‘கோவா மலையாரம் கோத்த கடலாரம்
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்
கோகுல மேய்த்துக் குருந்தெசித்தா னென்பரால்’
இது சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையில், ‘உள்வரி வாழ்த்து’ எனும் பகுதியில் வரும் பாடல். கோவா ஆரம் – சந்தன ஆரம், கோத்த ஆரம் – முத்து, இந்திரன் வெகுந்து இட்ட பூணாகிய ஆரத்தையும், மார்பில் பூண்டவன் தென்னவர்கோன் என அழைக்கப்படும் பாண்டியன் என்கிறது இப்பாடல்.
இது தவிர,
‘கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம்
ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க! வேந்தர்
மருள, வைகல் வைகல் மாறட்டு
வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப் படை வானவன் முடித்தலை உடைத்த
தொடித்தோட் தென்னவன் கடிப்பிகு முரசே!’
எனும் பாடல் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் இடம்பெற்றுள்ள படர்க்கை பரவல் பகுதியில் உள்ளது. இதன் வாயிலாக, வெற்றி தரும் இடியையே தன் படையாகக்கொண்ட இந்திரனின் தலையில் உள்ள முடியணியை உடைத்த, தொடி என்னும் வளையணிந்த தோளினையும் உடைய தென்னவனான பாண்டியனுக்குத் தன் முடியினை (கிரீடம்) வானவர்கோன் எனும் இந்திரன் கொடுத்தான் என்பதை சிலப்பதிகாரம் குறிப்பால் உணர்த்துகிறது.
‘பாண்டியன் தன்னுடன் போரிட்டதால் சினம்கொண்ட இந்திரன், தன் கட்டுப்பாட்டில் இருந்த மேகங்களைப் பாண்டிய நாட்டில் மழை பெய்யவிடாமல் தடுத்துவிட்டானாம். தன் நாட்டின் மீது மழை பெய்யாமல் சென்று கொண்டிருந்த மேகங்களைக் கட்டி இழுத்து தன்னுடைய நாட்டில் மட்டும் மழை பெய்யும்படிச் செய்தானாம் பாண்டியன். இதனைக் கண்ட இந்திரன், பாண்டியனுக்குத் தன் ஆரத்தைக் கொடுத்துச் சமாதானம் செய்துகொண்டான்’ என 13ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
செவிவழிச் செய்தியாகக் கூறப்பட்டு வந்த மேற்கண்ட கதையை, பாண்டியர்களின் பெருமையைக் கூறுவதற்காக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இணைத்துள்ளார். எனினும் பாண்டியரின் மணிமுடியான இந்திரன் கொடுத்ததாக நம்பப்பட்ட சுந்தரமுடியையும் இந்திரனின் கழுத்தில் இருந்ததாக கூறப்பட்ட ஆரத்தையும் பாண்டியர்கள் பொக்கிஷமாகக் கருதினார்கள். நாட்டையும், அதிகாரத்தையும், உயிரை இழந்தாலும்கூட தங்களது முன்னோர் ஒருவருக்கு இந்திரனால் அளிக்கப்பட்டது என்ற நம்பிக்கையின் காரணமாக, அவற்றை வழிவழியாக அவர்கள் போற்றி வந்தார்கள்.
இதற்காக ஏராளமான உயிர்களைப் போரில் இழந்துள்ளார்கள். களப்பிரருக்குப் பின் நீண்டகாலம் கோலோச்சிய பாண்டியர், பிற்காலச் சோழர்கள் தலையெடுத்தபின் தம் பெருமை குன்றினர். குறிப்பாகப் பராந்தகசோழன் காலத்தில் பாண்டியருடன் பல போர்கள் நடைபெற்றன. இவற்றில் இருவரும் மாறி மாறி வெற்றிபெற்றனர். பராந்தகரின் மூன்றாவது ஆட்சியாண்டிலேயே அவர் ‘மதிரை கொண்ட கோப்பரகேசரி’ என அழைக்கப்படுகிறார்.
வேதாரண்யம் கல்வெட்டு அவரை ‘மதுரை மதில் சிதைத்த கோப்பரகேசரி’ என்கிறது. இதற்குப் பிறகான போரில் ராஜசிம்ம பாண்டியன் பராந்தகரை வென்று தன் நாட்டைக் கைப்பற்றியதை சின்னமனூர் செப்பேட்டின் வாயிலாக அறியமுடிகிறது. இதுதவிர, சோழர்களின் உறவினரான கொடும்பாளூர் வேளிர் பூதி விக்ரம கேசரியையும் அவர் வெற்றிகொள்கிறார்.
இதற்கடுத்து நடைபெற்ற போரே பாண்டியர்கள் சில காலம் வீழ்ச்சியடைய காரணமாக அமைந்தது. இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளூரில் கடும்போர் மூண்டது. சோழருக்கு ஆதரவாகப் பழுவேட்டரையர் கண்டன் அமுதனும், இருக்குவேளான பூதி விக்ரம கேசரியும் களம் காண, ராஜசிம்ம பாண்டியனுக்கு ஆதரவாக இலங்கை வேந்தன் ஐந்தாம் கசப்பன் தன்னுடைய படைத் தளபதியான ‘சக்க சேனன்’ என்பவரை அனுப்பினான்.
இந்தப் போரின் ஒரு நிகழ்வு குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் கிருபாபுரீஸ்வரர் கோவில் கல்வெட்டு ஒரு தகவலை அளிக்கிறது. கரிமங்கலம் எடையன், வலிக்குட்டி, பெருநாயகன், அழியானிலை மாதவன் ஆகிய நான்கு வீரர்கள் பாண்டியருடன் போரிட்டு வீரமரணம் அடைகின்றனர். அவர்களது மன சாந்திக்காக, 120 கழஞ்சு பொன் அளித்து ஈசனின் பூஜை நேரங்களில், நான்கு பிராமணர்களுக்கு இடையறாது உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கடுமையாக நடந்த இப்போரில் பாண்டியன் தோற்றார். எனினும் தன்னுடைய முன்னோர் தனக்கு அளித்த சில பொக்கிஷங்களை விடாது தூக்கிக்கொண்டு இலங்கைக்குச் சென்றார். அங்கிருந்த தன் உற்ற நண்பனான இலங்கை வேந்தனிடம் இந்திர ஆரம், சுந்தரமுடி’யை ஒப்படைத்துவிட்டு தன் தாயார் பிறந்தகமான சேர தேசம் சென்றார்.
இத்தகவல் குறித்து இலங்கையின் வரலாற்று ஆவணமான மகாவம்சம் கூறியதாவது, ‘அந்த நேரத்தில் சோழ மன்னனுக்கு அஞ்சிய பண்டு (பாண்டிய) மன்னனானவன் கப்பலேறி மஹாதீவுக்கு வந்துவிட்டான். மன்னன் அவனைத் தன்னிடம் அழைத்தான். அவனைச் சந்தித்ததற்காக மிகுந்த மகிழ்வுற்றான். அவனுக்குப் பேரளவான செல்வத்திற்கு வழி செய்ததுடன் அவன் வாழ்வதற்காக நகருக்கு வெளியே இருப்பிடம் ஒன்றையும் வழங்கினான். ‘நான் சோழ மன்னன் மீது போர் தொடுத்து, அவனுடைய அரியணைகள் இரண்டையும் கைப்பற்றி, அவற்றைப் பண்டு மன்னனுக்கு வழங்குவேன்’ என்ற நோக்கத்துடன் இலங்கை அரசன் படைதிரட்டிய வேளையில், என்ன காரணத்தினாலோ தீவில் இருந்த பிரபுக்கள் கலகத்தைக் கிளப்பிவிட்டார்கள். பண்டு மன்னன் முனைப் பொடுங்கி நின்றுவிட்டான். அங்கே தனக்கு இனி ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட அவன் தனது மணிமகுடத்தையும் இன்னும் சில மதிப்பான பொருட்களையும் இலங்கையில் விட்டுவிட்டுக் கேரளத்தை நோக்கி ஓடினான்’ என்கிறது.
அதன்பின் பராந்தகசோழன் தன் தூதரை அனுப்பி அதனைக் கேட்கவே, இலங்கை வேந்தன் அவற்றைத் தர மறுத்தான். ‘இவன் என்ன மறுக்க!? நானே வென்று கைப்பற்றுவேன்’ எனப் படையை அனுப்பினார் பராந்தகசோழன். அப்போரில் இலங்கை வீழ்ந்தது. ஆகவே பராந்தகர் ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’ எனப் பெயர் பெற்றார். தோல்வியுற்றாலும், தன்னை நம்பி பாண்டியன் பொக்கிஷத்தை அளித்துள்ளான், அவற்றை எப்படியாவது காப்பாற்றியாகவேண்டும் என எண்ணி, தன் பரிவாரங்களைக் காலிசெய்து இலங்கையின் கீழ்பகுதியான ’ரோகணம்’ சென்றான் இலங்கை வேந்தன். பாண்டியரின் அரசுரிமைச் சின்னங்களைக் கைப்பற்ற இயலாது சோழப்படை தாயகம் திரும்பியது.
இது குறித்து இலங்கையின் மகாவம்சம் கூறியதாவது, ‘சோழ வேந்தனானவன் பண்டு நாட்டு மன்னன் என்று முடிசூட்டிக்கொள்ள விழைந்து, பாண்டியன் இலங்கையில் விட்டுவிட்டு ஓடிய அவனது மணிமகுடத்தையும், மற்ற மதிப்புமிக்க பொருட்களையும் குறித்த வினவும் பொருட்டு (தூதுவர்களை) அனுப்பினான். மன்னனோ அவற்றைக் கொடுக்கவில்லை. எனவே, சினமேறிய செம்பியன் அவற்றை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொள்ளும் நோக்கத்துடன் ஒரு படையை அனுப்பினான். இங்கே (இலங்கையில்), அந்த வேளையில் எல்லையிலிருந்த ஒரு கலகப் பகுதியில் இருந்தான் சேனாபதி. உடனுக்குடன் அவனை வரவழைத்துப் போருக்கனுப்பினான் மன்னன். வீறுகொண்டெழுந்த சேனாபதி விழுந்தொழிந்தான் போரில். உடனே மன்னனானவன் மணிமகுடத்தையும், மற்ற அரிய பொருள்களையும் எடுத்துக்கொண்டு ரோஹணாவுக்குச் சென்றுவிட்டான். சோழர் படை துரத்திச் சென்றது. ஆனால், ரோஹணாவுக்குள் நுழைய அவர்களுக்கு வழி தெரியவில்லை. அச்சத்தின் காரணமாக, அவர்கள் படை அங்கிருந்து தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டது’.
அதன்பின் வந்த சோழ மன்னர்கள் எவராலும் பாண்டியரின் பொக்கிஷத்தை மீட்க முடியவில்லை. இலங்கை முழுவதையும் கைப்பற்றி ‘மும்முடி’ சோழன் (இலங்கை, சேர, பாண்டியர்) எனப் புகழப்பட்ட பெருவேந்தன் ராஜராஜசோழனாலேயே அந்தப் பொக்கிஷத்தை மீட்க முடியவில்லை.
ராஜராஜனின் மைந்தன் ராஜேந்திரசோழன் 1017ஆம் ஆண்டு ஈழத்துக்குப் படையெடுத்து சென்றார். அங்கு தனது மகன் வீரராஜேந்திரனை முன்னரே ‘சோழ இலங்கேஸ்வரன்’ என முடிசூட்டி அரசனாக்கியிருந்தார். ராஜேந்திரர், சிங்களவனை வென்று அவன் மணிமுடியை எடுத்துகொண்டதுமில்லாமல் அவனது மனைவியரின் முடியையும் சேர்த்து எடுத்தார். நூறாண்டுகளுக்கும்மேல் கைப்பற்ற முடியாத பொக்கிஷமாகக் கருதப்பட்ட ‘சுந்தரமுடியையும் இந்திர ஆரத்தையும்’ பராந்தகசோழனின் பேரனுக்கு பேரன், தன் மகனுடன் இணைந்து கைப்பற்றினார்.
இதனை ராஜேந்திரசோழன் தனது மெய்கீர்த்தியில் கீழ்க்கண்டவாறு பெருமையாகக் கூறுகிறார்.
‘முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
சுந்தரமுடியும் இந்திரன் ஆரமும்
தென்திரை ஈழமண்டலம் முழுவதும்’
மகாவம்சம் இந்நிகழ்வினை, ‘அரசனின் (ஐந்தாம் மகிந்தனின்) 36ஆம் ஆண்டில், மகேசியையும் அவனுக்கு மரபு வழியாகக் கிடைத்த அரிய அணிகலன்களையும் பதக்கங்களையும், அரசருக்குரிய ஆபரணங்களையும், விலைமதிப்பு மிக்க வைர அணிகலங்களையும், கடவுளால் வழங்கப்பட்டதும் உடைக்க முடியாததுமான வாளையும், கிழிந்த துணி ஒன்றின் சிதைந்த பகுதியையும் சோழர்கள் கைப்பற்றினார்கள். ஆனால், அரசன் அஞ்சி காட்டுக்குள் ஓடிவிட்டான். உடன்பாடு செய்துகொள்வதாகச் சொல்லி அவனை அவர்கள் உயிரோடு பிடித்துக்கொண்டார்கள். சோழப் படையினர் அரசனையும் தங்கள் கைக்குச் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனிடம் அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாகப் பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்ன அறைகளை உடைத்து அவற்றில் இருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்து சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம், பௌத்தசமய மடங்களை அழித்து, இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்கள்போல், இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர், புலத்தி நகரத்தைத் தங்கள் தளமாகக் கொண்டு, இராஜரட்டம், ரக்கபாசான காண்டம் எனப்படும் பகுதிவரை, சோழர்கள் தங்கள் கைக்குள் வைத்து ஆண்டு வந்தார்கள். சோழ நாட்டில் வனவாசம்போல 12 ஆண்டுகள் கழித்த பிறகு, இலங்கை அரசனான மகிந்தன், அவன் பட்டத்துக்கு வந்த 48ஆம் ஆண்டில் உயிர் நீத்தான்’ எனக் குறிப்பிட்டு உறுதிபடுத்துகிறது.
அதன்பின் சோழர்களின் பண்டாரத்தில் பாண்டியரின் பொக்கிஷம் நூறாண்டுகளுக்கும் மேலாக இருந்தது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு பின் இம்மணிமுடி மீண்டும் பாண்டியர் வசம் சென்றது. அச்சமயம் பாண்டியருக்குள் உள்நாட்டு போர் ஏற்பட்டது. அதில் குலசேகர பாண்டியர் அணி சோழரையும், பராக்கிரம பாண்டியன் அணி இலங்கையின் உதவியையும் நாடியது. இதில் இலங்கை படை தமிழகத்தை அடையும் முன், பராக்கிரம பாண்டியனை குலசேகர பாண்டியன் கொன்றுவிட்டார். சிலகாலம் கழித்து இக்குலசேகரன் மற்றொரு அரச மரபான கொங்குச்சோழருடன் இணைந்து, தனக்கு உதவிசெய்த சோழனான இரண்டாம் ராஜாதிராஜனை எதிர்த்துப் போர் புரிய, இறுதியில் சோழர் பக்கம் வெற்றி திரும்பியது. சோழ மன்னன் குலசேகரனை வென்று பராக்கிரம பாண்டியனின் மகனான வீரபாண்டியனை மதுரைக்கு அரசனாக்கி திரும்பினார். அப்போதுதான் 150 ஆண்டுகாலம் சோழர் வசம் இருந்த சுந்தரமுடியும் இந்திர ஆரமும் மீண்டும் பாண்டியர் வசம் பரிசாகச் சென்றன. வீரபாண்டியன் தனது குலச்சின்னங்களுடன் மதுரையில் முடி சூடியதை அவரது கீழ்க்கண்ட மெய்கீர்த்தியே கூறுகிறது.
‘ஸ்வஸ்திஸ்ரீ
பூமடந்தையும் செயமடந்தையும் பொலிந்துதிருப் புயத்திருப்ப
பார்முழுதுங் குடைநிழற்றப் பராக்கிரமத்தான் முடிசூடித்
தென்மதுரா புரித்திரு விளையாட்டத் திற்கண்டு
மன்னரெல்லாம் வந்திறைஞ்ச மலைநாடு கொண்டருளி
மாபார தம்பொருது மன்னவர்க்குத் தூதுசென்று
தேவாசுர மதுகைதரித்துத் தேனாரு மறையுங்கொண்டருளி
வடவரையிற் கயல்பொறித்து வானவர்கோனாரம்பூண்டு
திடவாசகக் குறுமுனியாற் செந்தமிழ்நூல் தெரிந்தருளி
செங்கோ லெங்கும் திசையுற நடாத்தி
மன்னிய வீர சிம்மா சனத்தில்
திரைலோக்கிய முழுதுடை யாளொடும்வீற் றிருந்தருளி
மாமுதன் மதிக்குலம் விளக்கிய கோமுதற்
கொற்ற வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீ வீரபாண்டிய தேவர்.’
வீரபாண்டியருக்கு பின் அரசாண்ட அவரது மகன், குலசேகர பாண்டியனும் தனது மெய்கீர்த்தியில்,
‘வெண் குடைநீழல் செங்கோல் நடப்ப
நாடொறும் மதியமும் ஞாயிறு வலங்கொள்
ஆடகப் பொருப்பின் அரசுமீ னிருப்ப
சுந்தர மார்பினில் இந்திரன் பூட்டிய
ஆரமும் அலங்கலும் அழகுடன் திகழ
வீணையும் புலியும் வில்லுஞ் சுரம்புக
ஆனை மன்னவர் அடிமலர் சூட
மரபினில் வந்த மணிமுடி சூடி
விளங்கிய கதிரொளி வீரசிம்மா சனத்து
உலகமுழு துடையாரொடும் வீற்றிருந் தருளிய
மாமுதல் மதிக்குலம் விளக்கிய
கோமுதல் கோச்சாடய பன்ம ரான …
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலசேகர தேவர்’ என்கிறார்.
இதன்பின் இந்த பொக்கிஷம் சோழர் வசம் மீண்டும் செல்கிறது. மூன்றாம் குலோத்துங்கனின் சிதம்பரம் கல்வெட்டு, வீரபாண்டியனின் மூக்கையறிந்து (இந்த வீரபாண்டியன் முன்னர் கண்ட குலசேகரனின் மகனாய் இருக்கக்கூடும்) மதுரையை விக்கிரமபாண்டியனிடம் ஒப்படைத்ததாக கூறுகிறது. மேலும் வீரபாண்டியனின் வேளத்து பெண்களைக் கைப்பற்றி அவரது மணிமுடியை காலால் மிதித்ததாகத் திருக்கடையூர் கல்வெட்டு கூறுகிறது. இதே செய்தியை திருவரங்கம் கல்வெட்டும் உறுதிசெய்கிறது.
சுந்தரபாண்டியன் எழுச்சி:
சங்ககாலத்தில் புகழ்பெற்று கோலோச்சி, களப்பிரரிடமிருந்து நாட்டை மீட்டு சுமார் 400 வருடங்களுக்கும்மேல் அரசாண்ட பாண்டியர், அதன்பின் சோழர் எழுச்சியால் வலுகுன்றினர். அப்போதுதான் அக்குலத்தின் விடிவெள்ளியாக ‘மாறவர்மன் சுந்தரபாண்டியன்’ தோன்றினார். முந்நூறு வருடம்மேல் தம்மை அடக்கிய சோழர்களை வீறுகொண்டு எதிர்த்து தனது ஆட்சியை மீட்டார். அதுமட்டுமின்றி இரண்டாயிரம் வருடம் பழமையாய் கருதப்படும் தமது குல மணிமுடியையும் இந்திர ஆரத்தையும் மீண்டும் கைப்பற்றி, தஞ்சையையும், உறையூரையும், பழையாறையையும் தீயிட்டுகொளுத்தி, தனது பாரம்பரிய பழமையான மதுரையில் தம் குலத்திற்கேயுரிய இந்திரன் கொடுத்த ஆரத்தை மார்பில் பூண்டு மணிமுடி சூடினார். இதனை,
‘மணிமுடி இந்திரன் பூட்டிய பொலங்கதிர் ஆரம் மார்பினிற் பொழிய…
… தஞ்சையும் உறந்தையும் செந்தழல்
கொளுத்தி மாடமதிலும் கோபுரமும் மாளிகையும் இடித்து… ஆடகபுரிசை ஆயிரதளி வளவர் மண்டபத்தில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் புரிந்த கோமாறவர்மர் சுந்தரபாண்டியதேவர்…’
எனக் குறிப்பிட்டு தம் குல பொக்கிஷத்தைமீட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
மாலிக்காபூர் படையெடுப்பு:
அமீர்குஸ்ரௌ, வகாப் போன்ற முகமதிய வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளைத் தொகுத்து, ‘The History of India, as told by its own Historians’ என்ற நூலாக எலியட், டவ்சன் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர். இதன்படி 1311 மார்ச் 10 அன்று தமிழகத்தில் (மபார்) பெரும்படையோடு நுழைந்தார் மாலிக்காபூர். இதற்கு காரணம் பாண்டியரின் தாயாதி பிரச்னை (ஆதாரம்: திருக்களர் கல்வெட்டு மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்). தர்மபுரி வழியே காவிரிக்கரையை அடைந்து கண்ணனூர் வழியாகக் கண்டியூர் வந்து அங்குள்ள நந்திபுரம் ஆயிரத்தளி, நியமத்து ஆயிரத்தளியை அழித்து கங்கைகொண்டசோழபுரம், தில்லை, திருவரங்கம் முதலிய கோவில்களின் செல்வங்களை கொணர்ந்து பெருஞ்செல்வத்தை தூக்கமுடியாமல் யானைகள் மீதேற்றி டெல்லிக்குச் சென்றார் மாலிக்காபூர்.
இந்தக் களேபரத்தில் மதுரையை ஆட்சி செய்த வீரபாண்டியன் தலைமறைவானார். அதன்பின் அந்த சுந்தரமுடி இந்திர ஆரம் குறித்து தகவலில்லை. மாலிக்காபூர் அதை தூக்கி சென்றானா அல்லது அதன்பிறகு மதுரையை ஆண்ட விஜயநகரத்தார் எடுத்தனரா என்பது தெரியவில்லை. பல வருடங்கள் போராடி, பல்வேறு உயிர்களைக் காவு வாங்கிய அந்த பொக்கிஷம் இன்று எந்த அருங்காட்சியகத்தில் உள்ளதோ? அல்லது உருக்கி எங்கேயோ ஓர் அணிகலனில் கலந்ததோ? மண்ணில் புதையுண்டதோ? இல்லை, உண்மையிலேயே இன்றும் மறைவாக எங்கேனும் பராமரிக்கப்படுகிறதோ!
(தொடரும்)

