ஏப்ரல் 2, 2018 ராஷ்டிரபதி பவனின் முதன்மைத் தரைத் தளத்தில் சுமார் நூறு அடி உயரம் உள்ள குவியலின் கீழ் மிகப் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது கணதந்திர மண்டபம். மண்டபத்தின் நடுவில் இருக்கும் புத்தர் சிலையும், சுற்றிலும் உள்ள பெரிய தூண்களும், அழகான மார்பில் தரையும், மண்டபத்தின் மேல் பகுதியில் உள்ள சாந்திலியர் எனும் சரவிளக்கும் அந்த அரங்கத்தை அழகாக்கி கொண்டிருந்தன.
பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர்.ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலை வகிக்க, இன்ன பிற மத்திய அமைச்சர்களும், மூத்த அரசு அதிகாரிகளும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் நிறைந்துள்ள அந்த அரங்கத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பத்ம விருதுகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
சிறந்த சமூக சேவைக்கான பத்மஸ்ரீ விருதைப் பெறுபவர் திருமதி சுபாஷினி மிஸ்திரி என்று அறிவிக்கப்படுகிறது. சுமார் மூன்று அடி மதிக்கத்தக்க பெண்மணி குடியரசுத் தலைவரை நோக்கி வணக்கம் வைத்து, உடன் இருந்த பாதுகாப்பு அதிகாரியின் கையைப் பிடித்துக்கொண்டு குடியரசுத் தலைவரை நோக்கி வந்தார். குடியரசுத் தலைவர் அவருக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கினார். அரங்கமே கைத்தட்டலால் நிறைகிறது. அந்தப் பெண்மணி குடியரசுத் தலைவரின் கையை இறுக்கப்பற்றி வணங்கி விடைபெற்றார்.
0
1943, இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷாரின் தவறான உணவு கொள்கை, பதுக்கல் மற்றும் அரிசி ஏற்றுமதியின் காரணமாக வங்காளத்தில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. இந்த வங்காளப் பஞ்சத்தின்போது தற்போதைய கல்கத்தாவின் தென்மேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்வா என்னும் கிராமத்தில் பிறந்தவர்தான் சுபாஷினி மிஸ்திரி. மிகவும் ஏழ்மையான குடும்பம். தந்தை ஒரு சிறு விவசாயி.
தன்னுடைய 12வது வயதில் தற்போதைய கல்கத்தாவின் தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹன்ஸ்புகூர் என்னும் கிராமத்தில் வசித்த விவசாயியான சந்திராவுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. ஒருநாள் அவரது கணவர் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, வலதுபக்க வயிற்றுக்குக் கீழ் கடுமையான வலியால் துடித்துக்கொண்டிருக்க, டோலிகஞ்ச் அரசு மாவட்ட மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் குடல் அழற்சி நோய் உள்ளது கண்டறியப்பட்டது.
அரசு மருத்துவமனையில்கூட நோயாளிகள் சிகிச்சை பெற பணமோ அல்லது செல்வாக்கோ தேவைபடுகிறது என்பதை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நடைமுறை சுபாஷினி மிஸ்திரிக்கு உணர்த்தியது. போதுமான மருத்துவ சிகிச்சை இன்றி அவரது கணவர் உயிரிழந்தார். கணவனை இழந்த சோகம் ஒரு பக்கம், நான்கு குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது என்ற அச்சம் ஒரு பக்கம். இரண்டுக்கும் இடையில் சுபாஷினி மிஸ்திரி ஒரு சபதம் எடுத்தார். இனி இது போன்ற அவலம் யாருக்கும் நேரக்கூடாது. அடிப்படை மருத்துவக் கவனிப்பு இருந்திருந்தாலே அவரது கணவரைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் வறுமையும், மருத்துவ ஊழியர்களின் அலட்சியமும் அவரது கணவரைக் கொன்று விட்டன. இனி இதுபோல் யாருக்கும் நேராமல் இருக்க ஏழைகளுக்கு ஓர் இலவச மருத்துவமனையைக் கட்டுவேன் என்று சபதம் எடுத்தார்.
