகவும் மற்றொரு பாதியை சதரூபை என்னும் பெண் மகளாகவும் பிறப்பெடுக்க வைத்தார்.
மனுவும் சதரூபையும் திருமணம் செய்துகொண்டு பல குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். இக்குழந்தைகள் வழியாக உருவானதே நம்முடைய மனித குலம் என்கின்றன புராணங்கள். மனு என்னும் ஆண்மகனில் இருந்து தோன்றியதால் மனுஷன் என்ற பெயர் உருவானதாகவும் அவற்றில் கூறப்பட்டுள்ளது.
மனு – சதரூபையின் மகள்களில் ஒருத்தியான தேவஹூதிக்கும் பிரம்மனின் நிழலில் இருந்து தோன்றிய கர்த்தமருக்கும் கலை, அனுசுயை, சிரத்தை, ஹவிர்ப்பூ, கதி, கிரியை, கியாதி, அருந்ததி, சாந்தி ஆகிய ஒன்பது பெண் குழந்தைகளும் இறுதியாக ஓர் ஆண் குழந்தையும் பிறந்தன. அந்த ஆண் குழந்தைதான் கபில கீதையை அருளிய கபில முனிவர். இவர் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்பட்டார்.
கபிலர் பிறந்ததும் தனது கடமை முடிந்துவிட்டதாகக் கர்த்தமர் துறவரம் பூண்டு சென்றுவிட, கணவரின் பிரிவால் தேவஹூதி வாடினார். அத்துன்பத்தில் இருந்து தன்னை மீட்டெடுக்கவேண்டி விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்பட்ட தன்னுடைய மகன் கபிலரிடம் சென்று, தனக்கு உபதேசம் செய்யுமாறு வேண்டினார். இவ்வாறுதான் கபில கீதை உருவானது. இதன் வழியாக மனித வாழ்வில் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான வழியைத் தன் தாயாருக்குக் காட்டினார் கபிலர்.
பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறிய உபதேசங்களில் சொல்லப்பட்டுள்ள பல அடிப்படையான விஷயங்கள் கபில கீதையில் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் பகவத் கீதைக்கு முன்னோடி கபில கீதை.
தனது தாயாதிகளையே எதிர்த்து நின்று போரிட்டு அவர்களைக் கொல்லவேண்டிய நிலை இருப்பதை எண்ணி மனம் கலங்கிய அர்ஜுனன், போர்க்களத்தை விட்டு வெளியேற நினைத்தான். அவனது மன சஞ்சலத்தைப்போக்க கிருஷ்ணர் கூறிய உபதேசங்களின் தொகுப்புதான் பகவத் கீதை.
பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் கூறியுள்ள சாங்கியத் தத்துவத்தை தோற்றுவித்தவர், அதாவது முதன்முதலில் கூறியவர் கபிலர். கடவுள் என்பவர் வெளியே இல்லை உனக்குள்தான் இருக்கிறார் என்கிறது சாங்கியத் தத்துவம். இந்த சாங்கியத் தத்துவத்தை பகவத் கீதையில் கிருஷ்ணர் ‘ஞான யோகம்’ என்கிறார்.
இயற்கை மற்றும் உணர்வு (அ) உயிர்களின் சேர்க்கையால் உலகம் இயங்குகிறது எனக் குறிப்பிடுகிறார் கபிலர். மேலும் இயற்கை, அறிவு, அகங்காரம், மனம், ஐந்து அறிவுப் புலன்கள், ஐந்து செயல் உறுப்புகள், ஐந்து தன்மாத்திரைகள் (ஒலி, ஒளி, வடிவம், சுவை மற்றும் மணம்), ஐந்து பஞ்ச பூதங்கள் (நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு) மற்றும் உயிர் என மொத்தம் 25 தத்துவங்கள் படைப்புக்கு காரணம் என்கிறார் கபிலர்.
இருபத்து நான்கு தத்துவங்களுடன் இருபத்தைந்தாவதாக புருஷ தத்துவத்தையும் இணைத்துக் கூறுவதால் கபிலரை சாங்கியத் தத்துவத்தின் ஆச்சாரியார் என்கின்றன புராணங்கள். இங்கு புருஷ தத்துவம் என்பது அப்பழுக்கற்ற தூய உணர்வு நிலை அதாவது உயிர் நிலை. இதைப் ‘பரிணாம நிலை’ எனவும் கூறலாம். அதாவது வளர்ச்சி நிலை. இந்த உலகமானது பரிணாம தத்துவத்தில் இயங்குகிறது என்கிறார் கபிலர்.
