Skip to content
Home » பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பாரத தேசத்தில் எத்தனையோ அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவற்றில் பலர், சரித்திரத்தில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றுக்குக் குறிப்பிடத்தக்க வகையில் தங்களது பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றி இந்தத் தொடரின் மூலம் அறிந்துகொள்வோம்.

நாயகர்கள் என்ற சொல் எப்போதும் நேர்மறையாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக, வரலாற்றுப் புனைவுகளில் நாயகர்கள் என்று சொல்லப்படுகிற மாந்தர்கள் கொஞ்சம் அதீதமாகவே நல்லவர்களாகச் சித்தரிக்கப் படுகிறார்கள். அந்தக் கதைகளில் வருகிற பகை அரசர்கள் கொடூரமான குணம் உடையவர்களாக, தீயவர்களாகக் காட்டப்படுகிறார்கள். ஆனால் நடைமுறையில், வரலாற்றில் உள்ள அரசர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கு உள்ளே நல்ல குணங்கள் உண்டு, கொடூரமான குணங்களும் உண்டு. இப்படிப்பட்ட கலவையாகத்தான் வரலாற்றில் அவர்கள் தென்படுகிறார்கள். ஆகவே, இங்கே நாம் காணப்போகும் ஒவ்வொரு நாயகரைப் பற்றிய வரலாற்றையும் அவர்களுடைய இயல்பிலேயே, அதீதமான புகழுரைகள் இல்லாமல், வரலாறு அவர்களைப் பற்றி என்ன பேசுகிறதோ அதை அப்படியே கொண்டுவருவதே இந்தத் தொடரின் நோக்கம். இனி அஜாதசத்ரு

மகத அரசு

பொது யுகத்திற்கு முன்பு, சுமார் ஆறாம் நூற்றாண்டில் பாரதத்தை மஹாஜனபதங்கள் என்று அழைக்கப்பட்ட பல சிறிய அரசுகள் ஆட்சி செய்தன. அவற்றில் பதினாறு அரசுகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. அவற்றில் ஒன்று மகதம். மகதத்தை பல வம்ச அரசர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். பொயுமு ஆறாம் நூற்றாண்டில் அதன் அரசராகப் பொறுப்பேற்றவர் ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரர். ஒரு சிறிய அரசாகவே மகதம் இருப்பதைப் பொறுக்காத பிம்பிசாரர், மண உறவுகள் மூலம் மகதத்தை வலுப்படுத்த முயன்றார். அதற்காக மகாகோசலத்தின் அரசமகளான கோசலா தேவியையும் லிச்சாவி அரசகுலத்தை சேர்ந்த செல்லனா தேவியையும் மத்ர அரச வம்சத்தைச் சேர்ந்த ஷேமா தேவியையும் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 500 மனைவிகள் இருந்ததாக பௌத்த சமய நூல்கள் கூறுகின்றன. இதில் லிச்சாவி அரசகுலம் ஆட்சி செய்தது வஜ்ஜிகா அல்லது வஜ்ரிகா கூட்டமைப்பை. தன் அரசகுமாரியைத் திருமணம் செய்துகொண்ட பிம்பிசாரருக்கு கோசல அரசு, தன் அரசின் ஒரு பகுதியாக காசியை மணக்கொடையாக வழங்கியது.

பிம்பிசாரருக்கும் செல்லனா தேவிக்கும் மகனாகப் பிறந்தவரே அஜாதசத்ரு. பொயுமு 492ம் ஆண்டு வாக்கில் இவர் மகதத்தின் அரியணை ஏறியதாகக் கணிக்கப்படுகிறது. அந்தக் காலகட்டம் மத ரீதியாக இந்தியாவில் பெரும் மறுமலர்ச்சி நடந்துகொண்டிருந்த நேரமாகும். கௌதம புத்தரும் வர்த்தமான மகாவீரரும் வைதீக சமயத்திற்கான மாற்றாக பௌத்தத்தையும் ஜைன சமயத்தையும் பரப்பி வந்தனர். ஆகவே, அந்த சமய நூல்கள் பலவற்றிலும் அஜாதசத்ருவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இரண்டு சமயங்களும் அஜாதசத்ரு, தங்களின் மதத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொள்கின்றன. அந்தக் குறிப்புகளை வைத்தும் புராணங்களில் தென்படுகின்ற சில செய்திகளைக் கொண்டுமே அஜாதசத்ருவின் வரலாற்றைத் தொகுக்க முடிகிறது.

அஜாதசத்ரு அரியணை ஏறிய வரலாறு கொஞ்சம் சிக்கலான ஒன்று. பௌத்த சமய நூல்கள், தேவதத்தன் என்று பௌத்த பிக்குவின் தூண்டுதலால் அஜாதசத்ரு தன் தந்தையான பிம்பிசாரரைக் கொன்று அரசைக் கைப்பற்றியதாகக் கூறுகின்றன. ஆனால் ஜைன சமய நூல்களோ, ஒரு சண்டையின் காரணமாக அஜாதசத்ரு தன் தந்தையைச் சிறையில் அடைத்ததாகவும் அதன்பின் தன்னுடைய தாயான செல்லனா தேவி, பிம்பிசாரர் மீது வைத்த பாசத்தைக் கண்டு மனம் உருகியதாகவும் கூறுகின்றன. அதை அடுத்து, ஒரு இரும்புத் தண்டை எடுத்துக்கொண்டு பிம்பிசாரரின் தளைகளை விடுவிக்க அஜாதசத்ரு சென்றதாகவும், ஆனால் தன்னை மகனே கொல்ல வருவதாகத் தவறாகப் புரிந்து கொண்ட பிம்பிசாரர் விஷம் அருந்தி மாண்டதாகவும் அவை தெரிவிக்கின்றன. குனிகன் என்ற இயற்பெயரினால் அஜாதசத்ருவை ஜைன நூல்கள் அழைப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தரை வணங்கும் அஜாதசத்ரு – இந்தியன் ம்யூசியம், கொல்கத்தா

பௌத்த மத நூலான சாமன்னபல சுத்தத்தில் அஜாதசத்ருவின் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று பதியப்பட்டுள்ளது. புத்தரை அஜாதசத்ரு சந்தித்தபோது “அரசாட்சியை அடைவதற்காக என் தந்தையை நான் கொன்றேன், அந்தக் கொடுமையான காரியத்தை நான் செய்தேன்” என்று வருந்தியதாக அந்த நூல் குறிப்பிடுகிறது. அந்த வாக்குமூலத்தை புத்தர் ஏற்றுக்கொண்டாலும், அந்தக் கறை நீங்காத ஒன்று என்பதை அவர் அஜாதசத்ருவுக்கு நினைவு படுத்தினார். அஜாதசத்ரு அந்த இடத்தை விட்டுச் சென்றதும் “அந்தச் செயலின் காரணமாக அஜாதசத்ரு காயமடைந்தவனாகவும் சக்தி இழந்தவனாகவும் ஆகிவிட்டான்” என்று புத்தர் தமது சீடர்களிடம் தெரிவித்திருக்கிறார். அஜாதசத்ருவின் மனவியல் போராட்டங்களை இப்படி அந்த நூல் எடுத்துக் காட்டியிருந்தாலும், அப்படி ஒன்றும் அவர் உடைந்து போய்விடவில்லை என்பதை அவர் தொடர்ந்து மேற்கொண்ட போர்கள் எடுத்துச் சொல்கின்றன.

போர்கள்

அப்போது மகதத்தின் தலைநகராக ராஜகிருகம் இருந்தது. தந்தையின் காலத்தில் பல அரசுகள் இணக்கமாக இருந்தபோதிலும், அஜாதசத்ரு தன் வலிமையினால் அரசை விரிவடையச் செய்ய விரும்பினார். அதற்கான வாய்ப்பு தானாகவே அமைந்தது. அஜாதசத்ரு தன் தந்தையைக் கொன்ற செய்தியைக் கேள்விப்பட்ட கோசல அரசரான பிரசேனஜித் கடும் கோபம் அடைந்தார். கோசல அரசகுமாரியும் பிம்பிசாரரின் மனைவியுமான கோசலா தேவி கணவர் இறந்த துக்கத்தின் காரணமாக இறந்துபட்டது அவருடைய கோபத்தை அதிகப்படுத்தியது. மகதத்திற்கு மணக்கொடையாக அளித்த காசி நகரை பிரசேனஜித் மீட்டுக்கொண்டார். அதனால் மகதம் கோசலத்தின் மீது போர் தொடுத்தது. ஒரு கட்டத்தில் பிரசேனஜித் தோற்கடிக்கப்பட்டு, தலைநகரில் இருந்து துரத்தப்பட்டார். பின்னர் அஜாதசத்ருவோடு சமாதானம் செய்துகொண்டு, காசி நகரை அவர் திருப்பிக்கொடுக்க நேரிட்டது. கோசல அரசகுமாரியான வஜிரா என்பவரை அஜாதசத்ருவுக்கு பிரசேனஜித் திருமணம் செய்துகொடுத்தார். பின்னாளில், அரசில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக பிரசேனஜித், மகதத்தில் அடைக்கலம் புக நேரிட்டது. ஆனால் வரும் வழியில் அவர் இறந்துபோனார்.

இதைப் போலவே தன்னுடைய தாய்வீடான லிச்சாவிகளோடும் அஜாதசத்ரு போர் செய்ய நேரிட்டது. வஜ்ஜிகா கூட்டமைப்பை ஆண்டுகொண்டிருந்த லிச்சாவிகள், அந்த அரசை பல தலைவர்கள் ஆட்சி செய்யும் குடியரசாகக் கட்டமைத்திருந்தனர். அதன் தலைநகராக வைஷாலி நகரம் இருந்தது. இந்த அரசு மகதத்திற்கு வடக்கில் இருந்தது. தனது பாட்டனாரின் வீடான வஜ்ஜிகாவை எதிர்த்து அஜாதசத்ரு போர் செய்வதற்கான காரணங்கள் பௌத்த நூல்களிலும் ஜைன நூல்களிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

ஜைன நூல்களில் காணப்படும் செய்தி : ஒரு நாள் அஜாதசத்ருவின் மனைவியான பத்மாவதி உப்பரிகையில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது அஜாதசத்ருவின் ஒன்று விட்ட சகோதரர்களான ஹல்லனும் விஹல்லனும் தங்கள் மனைவிகளோடு சேயநாகன் என்ற யானை மீது அமர்ந்து சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் மனைவியர் பதினெட்டு வடங்களால் ஆன நகைகளைக் கழுத்தில் அணிந்துகொண்டிருந்தனர். அதைப் பார்த்து ஆசைப்பட்ட பத்மாவதி அஜாதசத்ருவிடம் தெரிவித்தார். தன்னுடைய அரசியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த அஜாதசத்ரு, யானையையும் ஆபரணங்களையும் கொண்டுவருமாறு தன் தம்பிகளுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால், அவற்றை பிரிய நினையாத ஹல்லனும் விஹல்லனும் லிச்சாவிகளிடம் சரணடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அஜாதசத்ரு, அவர்களை அனுப்புமாறு லிச்சாவிகளுக்குத் தூது அனுப்பினார். லிச்சாவிகள் மறுத்துவிடவே, பெரும் படையோடு வைஷாலி நகரை நோக்கிச் சென்றார் அஜாதசத்ரு. லிச்சாவிகளின் ஆட்சியாளரான சேதகரும் சாமான்யப்பட்டவர் அல்ல. அவருக்கு வைஷாலியின் அரண் தகுந்த பாதுகாப்பை அளித்தது.

இந்தப் போரில் முதலில் அஜாதசத்ரு தோல்வியே கண்டார். ஆனாலும் அவர் விரதம் இருந்து பிரார்த்தனை செய்ததாகவும் அதன் பிறகு ஏற்பட்ட போரில் அவர் வெற்றி கண்டதாகவும் ஜைன சமய நூல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போரில் அவர் பெரும் கற்களைக் குண்டுகள் போல எறியக்கூடிய இயந்திரங்களையும் கதாயுதங்கள் நிரம்பிய தேர்களையும் பயன்படுத்தியதாகவும் அவை கூறுகின்றன.

ஆனால், பௌத்த சமய நூல்கள் வேறு விதமான வரலாற்றைச் சொல்கின்றன. மகதத்திற்கும் லிச்சாவி அரசுக்கும் இடையே வைரச்சுரங்கம் ஒன்று இருந்ததாகவும் அதைப் பிரித்துக்கொள்வதில் இரு அரசுக்கும் சண்டை மூண்டதாகவும் அவை தெரிவிக்கின்றன. பல தலைவர்கள் இருந்த கூட்டமைப்பை நேரடியாகச் சந்திக்க விருப்பமில்லாத அஜாதசத்ரு அவர்களைத் தோற்கடிக்கும் வழியை புத்தரிடம் கேட்டதாக அந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. அதற்கு வஜ்ஜிகளிடம் உள்ள நேரம் தவறாமையைக் கடைப்பிடித்தல், ஒழுக்கம், மூத்தவர்களிடமும் பெண்களிடமும் மரியாதையாக நடந்துகொள்ளுதல், இறை பக்தி, வைஷாலியில் உள்ள பௌத்த சைத்யம் ஆகியவற்றைக் காரணங்களாக புத்தர் தெரிவித்தார். ஆகவே அஜாதசத்ரு தன்னுடைய அமைச்சரான வஸ்ஸகாரனை வைஷாலிக்கு அனுப்பி அந்தக் கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு இடையே குழப்பம் ஏற்படுத்துமாறு ஆணையிட்டார். அவர்களைச் சூழ்ச்சியினால் பிளவுபடுத்திய வஸ்ஸகாரன், அங்கே இருந்த சைத்யத்தையும் இடித்துவிட்டான்.

அதன்பின் படையோடு அங்கே வந்த அஜாதசத்ருவுக்கு லிச்சாவிகளைத் தோற்கடிப்பது பெரும் பிரச்சனையாக இருக்கவில்லை. இது பௌத்த சமய நூல்கள் சொல்வது. எப்படியிருந்தாலும், பொயு 484ம் ஆண்டு தொடங்கிய இந்தப் போரில் படுதோல்வி அடைந்த லிச்சாவி அரசு மகதத்தோடு இணைத்துக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அஜாதசத்ரு அவந்தி அரசோடு போர் செய்து அதனையும் மகதத்தோடு சேர்த்துக்கொண்டார். இப்படியாக பல அரசுகளின் பிரிவாக இருந்த பாரதத்தில் மகதம் ஒரு பேரரசாக உருவாவதற்கு அடிகோலியவர் அஜாதசத்ரு.

மதங்களின் விஷயத்திலும் அவர் பௌத்த சமயத்தையும் சமண மதத்தையும் சரிசமமாகக் கையாண்டார் என்பது தெரிகிறது. புத்தர் மறைந்த பிறகு நடைபெற்ற முதலாவது பௌத்த சமயக் கூட்டம் ராஜகிருகத்தில்தான் நடைபெற்றது. போலவே சமண மதத்திற்கும் பல தொண்டுகளைச் செய்தவராகவே அஜாதசத்ரு அந்த மத நூல்களில் குறிப்பிடப்படுகிறார்.

அஜாதசத்ருவுக்கு உதயன் என்ற மகன் இருந்ததாகவும் அவருக்குப் பின் உதயன் மகதத்தை ஆட்சி செய்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜகிருகம் போலவே ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் பாடலிகிராமம் என்ற இடத்தில் ஒரு பெரு நகரைக் கட்டமைத்தார் அஜாதசத்ரு. பின்னாளில் மகதத்தின் தலைநகராகப் பேரும் புகழும் கொண்டு விளங்கிய பாடலிபுத்திர நகரே அதுவாகும்.

அஜாதசத்ரு பண்டைய இந்திய வரலாற்றின் பல பரிமாணங்களைக் கொண்ட ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்வதைக் காணமுடிகிறது. தன் தந்தையைக் கொன்ற கொடூரமான செயலைச் செய்தவராக இருந்தாலும் அதற்காகப் பின்னாளில் வருந்தியவராகவே குறிப்பிடப்படுகிறார். பௌத்த சைத்யம் ஒன்றைக் கண்ட அவர் “மகனே, யுவராஜனான உதயனே, உன் ஆட்சியாவது அமைதியாக நடக்கட்டும்” என்று வேண்டியதாக பௌத்த சமய நூல்கள் தெரிவிப்பதில் இருந்து அவருடைய மனப்போராட்டமும் மகன் தன்னைப் போன்ற கொடுஞ்செயல்களை செய்யாமல் இருக்கவேண்டும் என்ற அவருடைய தவிப்பும் வெளிப்படுகிறது.

அவரது சமய ஈடுபாடு புத்தர், மகாவீரர் போன்ற தத்துவஞானிகளின் சொற்களை கவனமாகக் கேட்டு அதைச் செயல்படுத்தியதிலிருந்து தெரியவருகிறது. புதிதாக எழுந்த இரு சமயங்களையும் அவர் கவனமாகக் கையாண்டிருக்கிறார். ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரு சமயங்களாலும் சரியான ஆட்சியாளராகவே அவர் நினைவுகூரப்பட்டிருக்கிறார். மகதத்தை வலிமையான அரசாகவும் படை பலம் வாய்ந்த அரசாகவும் உருவாக்கிய விதத்தில் அவரது வீரமும் அரசியல் மேதமையும் வெளிப்படுகின்றன. இப்படிப் பல காரணங்களால் வரலாற்றில் இடம்பெறும் முக்கியமான அரசர் அஜாதசத்ரு.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *