Skip to content
Home » முப்பத்தாறு ரத்தினங்கள் #2 – வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

முப்பத்தாறு ரத்தினங்கள் #2 – வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் முழுமையான பெயர் செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார். திருவண்ணாமலையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். வழக்கு நிமித்தமாக ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை சந்தித்து உரையாடிய அனுபவங்களே அவரை ஓர் எழுத்தாளராக வடிவமைத்தன.

ஆங்கில மொழியில் அவருக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. அவருடைய காலத்தில்தான் ‘கோவில் யானைக்கு எந்த நாமம் சாத்துவது? வடகலை நாமமா? தென்கலை நாமமா?’ என்கிற வழக்கு நீதிமன்றத்துக்கு வந்து நீண்ட காலம் நடைபெற்றது. அந்த விவாதத்தை முன்வைத்து An Elephant’s Creed in Court என்கிற தலைப்பில் முதன்முதலாக ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை எழுதினார் எஸ்.வி.வி. அது ஹிந்து நாளேட்டில் வெளிவந்து அவருக்கு நல்ல புகழைச் சேர்த்தது. அடுத்தடுத்து வெளிவந்த அவருடைய கட்டுரைகளுக்கும் நல்ல வாசக வரவேற்புக் கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற வளாகத்தில் கிடைத்த வழக்கறிஞர் தொழில் அனுபவங்களையும் நாள்தோறும் கண்ணால் கண்டு கடந்துவரும் சிறுசிறு அனுபவங்களையும் வாரம்தோறும் கட்டுரையாக எழுதும் வாய்ப்பு அதே ஹிந்து நாளிதழில் 1926ஆம் ஆண்டில் அவருக்குக் கிடைத்தது. எஸ்.வி.வி.யும் அவ்வாய்ப்பைச் சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொண்டார். அடுத்தடுத்து அவருடைய ஆங்கிலக் கட்டுரைநூல்கள் வெளிவரத் தொடங்கின. மூன்று ஆண்டுகளில் அவர் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக மலர்ந்தார்.

அவருடைய எழுத்தாற்றலைத் தொடர்ச்சியாகக் கவனித்துவந்த கல்கி அவரைத் தமிழில் எழுதும்படி தூண்டினார். அப்போது கல்கி ஆனந்த விகடனில் பணியாற்றிவந்தார். எஸ்.வி.வி. அதை ஏற்கவில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி தள்ளிப்போட்டபடி இருந்தார். அதனால், யானை நாமம் தொடர்பாக எஸ்.வி.வி எழுதிய கட்டுரையை, கல்கியே ’கோவில் யானை’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து ஆனந்த விகடன் இதழில் வெளியிட்டார். அக்கட்டுரைக்கு மாபெரும் வரவேற்புக் கிடைத்தது. அதை நேருக்குநேர் உணர்ந்த பிறகுதான் எஸ்.வி.வி. தமிழில் எழுதும் தன்னம்பிக்கையை அடைந்து எழுதத் தொடங்கினார்.

எஸ்.வி.வி. தம் ஆக்கங்களை சிறுகதை, கட்டுரை என்ற வகைமைக்குள் பொருத்தாமல் வாழ்க்கைச்சித்திரங்கள் என முன்வைக்கப்படுவதையே விரும்பினார். அவருடைய படைப்பில் அழுத்தமான கதையம்சம் என எதுவும் இருப்பதில்லை. எனினும், அவர் தேர்ந்தெடுத்து முன்வைக்கும் பாத்திரத்தைப்பற்றிய சித்தரிப்பு ஒரு சிறுகதைக்கு நிகரானதாக இருந்தது. பாத்திரத்தின் சிந்தனை ஓட்டம், உரையாடல், புலம்பல் எல்லாமே அப்பாத்திரத்துக்குரிய தனித்துவத்துடன் அழகாக அமைந்திருந்தன. எந்தத் தருணத்திலும் அவருடைய நகைச்சுவை அவருடைய கட்டுப்பாட்டை மீறி எழுவதில்லை. உண்மைக்கு முரண்பாடாகவும் அமைந்ததில்லை.

எழுதப்பட்டு எண்பதாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர் தீட்டிவைத்திருக்கும் வாழ்க்கைச்சித்திரங்களை இன்றும் வாசிக்கத்தக்கதாக, உயிரோட்டத்துடன் உள்ளன. தம் இறுதிக்காலம் வரைக்கும் அவர் படைப்புகள் ஹிந்து, ஆனந்த விகடன் இதழ்களில் மட்டுமே வெளிவந்தன. தேவன், துமிலன், நாடோடி என பல எழுத்தாளர்களுக்கும் எஸ்.வி.வி. முன்னோடியாக விளங்கினார்.

‘வாழ்க்கையே வாழ்க்கை’ என்னும் தொகுதி 1956இல் அல்லயன்ஸ் பிரசுரத்தின் வெளியீடாக வெளிவந்தது. அத்தொகுதிக்கு முன்னுரை எழுதிய டி.எம்.கிருஷ்ணஸ்வாமி ஐயர், பொம்மலாட்டத்தையும் ஆற்றின் நீரோட்டத்தையும் வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியடைவதுபோல வாழ்க்கையை வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியடைவதையே பேரின்பம் எனக் கருதும் மனம் எஸ்.வி.வி.க்குக் கைவந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். ’பொங்கலோ பொங்கல்‘ என மகிழ்ச்சியோடு கூவிக் குதூகலிப்பதுபோல ‘வாழ்க்கையே வாழ்க்கை’ என ஒவ்வொரு கணமும் எஸ்.வி.வி.யின் மனம் கூவிக் குதூகலம் அடைவதாகவும் எஸ்.வி.வி.யுடைய படைப்புகளைப் படிக்கும் வாசகர்களும் அத்தகு ஆனந்தத்தில் திளைக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

‘வாழ்க்கையே வாழ்க்கை’ தொகுதியில் 21 வாழ்க்கைச்சித்திரங்கள் அடங்கியுள்ளன. சில குடும்பங்களில் நான்கு சுவர்களுக்கு நடுவில் நடைபெறும் அபூர்வமான அனுபவங்கள் சார்ந்தவையாகவே பெரும்பாலான கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒருசில கட்டுரைகள் மட்டும் புற உலகில் நிகழும் அரிய அனுபவங்கள் சார்ந்தவையாக உள்ளன. படிக்கும்போதே ஒவ்வொரு அனுபவமும் நெஞ்சில் பதிந்துவிடுகிறது.

முதல் சித்திரத்தின் தலைப்பு ‘அம்மாவுக்கு ஜுரம்‘. திருமண வாழ்வில் அடியெடுத்துவைத்திருக்கும் கணவன், மனைவி இருவருக்குமிடையில் துளிர்விட்டிருக்கும் மோகத்தின் ஆற்றல்தான் இச்சித்திரத்தின் மையம். ஆனால் அதை எஸ்.வி.வி. அப்புள்ளியிலிருந்து கட்டுரையை நேரடியாகத் தொடங்கவில்லை. மாறாக, ராமாயணத்தில் சீதையைப் பிரிந்திருந்த காலத்தில் ராமன் அடைந்த துக்கத்தை முதலில் சொல்கிறார். பிறகு, தண்டகாரண்யத்தில் கரனோடும் தூஷணனோடும் போரிட்டு வென்று விழுப்புண்களோடு திரும்பிய ராமனை, சீதை தன் நெஞ்சோடு ஆரத் தழுவிய கணத்தில் ராமனுடைய களைப்பும் வேதனையும் அகன்று ஆனந்தம் பெருகியதைக் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து கோதாவரி நதிக்கரையில் ராமனும் சீதையும் உல்லாசமாக உரையாடி அடைந்த இன்பத்தையும் சொல்கிறார்.

ஒவ்வொன்றும் பத்து பதினைந்து வரிகளுக்குள் அடங்கிவிடக் கூடிய சிறுசிறு குறிப்பாகவே உள்ளது. ஆனால் அவற்றை ஒருங்கிணைத்து வாசிக்கும்போது, அவையனைத்தும் இளம்தம்பதியினரிடையில் உருவாகி, நினைக்கும்தோறும் பெருகும் மோகத்தையும் காதலையும் ஒரு வாசகன் எளிதாக உணர்ந்துகொள்வதற்கு ஏதுவாக எழுதப்பட்டவை என்பதை உணரலாம்.

ராமன், சீதை போன்றோருக்கே இந்த நிலை என்றால் நம் அடுத்த வீட்டில் வசிக்கிற பஞ்சாமி, மங்களம் நிலையும் அப்படித்தானே இருக்கும் என எஸ்.வி.வி. நேரடியாக அந்தக் குடும்பக்காட்சியைத் தொட்டுவிடுகிறார். இருவரும் புதுமணத்தம்பதிகள். அவர்களை மோகத்தீ வாட்டியெடுக்கிறது. ஆனால் அத்தீயைத் தணித்துக்கொள்வதற்கேற்ற தனிமை அவர்களுக்கு அந்த வீட்டில் வாய்ப்பதே இல்லை. அவர்களோடு அவ்வீட்டில் பஞ்சாமியின் அம்மாவும் இருக்கிறார்.

அம்மா நல்ல மனம் கொண்டவர். அதில் சந்தேகமே இல்லை. பஞ்சாமியை வளர்த்து ஆளாக்கியதே அவர்தான். சின்னஞ்சிறிசுகளுக்கு என்ன தெரியும் என்ற எண்ணத்தில் மகனுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் அவரே பார்த்துப் பார்த்துச் செய்வதில் முனைப்பாக இருக்கிறாள். இத்தனை ஆண்டுகளாகச் செய்துவந்த பழக்கத்தின் காரணமாக, அவரே அனைத்தையும் நிர்வகிக்கிறார்.

அக்குடும்பத்தில் மருமகளாக வாழ்க்கைப்பட்டு வந்த மங்களத்துக்கு ஒரு வேலையையும் செய்ய வாய்ப்பில்லாமல் போகிறது. குளிப்பதற்கு வெந்நீர் எடுத்துவைப்பது முதல் சாப்பாடு பரிமாறுவதுவரை எல்லாவற்றையும் அம்மாவே பஞ்சாமிக்குச் செய்கிறார். ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு மங்களம் தன் முன்னால் வந்து நடமாட வேண்டும் என எதிர்பார்க்கிறான் பஞ்சாமி. ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. அது அவன் நெஞ்சை வாட்டுகிறது. அதே சமயத்தில் தன் விருப்பத்தைத் தன் அம்மா உணர்ந்துகொண்டால் தன்னை அம்மா பிழையாகக் கருதிவிடுவாளோ என்கிற அச்சமும் வாட்டுகிறது. ஒருபக்கம் மோகம், மறுபக்கம் அச்சம். இரண்டுக்கும் இடையில் திண்டாடுகிறான் பஞ்சாமி. இப்படியே ஐந்தாறு மாதங்கள் கடந்துவிடுகின்றன.

ஒருநாள் இரவு வழக்கம்போல வீட்டுக்குத் திரும்பி வருகிறான் பஞ்சாமி. வழக்கத்துக்கு மாறாக அன்று அவன் அம்மா கம்பளியைப் போர்த்திக்கொண்டு கூடத்தில் காய்ச்சலோடு படுத்திருக்கிறாள். உடம்புக்கு என்ன என்றும் மருந்து ஏதேனும் வேண்டுமா என்றும் அம்மாவிடம் ஆதரவோடு விசாரிக்கிறான் பஞ்சாமி. மருந்து எதுவும் தேவையில்லை என்றும் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்றும் பதில் சொல்கிறார் அம்மா. எழுந்து நிற்கவே தனக்குத் தெம்பில்லை என்றும் மங்களத்தைச் சாப்பாடு பரிமாறச் சொல்லிச் சாப்பிடுமாறும் தெரிவிக்கிறாள்.

அதைக் கேட்டதும் உள்ளூர மகிழ்ச்சியடைகிறான் பஞ்சாமி. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கைகால்களைத் தூய்மை செய்துகொண்டு வேகமாகச் சமையலறைக்குள் செல்கிறான். கிடைத்த தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு முதலில் இருவரும் தழுவி முத்தமிட்டுக் கொள்கிறார்கள். மங்களம் அவனுக்கு சாப்பாடு பரிமாற இலையை எடுக்கிறாள். பஞ்சாமி அவள் கையைப் பிடித்துத் தடுக்கிறான். அவளையே பிசைந்து உருண்டையாகப் பிடித்து கொடுக்கும்படி கேட்கிறான். அம்மாவை நினைத்து பின்வாங்குகிறாள் மங்களம். எழுந்து நிற்கவே முடியாத அவர் சமையலறைக்கு எப்படி வருவார் என முணுமுணுக்கும் பஞ்சாமி உருட்டிக் கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவேன் என பிடிவாதம் பிடிக்கிறான். மங்களத்துக்கும் அதில் உள்ளூர விருப்பமிருப்பதால், மகிழ்ச்சியோடு ஒவ்வொரு உருண்டையாக உருட்டி உருட்டி அவனுக்கு ஊட்டிவிடுகிறாள்.

இப்படியே விளையாட்டும் சிரிப்புமாக பொழுது போகிறது. வெளியில் படுத்துக் கிடந்த அம்மாவுக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. தன் மகனுக்கு மருமகள் சரியாக சாப்பாடு போடுகிறாளோ இல்லையோ என தவித்துக் குழம்புகிறாள். அதை உறுதி செய்துகொள்ள படுக்கையிலிருந்து தட்டுத்தடுமாறி எழுந்து சமையலறையை நோக்கி நடக்கிறாள். அம்மாவின் காலடியோசையை உணர்ந்த மங்களம் ‘அம்மா வருகிற மாதிரி இருக்கிறதே, என்ன செய்வது?‘ என குழம்புகிறாள். இன்னும் ஒரு கணத்தில் அறைக்கதவுக்கு அருகில் அம்மா வந்துவிடக்கூடும் என்கிற தருணத்தில், அறைக்குள் அதுவரை எரிந்துகொண்டிருந்த விளக்கைச் சட்டென ஊதி அணைத்துவிடுகிறாள் மங்களம். எங்கெங்கும் இருள் சூழ்கிறது. வாசலுக்கு வந்து நின்ற அம்மாவின் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.

‘ஏன் அறை இருட்டாக இருக்கிறது?’ என்று கேட்கிறார் அம்மா. ‘இதுவரை எரிந்துகொண்டுதான் இருந்தது. இப்போதுதான் காற்றில் அணைந்துவிட்டது‘ என்று சொல்லிச் சமாளிக்கிறான் பஞ்சாமி. ‘சரி சரி, சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு கதவை மூடிக்கொண்டு வா‘ என்று சொல்லிவிட்டு தன் படுக்கை இருந்த இடத்துக்குத் திரும்புகிறார் அம்மா. அடுத்து, அடுத்து என நிகழும் காட்சிமாற்றம் ஒரு திரைக்கதைக்கு நிகரானதாக உள்ளது.

பஞ்சாமி – மங்களம் தம்பதியினரின் மகிழ்ச்சி, எதிர்பாராமல் வெளிப்பட்ட அச்சொற்களிடையில் பரவியிருப்பதாகத் தோன்றுகிறது. மங்களத்திடம் இயல்பான வேகத்தோடு எழுந்து வெளிப்பட்ட அச்சொற்கள் அருமையான ஓர் உச்சம். அவர்களுடைய ஆனந்தமான வாழ்க்கைக்கு அந்தக் கணம்தான் தொடக்கப்புள்ளி. எஸ்.வி.வி.யின் எழுத்தாளுமை முழுமையான அளவில் இச்சித்திரத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

இத்தொகுதியில் ‘சமையற்காரன்’ என்னும் தலைப்பில் எஸ்.வி.வி. தீட்டியிருக்கும் சித்திரமும் மிகமுக்கியமானது. இருவேறு தேடல்களைக் கொண்டவர்கள் ஒரு தருணத்தில் சந்தித்து உரையாடும்போது உருவாகும் சங்கடங்களைப் படம்பிடிக்கும் சித்திரம் அது.

ஒருநாள் வானொலியில் வீணை தனம்மாளின் கச்சேரி ஒலிபரப்பாகவுள்ள செய்தி கிடைக்கிறது. அவருடைய வீணைக்கச்சேரிக்காக காத தூரம் நடந்துசெல்லக்கூட தயாராக இருக்கும் ஒரு ரசிகருக்கு அச்செய்தி தேனாக இனிக்கிறது. ஆனால் அவருடைய வீட்டில் வானொலிப்பெட்டி இல்லை. அதனால் நகராட்சிப் பூங்காவுக்கு வருகிறார். பொதுமக்கள் கேட்டு ரசிப்பதற்காக அங்கு அதிக திறன் கொண்ட வானொலிப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பெட்டி வைக்கப்பட்டிருக்கும் மாடத்துக்கு அருகிலேயே உட்கார்ந்தால், அங்கு கூச்சலிட்டு விளையாடும் சிறார்களின் ஆரவாரங்களுக்கிடையில் கச்சேரியை ரசிக்கமுடியாது என்கிற காரணத்தால் வெகுதொலைவு தள்ளி அமைதியான ஓரிடத்தில் ஒரு சிமெண்ட் பெஞ்ச்சில் அமர்கிறார் அவர்.

சிறிது நேரத்திலேயே வீணைக்கச்சேரி தொடங்கிவிடுகிறது. அருவியென பொழியும் இசையில் அவர் மனம் தோய்ந்து திளைக்கத் தொடங்குகிறது. அவர் விழிகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. அந்த ஆனந்த உலகத்தில் அவரும் இசையும் மட்டுமே இருக்கின்றனர்.

எதிர்பாராத விதமாக, அந்தப் பக்கமாக அவருடைய பழைய நண்பரொருவர் வருகிறார். நிழலின் சுகத்தில் அவர் கண்மூடி உறக்கத்தில் மூழ்கியிருப்பதாக அவர் நினைத்துக்கொள்கிறார். ‘என்ன நல்ல தூக்கமா? ‘ என்று விசாரித்தபடி அவரைத் தொட்டு எழுப்புகிறார். தொலைவிலிருந்து ஒலிக்கும் இசையை அவர் பொருட்படுத்தவே இல்லை. இசை பற்றிய ஞானம் அவரிடம் இருப்பதற்கான அடையாளமே அவரிடம் இல்லை. சிறிது நேரம் காற்றாட நின்று உரையாடி தன் மனபாரத்தைக் குறைத்துக்கொள்ளும் முனைப்பில் அந்த நண்பர் நிற்கிறார். அவரை நிராசைக்கு ஆளாக்கிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில், இசையை ஒதுக்கிவைத்துவிட்டு அவருடைய கஷ்டங்களையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கிறார் வீணை ரசிகர்.

அவர் கொண்ட கருணையே அவருக்கு எதிராகத் திரும்பிவிடுகிறது. வீட்டுக்கஷ்டங்கள், மனைவியால் ஏற்படும் துன்பங்கள் என ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போகிறார் அந்த நண்பர். அவர் சொல்லி முடிப்பதற்குள் அதுவரை வானொலியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த அந்த வீணைக்கச்சேரியே முடிவடைந்துவிடுகிறது. கடைசியாக திறமைமிக்க ஒரு சமையல்காரனைத் தமக்குப் பரிந்துரைக்கும்படி ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார் நண்பர். அன்று முழுதும் அந்தத் தேடலோடுதான் ஊரெல்லாம் அலைந்ததாகச் சொல்கிறார். ரசிகரும் அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தனக்குத் தெரிந்த இடங்களில் விசாரித்துப் பார்த்துவிட்டுச் சொல்வதாகத் தன் நண்பரை அமைதிப்படுத்தி அனுப்பிவைக்கிறார்.

தாட்சண்யத்தின் காரணமாக, நண்பர் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டதன் விளைவாக, ஒரு ரசிகரால் வீணைக்கச்சேரியை மனம் லயித்துக் கேட்கமுடியாமல் போய்விடுகிறது. நல்லதொரு வாய்ப்பு அவரைத் தேடிவந்த போதும் கூட, அவரால் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தவிர்க்கமுடியாத ஒரு தர்மசங்கடம் எவ்விதமான அனுபவத்தை வழங்கும் என்பதற்கு இச்சித்திரம் மிகப்பெரியதொரு எடுத்துக்காட்டு.

பொதுவாக, 53 வயது என்பது மரணத்துக்குரிய வயதில்லை. ஆனாலும் துரதிருஷ்டவசமாக ஒருவர் ஒருநாள் அதிகாலையில் இறந்துவிடுகிறார். தம் வீட்டு வாசலில் கோலம் போட வந்த இரண்டு பெண்கள், அவருடைய மரணச்செய்தியை முன்னிட்டு தமக்குள் நிகழ்த்தும் உரையாடலை ’ஹும், அவ்வளவுதான்’ என்னும் கட்டுரையில் அழகானதொரு சித்திரமாகத் தீட்டியிருக்கிறார் எஸ்.வி.வி. அவருடைய எழுத்தாளுமைக்கு இக்கட்டுரை சிறந்ததொரு எடுத்துக்காட்டு. ஒவ்வொருவரும் உரையாடல்கள் வழியாகவே இறந்துபோனவரின் குடும்பச்செய்திகள் அனைத்தையும் அடுக்கிவைக்கிறார்கள்.

இறந்துபோனவரின் மனைவி இனி எப்படி இருக்கப் போகிறாளோ என்கிற பரிதாபத்தின் அடிப்படையில்தான் அந்த உரையாடல் தொடங்குகிறது. அவருக்கு இரண்டு மகன்கள். இரண்டு மகள்கள். யாருடைய பொறுப்பில் அவளுடைய எதிர்காலம் அமையப்போகிறது என்று அவர்களாகவே ஊகங்களின் அடிப்படையில் பேசுகிறார்கள்.

சாவு வீட்டை நோக்கி தெருக்காரர்களும் ஊர்க்காரர்களும் ஒவ்வொருவராக வருகிறார்கள். வெளியூர்களில் வசிக்கும் உறவினர்களும் வந்து சேர்கிறார்கள். எல்லோரும் தமக்குள் மாற்றிமாற்றி உரையாடிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு உரையாடல் வழியாகவும் ஒரு புதிய செய்தி முன்வைக்கப்படுகிறது. அந்தக் குடும்பச்சூழல் பற்றிய எல்லா விவரங்களும் அந்த உரையாடல்கள் வழியாகக் கிடைத்துவிடுகின்றன.

ஒருபக்கம் இப்படிப் பல்வேறு உரையாடல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே, மறுபக்கத்தில் சுடுகாட்டுக்கு உடலை எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் ஒவ்வொன்றாக நடைபெறுகின்றன. மந்திரங்கள் முணுமுணுக்கப்படுகின்றன. அவசரகதியில் ஏதேதோ சடங்குகளும் நடைபெறுகின்றன.

ஒருவழியாக, உடல் பாடையில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. காட்டுக்குச் செல்ல நினைத்தவர்கள் அமைதியாக பாடையைத் தொடர்ந்து செல்கிறார்கள். சாவுவீட்டைச் சுற்றி நின்றிருந்தவர்கள் ஒரு பெருமூச்சோடு வேறு வேலையைப் பார்க்கச் செல்கிறார்கள்.

அதுவரை இறந்துபோனவரைப் பற்றியும் மரணத்தைப்பற்றியும் தத்துவார்த்தமாகப் பேசிக்கொண்டிருந்த ஒரு பெரியவர், சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவர்போல தனக்கு அருகில் நிற்பவரிடம் ‘உங்கள் பசு கன்று போட்டுவிட்டதா? ‘ என்று கேட்கிறார். சட்டென உரையாடல் முற்றிலும் புதிய திசையில் திரும்பிவிடுகிறது.

ஒரு மரணவீட்டின் புறச்சூழலைப்பற்றிய சித்திரத்தை எஸ்.வி.வி. துல்லியமாகவே தீட்டியிருக்கிறார். இக்கட்டுரை பல நுண்தகவல்களால் நிறைந்திருக்கிறது. மரணத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த மரணம் ஒரு பேரிழப்பாக இருப்பதையும், பிறருக்கு அது ஒரு பேசுபொருளாக மட்டும் இருப்பதையும் தம் மொழியாளுமையால் உணர்த்திவிடுகிறார் எஸ்.வி.வி.

முழு தொகுதியையும் படித்துமுடித்த பிறகு, ஒவ்வொரு காட்சியையும் மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி, ஆற அமர அசைபோடும்போது, தம் கட்டுரைகளில் காட்சி விவரணைகள் மீது எஸ்.வி.வி. பின்பற்றும் எல்லைமீறாத கட்டுப்பாட்டையும் ஒன்றை மட்டும் சொல்லி பிறவற்றை மெளனமாகக் கடந்துபோகும் நுட்பத்தையும் மீண்டும் மீண்டும் நினைத்துப்பார்க்கத் தோன்றுகிறது. அவையே எஸ்.வி.வி.யுடைய எழுத்தாக்கத்தின் வெற்றிக்குக் காரணங்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *