மரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்பதாலேயே ஏற்கவும் முடிந்ததில்லை.
உண்மையை ஏற்கிறேன். யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறேன். உயிருள்ள ஓருடல் உயிரற்றதாக மாறுவதென்றால் என்ன என்பதற்கு அறிவியல் அளிக்கும் விளக்கம் புரிகிறது. தத்துவத்தின் ஒளியில் மரணத்தை வாசிக்கும்போது, ‘இவ்வளவுதானா! இதற்காகவா அஞ்சுகிறார்கள்! இதற்காகவா கலங்குகிறார்கள்! இவ்வளவு வெளிப்படையாகவும் இவ்வளவு எளிமையாகவும் நிகழும் இதுவா கடினமானது?’ என்றுதான் தோன்றும்.
இன்ப, துன்பங்களை நடுநிலையோடு ஏற்றுக்கொள்; கலக்கத்தின் நிழல்கூட உன்னைத் தீண்டாது என்று தோளில் கைபோட்டு ஆற்றுப்படுத்தும் உறுதிப்பாட்டு வாதம் (Stoicism) ஒரு கோட்பாடாக என்னைக் கவர்கிறது என்றாலும் நெருங்கிய ஒருவரின் மரணம் நிகழும் ஒவ்வொருமுறையும் வாசித்தறிந்த எல்லா உண்மைகளும் கூடாரத்தைக் காலி செய்துகொண்டு வெளியேறுவதையே மீண்டும், மீண்டும் காண்கிறேன்.
என்னுடையது என்று எதுவுமில்லை. எல்லாமே இரவலாக வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட அனைத்தும் திரும்பப்பெறப்படும் என்று செனக்கா எழுதும்போது, ஆம், உண்மை என்று ஏற்கமுடிவதைப்போல் அரவிந்தன் மறைந்துவிட்டார் எனும் செய்தியை என்னால் கடக்க முடியவில்லை. தெரிந்தவர்களிடம் மீண்டும், மீண்டும் உறுதி செய்துகொண்ட பிறகும் பட்டவர்த்தனமாக ஒரு யானைபோல் என் முன்னால் எழுந்தருளி, கழுத்திலுள்ள வெங்கல மணியையையும் அசைத்து சத்தமெழுப்பும்போதும் என் அறைக்குள் யானையெல்லாம் வருவதற்கு வாய்ப்பே இல்லை; எதற்கும் இன்னொருமுறை கண்ணைக் கசக்கிக்கொண்டு பார் என்றே என் மனம் வேண்டிக்கொள்கிறது.
0
ஒருமுறை அக்கு வேறு, ஆணி வேறாகத் திட்டமிட்டு இருவரும் இணைந்து நாகர்கோவிலுக்குச் செல்ல தீர்மானித்தோம். வெவ்வேறு கோச்சுகளில் இடம் கிடைத்திருந்தது. எழும்பூரில் ஒரே நடைமேடையில், ஒரே நேரத்தில் அருகருகில் நாகர்கோவில் வண்டியும் கன்னியாகுமரி வண்டியும் வந்து நின்றபோது அரவிந்தன் சரியான வண்டியிலும் நான் அவருடன் போன் பேசிக்கொண்டே வேறொரு வண்டியிலும் சென்று அமர்ந்தேன். பரிசோதகர் வந்ததும் சொல்லி இடம் மாற்றிக்கொள்ளலாம். அதுவரை அங்கேயே இருங்கள் என்பது அவர் உத்தரவு. அவருக்கும் சேர்த்து இட்லி கட்டிக்கொண்டு வந்திருந்தேன். வண்டி கிளம்பினதே தெரியலே இல்லை என்று அவர் சொன்னபோது நான் சிரித்து, கிளம்பினால்தானே தெரியும் என்றதும் என்ன சொல்றீங்க, கிளம்பிடுச்சே என்று அவர் பதறிய சத்தம் நாகர்கோவிலுக்கே கேட்டிருக்கும். அவர் மட்டும் ஊர் போய் சேர்ந்த பிறகும் ஒருவாரம் இந்தத் துக்கக்கதையை நாங்களிருவரும் பேசித் தீர்த்தோம் என்றாலும் இறுதிவரை என் ஐயத்தை அவர் தீர்க்கவேயில்லை. உண்மையைச் சொல்லுங்கள். நான் வரவில்லை என்று வருந்துகிறீர்களா அல்லது இட்லி வரவில்லை என்றா? இரண்டாவது முறை, மகளையும் இணைத்துக்கொண்டு மூவராகச் சென்றபோது அவர் முகம் மலர்ந்தது. அப்போதும் சண்டையிட்டேன். நான் வந்ததற்கு இந்த மலர்ச்சியா அல்லது மறக்காமல் இட்லி கொண்டுவந்ததற்கா? பெரிதாகச் சிரிக்க மட்டும் செய்தார். அது இரவலாக வழங்கப்பட்ட சிரிப்பு. மறைந்தே தீரும் என்பார் செனக்கா.
அது, இது என்று வாய் ஓயாமல் பேசிக்கொண்டே எனக்கும் மகளுக்கும் தோசை வார்த்துக்கொடுத்தபோது; நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக் கடற்கரைக்கு அவர் வண்டியின் பின்னால் அமர்ந்து கதை அளந்துகொண்டே சென்றபோது; நீங்க இரண்டு பேரும் போய் விளையாடிட்டு வாங்க; நான் இப்படி உட்கார்ந்துக்கறேன் என்று அனுப்பி வைத்தபோது; நாங்கள் மணலில் கால் பதிக்க நடக்க ஆரம்பித்தபோது, ரொம்ப கிட்ட போயிடாதீங்க என்று ஏற்கெனவே வலுவான குரலை இன்னும் கூர்மையாக்கி எச்சரித்தபோது; இமையத்தின் கதைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே ஒரு நாளைக்கு மூன்று முறை இன்ஸ்டண்ட் காபி கலக்கிக்கொடுத்தபோது; காஸ்மோபாலிடன் கிளப்தானே? மற்றவர்களெல்லாம் வருவதற்குமுன்பு நாம் போய்விடலாம் வாருங்கள் என்று என்னை அமர வைத்து புத்தகக் கண்காட்சி வளாகத்துக்கு அடுத்தாற்போல் இருக்கும் கால்ஃப் கிளப்புக்கு அழைத்துச் செல்வதற்குப் பதில் அண்ணா சாலையிலுள்ள மற்றொரு கிளப்புக்கு அழைத்துச் சென்று, பார்த்தீர்களா, நாம்தான் முதலில் சேர்ந்திருக்கிறோம் என்று பெருமிதத்தோடு புன்னகைத்தபோது; உறங்கப்போன என்னை அதுக்குள்ளவா தூக்கம் என்று இழுத்து வந்து வீட்டு வாசலில் அமர்த்தி, பழைய பாடல்களையெல்லாம் அவர் ஒவ்வொன்றாகப் பாடி காட்டியபோது; இந்த அன்பு, இந்த நட்பு, இந்தப் பிணைப்பு எனக்கு இரவலாக வழங்கப்பட்டது; அது என்னுடையதல்ல என்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை.
நெருங்கியவரின் மரணத்திலிருந்து தப்பிக்க நான் இன்றுவரை கையாளும் ஒரே வழிமுறை — தவறானது என்று தெரிந்தும் தவிர்க்கமுடியவில்லை — மரண இல்லத்துக்குச் செல்லாமல் தப்பிவிடுவதுதான்.
உணர்வுகளை உள்ளுக்குள் போட்டு அழுத்தி வைக்கத் தேவையில்லை. அவற்றோடு உரையாடுங்கள். அவற்றை நிர்வகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சுகமான தருணங்களில் சுகமாகத் திளைப்பதில் எந்தச் சவாலும் இல்லை. பேய்போல் அலை சீறும்போது உங்கள் படகை எப்படிச் செலுத்துகிறீர்கள் என்பதில்தான் உங்கள் ஆற்றல் அடங்கியிருக்கிறது என்கிறார் செனக்கா. ஆனால், அங்கே அலை வேகமா அடிக்கும் போகாதீங்க எனும் அரவிந்தனின் குரல்தான் எனக்கு நெருக்கமானதாக ஒலிக்கிறது.
0

