ஒரு சொல் எப்போது தோன்றுகிறது? மனித இனத்திற்கு ஒரு சொல்லின் தேவை ஏற்படும்போது அன்றாடப் பயன்பாட்டில் இயல்பாய் தோன்றி வாய்மொழியாய் பரவி விடுகிறது. முற்போக்கு என்ற சொல்லும் அவ்வாறு தோன்றி இன்று வரை பயன்பாட்டில் இருக்கிறது. முற்போக்கு என்ற சொல்லுக்கு முன்னேற்றம் எனும் பொருளைக் கூறுகிறது தமிழ் அகராதி.
இவ்வையகத்தில் மனிதனாய் பிறந்த யாவரும் வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற குறிக்கோளுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். எனில் எவ்வகையான முன்னேற்றத்தை இங்கு முற்போக்கு என்கிறோம்?
நம் மீது ஒருவர் தொடர்ந்து ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்தி நம்மை அவரின் அடிமையாக வைத்துக்கொண்டிருக்கும்போது பல நாள்கள் பொறுமையாய் அடங்கி இருந்தாலும், அப்பொறுமைக்கும் எல்லை உண்டு என்று ஒருநாள் வெகுண்டெழுந்து எதிர்த்து நின்று குரல் கொடுப்போம்.
அவ்வாறு மக்கள் முன்னேற்றப் பாதையில் சிந்தித்துத் தங்களின் அடிமைத்தனத்திற்கு எதிராய் குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டுமென்ற எண்ணத்தினால் தோன்றியதுதான் இந்த முற்போக்கு என்ற சொல். ஆகையால், சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழும்போது அதற்கேற்றவாறு நிகழும் முன்னேற்றங்களையே இங்கு முற்போக்கு என்கிறோம்.
1900களில் முற்போக்கு என்ற சொல் காலனியாதிக்க எதிர்ப்பு அரசியலோடும், நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்புக்கு எதிரான அரசியலோடும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தது. அன்றைய இலக்கியப் படைப்புகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனியாதிக்க எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டவையாக உருவாகின. அவற்றை முற்போக்கு இலக்கியங்கள் என்றே குறிப்பிட்டனர்.
1900இல் ஆண்டான் அடிமையல்ல நாங்கள் என மக்கள் வெகுண்டெழுந்து போராடக் களமிறங்கிய பொழுதினில் புரட்சி மற்றும் முற்போக்கு என்ற சொற்களும் அதற்கான இயக்கங்களும் தோன்றின. ஆனால் சங்க காலத்தில் இப்படியான போராட்டங்கள் தேவையாய் இருக்கவில்லை.
ஏன் இருக்கவில்லை? அதிலும் மன்னராட்சியில் மன்னரின் ஆட்சி அதிகாரத்தில் வாழ்ந்திருந்த மக்களுக்கு அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும் போராடவும் ஏன் தோன்றவில்லை? ஏனென்றால் ஆள்பவனுக்கு அடிமையாய் வாழவில்லை மக்கள். ஆள்பவனும் மக்களை அடிமைப்படுத்த நினைக்கவில்லை.
மக்கள் அறநெறியுடன் கூடிய இன்பமான வாழ்க்கை வாழ்வதற்குச் சட்டத்திட்டங்களும் கட்டுப்பாடுகளும் வேண்டும் என்றும், அத்தகைய சட்டத்திட்டங்களை வகுத்து மக்களைக் கண்காணித்து நல்வழியில் நடத்திச் செல்ல உதவி புரிவது அரசாட்சிதான் என்றும் சங்க கால மக்கள் கருதினர்.
நாட்டின் உயிர் அரசாட்சிதான் என்றும், ஒழுங்கான ஆட்சியுள்ள நாடு உயர்ந்து நிற்கும் என்றும், அதுவே நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்தும் என்றும் மக்கள் தீர்க்கமாய் நம்பினர். இன்று ஓங்கி உயர்ந்து நிற்கும் பல நாடுகள் தோன்றியிராத அக்காலத்தில் நம் மக்களின் சிந்தனை இவ்வாறு முற்போக்கானதாய் இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் ஒரு நாடு எப்படி இருந்தால் சிறக்கும் என்று சிந்தித்து ஒரு சமுதாயத்தை உருவாக்கி, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சட்டத்திட்டங்களை வகுத்துத் திறம்பட ஆட்சி செய்தவர்களும், அவ்வாறு ஆட்சி செய்தவர்களை வழி நடத்தியவர்களும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்பேன்.
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு சங்க காலத்தில் அரசர்களும் செங்கோல் ஆட்சி புரிந்தனர். நாட்டு மக்களின் நன்மைக்காகவே உழைத்து வந்தனர். அவ்வாறான மன்னர்களே மக்களின் நன்மதிப்பைப் பெற்று வாழ்ந்தனர். அத்தகைய வேந்தனை நாட்டின் உயிரெனக் கருதினர் மக்கள்.
புறநானூற்றின் 186ஆவது பாடலில்,
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.
நெல்லும் உயிர் இல்லை. நீரும் உயிர் இல்லை. இந்தப் பரந்த உலகம் மன்னனையே உயிராகக் கொண்டது. அதனால்தான் உயிர் என்பதை அறிவது வேல்களுடன் கூடிய படைகளைக் கொண்ட வேந்தனின் கடமை என்கிறார் புலவர் மோசிகீரனார்.
மலர் தலை உலகம் என்றால் என்ன?
மலர்ந்த தலைப்பகுதியை உடைய (பரந்த) உலகம். அதாவது மலர்ந்த பூவின் தலைப் பகுதி எவ்வாறு பரந்து விரிந்திருக்குமோ அவ்வாறு பரந்து விரிந்த உலகம் எனும் பொருளில் இச்சொற்றொடர் புறநானூறு, அகநானூறு, முல்லைப்பாட்டு போன்ற பல்வேறு சங்க இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே
இச்சொற்றொடரில், தானே உயிர் என்று அறிவது வேந்தற்குக் கடமை என்று மட்டும் கூறாமல், ஏன் வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே என்று கூறியிருக்கிறார்?
உயிர் வாழச் சோறு வேண்டும். நீர் வேண்டும். ஆனால் அது மட்டும் உயிர் வாழப் போதுமா? போதாது என்கிறார் புலவர் மோசிகீரனார். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகு’ அதாவது மன்னன்தான் குடிமக்களுக்கு உயிர் என்கிறார். அதெப்படி மன்னன் மக்களின் உயிராக முடியும்?
அறநெறிகளைப் பின்பற்றாத, மக்கள் நலன் பேணாத, வீரமற்ற ஒருவர் நாட்டிற்கு அரசராகிவிட்டால், அதிலும் அண்டை நாடுகளோடு பகையை வளர்த்துக்கொண்டு பாதுகாப்பில்லா நிலைமையை உருவாக்கி வைக்கும் ஆட்சியாளராக அமைந்துவிட்டால், எப்படி மக்கள் நிம்மதியாக வாழ முடியும்? எப்போது என்ன நிகழுமோ என்ற அச்சம் ஆட்டிப்படைத்துக் கொண்டே இருக்கும். அதனால்தான் வெறும் உணவும் நீரும் உயிராகிவிடாது. அந்த உயிர் இறுதிவரை நம் உடம்பில் இருக்க, நாட்டின் உயிராக வெறும் வேந்தன் அல்ல வேல் மிகு தானை வேந்தன் இருக்க வேண்டும் என்கிறார்.
தானைத்தலைவன் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். போர்க் கருவிகளைத் தாங்கி நடந்து சென்று போரிடுகிற வீரர்களை மட்டும் கொண்ட படையே தானைப்படை. தானே செல்லும் படை என்பதனால், தானைப் படை என்று அழைக்கப்பட்டது. அப்படையை வழிநடத்திச் செல்லும் தலைவனையே தானைத்தலைவன் என்றனர்.
அத்தகைய படையினைக் கொண்ட தானை வேந்தன் நாட்டின் உயிராக இருக்கும்போது, நாடும் நாட்டு மக்களும் உயிர் பயமின்றிப் பாதுகாப்புடன் வாழ முடியும் என்ற கருத்தினைக் கொண்டே ‘வேல் மிகு தானை’ வேந்தன் என்று குறிப்பிட்டிருக்கிறார் புலவர் மோசிகீரனார்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தற்போது போர் புரிந்து கொண்டிருக்கும் நாடுகள் கூடத் தோன்றியிராத அக்காலத்தில், நாட்டு மக்களின் உயிர் நாட்டை ஆள்பவனிடத்தில் இருக்கிறது. அதனை உணர்ந்து ஆள்பவன் நடந்துகொள்ள வேண்டுமென்று அன்றைய மன்னராட்சி முதல் இன்றைய மக்களாட்சி வரை எக்காலத்துக்குமாய்ப் பொருந்துகின்ற கருத்தைத் தாங்கியிருக்கிற இச்சங்க இலக்கியப் பாடல் முற்போக்குச் சமூகத்திற்கான பாடலாய் விளங்குகிறது.
அறம் பிறழாது ஆட்சி நடப்பதைப் பறைசாற்றும் விதமாகவும், மன்னர்கள் தங்களுக்குத் தாங்களே நீதியைக் காக்க வேண்டியதன் தார்மிக உரிமையை உணர்த்திக்கொள்ளும் விதமாகவும்தான் சங்க கால மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் செங்கோல் நிறுவப்பட்டது.
அறநெறிக்கு மாறாக நடந்தால் தெய்வ தண்டனைக்கு ஆளாவோம் என்ற நம்பிக்கை அப்பொழுதிருந்த மன்னர்களுக்கு நிரம்பவே இருந்தது. அதனாலேயே அக்கால மன்னர்கள் நீதி தவறி நடக்க அஞ்சினர். தமது உறவினராயினும் நீதி தவறி நடந்தால் கடும் தண்டனை விதித்து அறத்தை நிலைநிறுத்தினர். தாம் செய்வது தவறு, அறத்திற்கு விரோதமானது என்று அறிந்தால் தமக்குத் தாமே கடுந்தண்டனை விதித்துக் கொண்டனர்.
போரின் கொடுமையை உணர்ந்த தமிழ் மன்னர்கள் காரணமின்றிப் போர் புரிய முற்பட்டதில்லை. அநீதியை விரட்டவும், அக்கிரமத்தை ஒழிக்கவும், குடி மக்களைப் பாதுகாக்கவும் அறப்போர் புரிந்தனர். அதிலும் நிராயுதபாணிகள், முதியோர், பெண்கள் மீது போர் தொடுக்காத அறத்தைப் பின்பற்றினர். இவ்வகையாக மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நீதி தவறாமல் செங்கோன்மை ஆட்சி நடத்திய மன்னர்களை இலக்கியங்கள் புகழ்கின்றன.
சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படையில் தொண்டைமான் இளந்திரையனின் ஆட்சியைப் புகழ்ந்து கடியலூர் உருத்திரங்கண்ணனார், ‘அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்’ என்கிறார். அதாவது தீயவற்றைத் தடுத்து அறநெறியில் ஆட்சி புரியும் செங்கோல் உடையவன் என்கிறார்.
கேள், அவன் நிலையே;
கெடுக நின் அவலம்!
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி,
கைப்பொருள் வௌவும்
களவு ஏர் வாழ்க்கைக்
கொடியோர் இன்று,
அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது;
அரவும் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா;
வேட்டு, ஆங்கு, அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி,
சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்!
தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு பாணன், வறுமையில் வாடும் மற்றொரு பாணனிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது.
‘தொண்டைமான் இளந்திரையனின் நல்லாட்சியைப் பற்றிச் சொல்கிறேன் கேள். உன் உள்ளம் ஊக்கமடையட்டும். உன் அவல நிலை ஒழியட்டும். அவனது காவல் நிலத்தில் வழிப்போக்கர்களை அலறும்படி தாக்கி வழிப்பறி செய்யும் திருட்டுக் கூட்டம் இல்லை. ஏனெனில், இளந்திரையனின் காவலர்கள் வழிப்போக்கர்களுக்குத் துணை வருவர். அதற்கான ஆணையைப் பிறப்பித்திருக்கிறான் மன்னன். அவன் ஆட்சியில் உள்ள பகுதியில் இடி தாக்காது. பாம்பு பயம் இல்லை. காட்டு விலங்குகளாலும் துன்பம் இல்லை. எங்கும் தங்கலாம், எங்கும் பாதுகாப்பு. களைப்புத் தோன்றும்போதெல்லாம் விரும்பிய இடங்களில் தங்கலாம். பின்னர் பயணத்தைத் தொடரலாம் என்கிறார் அந்தப் பாணன். இதுவே செங்கோல் செலுத்தும் நல்லாட்சியின் அடையாளம்.’
அவ்வகையில் அரசைச் சார்ந்ததுதான் மக்களின் வாழ்க்கை என்றும், அந்த அரசன் மக்களின் உயிராய் இருக்க வேண்டுமென்றும், அவ்வரசனின் ஆட்சியில் மக்கள் இன்புற்று வாழ வழிவகை செய்ய வேண்டுமென்றும் எக்காலத்திற்குமான சமூகக் கருத்தினை இச்சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிகிறோம்.
(தொடரும்)

