குழந்தைப் பருவத்தில் போலியாவால் பாதிக்கப்பட்ட கால்; பதின்வயதில் எதிர்பாராத சாலை விபத்தில் உடைந்துபோன முதுகுத்தண்டு; நொறுங்கிப்போன கனவுகள்; முப்பதுக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்ட உடல்; மனவழுத்தம், உளச்சோர்வு, பதற்ற நோய்; சிதைவுற்ற உடலினால் குழந்தைப் பேறின்மை; காதல் கணவனின் துரோகத்தினால் ஏற்பட்ட சோகம் —இவையெல்லாமே ஒரே பெண்ணின் வாழ்க்கையில் நடந்தால் என்ன ஆகும்?
பளீரென்ற நிறத்தில் பூத்தையலிட்ட முழுநீளப் பாவாடை; உச்சந்தலையில் பல வண்ண மலர்ச்செண்டு அலங்காரம்; காதிலும் கழுத்திலும் பெரிய பாரம்பரிய ஆபரணங்களும் மணிகளும்; நெற்றியின் மத்தியில் ஒன்றிணைந்த அடர்ந்த புருவங்கள்; அவற்றின் கீழே தீர்க்கமான கண்கள்; மெல்லிய உதடுகளில் படர்ந்திருக்கும் மென்மையான புன்னகை எனக் காண்போரை எளிதில் கவரும் தோற்றம். வண்ண ஓவியங்களை லாவகமாக வரைவதோடு சொற்களைக் கோர்த்துக் கவிதைகள் படைக்கும் திறமை. இப்படியான தோற்றத்தையும் திறனையும் கொண்ட பெண் எப்படி இருப்பார்?
இந்த இருவருமே ஒரே பெண்தான் என்றால் நம்பமுடிகிறதா? இப்படிப்பட்ட முரண்களின் கலவைதான் ஃப்ரீடா. சவால் மிகுந்த அன்றாடங்களால் அவர் சோர்ந்துவிடவில்லை. வலுவற்ற உடல் படுக்கையில் கிடத்தினாலும் அவரின் உள்ளொளி சுடர்விட்டு ஒளிர்ந்தது. வாழ்க்கை தனக்கிழைத்த கொடுமைகளைப் புறந்தள்ளி, தன்னுடைய வலிக்கும் அவமானத்துக்கும் கலையை வடிகாலாகக் கொண்டார். சாதாரண குடும்பத்தில் மூன்றாவது மகளாகப் பிறந்தவர், பின்னாளில் உலகின் முக்கியமான கலைஞர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
0
ஃப்ரீடாவின் வாழ்க்கையும் கலையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாக இருந்தன. தனிப்பட்ட வாழ்க்கையின் வலியையும் அவதியையும் ஓவியமாகச் சித்தரிப்பதில் எந்தத் தயக்கமும் கொள்ளவில்லை. மொத்தத்தில் தன் வாழ்க்கை வரலாற்றை ஓவியங்களின் வழியாக வடித்தார் என்றும் சொல்லலாம். உண்மையோடு கற்பனையும் கலந்து தீட்டப்பட்ட ஃப்ரீடாவின் ஓவியங்கள் காண்போரின் உள்ளத்தைத் தொட்டன. இன்னும் சொல்லப்போனால் ஃப்ரீடா ஓவியத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை என்பதால் காண்போரின் மனதை ஆட்கொண்டன.
ஃப்ரீடாவின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். தன் வாழ்வின் எந்த நிகழ்வையும் மறைத்துமூட அவர் விழையவில்லை. மனதின் அடியாழத்தில் தோன்றிய உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். எத்தனை இழப்புகளையும் சோகங்களையும் எதிர்கொண்டாலும் வாழ்வின்மீது தீராத காதல்கொண்டார். கலகலப்பாக நகைச்சுவையுணர்வோடு பேசுவார். பொதுவெளியில் பேசக்கூடாத, கேட்போரை அதிர்ச்சிகொள்ளச் செய்யும் ஆபாசம், வசை என்று கருதப்படும் சொற்களைச் சரளமாகப் பேசினார். அவரின் ஓவியங்களும் இதேபோன்ற அதிர்ச்சித்தன்மை கொண்டவை.
ஃப்ரீடாவின் ஓவியங்களைக் காண்போர் முதலில் மிரண்டுபோய் முகத்தைத் திருப்பிக்கொள்ளக்கூடும். ஊன்றிப் பார்த்தால்தான் அவற்றில் பொதிந்திருக்கும் நுட்பம் புலப்படும். சொல்லப்போனால் சமூகத்தின் விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கலையைப் பயன்படுத்தினார் ஃப்ரீடா. எதார்த்தவாதத்தோடு நாட்டுப்புற ஓவியப் பாணியும் கலந்த புதிய பாணியைப் பின்பற்றினார். கூடவே கலையில் அதுவரை வகுக்கப்பட்ட நியதிகளை உடைத்துத் தனக்கெனப் புதிய பாணியை உருவாக்கிய புரட்சியாளராக இருந்தார் ஃப்ரீடா.
புரட்சி என்றால் என்ன? தன்மீது திணிக்கப்படும் ஒன்றை எதிர்ப்பது அல்லது கேள்விகேட்பது. வழமையான பாணிகளையும் விதிகளையும் கருப்பொருட்களையும் பின்பற்றாமல் தனக்கெனப் புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பது. ஏற்கப்படுவது, அழகானது போன்ற முத்திரைகளின் வரையறைகளைக் கேள்விகேட்பது. அசௌகரியத்தை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய எண்ணத்தை வெளிப்படுத்துவது.
கலைஞர்கள் வெவ்வேறு வழிகளில் புரட்சியை வெளிப்படுத்தக்கூடும். வலி, அடையாளம், அரசியல், சமத்துவமின்மை போன்றவற்றை விவாதத்துக்கு உட்படுத்தலாம். கலையின் வழியாக மக்களின் பார்வையையும் எண்ணங்களையும் மாற்றியமைக்கும் தூண்டுகோலாகலாம்.
ஃப்ரீடா கலையின் வழியாக சமூக நெறிமுறைகளை, எதிர்பார்ப்புகளை, அதிகாரத்தை எதிர்த்தார். தனக்கான அடையாளம், மதிப்பீடு, வாழ்க்கைமுறையைத் தானே வகுத்துக்கொண்டார். குடும்பம், கலாசாரம், பாலியல் பாத்திரம் குறித்த பாரம்பரிய எதிர்பார்ப்புகளை உடைத்தார். தான் உண்மையென நம்பியவற்றை எந்தக் கட்டுப்பாடுமின்றிக் கலையின் வழியாக வெளிப்படுத்திச் சுதந்திரத்தை நிலைநாட்டினார். மாற்றத்தைத் தேர்வுசெய்த ஃப்ரீடா புரட்சிக் கலைஞராகப் பரிமளிக்கிறார்.
0
ஃப்ரீடா இன்றுவரை உலகளாவிய கலாசார ஆளுமையாகவும் வழிபாட்டு நாயகராகவும் இருக்கிறார். மெக்சிகோ சிட்டியிலுள்ள காசா அசூல் என்றழைக்கப்படும் அவரின் நீல நிற வீடு உலகமுழுவதுமுள்ள ஃப்ரீடா ரசிகர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.
அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள நீல நிற வீட்டில் ஃப்ரீடாவின் ஓவியங்களும் அவர் பயன்படுத்திய பொருட்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அங்கு வைக்கப்பட்டுள்ள கித்தானும் வண்ணத்தட்டும் தூரிகைகளும் வண்ணங்களும் அவர் உயிரோடு உலவுவதுபோன்ற உணர்வைத் தருகின்றன. அலமாரியில் ஃப்ரீடாவின் வண்ணமயமான டேவாண்டெபெக் பாணி உடைகள் தொங்குகின்றன. படுக்கையறையில் ஃப்ரீடாவின் புத்தகங்களும் அவர் பயன்படுத்திய சக்கர நாற்காலியும் காணப்படுகின்றன. ஃப்ரீடாவின் கணவர் டீயகோ ரிவேராவின் தொப்பி, மேலங்கி, காலணி ஆகியவையும் இங்கே வைக்கப்பட்டுள்ளன.
அலமாரிக்கு மேலுள்ள சுவற்றில் ‘ஃப்ரீடா காஹ்லோ இங்கே 1910 ஜூலை 7ஆம் தேதி பிறந்தார்’ என்றும் முற்றத்து சுவற்றில் ‘ஃப்ரீடாவும் டீயகோவும் 1929 முதல் 1954 வரை இந்த வீட்டில் வாழ்ந்தனர்’ என்றும் எழுதப்பட்டுள்ளது. ஃப்ரீடாவின் பிறப்பு, மணவாழ்க்கை, இறப்பு ஆகிய மூன்று முக்கிய மைல்கற்களைத் துல்லியமாகச் சொல்லும் வாசகங்கள்.
ஆனால் இரண்டு வாசகங்களிலும் குறிப்பிட்டுள்ள வருடங்களில் திருத்தம் தேவை. ஃப்ரீடா பிறந்தது 1907இல், என்றாலும் 1910இல் மெக்சிகோ புரட்சி தொடங்கியபோது தானும் பிறந்ததாகச் சொல்லவே விரும்பினார். அதேபோல 1929க்கும் 1954க்கும் இடைப்பட்ட சில வருடங்கள் ஃப்ரீடாவும் டீயகோவும் வேறு இரண்டு வீடுகளில் வாழ்ந்தனர். மேலும் டீயகோ சில வருடங்கள் ஓவியப்பணிக்காக அருகிலிருந்த வேறொரு ஊரில் வசித்தார். அதுமட்டுமின்றி இடையில் ஒரு வருடம் இருவரும் மணமுறிவு பெற்றுப் பிரிந்திருந்தனர்.
1907 முதல் 1954 வரையிலான 47 வருட வாழ்க்கையில் ஃப்ரீடா 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தார், அவற்றுள் 55 தன்னோவியங்களும் அடங்கும். ‘ஃப்ரீடாவின் வாழ்க்கையை எழுத்தில் வடிக்க வேண்டுமென்றால் 29 வருடங்கள் அவர் உடல் எதிர்கொண்ட வன்முறைகளை வலியை எழுதவேண்டும்,’ என்கிறார் மெக்சிகன் எழுத்தாளர் கார்லோஸ் ஃபுயென்டெஸ் மசியாஸ். அதைத்தான் ஃப்ரீடாவும் செய்தார். வெளி உலகோடு எல்லாத் தொடர்பும் அறுந்த காலத்தில் தன்னுடன் மட்டுமே நெருங்கி உறவாட முடிந்ததால் தன் உடலையும் உள்ளத்தையும் எண்ணங்களையும் கனவுகளையும் கற்பனைகளையும் கருப்பொருளாக்கி ஓவியமாக வடித்தார்.
ஃப்ரீடாவின் ஓவியங்களைப் போலவே அவருடைய டைரிக்குறிப்புகளும் கடிதங்களும் அவருடைய கலைத்திறமைக்கும் கற்பனையாற்றலுக்கும் சான்றாகின்றன. ‘உண்மை, எதார்த்தம், கொடுமை, வேதனை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார். இதுவரையில் எந்தப் பெண்ணும் கடுந்துயரமிக்க கவிதையைக் கித்தானில் வரைந்ததில்லை,’ என்று எழுதுகிறார் டீயகோ ரிவேரா.
0
ஃப்ரீடா மெக்சிகோ சிட்டியின் கோயோயாகான் புறநகர்ப் பகுதியில் 1907ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி பிறந்தார். லோண்ட்ரெஸ் தெருவிலுள்ள நீல நிற வீட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பின் அங்கேயே மறைந்தார். பெற்றோர் இட்ட பெயர் மக்டலீனா கார்மென் ஃப்ரீடா காஹ்லோ யீ கால்டெரான். குடும்பத்தினர் செல்லமாக, சுருக்கமாக ஃப்ரீடா என்று அழைத்தனர். ஃப்ரீடா என்றால் ஜெர்மானிய மொழியில் அமைதி என்று பொருள்.
ஃப்ரீடாவின் தந்தை வில்ஹெல்ம் காஹ்லோ ஹங்கேரிய ஜெர்மானியப் பின்னணியைக் கொண்டவர். அவர் பெற்றோர் ஹங்கேரியிலிருந்து ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்த காலத்தில் வில்ஹெல்ம் பிறந்தார். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வில்ஹெல்மின் தாய் இறந்த பின்னர் தந்தை மறுமணம் செய்துகொண்டார். வில்ஹெல்ம் மெக்சிகோவுக்கு இடம்பெயர்ந்தார். அப்போது அவருக்கு 19 வயது.
மெக்சிகோவில் புழங்கிய ஸ்பானிய மொழிக்கேற்ப தன் பெயரை கில்லெர்மோ என மாற்றிக்கொண்டார் வில்ஹெல்ம். கையில் பணமோ உடைமைகளோ தெரிந்த மனிதர்களோ இல்லாமல் புதிய நாட்டுக்கு வந்துசேர்ந்த இளைஞர் கில்லெர்மோ அங்கே வசித்த மற்ற ஜெர்மானியர்களின் உதவியோடு வேலை தேடிக்கொண்டார்.
ஃப்ரீடாவின் தாய் மடில்டா கால்டெரோன் மெக்சிகோ இந்திய, ஸ்பானியப் பெற்றோருக்குப் பிறந்தவர். அவர் தாய் இசபெல் கோன்சாலெஸ் ஸ்பானிய ராணுவத் தளபதியின் மகள். பெண் துறவியர் நடத்திய பள்ளியில் கல்வி பயின்றவர். அவர் தந்தை அண்டானியோ கால்டெரோன் மொரீலியாவைச் சேர்ந்த இந்தியர், புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். இந்தத் தம்பதியின் 12 குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார் மடில்டா கால்டெரோன்.
கில்லெர்மோவும் மடில்டாவும் ஒரே இடத்தில் பணிசெய்தபோது ஒருவரையொருவர் சந்தித்தனர். கில்லெர்மோ ஏற்கனவே திருமணமானவர். முதல் மனைவி மரியா கார்டினா இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று மூன்றாவது குழந்தைப்பேற்றின்போது இறந்துபோனார். அப்போது மடில்டாவை மணந்துகொள்ளவேண்டுமென அவருடைய தாயிடம் விருப்பம் தெரிவித்துச் சம்மதம் பெற்றார் கில்லெர்மோ.
திருமணத்துக்குப் பிறகு அவர்களுக்கு ஃப்ரீடாவுடன் சேர்த்து நான்கு பெண் குழந்தைகள் பிறந்தனர். கில்லெர்மோவின் முதல் மனைவியின் குழந்தைகளின் பெயர் மரியா-லூயிசா, மார்கரீடா. மடில்டாவின் மகள்களின் பெயர் மட்டில்டா, அட்ரியானா, ஃப்ரீடா, கிறிஸ்டியானா. பின்னாளில் குழந்தைப் பருவ ஃப்ரீடா, அவளின் தாய், தந்தை, அவர்கள் இருவரின் பெற்றோர் ஆகியோரைச் சித்தரிக்கும் வம்சாவளி மர ஓவியமொன்றை வரைந்தார் ஃப்ரீடா.
0
‘அப்பா மிகவும் சுவாரசியமானவர், அவருடைய நடை நாகரிகமாக இருக்கும்,’ என தந்தையைப் பற்றிக் கூறுவார் ஃப்ரீடா. கில்லெர்மோ கடுமையான உழைப்பாளி, கடவுள் நம்பிக்கையற்றவர். தீர்க்கமான பார்வையும் எதையும் ஆழத்துடன் அணுகும் தன்மையும் பெற்றிருந்தார். தத்துவ நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பியானோ இசைப்பது, ஓவியம் வரைவது போன்ற நுண்கலைகளில் தேர்ந்தவர்.
‘கடைத்தெருவுக்குப் போகையில் இடுப்பைச் சுற்றி நளினமாகப் பட்டி அணிந்து கூடையை ஒய்யாரமாகத் தூக்கிச் செல்வார்,’ என்று தாயைப் பற்றி விவரிக்கிறார் ஃப்ரீடா. மடில்டா கால்டெரோன் கல்வி கற்கவில்லை என்றாலும் புத்திசாலி, மிகுந்த கடவுள் நம்பிக்கையுடையவர். மடில்டாவின் தந்தை புகைப்படக் கலைஞராக இருந்த காரணத்தால் கணவரையும் அதே பணியைச் செய்வதற்கு இசையச் செய்தார்.
மெக்சிகோ விடுதலை பெற்று நூறாண்டு நிறைவுற்றதைக் கொண்டாடும் விழா 1910இல் நடக்கவிருந்தது. அதையொட்டி நாட்டின் பாரம்பரியக் கட்டிடங்களைப் புகைப்படம் எடுத்து ஆவணமாகப் பதிவுசெய்யுமாறு அதிபர் பொர்ஃபீரியோ டயஸின் தலைமையிலான மெக்சிகோ அரசாங்கம் கில்லெர்மோவைக் கேட்டுக்கொண்டது. 1904 முதல் 1908 வரையில் நாடு முழுவதும் பயணம்செய்து அந்தப் பணியைச் செய்துமுடித்தார்.
கில்லெர்மோ, மடில்டா இருவரும் உடல் பலகீனமானவர்களாக இருந்தனர். அவ்வப்போது வலிப்பு நோயினால் அவதிப்பட்டனர். ஃப்ரீடா 11 மாதக் குழந்தையாக இருந்தபோது அவரது தங்கை கிறிஸ்டினா பிறந்தார். மடில்டா உடல்நலிவுற்ற காரணத்தினால் ஃப்ரீடாவுக்குப் பாலூட்ட இந்தியப் பெண்ணொருவரை வேலைக்கு அமர்த்தினார்கள். பின்னாளில் அந்தத் தாதியை மெக்சிகன் பாரம்பரியத்தின் கருத்துருவமாகவும் அவரிடம் கைக்குழந்தை ஃப்ரீடா பாலருந்துவதைப்போலவும் ஓவியம் வரைந்தார் ஃப்ரீடா.
0
1910ஆம் ஆண்டு மெக்சிகோ விடுதலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துக்குப் பதிலாக வேறு ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு அரங்கேறியது. பொர்ஃபீரியோ டயஸின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மெக்சிகோ புரட்சி வெடித்தது. டயஸ் மேட்டுக்குடியினருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து அவர்களுக்குச் சாதகமாக நடந்ததால் சாமானிய மக்கள் வறுமையில் வாட நேர்ந்தது. ஃப்ரான்சிஸ்கோ மதேரோ என்ற புரட்சியாளர் மக்களாட்சிக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார். 1911இல் மெக்சிகோவின் அதிபராகப் பதவியேற்றார். ஆனால் சில மாதங்கள் கழித்து 1913இல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதன் பிறகு பல்வேறு போராட்டக் குழுக்களுக்கு இடையே ஆட்சியைப் பிடிக்கப் போட்டி நிலவியது. நாடு முழுவதும் வன்முறை வெடித்தது, சமூகக் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1920 வரையில் சுமார் பத்தாண்டுக் காலத்துக்கு இந்த நிலைமை நீடித்தது. முடிவில் நில மறுபகிர்வு, உழைப்பாளர் உரிமை போன்ற பல சட்டச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நவீன மெக்சிகோவின் முற்போக்கு அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
0
1911-1912ஆம் வருடங்களில் ஃப்ரீடா குழந்தையாக இருந்தபோது அவருடைய வீட்டுத் தெருவில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே நடந்த சண்டை குறித்துத் தன்னுடைய கையேட்டில் எழுதியுள்ளார்.
‘அந்தத் துயரமிக்க பத்து நாள் சண்டையின்போது எனக்கு நான்கு வயதிருக்கும். ஜபட்டாவின் விவசாயிகளுக்கும் கரான்சாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த சண்டையை என் கண்ணால் பார்த்தேன். அம்மா அலந்தே தெருப்பக்கமிருந்த ஜன்னல்களைத் திறந்தார். ஜபட்டா குழுவினரில் காயம்பட்டோரையும் பசியில் வாடியவர்களையும் ஜன்னல் வழியே எங்கள் வீட்டின் முன்னறைக்குள் குதிக்கச் செய்தார். அவர்களுக்கு மருத்துவ உதவிசெய்து உண்பதற்குத் தடிமனான டார்டியாக்களைக் கொடுத்தார். கோயோயாகானில் அந்தச் சமயத்தில் அந்த உணவு மட்டுமே கிடைத்தது.’
மெக்சிகோ புரட்சியினால் ஃப்ரீடாவின் தந்தை அரசாங்கத்துக்குச் செய்துவந்த புகைப்பட ஆவண உருவாக்கப் பணி தடைப்பட்டது. நல்லவேளையாக அதுவரை ஈட்டிய வருவாயில் கோயோயாகான் பகுதியில் காசா அசூலைக் கட்டிமுடித்திருந்தார். குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருந்தது. கில்லெர்மோ அமைதியில் மூழ்கினார், வாழ்க்கையின்மீது அவநம்பிக்கைகொண்டார்.
எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் குடும்பத்தை நடத்தும் பொறுப்பைக் கையிலெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் மடில்டா. குடியிருந்த வீட்டை அடமானம் வைத்தும் அறைகலன்களை விற்றும் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டும் செலவுகளைச் சமாளித்தனர்.
(தொடரும்)