முதலில் தன் வயிற்று தேவையைத் தீர்ப்பதற்காக அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை, சமையல் வேலை, தோட்ட வேலைகளைச் செய்யத் தொடங்கினார் சுபாஷ் மிஸ்திரி. பின்பு தாபா எனும் கிராமத்தில், விளையும் காய்கறிகளைப் பறித்து அதனை விற்கத் தொடங்கினார். வியாபாரம் வளர வளர மத்திய கல்கத்தாவில் பார்க் சர்க்கிளில் சாலையோரக் கடை ஒன்றை அமைத்தார். தன்னுடைய மகன் அஜய் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்பதனால் அவனை கல்கத்தாவில் ஓர் இல்லத்தில் சேர்த்துப் படிக்க வைத்தார் மற்ற மூன்று பிள்ளைகளும் சுபாஷினி மிஸ்திரிக்கு உதவினர்.
தான் சம்பாதித்த பணத்தில் மகன் அஜய்யின் கல்விச் செலவுக்கும், மற்ற பிள்ளைகளின் செலவுக்கும் போக மீதம் உள்ள பணத்தை, தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கி சேமிக்க ஆரம்பித்தார். அவ்வளவு வறுமையிலும் அவர் தனது கனவைக் கைவிடவில்லை. மருத்துவமனை கட்டுவதில் உறுதியாக இருந்தார்.
1992ஆம் ஆண்டு ஹன்ஸ்புகூர் கிராமத்தின் ஊர் மக்கள் அந்த ஊர் மந்தையில் கூடினர். தன் கணவரின் இறப்பிற்குப் பின்பு அந்தக் கிராமத்தை விட்டுச் சென்ற சுபாஷினி மிஸ்திரி, பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கிராமத்திற்கு வந்திருந்தார். தான் சிறுக சிறுக சேமித்த பணம் ரூபாய் பத்தாயிரத்தில் அந்தக் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி, இங்கு ஒரு இலவச மருத்துவமனை கட்டுவதற்காக நான் இந்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாகக் கொடுப்பதாகவும், இங்கு ஏழைகளுக்கு மருத்துவமனையாகப் பயன்படக்கூடிய ஒரு கொட்டகை அமைப்பதற்குக் கிராம மக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். கிராம மக்கள் நன்கொடையாக ரூபாய் 926ஐ வழங்கினர். சிலர் கொட்டகை அமைப்பதற்கான மூங்கில், பனை ஓலை, மரப்பலகை போன்ற பொருட்களையும், அதுவும் முடியாத சில நபர்கள் தங்களது உழைப்பையும் அந்த மருத்துவமனை அமைவதற்கு நன்கொடையாக வழங்கினர்.
1993இல் 20 அடிக்கு 20 அடியில் ஒரு சிறிய கொட்டகையில் உதயமானது ‘ஹியுமானிட்டி ஹாஸ்பிடல்’ எனும் மனிதநேய மருத்துவமனை.
‘எங்கள் கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஏழைகளுக்கான இலவச மருத்துவமனையில் சேவை புரிவதற்கு விருப்பமுள்ள மருத்துவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது ஏழைகளுக்குத் தங்களது இலவச சேவையை வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்’ என்று அறிவித்தவரே ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட அந்த ஆட்டோ அருகில் உள்ள அசுதி, ராமச்சந்திரபூர், கங்காதர்பூர் போன்ற கிராமங்களுக்கு அறிவித்துக் கொண்டே சென்றது. அந்த அறிவிப்பை ஏற்று முதலில் சேவை புரிய வந்தவர், டாக்டர் ரகுபதி சட்டர்ஜி. அதன் பின் குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், எலும்பு மருத்துவர் என்று வாரத்திற்கு ஒருநாள் ஒவ்வொருவரும் மூன்று முதல் நான்கு மணி நேரம் அந்த மருத்துவமனையில் இலவச சேவை புரிந்தனர். முதல் நாளிலேயே அங்கு 252 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது மகன் அஜய் மருத்துவம் பட்டம் பெற்று ஹியுமானிட்டி மருத்துவமனையின் அன்றாட நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.
அன்று பெய்த பருவ மழையால் கொட்டகைக்குள் முழங்கால் அளவிற்குத் தண்ணீர் வந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் போனது. அன்றுதான் சுபாஷினி மிஸ்திரி ஒரு கான்கிரீட் கூரை அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். ஆனால் அது அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை. அவரும் அவரது மகன் அஜய்யும் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாலினி பட்டாச்சாரியாவின் உதவியை நாடினர். முதலில் செவி சாய்க்காத அவர், சுபாஷினி மிஸ்தரியின் விடாமுயற்சியினால் நிதி திரட்ட உதவினார்.
அதன் விளைவாக 1993இல் அடிக்கல் நாட்டப்பட்டு காங்கிரட் கூரை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. மருத்துவமனை தொடர்ந்து நடைபெறுவதற்கு உலகத்தின் பார்வையும், பத்திரிகையாளர்களின் பார்வையும் பட வேண்டும் என்று நினைத்த சுபாஷினி மிஸ்திரி, மருத்துவமனை திறப்பதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பட்டாச்சாரியாவின் உதவியுடன் ஆளுநரை வர வைப்பதற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி அப்போதைய ஆளுநர் கே.வி. ரகுநாத் ரெட்டி அவர்கள் புதிதாகக் கட்டப்பட்ட ஹியுமானிட்டி மருத்துவமனையைத் திறந்து வைத்தார். ஆளுநரின் வருகையால் ஏராளமான செய்தியாளர்கள் அங்கு வந்து குவிந்தனர். ஊடகங்களின் செய்தியால் மருத்துவமனை பிரபலமடைந்தது மருத்துவமனைக்கு நன்கொடைகளும் வரத் தொடங்கின.
தற்போது இந்த மருத்துவமனை மகப்பேறு மருத்துவம், புற்றுநோய் சிகிச்சை, நீரழிவுச் சிகிச்சை, இதய மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்நோக்கு மருத்துவமனையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தன்மகன் அஜய் மருத்துவமனையின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட பிறகு சுபாஷினி மிஸ்திரி மீண்டும் தனது பழைய தொழிலான காய்கறி விற்கும் தொழிலுக்கு அதே மத்திய கல்கத்தாவின் பார்க் சர்க்கிளில் உள்ள சாலை ஓர கடைக்குத் திரும்பினார். அவர், தான் சேமித்த பணத்தைத் தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியிருந்தால் ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். தனக்கு தேவையான உடைமைகளை வாங்கி இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் தான் பட்ட துன்பத்தைப் பிறர் படக்கூடாது என்பதற்காக ஓர் இலவச மருத்துவமனை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து இரும்பு பெண்மணியாகத் திகழ்ந்தார்.
தற்பொழுது மூட்டு வலியின் காரணமாகவும் தன் மகன் அஜயின் வற்புறுத்தல் காரணமாகவும் காய்கறி விற்பதை விட்டுவிட்டு மருத்துவமனையில் நோயாளிகளைப் பராமரிக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையில் சேவை செய்கிறார்கள்.
மத்திய அரசு அவரது சமூக சேவையைப் பாராட்டி 2018இல் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.
உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பமும் மனசோர்வும் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் சுபாஷினி மிஸ்திரியின் வார்த்தைகளை நினைவு கொள்ளுங்கள். ‘இருண்ட என் வாழ்க்கையில் இறைவன் தன் கருணையினால் எனக்கு ஒரு வெளிச்சத்தையும் நோக்கத்தையும் கொடுத்தார். அன்றிலிருந்து மருத்துவக் கவனிப்பு இல்லாததால் எந்த ஓர் ஏழையும் தனது அன்புக்குரியவர்களை இழந்துவிடாமல் இருப்பதற்காக நான் எனது முழு வலிமையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.’
(தொடரும்)

