Skip to content
Home » ஆவணச் சுவடுகள் #1 – கடவுள், தாய்நாடு, மகன்

ஆவணச் சுவடுகள் #1 – கடவுள், தாய்நாடு, மகன்

Queen Ketevan

பழைய கோவாவில் அமைந்துள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமான போம் இயேசு (Bom Jesus) தேவாலயம் பிரசித்திப்பெற்றது. கலைநயமிக்க பிரம்மாண்ட தேவலாய வளாகம், புனிதர் சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடல் உள்ளே இருப்பது, போன்ற காரணங்களால் இங்கே சுற்றுலாப் பயணிகள் வரத்து சற்று அதிகம். இவ்வளாகத்திற்கு வெளியே கேட்பாரற்று, கால ஓட்டத்தில் சிதைந்துபோன ஓர் தேவாலயம் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்ததில்லை. இத்தேவாலயத்தின் உள்ளே ஓர் மர்மப் பொருளைத் தேடி ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள், இந்தியத் தொல்லியல்துறை அதிகாரிகளுடன் இணைந்து இரு வெவ்வேறு காலகட்டங்களில் அகழாய்வு செய்து, ஒருவழியாகக் கண்டுபிடித்தனர். அது என்னவென்று காண்போம் வாருங்கள்.

0

ஜார்ஜிய நாட்டின் வரலாற்றில் ஒவ்வொரு மக்களும் இன்றுவரையிலும் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் உச்சரிக்கக்கூடிய ஒரு பெயர் கெதேவன் (Ketevan). 17ஆம் நூற்றாண்டில் ஜார்ஜியா நாடு ஈரானிய ஆட்சியாளர்களால் பல இன்னல்களைச் சந்தித்தபோது அந்நாட்டைக் காத்தவர்களில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஜார்ஜியாவின் புகழ்பெற்ற பக்ரேஷியோனி எனும் அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1575-1577 காலகட்டத்தில் கார்ட்லி எனும் மாகாணத்தில் உள்ள முக்ரானி நகரில் பிறந்தவர். கார்ட்லி மாகாணம் அன்று கல்விக்கு மிகச்சிறந்த இடமாக இருந்தது. நம் ஊரினைப்போலவே கெதேவன் தனது 5-6 வயதிலேயே கல்வியைத் தொடங்கினார். அச்சிறுவயதிலிருந்தே  நாடு மற்றும் மதத்தின் மீது பற்றுக் குறித்து அவருக்குப் போதிக்கப்பட்டது. தனது 13ஆம் வயதில் அன்றைய அரசியல் காரணங்களுக்காக கார்ட்லி மற்றும் ககெட்டி ஆகிய இரு ஜார்ஜிய ராஜ்யங்களை ஒன்றிணைக்கும் நோக்கில், ககெட்டி இளவரசர் டேவிட்டை மணந்து கொண்டார். இவருக்கு தேமுராஸ், பக்ராத், எலென் என்ற மூன்று குழந்தைகள் பிறந்தனர். கடும் காய்ச்சல் காரணமாக டேவிட் இறக்க, தனது 27ஆம் வயதில் இளம் விதவையானார் கெதேவன். அச்சமயம் கெதேவனின் மாமனாரும் டேவிட்டின் தந்தையுமான அலெக்ஸாண்டர் அப்போதைய ஈரானிய மன்னர் ஷாவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மற்றொரு மகனான கான்ஸ்டன்டைன்-மிர்ஸா என்பவர், சிறு வயதிலேயே ஷாவால் ஒரு போரில் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றத்தால் முஸ்லீமாக மாற்றப்பட்டு ஈரானிய அரண்மனையில் வளர்ந்தவர்.

ஜார்ஜியாவில் ஷாவின் ஆதிக்கம் காரணமாகப் பலர் மதமாற்றம் செய்யப்பட்டனர். எஞ்சியோருக்கும் அச்சுறுத்தல் இருந்ததால், அலெக்ஸாண்டர் கிறிஸ்தவ மதத்தினை மீண்டும் புத்துயிர் கொடுக்க காகெட்டி நகரிலுள்ள பழமையான தேவாலயங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். மக்களிடையே மதம் குறித்த பற்றுதலை ஏற்படுத்தினார். அவரது செயலால் அஞ்சிய ஷா, அலெக்ஸாண்டரை நேருக்கு நேர் எதிர்ப்பதைவிட ஒரு துரோக வழியைத் கையாண்டார். அலெக்சாண்டரின் மகனான கான்ஸ்டன்டைன்-மிர்ஸாவை ஒரு கூட்டாளியைப்போல காகெட்டிக்கு அனுப்பி வைத்தார்.

கான்ஸ்டன்டைன் சிறுவயதிலிருந்தே ஈரானிய அரண்மனையில் வளர்ந்ததால், தீவிர முஸ்லீமாக இருந்தான். அவனுக்குத் தன்னுடைய இனமான பாரம்பர்யமிக்க ஜார்ஜிய வேர்களைப் பற்றியோ, தனது வம்சத்தைப் பற்றியோ எந்த அக்கறையும் இருக்கவில்லை. இதனால் அந்தத் துரோகி உறவினர்போல உட்புகுந்து, தனது தந்தை மற்றும் சகோதரனைக் கொன்று, அவர்களது தலைகளை ஷாவிற்குப் பரிசாக அனுப்பினான். அத்துடன் கெதேவனின் மகனையும் பிணைக்கைதியாகப் பிடித்து, ஷா முன்னர் நிறுத்தினான்.

அந்தத் துரோகி அத்துடன் நிற்கவில்லை. அவன் ராணி கேதவானைத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தினான். ஒரு கிறிஸ்தவ விதவையான ராணியை, இஸ்லாமிய முறைப்படி தன்னை மணக்கச் சொன்னான்.

‘ஓ பழிபாவத்திற்கு அஞ்சாதவனே! உன் தந்தை மற்றும் சகோதரனின் உயிரைப் பறித்தவனே! தீய நாவைக் கொண்ட கொடியவனே. நீ உயிர்வாழவே தகுதியற்றவன். ஒட்டுமொத்த மனிதகுலத்தாலும் சபிக்கப்பட்டவனே. எப்போதும் தீய செயல்களையே செய்பவனே, கடவுளின் அருளால், என்னை மணக்கச் சொன்ன உனது இந்த முன்மொழிவுக்காக உன்னை விரைவில் நான் வருந்தச் செய்வேன்’ என கெதேவன் பதிலுரைத்தார். (கவிஞர் அர்சில் தனது ‘அர்சிலியானி’ என்ற நூலில், கேதேவன் இப்படிக் கூறியதாகப் பதிவு செய்துள்ளளார்.)

தனது மாமனார் மற்றும் மைத்துனரின் உடல்களை அலாவெர்டி கதீட்ரல் (Alaverdi Cathedral) வளாகத்தில் முழு ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்தார் கெதேவன். அதன் பிறகு, காகெட்டி நாட்டுப் பிரபுக்களை ஒன்று திரட்டி, கான்ஸ்டன்டைனுக்கு எதிராகப் போரிட்டார். பெலக்னிஸ்ட்காலி நதிக்கரையில் கெதேவனின் படைகளுக்கும், கான்ஸ்டன்டைன் படைகளுக்கும் இடையே போர் நடந்தது. இறுதியாக போரில் அந்தத் துரோகி கொல்லப்பட்டான். ஈரானியப் படைகள் காகெட்டியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டன.

ஜார்ஜியாவின் எதிரியாகத் தான் வளர்த்த கான்ஸ்டன்டைன்-மிர்ஸா கொல்லப்பட்டது ஷாவை ஆத்திரமடையச் செய்தது. அந்நேரத்தில் ஷா ஒட்டோமான் பேரரசுடன் (துருக்கி) போரிட்டுக் கொண்டிருந்தார். இதனால் ஜார்ஜியா மீது நேரடி மோதலைத் தவிர்த்து வந்தார். இதனால் அங்கே தற்காலிகமாக ஒரு அமைதி நிலவியது. இதைப் பயன்படுத்திக்கொண்ட ராணி கெதேவன், ஷாவிடம் தூதுவர்களை அனுப்பி ஒரு கடிதம் எழுதினார்: ‘மன்னரே, எனது மகன் தேமுராஸை என்னிடம் திருப்பி அனுப்பிவிடுங்கள். உங்கள் அரண்மனையிலேயே வளர்ந்த அவன் மன்னரானால், அது ஈரானுக்கும் நன்மையாக இருக்கும். இல்லையெனில், எங்கள் ராஜ்ஜியம் உங்களை விட்டுப் பிரிந்து ஒட்டோமான் சுல்தானின் பாதுகாப்பை நாடும்.’

இந்த வார்த்தைகள் ஷாவைச் சிந்திக்க வைத்தன. அவர் தேமுராஸை அழைத்து, மிகவும் கனிவாகப் பேசுவதுபோல ஒரு நாடகமாடினார். ‘அமைதிக்காக நான் அனுப்பி வைத்த அந்த கான்ஸ்டன்டைன், தனது தந்தை மற்றும் சகோதரனையே கொன்றுவிட்டான். அதனால்தான் மக்கள் அவனைத் தண்டித்துக் கொன்றுவிட்டனர். இப்போது குழப்பங்களைத் தவிர்க்க நீ உடனே உன் நாட்டுக்குச் செல்’ என்று கூறி, பல பரிசுகளுடன் அவனை அனுப்பி வைத்தார்.

ஆனால், ஷாவின் உண்மையான நோக்கம் வேறு. தேமுராஸ் மூலம் ஜார்ஜியாவில் தனக்கு ஒரு ஆதரவாளரை உருவாக்க நினைத்தார். அதே சமயம், ஜார்ஜியா சிதறிப் போயிருந்தால் அதை எளிதாக வென்றுவிடலாம் என்பதும் அவர் கணக்கு. ஆனால், தேமுராஸ் தனது தாய் கெதேவனைப்போலவே கிறிஸ்துவத்தின் மீதும் தாய்நாட்டின் மீதும் பற்றுகொண்டவராகத் திகழ்ந்தார்.

ஷா அப்பாஸ் 1614இல் காகெட்டி மீது படையெடுத்தார். 50 நாட்களில் அவர் அங்கிருந்த தோட்டங்கள், வயல்கள் என அனைத்தையும் தரைமட்டமாக்கினார். சுமார் 4 லட்சம் ஜார்ஜியர்களைக் கட்டாயப்படுத்தி ஈரானின் பல்வேறு பகுதிகளுக்கு நாடு கடத்தினார். அவர்கள்தான் இன்று ‘பெரிடானியர்கள்’ (Fereydanians) என்று அழைக்கப்படுகிறார்கள்.

சுமார் 400 ஆண்டுகளாகத் தாய்நாட்டைப் பிரிந்து, மதத்தை வலுக்கட்டாயமாக இழக்க நேரிட்டாலும், அவர்கள் இன்றும் 17ஆம் நூற்றாண்டின் ஜார்ஜிய மொழியைப் பேசுகிறார்கள். ஈரானின் மற்ற மக்களோடு கலக்காமல் தங்கள் அடையாளத்தைக் காத்து வருகின்றனர்.

போரின் தீவிரத்தைத் தவிர்க்க நினைத்த மன்னர் தேமுராஸ், தனது தாய் ராணி கெதேவனையும், தனது இரு சிறு மகன்களையும் (4 வயது அலெக்சாண்டர் மற்றும் 6 வயது லெவன்) ஷாவிடம் பிணைக் கைதிகளாக அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஈரான் சென்றடைந்ததும், தனது பேரக்குழந்தைகளுடன் ஷாவின் முன் தோன்றி, காகெட்டி மக்களைத் துன்புறுத்த வேண்டாம் என்று மன்றாடினார். ஆனால், ஷா எதற்கும் செவிசாய்க்கவில்லை. ஜார்ஜிய வீரர்களைத் தன் படையில் சேர்த்துக்கொண்டு, காலி செய்யப்பட்ட ஜார்ஜிய மண்ணில் துர்க்மென் (Turkmens) இன மக்களைக் குடியேற்றினார்.

பிணைக் கைதியான ராணி கெதேவனைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜார்ஜிய வம்சாவளியைச் சேர்ந்த இமாம்-குலி கான் உண்டிலாட்ஸேவிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக கத்தோலிக்கத் துறவிகள் ராணியுடன் பேச ஷா அனுமதி அளித்திருந்தார்.

அவர்களில் ஒருவரான அம்ப்ரோசியோ டோஸ் அஞ்சோஸ், ராணியின் சிறைவாசத்தைப் பற்றி பின்வருமாறு விவரிக்கிறார்: ‘அவர் மிகுந்த பொலிவான முகமும், அளவற்ற கண்ணியமும் கொண்டவர். ஒரு ராஜ்ஜியத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் பேரரசுக்கே ராணியாகத் திகழத் தகுதியானவர்.’

புகழ்பெற்ற இத்தாலியக் கலைஞர் டான் கிறிஸ்டோஃபோரோ டி காஸ்டெல் (Don Cristoforo de Castel), ராணியைப் பார்த்த பிறகு தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்: ‘ராணி மிகுந்த சொல்லாற்றலும், அசாத்தியமான திறமையும் கொண்டவர். ஒரு தேவதையே பொறாமைப்படும் அளவுக்கு அவர் தோற்றம் இருந்தது. அதையும் தாண்டி, ஒரு புனிதரைப்போல அவர் பிரகாசித்தார்.’

ராணியிடம் உண்டிலாட்ஸே காட்டிய மரியாதை குறிப்பிடத்தக்கது. அவர் ராணிக்காக ஒரு தனி அறையை ஒதுக்கி, அதைத் தொழுகை அறையாக மாற்றிக்கொள்ள அனுமதித்தார். அங்கு ஜார்ஜியர்கள், ஜார்ஜி, மோஸ் என்ற இரு கிறிஸ்தவப் பாதிரியார்களின் உதவியுடன் திருப்பலிகள் நடத்தி, தங்கள் தாய்நாட்டிற்காகப் பிரார்த்தனை செய்தனர். கத்தோலிக்கத் துறவிகளின் குறிப்புப்படி, சிறையிலிருந்த ராணி எப்போதும் கருப்பு நிற உடைகளையே அணிந்திருந்தார். ஈரானில் வசிக்கும் ஜார்ஜியர்களைச் சந்திக்க மட்டுமே அவர் வெளியே செல்வார். அங்கிருந்த ஜார்ஜியப் பெண்களுக்குத் தாயுள்ளத்தோடு ஆறுதல் கூறுவார். எக்காரணம் கொண்டும் தங்கள் மத நம்பிக்கையையும் உறுதியையும் கைவிட வேண்டாம் என்று அவர்களை வலியுறுத்துவார்.

தன்னிடம் இருந்த அனைத்தையும் சிறைபிடிக்கப்பட்ட கிறிஸ்தவக் கைதிகளுக்கு அவர் வாரி வழங்கினார். அந்த நேரத்தில் பாரசீகத்தில் கைதிகளாக இருந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். யாராவது ஒரு ஜார்ஜியர் தனது மதத்தைக் கைவிட்டதாகத் தெரிந்தால், ராணி மிகுந்த மனவேதனை அடைவார்.

0

பக்ரேஷியோனி வம்சத்தையே வேரோடு அழிக்க நினைத்த ஷா, ராணியின் பேரக்குழந்தைகளுக்குக் கொடூரமான சித்திரவதைகளைச் செய்ய உத்தரவிட்டார். அந்தத் துன்பத்தைத் தாங்க முடியாமல் அலெக்சாண்டர் உயிரிழந்தார். லெவன் மனநலம் பாதிக்கப்பட்டுச் சில காலத்திலேயே மறைந்தார். ராணியின் பாதுகாவலரான இமாம்-குலி கான், ஏற்கெனவே 10 ஆண்டுகள் சிறையில் வாடும் ராணியால் இந்தச் சோகத்தைத் தாங்க முடியாது என்று கருதி, இதை அவரிடம் கூறாமல் மறைத்தார்.

கெதேவனைச் சித்திரவதை மூலம் மனமாற்றினால், ஒட்டுமொத்த ஜார்ஜிய இனத்தின் ஆன்மீகப் பலத்தையும் உடைத்துவிடலாம் என்று ஷா நம்பினார். ராணியை ஓர் இருட்டறையில் அடைத்து, யாரிடமும் பேசவிடாமல் தடுத்தார். அவர் மனதை மாற்றமாட்டாள் என்று ஒரு கட்டத்தில் அவருக்குத் தெரிந்ததும், அவரை ஒரு கம்பத்தில் கட்டி, அரை நிர்வாணமாக்கி, உடல் முழுவதும் ரத்தம் தெறிக்கக் கடுமையாக அடித்துத் துன்புறுத்தினார்.

‘கெதேவன் மதம் மாற மறுக்கவில்லை என்றால், அவருக்குத் துன்பத்தைக் கொடுங்கள்’ என்று ஷா அப்பாஸ், இமாம்-குலி கானுக்குச் செய்தி அனுப்பினார். இமாம்-குலி கான் தயங்கினார். அவர் ஷாவிடம், ‘அவருக்கு வயதாகிவிட்டது. அவரை மதம் மாற்றுவதால் நமக்கு என்ன லாபம்?’ என்று கேட்டார். ஆனால் ஷா கோபமடைந்து, ‘அவர் மாறாவிட்டால், மிகக் கொடூரமான சித்திரவதைகள் மூலம் அவர் உயிரை எடு’ என்று கட்டளையிட்டார்.

உண்டிலாட்சே என்ற அதிகாரி, ராணியிடம் வந்து ‘மனதிற்குள் கிறிஸ்தவராகவே இருங்கள், வெளியே மட்டும் இஸ்லாமியராக மாறுவதாகச் சொல்லுங்கள்’ என்று கெஞ்சினார். அதற்கு ராணி, ‘ஜார்ஜிய மக்கள் என் இதயத்தைப் பார்க்க மாட்டார்கள். என் வாய் சொல்லும் வார்த்தையைத்தான் நம்புவார்கள். ஒரு ராணி தன் தேசத்தின் கண்ணாடி போன்றவள். நான் மாறினால் என் தேசமே மாறிவிடும்’ எனப் பதிலுரைத்தார்.

தன் மரணம் உறுதி என்று அவருக்குத் தெரிந்தது. அங்கே கொலைக்களம் தயாரானது. கொலைகாரர்கள் நெருப்பை மூட்டி, சித்திரவதை செய்யும் கருவிகளைப் பழுக்கக் காய்ச்சினர். முதலில், பழுக்கக் காய்ச்சிய செப்புக் கொப்பரையை அவர் தலையில் வைத்தனர். அவர் ஆடைகளைக் களைந்து, இடுப்பு வரை நிர்வாணப்படுத்தினர். (வலியை விட இந்த அவமானத்தைத்தான் அவர் பெரிதாகக் கருதினார் என்று போர்ச்சுகீசிய துறவி அம்ப்ரோசியோ குறிப்பிடுகிறார்).

பழுக்கக் காய்ச்சிய இடுக்கி மற்றும் மண்வெட்டியால் அவர் உடலைச் சிதைத்தனர். மார்பிலிருந்து முதுகுத்தண்டு வரை 44 இடங்களில் சூடான இரும்பைப் பாய்ச்சினர். கடைசியாக, அவர் தரையில் விழுந்தபோது, சூடான ஆணிகள் நிரப்பப்பட்ட இரண்டு தட்டுகளை அவர் உடல் மீது கொட்டினர்.

இவ்வளவு சித்திரவதையிலும் அவர் ஒரே ஒருமுறைதான் முனகினார். சித்திரவதை செய்தவர்களே களைத்துப் போனார்கள். இறுதியில் அவர்கள் அவர் மீது பாய்ந்து, கைகளாலேயே அவர் கழுத்தை நெரித்துக் கொன்றனர். அவர் இறக்கும்போது சொன்ன கடைசி மூன்று சொற்கள்,’கடவுள், தாய்நாடு, மகன்’ (God, Homeland, Son).

அவர் இறந்த நான்கு மாதங்கள் கழித்து, கத்தோலிக்கத் துறவிகள் அவர் உடலைக் கண்டெடுத்தனர். அவர் தலைப்பகுதி மட்டும் ஜார்ஜியாவில் உள்ள அவர் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற உடல் பாகங்கள் இந்தியாவின் கோவாவில் உள்ள அகஸ்டீனியன் மடாலயத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் திருச்சபை அவரை 1613ஆம் ஆண்டு புனிதராக அறிவித்தது.

கி.பி.4ஆம் நூற்றாண்டில் தென் ஆப்ரிக்காவின் அல்ஜுரியாவில் வாழ்ந்த அகஸ்டின் எனும் புனிதரின் கொள்கையை ஏற்றவர்கள் அகஸ்டியன் துறவிகள் எனப்பட்டனர். உலகம் முழுக்க இவர்களுக்குக் கிளைகள் உண்டு. மதப்பணி, மருத்துவம், கல்வி போன்றவற்றிற்காக மடாலயம், தேவாலயங்கள் உருவாக்கி கிறிஸ்தவ மதம் மற்றும் கல்விப்பணிக்காக நிறையப் பங்களிப்புகள் அளித்துள்ளனர். அத்தகைய துறவிகளின் ஒரு குழுவினர் 16ஆம் நூற்றாண்டில் பழைய கோவாவில் ஓர் பிரம்மாண்ட தேவாலயம் கட்டினர். இங்கேயுள்ள தெற்கு மணி கோபுரத்தில்தான் கெதேவனின் உடலின் ஒரு பகுதி புதைக்கப்பட்டது.

நாளடைவில் இந்த மடாலயம் சிதைந்து போனதால் அப்பகுதி முழுவதும் ஓர் அசூயை சூழ்ந்தது. 1980ஆல் ஜார்ஜிய தொல்லியல் அதிகாரிகள், தமது ஊர் புனிதரின் உடல் பாகங்களை எங்கே தேடுவது என்ற குழப்பத்தில் சில காலம் தேடிவிட்டு ஒன்றும் கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்பினர். அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு குறிப்பு மட்டுமே. அகஸ்டியன் தேவாலயத்தில் கெதேவனின் உடலின் ஒரு பகுதி உள்ளது என்பது மட்டுமே. அதன்பின் மீண்டும் மனம் தளராது, 2004ஆம் ஆண்டு ஒரு குழு ஜார்ஜியாவிலிருந்து வந்து, அங்கு கிடந்த டன் கணக்கான கற்குவியல்களை அகற்றி, பிரதான பலிபீடத்தைத் தோண்டியெடுத்தனர். அங்கே ஆறு அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. அதில் ஒரு குழியில் மனித எலும்புகள் தென்பட ஆரம்பித்தது. யாருடையது இந்த எலும்புகள் என்ற குழப்பம் ஏற்பட, அதில் மூன்று எலும்பு மாதிரிகளைச் சேகரித்து அதனைச் சோதனை கூடத்திற்கு அனுப்பினர் தொல்லியலாளர்கள்.

இதில் அந்த எலும்பு U1b எனும் மரபணுவைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டது. U1b வகை மரபணு இந்தியாவில் வாழும் சுமார் 22,000 மாதிரிகளைச் சோதித்தபோது ஒருவரிடம் கூட இல்லை. ஆனால், இது ஜார்ஜியா மற்றும் சுற்றியுள்ள காகசஸ் பகுதிகளில் இன்றும் காணப்படுகிறது. இதன் மூலம் அந்த எலும்பு ஒரு இந்தியருடையது அல்ல, அது ஜார்ஜியப் பெண்ணுடையது என்பது உறுதியானது. ‘Amelogenin Gene’ எனப்படும் மரபணுவைச் சோதித்தபோது, அதில் X குரோமோசோம் மட்டுமே இருந்தது. இதன் மூலம் அந்த எலும்பு ஒரு பெண்ணுடையது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

இக்காரணிகளால் அங்குள்ள எலும்புகள் ராணி கெதேவனுடையது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, இந்திய அரசால் 2021ஆம் ஆண்டு நிரந்தரமாக ஜார்ஜிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *