ஜார்ஜ் ஆர்.ஆர் மார்டின் எழுதிய A song of Ice and Fire புத்தகம் உலகப் பிரசித்திப் பெற்றது. அதைத் தழுவி எடுக்கப்பட்ட Game of Thrones தொடர் பட்டித்தொட்டியொங்கும் வெற்றி அடைந்தது. அதன் உற்சாகத்தில் அவர் எழுதிய பிற கதைகளும் இணையத் தொடர்களாகத் தழுவப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றாக House of the Dragon என்ற தொடர் எடுக்கப்பட்டு ஏற்கெனவே இரண்டு சீசன்கள் வெளியாகிவிட்ட நிலையில், தற்போது அவரது The Hedge Knight என்கிற புத்தகம் ‘A Knight of the Seven Kingdoms’ என்கிற பெயரில் வெளியாகியுள்ளது.
ஜார்ஜ் மார்டினின் கதைகள் மத்தியக் காலகட்ட ஐரோப்பாவில் நடைபெறுபவை. பெரும்பாலும் உண்மையான வரலாற்றையும் அதில் கொஞ்சம் மாயாஜாலங்களையும் கலந்து புனையப்பட்டவை. இதனால் உண்மையான வரலாற்றில் இருப்பதுபோலவே அரசர்கள், அரச குலங்கள், அவர்களுக்கான விதிகள், பழக்கவழக்கங்கள், படிநிலைகள் எல்லாமும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மற்ற மாயாஜாலக் கதைகள்போல் குழந்தைகளை ஈர்க்கும் விதத்தில் இல்லாமல், ரத்தமும் சதையுமாக மத்தியக் காலகட்டத்தின் குரூரங்கள் இடம்பெற்றிருக்கும். நாம் பின் தொடரும் கதாபாத்திரங்கள் எப்போது உயர்வார்கள், எப்போது மடிவார்கள் என்றே கணிக்க முடியாது. கதாநாயகனுக்குக்கூட அந்தக் கற்பனை உலகில் பாதுகாப்பு கிடையாது. இதனால்தான் ஜார்ஜ் மார்டினின் கதைகள் யதார்த்தத்தின் வடிவமாகப் பெரும் வாசகப் பரப்பைப் பெற்றுள்ளன.
இப்போது நம் கதைக்கு வருவோம். மத்தியக் காலகட்ட உலகில் மாவீரர்கள் (Knights) என்கிற ஒரு பிரிவினர் உண்டு. இவர்கள் சாதாரண வீரர்கள் கிடையாது. உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள். அரசன், அரசிக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். இவர்களுக்கான அந்தஸ்தை அரசனோ, சக மாவீரனோதான் வழங்க முடியும். இந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு அவர்கள் கடும் போர்த்திறனைப் பெற்றிருக்க வேண்டும். அதைவிட முக்கியம் ஒரு மாவீரன் சாமானியர்களைப் பாதுகாப்பவனாக இருக்க வேண்டும். இது அவர்களுக்கு வகுக்கப்பட்ட கடமை. ஆனால் நிஜ உலகில் காவலர்கள் எப்படிச் சாமானியர்களைக் காப்பதைவிடச் சுரண்டுபவர்களாக இருக்கிறார்களோ, கதை உலகிலும் பெரும்பாலான மாவீரர்கள் சாமானிய மக்களை வதைப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.
பொதுவாக இந்த மாவீரர்கள் ஏதாவது ஓர் அரசருக்குக் கீழ் வேலை செய்பவார்களாக இருப்பார்கள். அரசரின் மெய்க்காப்பாளராகவோ, ஏதாவது ஒரு பிரிவுக்குத் தளபதியாகவோ இருப்பார்கள். சிலர் சிற்றரசர்களாகவும் திகழ்வார்கள். ஆனால் சில மாவீரர்கள் எந்தப் பதவியிலும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்பவர்கள். இவர்களை Hedge Knight என்று அழைப்பது வழக்கம். இவர்கள் யாருக்குக் கீழேயும் பணியாற்றுவதில்லை. பணம் வேண்டும்பட்சத்தில் யார் கூலி தருகிறார்களோ அவர்களுக்காகச் சண்டையிடுவார்கள். சண்டை முடிந்தவுடன் கிளம்பிவிடுவார்கள். இதுதான் இவர்கள் வேலை. இப்படி ஒரு மாவீரன் பற்றிய கதைதான் இந்தத் தொடர்.
டங்கன் என்பது கதாநாயகனின் பெயர். இவன் தான்தோன்றியாகச் சுற்றும் வயதான மாவீரர் ஒருவருக்கு எடுபிடியாகப் பணியாற்றுகிறான். அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதும், அவர் பயணிக்கும்போது குதிரைகளைப் பராமரிப்பதும்தான் டங்கனின் வேலை. ஒருநாள் திடீரென டங்கனின் எஜமானர் இறந்துவிடுகிறார். அடுத்தது என்ன செய்வது என்றே தெரியாத நிலை. எடுபிடிக்கே லாயக்கு இல்லாதவன் என்று எஜமானரால் அறியப்படுபவன் டங்கன். இதனால் தனக்கு யாரும் வேலை தருவார்களா என்றுகூட அவனுக்குத் தெரியாது. இருந்தாலும் துணிச்சலாக ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கிறான் டங்கன். தன் எஜமானரைப் புதைத்துவிட்டு அவருடைய கவச உடைகளை அணிந்துகொண்டு தான் ஒரு மாவீரன் என்கிற போர்வையில் பயணிக்க ஆரம்பிக்கிறான்.
ஆனால் தன்னுடைய எஜமானர்போல் இலக்கில்லாமல் சுற்றுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு மரியாதையான பதவியில் அமர்ந்து அத்தனை சுகபோகங்களையும் அனுபவித்து ராஜபோக வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அவனது விருப்பம். இதனால் ஏதாவது ஓர் அரசரின் காவல்படையில் சேர்ந்துவிடுவது என்கிற விருப்பத்துடன் பயணிக்கிறான். ஆனால் அதற்குத் தான் ஒரு தகுதியான வீரன் என நிரூபிக்க வேண்டும் அல்லவா? என்ன செய்வது?
அவன் பயணிக்கும் வழியில் ஒரு நகரில் மாவீரர்களுக்கான போட்டி ஒன்று நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டி அந்த ராஜ்ஜியங்களின் மாமன்னன் ஏதாவது ஒரு பகுதிக்கு விஜயம் செய்யும்போது அவனை மகிழ்விக்க நடத்தப்படும் போட்டி. அதில் கலந்துகொண்டு வெல்பவர்களுக்கு ஏராளமான பரிசுகளும் புகழும் நிச்சயம். இதற்காகவே அதில் கலந்துகொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சிற்றரசர்களும் மாவீரர்களும் கூடுவர். அப்படி ஒருபோட்டிதான் நடைபெற இருக்கிறது. ஆனால் அது ஏதோ விளையாட்டுத்தனமான போட்டி கிடையாது. குதிரையில் அமர்ந்தபடி ஈட்டியைப் பிடித்துக்கொண்டு எதிரில் வரும் வீரனுடன் போர் புரிய வேண்டும். வென்றால் புகழ், தோற்றால் மரணம். தோல்வியை ஒப்புக்கொண்டால் அவமானத்துடன் உயிர் தப்பலாம். இதுதான் விதி.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுக்கிறான் டங்கன். அவன் அந்நகரத்திற்கு வரும் வழியில் எக் எனப்படும் சிறுவனையும் ஒரு விடுதியில் சந்திக்கிறான். மொட்டைத் தலையுடன் துறுதுறுவென இருக்கும் அந்தச் சிறுவன் டங்கனுக்கு எடுபிடியாக வர விருப்பம் தெரிவிக்கிறான். ஒரு மாவீரன் என்றால் எடுபிடி வைத்திருந்தால்தான் நம்புவார்கள் எனக் கருதி அவனையும் அழைத்துச் செல்லச் சம்மதிக்கிறான் டங்கன். இருவரும் சேர்ந்து போட்டியில் கலந்துகொண்டார்களா? வெற்றி பெற்றார்களா என்பதுதான் இத்தொடரின் கதை.
0
எந்த ஒரு கதையும் அதுகூற வரும் நீதியைப் பொறுத்தே உயிர்பெறுகிறது. இந்தக் கதையிலும் ஒரு சம்பவம் வருகிறது. டங்கன் போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்ய முயற்சிக்கிறான். ஆனால் அவன் முறையான மாவீரன் கிடையாது என்பதால் யாருக்கும் தெரியவில்லை. வேறு ஒரு மாவீரனோ சிற்றரசனோ சிபாரிசு செய்தால் வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள் அதிகாரிகள். இதனால் அங்கு முகாமிட்டுள்ள சிற்றரசர்கள் ஒவ்வொருவரின் சிபாரிசையும் வேண்டிச் சுற்றிக்கொண்டிருக்கிறான் டங்கன்.
அப்போது அந்நகரத்துக்கு அந்த ராஜ்ஜியங்களை எல்லாம் ஆளும் அரச குடும்பம் வருகிறது. அந்த அரசக் குடும்பம் டார்கேரியன் எனப்படும் வம்சத்தைச் சேர்ந்தது. டிராகன்கள்தான் அவர்கள் அடையாளம். அந்த ராஜ்ஜியத்தில் உள்ள எல்லாக் குலங்களும் எதிர்க்க அஞ்சும் சக்திவாய்ந்த வம்சம். அரசருடன் அவரது மகன்களும் வருகின்றனர். எல்லோரும் பார்த்து வியக்கும் இளவரசர்கள் அவர்கள்.
மாலையில் வீதியில் உலா வரும்போது அந்த இளவரசர்களில் ஒருவன், அங்கே கூத்துக்கலை நிகழ்த்தும் பெண் ஒருத்தியைக் காயப்படுத்த முயற்சிக்கிறான். எதேச்சையாக அந்த இடத்திற்கு டங்கன், அவனை அடித்து வீழ்த்திவிடுகிறான். சுற்றுமுற்றும் உள்ள எல்லோரும் பதறிவிடுகிறார்கள். நீ கைவைத்தது யார் தெரியுமா என்று வசனம் பேசுகிறார்கள். ஆனால் டங்கனோ ஒரு சாமானியர் துன்பப்படும்போது அவர்களுக்கு உதவுவதுதான் மாவீரனின் கடமை எனக் கூறுகிறான். விஷயம் அரசரின் காதுகளை எட்டுகிறது. அரசனோ தன் மகனைத் தாக்கியதற்காக டங்கனைப் போட்டியில் கலந்துகொள்ள அழைக்கிறான். ஆனால் அவனுக்கு எதிராக ஒருவருக்குப் பதில் ஏழு வீரர்கள் மோதுவார்கள் என்கிறான். அதுவும் அரசரின் மெய்க்காப்பாளர் படையைச் சேர்ந்த போர்ப்பயிற்சி பெற்றவர்கள். வெல்லவே முடியாத சூரர்கள். வேண்டுமென்றால் நீயும் உனக்காகப் போர்புரிய ஏழு பேரை அழைத்துக்கொள் என்கிறான் அரசன். நிலைமை சிக்கலாகிறது. டங்கனோ உண்மையில் வீரன் கிடையாது. அத்துடன் அவனுக்கு சிபாரிசு செய்யவே ஆள் கிடையாது எனும்பொழுது அவனுக்காகச் சண்டையிட யாரும் முன்வருவார்களா? அதுவும் எல்லோரும் அஞ்சும் டார்கேரியன்களை எதிர்த்து?
ஆனால் வருகிறார்கள். டங்கன் சாமானிய பெண்ணைக் காப்பாற்றிய செய்தி நகரம் முழுவதும் பரவ, அங்கு முகாமிட்டிருந்த சில சிற்றரசர்கள் அவனுக்காகச் சண்டையிடத் துணிகிறார்கள். சில பயிற்சி பெறும் மாவீரர்களும் டங்கனுக்கு ஆதரவாக வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அரசனின் தம்பியே டங்கனுடன் இணைந்து போரிடக் களத்தில் இறங்குகிறான். அரசனுக்குப் பிறகு நாட்டை ஆள்வதற்காக முடிசூட்டி இருக்கும் வீரன் அவன். அசகாய சூரன். சாமானியர்களைப் பாதுகாப்பது என்கிற மாவீரர்களின் கடமையை செய்யத் தவறிய தன் அண்ணனின் மகனுக்கு ஆதரவு தருவதைவிட, தன் உயிரையும் துச்சமாக மதித்து சாமானியர்களைக் காத்த டங்கனுக்காகப் போரிடுவேன் என்கிறான் அவன்.
போர் தொடங்குகிறது. கடும் சண்டை நடைபெறுகிறது. டங்கன் அணியில் ஓரிரு வீரர்கள் இறக்கிறார்கள். எதிரில் அரசனே தன் மகனுக்காகப் போரிடுகிறான். அரசனின் மகனும் டங்கனும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். ஒருகட்டத்தில் அரசனின் மகன் குதிரையிலிருந்து கீழே விழ, அவன் மேல் பாயும் டங்கன் சரமாரியாக அவனைத் தாக்குகிறான். இதில் அரசனின் மகன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு உயிர்ப் பிச்சைக் கேட்கிறான். போட்டி முடிவுக்கு வருகிறது. டங்கன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் டங்கனுக்கு ஆதரவாகச் சண்டையிட்ட அரசனின் தம்பி இறந்துவிடுகிறான். இது அரசனை நிலைகுலையச் செய்கிறது. தம்பியைப் பறிகொடுத்த துக்கத்தில் நாடு திரும்ப விரும்புகிறான் அரசன். ஆனால் திரும்புவதற்கு முன் டங்கன் விரும்பியபடியே அரச மெய்க்காப்பாளர் படையில் அவனுக்கு ஒரு பதவியைத் தரப்போவதாகக் கூறுகிறான். ஆனால் டங்கனோ அந்தப் பதவி வேண்டாம் என மறுக்கிறான். தான் ராஜ்ஜியம் முழுவதும் பயணித்து சாமானியர்களுக்கு உதவப்போவதாகக் கூறிக்கொண்டு நகர்கிறான்.
இங்கே இன்னொரு விஷயமும் தெரிய வருகிறது. டங்கனுக்கு உதவியாக எடுபிடி சிறுவன் ஒருவன் இருந்தான் இல்லையா? அவன் வேறு யாருமல்ல. அரசரின் கடைசி மகன். அரச வாரிசாக இருப்பதாலேயே சுதந்திரம் இல்லாததாய் உணர்ந்து யாருக்கும் தெரியாமல் ஓடி வந்தவன். ஒருகட்டத்தில் டங்கனுக்கு உண்மை தெரிந்து அவனை எடுபிடியாய் சேர்த்துக்கொள்ள அஞ்சுகிறான். ஆனால் அரசரே முன் வந்து தன் மகனுக்குப் பயிற்சி அளிக்குமாறு கூற, தன்னுடைய பயணத்துக்கு அவனையும் அழைத்துச் செல்கிறான். அத்துடன் தொடர் நிறைவுறுகிறது.
ஒரு நல்ல கதை கோரும் முக்கிய அம்சம் முரண்பாடு என்கிறார்கள் கதை ஆசிரியர்கள். மாவீரனுக்கு உள்ள எந்தத் தகுதியும் இல்லாத ஓர் எடுபிடி சாமானியப் பெண்ணுக்காக இளவரசனை எதிர்த்துப் போர்புரிகிறான் என்பது ஒரு முரண்பாடு இல்லையா? அதேபோல மன்னரின் கடைசி மகன் தன் அதிகாரத்தைத் துறந்து டங்கனுக்கு எடுபிடியாகப் பணியாற்றுகிறான். இது ஒரு முரண்பாடு. அதேபோல ராஜ்ஜியத்தின் பல அரசர்கள் ஒரு சாமானியனுக்காகப் போர் புரிய முன் வருகிறார்கள். இது ஒரு முரண்பாடு. இறுதியில் எந்தப் பதவிக்காகப் போட்டியில் கலந்துகொள்ள டங்கன் விரும்பினானோ, போட்டியில் வென்றவுடன் அந்தப் பதவியே வேண்டாம் என்று முடிவுக்கு வருவது ஒரு முரண்பாடு. இந்த முரண்பாடே வாசகர்களைக் கதையில் பிணைத்து வைக்கும். இதைக் கச்சிதமாகப் புரிந்து வைத்திருப்பதாலேயே மார்டினின் கதைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுகின்றன.
0