‘கடவுள் வேறு எங்கேயும் இல்லை உனக்குள்தான் இருக்கிறார்’ என்கிற கபிலரின் கூற்றுப்படி நமக்குள்ளிருக்கும் கடவுளைக் காண வேண்டுமெனில், முதலில் நாம் நம் மீது நம்பிக்கைகொள்ளவேண்டும். அந்த நம்பிக்கை முழுமையானதாக இருக்க வேண்டும். நமது எண்ணங்கள் எதை நோக்கிச் செல்கிறதோ அதை நோக்கியே நமது வாழ்க்கையும் செல்லும். நல்லதையே நினைத்து நல்லவற்றில் ஈடுபட்டால் நமது வாழ்வும் நல்லறம்கொண்டு செழித்தோங்கும். நமது எண்ணங்களை மிஞ்சிய சக்தி வேறெதுவும் இல்லை. இதுவே சாங்கியத் தத்துவத்தின் உட்கருத்து.
சாங்கியத் தத்துவத்துக்கு அடுத்ததாகக் கபில கீதையில் கூறப்பட்டிருப்பது ‘பக்தி யோகம்.’ பக்தி என்றால் என்ன? ஒருவர் மீது நாம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் இல்லாத தூய்மையான அன்பு. அதாவது, நமது அப்பழுக்கற்ற அன்பின் உச்ச வடிவத்தின் பெயரே பக்தி. இதுதான் கடவுளை அடைவதற்கான மிகச்சிறந்த வழி. பக்தி மூலமாகக் கர்ம வினைகள் நீங்கி ஆன்மா தூய்மையடைவதாகக் கூறுகிறார் கபிலர்.
மேலோட்டமாகப் பார்த்தால், இங்கு கூறப்பட்டுள்ள பக்தி என்பதும் பகவான் என்பதும் கடவுள் குறித்துதான் எனக் கபிலர் கூறுவதாகத் தோன்றும். ஆனால் நமக்குள்தான் கடவுள் இருக்கிறார் என்கிற சாங்கியத் தத்துவத்தின்படி, பக்தி மூலம் நமக்குள் இருக்கும் கடவுளை அடைவது என்பது தூய எண்ணங்களின் மூலம் நமது குறிக்கோளை அடைவதுதான்.
அடுத்ததாக, வைராக்கியம் மற்றும் பற்றின்மை குறித்து கபிலர் கூறியுள்ளார். அதாவது, ஒரு செயலை நாம் செய்து முடிக்கவேண்டுமென நினைத்தால், மன உறுதியுடனும் இலக்கை அடையும் வரை வேறு எந்த விஷயங்களிலும் கவனத்தைச் சிதறவிடாமல் முழு மனதுடனும் அதில் ஈடுபடவேண்டும்.
ஒரு விஷயத்துக்காக வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்காக நாம் எவ்வளவு தூரம் சிரமப்பட்டு உழைக்கிறோம் என்பதில்தான் அது ஈடேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எந்தவொரு விஷயமாக இருந்தாலும் பின்வாங்காமல் உறுதியுடன் இருந்து எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும்.
அடுத்ததாகக் கபில கீதையில் கூறப்பட்டிருப்பது, ‘நிஷ்காம்ய கர்மா’. அதாவது ‘கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே’ எனும் தத்துவம். இதையும் பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுவதற்கு முன்பாகவே கபிலர் கூறியுள்ளார். இதன் வழியாக நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு நம் மனதின் எண்ணங்களே காரணம் என்கிறார்.
கபில கீதை பாகவத புராணத்தின் மூன்றாவது ஸ்கந்தத்தில் காணப்படுகிறது. பகவத் கீதைக்கு இணையான கருத்துகளை இது வழங்கியிருந்தாலும், பெரும்பாலானோரால் அறியப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது.
ஒரு குழந்தை தன்னுடைய தாய்க்கு உபதேசம் அளித்து அன்னையின் மனக் கலக்கங்களை போக்குவதன் வழியாக உலகுக்குத் தேவையான அறிவுரைகளை இந்தக் கபில கீதை வழங்குகிறது. மகன் கபிலரின் உபதேசங்களைக் கேட்டு தூய்மையான சித்தம்கொண்ட தேவஹூதி, அதன்பின் முக்தியை அடைந்தார் என்கிறது பாகவத புராணம்.
பெரும்பாலும் ‘கபில உபதேசம்’ என்று அழைக்கப்படும் கபிலரின் கீதையானது அறியாமை மற்றும் ஆசையில் இருந்து வெளிவருவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் ஒரு ஞான நூல். பகவத் கீதைக்கு இணையான புனித நூலாகவும் இது கருதப்படுகிறது.

