Skip to content
Home » முறிந்த பேனா #2 – ஏழைகளுக்காகப் பணியாற்றினால் என்ன கிடைக்கும்?

முறிந்த பேனா #2 – ஏழைகளுக்காகப் பணியாற்றினால் என்ன கிடைக்கும்?

Santanu Bhowmik

இதழியல் கொலைகள் வரிசையில் நாம் நன்கறிந்த, மறக்கமுடியாத பெயர் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ். ஆனால், அதே மாதம் துள்ளத்துடிக்கக் கொலை செய்யப்பட்ட சாந்தனு போவ்மிக் குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சொல்லப்போனால் கௌரியைத் துளைத்த தோட்டாக்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவை சாந்தனுவைக் குத்திக்கிழித்த கத்திகள்.

அன்று, 2017 செப்டம்பர் 20 ஆம் தேதி.

வழக்கத்தைவிடக் கூடுதல் பரபரப்பாக இருந்த தின்ராத் சேனல் செய்தி ஆசிரியருக்கு ஒரு தகவல் வந்தது. ‘வேலை முடிந்துவிட்டது. நான் விரைவில் அலுவலகம் வருவேன்’ என்று. பரபரப்பான கலவரச் சூழலில் செய்தி சேகரிக்கப்போனவரிடமிருந்து இப்படியொரு தகவல் என்றதால் ஆசுவாசம் அடைந்தார் ஆசிரியர். ஆனால், செய்தி வந்ததே ஒழிய, செய்தியாளர் வரவில்லை.

வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான திரிபுராவின் தலைநகர் அகர்த்தலாவுக்கு அருகேயுள்ள ஜிரானியா பகுதியைச் சேர்ந்த சாந்தனு போவ்மிக் ஒரு துடிப்பான இளம் செய்தியாளர்.

சிறுவயதிலேயே தாயும் தந்தையும் பிரிந்துவிட, தன் தாயிடம் வளர்ந்து வந்தார். இவரது தாய் பாப்ரிநாக் போவ்மிக் 52 வயதான நிலையிலும் குடும்பத்துக்காக உழைத்து வந்தார். சொல்லப்போனால், இவரது வருமானத்தில்தான் இயங்கிவந்தது குடும்பம். 6000 ரூபாய் சம்பளத்துக்குத்தான் தின் ராத் சேனலில் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார் சாந்தனு.

செய்தியாளராகப் பணியாற்றியதோடு, தன் பகுதியில் உள்ள எளிய குழந்தைகளுக்காக ‘மானாபிக் நர்சரி’ என்ற பெயரில் ஒரு சிறிய கல்விச்சாலை ஒன்றையும் நடத்தி வந்தார். மானாபிக் என்றால் வங்க மொழியில் மனிதநேயம் என்று பொருள்.

சிறுவயது முதலே இதழியல்மீது பெருவிருப்பம் கொண்டிருந்த நிலையில், 2013ல் ‘கபார் 365 தின்’ என்ற சேனலில் பணியைத் தொடங்கினார். பின்னர், ஊதியப் போதாமை காரணமாக, 2017 ஏப்ரலில்தான் ‘தின் ராத்’ சேனலில் சேர்ந்தார். இந்த சேனலில் அவருக்குக் கிடைத்த சம்பளம் 6000 ரூபாய்.

அறமும் இதழியலும் எந்தச் சம்பளத்தாலும் அளக்கமுடியாதவை. அப்படித்தான் சாந்தனுவின் இதழியல் வேட்கையும். அந்த வேட்கையின் வீரியத்தை அனைவரும் கண்கூடாகப் பார்த்த சம்பவம் 2017 ஜூலை மாதம் நடந்தது.

திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி (IPFT) திரிபுரா முழுவதும் ஒரு முற்றுகையை நடத்தியது. அப்போது ‘எந்த ஊடகமும் பத்திரிகையாளர்களை அனுப்பக்கூடாது’ என்று பகிரங்கமாக மிரட்டப்பட்ட சூழலில், நான் போகிறேன் என்று துணிச்சலாகக் கிளம்பிப்போய், வெற்றிகரமாக செய்தி சேகரித்துத் திரும்பிய வரலாறு சாந்தனுவுக்கு உண்டு. சம்பளத்துக்குப் பணியாற்றும் சாதாரண ஊழியனின் செயலா இது?

இதழியல் அறம் குறித்துத் தன் நண்பர்களோடும் செய்தி ஆசிரியரோடும் அடிக்கடி பேசும் இவர் குறிப்பிடும் வார்த்தைகளுள் ஒன்று ‘ஏழைகளுக்காகப் பணியாற்ற வேண்டும்’ என்பதுதான். ஆனால், மரணத்துக்குப் பின் பரவிய வதந்திகள், இவரை ஒரு செய்தியாளரே அல்ல என்றும் பணத்துக்காக மிரட்டினார் என்றும் சொன்னது தனிக்கதை.

முதலில் அக்கொலைக்கான பின்னணியில் இருக்கும் திரிபுராவின் அரசியல் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

திரிபுராவில் IPFT என்ற இயக்கம், Tipraland என்ற பெயரில் பழங்குடிகளுக்காகத் தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடி வந்தது. மிக எளிதில் வன்முறையைக் கையிலெடுக்கும் மிகத்தீவிரமான அதீதர்களின் குழுவாக அறியப்பட்டிருந்த அமைப்பு அது.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு எதிராக இந்தக் கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக என அனைத்துக் கட்சிகளுமே இதற்கு சாத்தியமில்லை என்று மறுத்துவிட்டன என்பதும் பழங்கதை.

அப்படியானால், இப்போது ஏன் மீண்டும் எழும்பியது? யார் எழுப்பியது? இந்தக் கேள்வியில்தான் சாந்தனு போவ்மிக்கின் கொலைக்கான விடை இருக்கிறது.

2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருந்த நிலையில், பாஜக இந்தப் பழங்குடி அமைப்பைத் தன் தேர்தல் லாபத்துக்காகப் பயன்படுத்துவதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் சாந்தனு.

அதன் தொடர்ச்சியாக IPFT தொடர்புடைய பல்வேறு செய்திகளை சாந்தனு வெளியிட்டுள்ளார். சொல்லப்போனால், இன்று திரிபுராவில் பாஜக படைக்கலன் என்று பெயர் பெற்றிருக்கும் IPFT, பழங்குடி மக்களின் காவலன் என்ற போர்வையில் வலம் வந்தபோதே அதை அம்பலப்படுத்தியவர் சாந்தனு.

ஒரு அசாதாரணச் சூழல் அன்றாடச் சாதாரணமாக மாற்றப்படும்போது ஒளிந்திருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டாலே போதும். மற்றதை அந்த உண்மையே பார்த்துக்கொள்ளும். இயற்கை தன்னைச் சமன் செய்து கொள்ளும். அதைத்தான் ஜூலை மாதம் செய்திருந்தார் சாந்தனு.

ஜூலை 2017ல் IPFT நடத்திய ஒரு மிகப்பெரிய முற்றுகையால் மாநிலம் முழுவதும் சாலைகள், ரயில்தடங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அரசுதான் காரணம் என்று மக்கள்மனம் மாறிவந்த நிலையில், இது மனிதர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செயற்கையான தட்டுப்பாடுதான் என்று மக்களுக்குத் தெரியும்படி வெளிக்கொண்டு வந்தது சாந்தனுவின் இதழியல் மட்டும்தான். இந்த முற்றுகையின்போதுதான் செய்தியாளர்கள் வரக்கூடாது என்று மிரட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் IPFT என்றால், மறுபுறம் TRUGP. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழங்குடிகள் அமைப்பு. எலியும் பூனையுமான இந்த இரு தரப்புகளும் எந்த நேரமும் மோதிக்கொள்ளும் அளவுக்குக் கொள்கை விரோதம் கொண்டவை. இப்படித்தான் இருந்தது அப்போதைய திரிபுராவின் சூழல்.

இந்த மோதல்போக்கைப் புரிந்துகொண்டு, மீண்டும் செய்தியறைக்கு வருவோம். அன்று செப்டெம்பர் 20 ஆம் தேதி, மோதல் அதிகரித்துக் கொண்டே போக, இந்த இருதரப்புக்கும் பற்றிக்கொண்டது கலவரத்தீ.

தலைநகர் அகர்த்தலாவிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாண்ட்வாய் என்ற இடத்தில் IPFT, TRUGP இரண்டும் மோதிக்கொள்கின்றன என்று தகவல். ஏற்கனவே 144 தடை உத்தரவு* அமலில் இருந்தது. கலவரச்சூழலில் செய்தி சேகரிக்க, பல சேனல்கள் வழக்கம்போலவே நிருபர்களை அனுப்பவில்லை. சாந்தனுவோ ஒரு வீடியோகிராஃபரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கிளம்பினான் சாந்தனு.

எல்லாம் நன்றாகத்தான் போயிற்று.

மிக நேர்த்தியாக கலவரச் சூழலைப் படம் பிடித்தார். காட்சிகளை அலுவலகத்துக்கு அனுப்பினார். கலவரம் ஓய்ந்தது. எல்லாம் ஏறக்குறைய அமைதியாகிவிட்ட சூழலில், வேலை முடிந்ததென்று வீடு திரும்பினார். மதிய உணவு காத்திருந்தது. சாப்பிட்டார்.

உணவுக்குப்பின் ஒரு அழைப்பு. மீண்டும் வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன. மறுபடியும் கலவரம் என்று தகவல். தகவல் வந்ததும் உடனே கிளம்பி சம்பவ இடத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து தன் அலைபேசியில் படம்பிடித்த காட்சிகளை சேனலுக்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்து ஆசிரியருக்குக் கொடுத்த செய்திதான், ‘வேலை முடிந்துவிட்டது. சீக்கிரம் அலுவலகம் வந்துவிடுவேன்’ என்பது. ஆனால், அதுதான் தன் கடைசி செய்தி என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சாப்பிட்டுப் போன மகன், சவமாகத்தான் வருவானென்று அந்தத் தாய்க்கும் தெரியாது.

செய்திதான் வந்து சேரும், தன் செய்தியாளர் வரமாட்டார் என்று அந்த செய்தியறைக்கும் தெரியாது.

சரி யாருக்குத்தான் தெரியும்? என்னதான் நடந்தது?

‘சாந்தனு தன் அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது தடியால் அவரது காலில் அடித்தனர். கீழே விழுந்ததும் தலையில் அடித்தனர். பின் தரதரவென இழுத்துக்கொண்டு மைதானத்தின் பின்பக்கம் மறைந்தனர்’ என்று தன் பெயரை வெளியிட விரும்பாத உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார்.

‘மீண்டும் கலவரம் என்று தகவல் வந்ததும் தானே கிளம்பிப் போய்விட்டார். மொபைலில் பதிவுசெய்தபடி அவர் கலவரக்காரர்களிடம் நெருங்கிவிட, இப்படி நடந்துவிட்டது’ என்றார் ஆசிரியர்.

முதல்கட்ட விசாரணையில் இப்படிச் சொன்னது காவல்துறை. ‘அந்த மைதானத்தின் பின்பக்கம் கிடந்த சாந்தனுவை நாங்கள் [காவல்துறை] கண்டெடுத்தபோது கழுத்திலும் முதுகிலும் சரமாரியாக கத்தியால் குத்தியும் கிழித்தும் பல வெட்டுக் காயங்கள் இருந்தன. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.’

கண்ணால் பார்த்தவர் சொன்னார் என்கிறீர்கள்? காவல்துறைதான் கண்டெடுத்தது என்கிறீர்கள்? ஆனால் யாருமே காப்பாற்றவில்லையா என்று அலறியபடி சாந்தனுவின் தந்தை கேட்ட கேள்வி இன்று வரை விடை கிடைக்காத கேள்விதான்.

யார் கொன்றது என்ற கேள்விக்கு ஒருவரையொருவர் கைகாட்டின இரண்டு அமைப்புகளும். விசாரணைக்குப் பின், IPFTஇன் இரு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் எந்த முன்னேற்றமும் இல்லை.

துணிச்சலுடனும் பெருவிருப்பத்துடன் பணியாற்றிய ஒரு செய்தியாளன், வெறுமனே தன் கடமையைச் செய்ததற்காகவே கொல்லப்படுவான் என்பது, எந்தச் சூழலிலும் சாதாரணமானதல்ல. அதுவும், வெறும் 15 நாட்களுக்கு முன்புதான் மூத்தப் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டிருக்கிறார். நாடு கொதித்துக் கொண்டிருக்கும் சூழலில், அடுத்தடுத்து இப்படி கொலைகள் என்றால், எங்கே ஊடகச் சுதந்திரம்? எங்கே கருத்துரிமை? என மாநிலம் முழுக்க கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும்.

விளைவு, அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாகவே மாறியது சாந்தனு கொலை விவகாரம். ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கொலை வழக்கில் நீதி பெற்றுத் தருவோம்’ என்று பாஜக வாக்குறுதி கொடுத்தபோது IPFT உடன் கூட்டணியில் இருந்தது நகைமுரண்.

ஆனால், பாஜக ஆட்சி அமைந்த பின், 2018இல் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஏற்கனவே மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்த IPFT-யின் மூன்று தலைவர்கள் மீதும் அத்துடன் ’200 அடையாளம் தெரியாத’ IPFT உறுப்பினர்கள் மீதும்.

200 பேர் அடையாளம் தெரியாதவர்கள் என்றால், இதை விசாரித்து இதில் கொலைக்குக் காரணம் யார், பின்னணி என்ன என்பதெல்லாம் கண்டறிந்து நோக்கத்தை உறுதி செய்து, ஆதாரங்களைத் தேடி நீதி கிடைக்கும்படி வழக்கு நடத்தி தீர்ப்புப் பெறுவது இந்திய நீதித்துறையில் எவ்வளவு ’எளிது’ என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

ஆனாலும் நீதித்துறைதான் இறுதி நம்பிக்கை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நம்பிக்கையில்தான் தன் மகனுக்கு இறுதிச்சடங்குகள் முடித்தபின் வாய்திறந்து பேசினார், சாந்தனுவின் தாய். ‘நான் நீதி வேண்டுகிறேன். என் மகனை திரும்பக் கொண்டுவர முடியாது. ஆனால் இது இனி வேறு எந்தத் தாயின் மகனுக்கும் நடக்கக்கூடாது.’ ஒரு தாயின் மிக அடிப்படையான வேண்டுகோள் இது.

நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து காத்திருக்கிறது சாந்தனுவின் குடும்பம்.

இந்தக் கொலையை பாரம்-ஆசியா கண்டித்தது. CPJ கண்டித்தது. SAMDEN கண்டித்தது. ஏன் Unesco கூடக் கண்டித்தது. ஆனால், இன்று வரை நீதி கிடைத்தபாடில்லை.

செப்டம்பர் 5, கௌரி லங்கேஷ் படுகொலை. நாடு முழுதும் கண்டனங்கள். தேசிய ஊடகங்கள் தொடர்ந்து செய்தியாக்கின. செப்டம்பர் 20, 2017. சாந்தனு போவ்மிக் படுகொலை. தேசிய ஊடகங்களில் ஒரு நாள் செய்தி. அவ்வளவுதான்.

ஒப்பிடுவது நம் நோக்கமல்ல. ஆனால், இரண்டு வழக்குகளில் பிரபலமானது ஒன்று மற்றொன்றை மறைத்துவிட்டது என்ற வலிக்கும் உண்மையைப் பதிவுசெய்துதான் ஆக வேண்டும். அதுபோக, இவர் ஒரு செய்தியாளரே அல்ல. உள்ளூர் சேனலில் உலவி வந்த ஓர் ஆளுங்கட்சிப் பிரதிநிதி என்ற பட்டம்தான் கிடைத்தது. சிறிய நிறுவனங்கள், சுயாதீன இதழியலாளர்கள் அனைவரும் சந்திக்கும் சூழல்தான் இது என்றாலும், இதழியலுக்காக உயிர்விட்ட ஒருவரை இதயமின்றி இப்படிச் சொல்லலாமா? பெரிய நிறுவனமும் சர்வதேசத் தொடர்புகளும்தான் இதழியலுக்கு அடையாளமா?

திரிபுராவில் ஆண்டுதோறும் இந்தக் கலவரம் குறித்த செய்தித்தொகுப்புகளில் சாந்தனு கடைசியாகப் படம்பிடித்த காட்சிகள்தான் இன்றும் இடம்பெறுகின்றன. இறந்தும் தன் இதழியலால் வாழ்ந்து கொண்டிருக்கும் சாந்தனுவுக்கு இறுதியில் கிடைத்தது வதந்திகளும் வசவுகளும்தான்.

உண்மையில், இதழியல் என்பது அடையாள அட்டையில் இல்லை; அறம் சார் உணர்ச்சியில் இருக்கிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *