மடில்டா கால்டெரோன் நான்கு மகள்களையும் பாரம்பரிய மெக்சிகன் முறைப்படி வளர்த்தார். வீட்டுவேலை, சமையல், தையல் என எல்லாவற்றையும் கற்றுத் தந்தார். வீட்டை நறுவிசாக வைத்துக்கொள்வதில் அவருக்கு அக்கறை அதிகம். இறை நம்பிக்கையுடையவர் என்பதால் தினமும் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்று வலியுறுத்தினார். கில்லெர்மோவின் முதல் மனைவியின் மகளான மார்கரீடா ஒரு கிறிஸ்தவ கன்னியாஸ்திரி. இப்படி அம்மா, சகோதரிகள், சித்திகள் என எல்லோரும் இறைபக்திகொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் ஃப்ரீடா, அவர் தங்கை கிறிஸ்டினா இருவருக்கும் எதற்கெடுத்தாலும் தேவாலயம், பிரார்த்தனை, வழிபாடு என்றிருப்பது ஒத்துவரவில்லை.
‘மதம் குறித்த மிகையுணர்ச்சிக் கோளாறு கொண்டிருந்தார் அம்மா. உணவு உண்பதற்கு முன்னால் பிரார்த்தனை செய்யச் சொல்வார். மற்றவர்கள் உள்முகமாகக் கவனம் செலுத்துகையில் நானும் கிறிஸ்டியும் ஒருவரையொருவர் பார்த்தபடி சிரிக்காமல் இருக்க முயற்சிசெய்வோம். ஒரு முறை முதல் நற்கருணைச் சடங்கிற்கான பயிற்சி வகுப்பிலிருந்து தப்பித்துப் பக்கத்து தோப்புக்குப் போய் பழங்கள் பறித்துச் சாப்பிட்டோம்.’
குழந்தைப் பருவத்தில் ஃப்ரீடா சரியான குறும்புக்காரி, துறுதுறுப்பு அதிகம். வட்ட முகத்தில் பளபளக்கும் கண்களோடு கொழுகொழுவென்று இருப்பார். ஒரு முறை பள்ளியில் உடன்படித்த சிறுமியைப் பிடித்துக் கீழே தள்ளிச் சண்டைபோட்டார். ஜெர்மானியரான அப்பாவின் கண்டிப்பும் கறாருமிக்க நடத்தையைச் சுட்டுவதற்கு அவரை ஹெர் காஹ்லோ என்று அழைப்பார்.
இன்னொரு சமயம் மரியா-லூயிசா படுக்கையறைச் சிறுநீர்க்கலத்தைப் பயன்படுத்துகையில் கீழே தள்ளிவிட்டார். கலத்தோடு தரையில் உருண்ட மரியா சீற்றம்கொண்டாள். ‘நீ என்னுடைய அம்மாவுக்கோ அப்பாவுக்கோ பிறக்கவில்லை. உன்னைக் குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வந்தார்கள்,’ என ஃப்ரீடாவின்மீது எரிச்சலுற்றாள். ‘அவள் அப்படிச் சொன்னது என்னை மிகுவும் பாதித்தது. அன்றுமுதல் தனிமை விரும்பியாகிவிட்டேன். என்னுடைய சாகசங்களைச் செய்வதற்குத் துணையாகக் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கிக்கொண்டேன்.’
‘எனக்கு ஏழு வயதாகையில் அக்கா மடில்டேவுக்கு 15 வயது. அவளுடைய ஆண் தோழன் பேகோ ஹெர்னாண்டெஸுடன் வேராக்ரூஸுக்குத் தப்பிச் செல்ல உதவினேன். அம்மாவுக்குப் பிரியமான மகள் என்பதால் அவர் மனமுடைந்துபோய் அழுதுகொண்டே இருந்தார். அப்பா வாயே திறக்கவில்லை. சில வருடங்களுக்கு மடில்டேவைப் பற்றி யாரும் பேசவேயில்லை. அவளை நிச்சயம் ஒரு நாள் கண்டுபிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையிருந்தது. அதேபோல அவளைத் தேடிக் கண்டுபிடித்தேன். பேகோவைத் திருமணம் செய்துகொண்டு வசதியாக வாழ்ந்தாள். அம்மா அவருடைய மூத்த மகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளப் பன்னிரெண்டு வருடங்களானது.’
ஃப்ரீடா அம்மாவின்மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார், மறுபுறம் வெறுப்பும் இருந்தது. அம்மாவைக் கொடுமைக்காரி என்று சொன்னார். அதே நேரம் இனிமையானவர், புத்திசாலி, சுறுசுறுப்பானவர் என்றும் விவரித்தார். இருவரும் உலகின் எல்லா அம்மா மகள்களையும் போலவே ஓயாமல் எல்லாவற்றுக்கும் சண்டைபோட்டனர்.
இத்தனை அறிவும் ஆற்றலும் சுட்டித்தனமுமிக்க சிறுமி ஃப்ரீடா ஆறு வயதாகும்போது போலியோவினால் பாதிக்கப்பட்டார். சுமார் ஒன்பது மாதங்கள் அறைக்குள்ளே அடைந்து கிடக்கும் கட்டாயம். வலது காலில் தாங்கமுடியாத வலி. வெதுவெதுப்பான நீரால் காலைக் கழுவினர், சூடான துவாலையால் ஒத்தடமிட்டனர். காய்ச்சல் சரியானதும் வலது காலை வலுவாக்க உடற்பயிற்சிகளைப் பரிந்துரை செய்தார் மருத்துவர்.
நோய்வாய்ப்பட்ட மகளை அக்கறையோடும் கனிவோடும் கவனித்துக்கொண்டார் கில்லெர்மோ காஹ்லோ. காலை வலுப்படுத்த கால்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், நீச்சல் என எல்லா விளையாட்டிலும் கலந்துகொள்ள உதவினார். அந்தக் காலகட்டத்தில் மெக்சிகோவின் மரியாதைக்குரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இவை எதையும் செய்யமாட்டார்கள்.
‘சிறுவர்கள் விளையாடும் சறுக்கு உருளைகளும் சைக்கிள்களும்தான் என்னுடைய விளையாட்டுப் பொருட்கள். மரம் ஏறுவதும் பந்து விளையாடுவதும் சபுல்டெபெக் பூங்கா ஏரியில் படகுக்குத் துடுப்புப் போடுவதும் பிடித்தமானவை.’
என்ன செய்தும் கால் வலுப்பெறாமல் மெலிந்திருந்தது. கனத்த காலணிகளை அணியவேண்டிய கட்டாயம். முதலில் எவரின் கிண்டலையும் பொருட்படுத்தவில்லை. மற்ற குழந்தைகள் அவரை, ‘கட்டைக்கால் ஃப்ரீடா’ என்று பட்டப்பெயரிட்டு ஓயாமல் கேலிசெய்தபோது காயப்பட்டு உடைந்துபோனார். அவர்களுக்குச் சாபமிட்டுக் கூச்சலிடுவார். மெலிந்த காலை மறைப்பதற்கு மூன்று நான்கு காலுறைகளை அணிவார். கூடுதல் உயரமாக இருக்கும் காலணியைத் தயாரித்துப் போட்டுக்கொண்டார்.
உடலின் குறை அவருடைய செயல்பாடுகளைத் தடுக்கவில்லை. காற்றில் ஆடை உயரப் பிசாசைப்போல வேகமாகச் சைக்கிள் ஓட்டுவார். ‘நடக்கும்போது நளினமாகவும் கால்கள் ஒத்திசைந்து செயல்படுவதுபோலவும்தான் இருக்கும். அவ்வப்போது சின்னதாகக் குதிப்பார், பார்க்கப் பறவை பறப்பதுபோலத் தோன்றும்,’ என ஃப்ரீடாவின் குழந்தைப் பருவத் தோழனும் ஓவியருமான அரோரா ரேயஸ் சொல்கிறார்.
என்ன முயன்றாலும் நெருங்கிய நண்பர்களின்றித் தனிமையில் இருப்பதாகவே எண்ணினார் ஃப்ரீடா. உட்சுருங்கித் தனிமையில் இருக்கப் பழகினார். பின்னர் அதை ஈடுகட்ட அளவுக்கதிமாகத் தன்னை முன்னிறுத்த முயன்றார். முதலில் ஆண் பிள்ளைகளைப்போல நடந்தார். பின்னர் முற்றிலும் வித்தியாசமான குணங்களைக்கொண்ட பாத்திரமாக மாறினார். இப்படித் தனித்திருக்கும் உணர்வு மேலோங்கியிருப்பது அவர் குழந்தையாக இருக்கையில் எடுக்கப்பட்ட குடும்பப் புகைப்படங்களிலும் வளர்ந்த பிறகு வரைந்த சில ஓவியங்களிலும் உடல்மொழியின் மூலம் வெளிப்படுவதைக் காணலாம்.
கில்லெர்மோ மெக்சிகோ சிட்டியின் மையப்பகுதியில் புகைப்பட நிலையம் ஒன்றை வைத்திருந்தார். அன்றாடம் காலையில் கிளம்பிச்சென்று அங்கே பணிசெய்துவிட்டு மாலையில் வீடு திரும்புவார். ஓய்வு நேரத்தில் ஷில்லர், கதே போன்ற ஜெர்மானியத் தத்துவ மேதைகளின் புத்தகங்களைப் படிப்பார். வீடு திரும்பியதும் பியானோவில் பீத்தோவன், ஸ்ட்ராஸ் போன்ற கலைஞர்களின் இசைக்கோவைகளை வாசிப்பார். மனைவியிடமோ மகள்களிடமோ அதிகம் பேசமாட்டார்.
அப்படிப்பட்டவர் தன் மகள்களில் ஃப்ரீடாவின் மேல் அதிகப் பாசமும் அணுக்கமும் கொண்டிருந்தார். வேலையிலிருந்து வீடு திரும்புகையில், ‘ஃப்ரீடா, கண்ணே ஃப்ரீடா,’ எனச் சன்னமான குரலில் அழைப்பார். தன்னைப்போலவே மிகை உணர்வுத்திறனும் உள்ளாய்வும் துருதுருப்பும் கொண்டிருப்பதைக் கவனித்தார். ‘என்னுடைய மகள்களில் புத்திசாலியாகவும் அதிகமாக என்னை ஒத்திருப்பதும் ஃப்ரீடாதான்,’ என்றார்.
ஃப்ரீடாவிடம் தன்னுடைய சேகரிப்பிலுள்ள தத்துவப் புத்தகங்களைத் தந்து படிக்கச் சொன்னார். விலங்கு, பறவை, பூச்சி, கல், செடி, பூ என இயற்கையின்மீது ஆர்வம்கொள்ளச் செய்தார். இருவருமாக அருகிலுள்ள பூங்காவுக்குப் போவார்கள். கில்லெர்மோ நீர்வண்ண ஓவியங்களை வரைகையில் ஃப்ரீடா ஆற்றங்கரையில் கல், பூச்சி, செடி எனத் தனக்குப் பிடித்தவற்றைச் சேகரிப்பார். வீட்டுக்குப் போனதும் அவற்றைப்பற்றிப் புத்தகங்களில் படிப்பார்; கூறுபோட்டு நுண்நோக்கி வழியாகப் பகுப்பாய்வு செய்வார்.
மகள் சிறிது வளர்ந்ததும் மெக்சிகோ கலை, தொல்பொருட்களில் தனக்கிருந்த ஆர்வத்தை அவளுடன் பகிர்ந்துகொண்டார் கில்லெர்மோ. புகைப்படம் எடுப்பது, சுருளைக் கழுவுவது, தூரிகையால் வண்ணப் படங்களைத் திருத்துவது போன்ற நுணுக்கங்களைச் சொல்லித் தந்தார். அந்த வயதில் ஃப்ரீடாவுக்கு அப்பா அளவுக்கு அதைச் செய்வதில் பொறுமையில்லை என்றாலும் அந்த நுட்பங்களைப் பின்னாளில் ஓவியம் வரைகையில் பின்பற்றினார்.
தந்தையின் கலையார்வம் மகளை ஊக்குவித்தது மட்டுமின்றி அவர் எடுத்த உருவப்படங்களில் காணப்பட்ட இறுக்கம், ஒழுங்குமுறை போன்றவை பல வருடங்கள் கழித்து ஃப்ரீடா வரைந்த ஓவியங்களில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின. ‘அப்பா நாள்காட்டிகளுக்காகப் புகைப்படங்களை எடுத்தார், நான் புறவுலகின் மெய்மையை ஓவியமாக வடித்தேன்,’ என்றார் ஃப்ரீடா.
வீட்டிலிருக்கும்போது இரவு நேரங்களில் அப்பாவுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதையும் விடிந்த பிறகு அவர் வழக்கம்போல இருப்பதையும் கண்டிருக்கிறார் ஃப்ரீடா. இருவரும் வெளிப்புறத்தில் புகைப்படம் எடுக்கச் செல்கையில் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு நடுத்தெருவில் கீழே விழுந்துவிடுவார் கில்லெர்மோ. ஒரு பக்கம் அப்பாவை ஈத்தர் குப்பியை முகரச் செய்வதோடு இன்னொரு புறம் அவரது புகைப்படக் கருவி திருடுபோகாமல் பார்த்துக்கொள்வார்.
1922ஆம் ஆண்டு மெக்சிகோவின் பாரம்பரியமும் மதிப்புமிக்க பள்ளிகளுள் ஒன்றான நேஷனல் ப்ரிபரேட்டரியில் ஃப்ரீடாவைச் சேர்த்தார் கில்லெர்மோ. அங்கே உயிரியல், இலக்கியம், தத்துவம் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த ஆசிரியர்களில் சிலர் பின்னாளில் மெக்சிகோவின் கல்வி அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அன்பு, ஒழுங்கு, முன்னேற்றம் என்பது பள்ளியின் குறிக்கோள். மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டுமென்பது ஃப்ரீடாவின் இலக்கு. மகளின் கனவுகளை நனவாக்கும் திறன்களையும் அனுபவத்தையும் பெற அந்தப் பள்ளி உதவும் என நம்பினார் தந்தை.
பொர்ஃபீரியோ டயஸின் ஆட்சியில் பாரம்பரிய மெக்சிகன் கலை, இலக்கியம், இந்திய வம்சாவளி என எல்லாம் கீழானவை என வெறுத்து ஒதுக்கப்பட்டன. டயஸின் வீழ்ச்சிக்குப் பிறகு 1920களில் ஆட்சிக்கு வந்த அதிபர் அல்பாரோ ஓப்ரீகான் கல்வி அமைச்சராக ஹொஸே வாஸ்கோன்செலோஸ் என்பவரை நியமித்தார். அவர் அந்நிய நாடுகளின் கலாசாரத்தைப் புறந்தள்ளி மெக்சிகோவின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இயக்கத்தை முன்னெடுத்தார்.
அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மெக்சிகோவின் கிராமங்களில் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. நூலகங்கள், விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்கள், திறந்தவெளி அரங்கங்கள் நிறுவப்பட்டன. எல்லா மக்களும் வாங்கிப் படிக்கவேண்டுமென்பதற்காக பிளேட்டோ, தாந்தே, கதே போன்ற அறிஞர்களின் படைப்புகள் மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டன. நாடு முழுவதும் இலவச இசை விழாக்கள் நடத்தப்பட்டன.
டீயகோ ரிவேரா, ஹொஸே க்ளமெண்டே ஆரோஸ்கோ, டேவிட் அல்ஃபரோ செக்கேரோஸ் போன்ற புகழ்மிக்க ஓவியக்கலைஞர்கள் மெக்சிகன் வரலாற்றையும் கலாசாரத்தையும் சித்தரிக்கும் பிரம்மாண்டமான சுவரோவியங்களை பொதுவிடங்களிலும் கல்விச்சாலைகளிலும் வரையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். கலையின் வழியாக சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியுமென வலுவாக நம்பினார் ஹொஸே வாஸ்கோன்செலோஸ்.
இப்படியான முற்போக்குக் கருத்துகள் ஃப்ரீடாவின் எண்ணங்கள், செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. மெக்சிகோ புரட்சியோடு தன்னை இணைத்துக்கொள்ளும் வகையில் தான் மெக்சிகோ புரட்சி தொடங்கிய 1910இல் பிறந்தேன் என்று இந்தக் காலகட்டத்தில்தான் அவர் சொல்லத் தொடங்கியிருக்கவேண்டும்.
பள்ளியின் 2000 மாணவர்களுள் 35 பேர் மட்டுமே பெண்கள், அவர்களுள் ஃப்ரீடாவும் ஒருவர். அந்த மாணவர்கள் மெக்சிகோவின் கல்விகற்ற, மேல்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பல்வேறு பல்கலைக்கழகங்களில் மேல்படிப்புக்குச் சேர்வதற்கான தயாரிப்பில் இருந்தவர்கள். அந்த இளைஞர்கள் பள்ளி, கல்லூரி இரண்டிலும் மாற்றங்களைக் கொண்டுவந்ததோடு பின்னாளில் மெக்சிகோவின் தலைவர்களாகவும் உருவெடுத்தனர்.
புதிய பள்ளியில் உடற்பயிற்சி, விளையாட்டு, இதழியல், இலக்கியம், தத்துவம், விவாதம், மேடைப்பேச்சு, குறும்பு என எல்லாமும் அனுமதிக்கப்பட்டது. பள்ளி வளாகம் மட்டுமின்றி அதைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் மாணவர்களின் குறும்புகள் அரங்கேறின.
14 வயதான ஃப்ரீடா பதின்வயதுக்கே உரிய மெலிந்த தோற்றம், உயிர்ப்பு, துணிச்சல், கனிவைக் கொண்டிருந்தார். அடர்ந்த கருங்கூந்தலின் முன்பகுதி நெற்றியில் படரும் வகையில் கத்தரித்திருந்தார். கண்களின் பளபளப்பும் முகவாய் குழிவும் ஒன்றிணைந்த புருவங்களும் அவர் குறும்புக்காரர், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் என்பதைச் சுட்டின.
பள்ளிக்குச் சீருடை அணியவேண்டியதில்லை என்பதால் அவராகவே ஜெர்மானியப் பள்ளி மாணவியின் உடையை அணிந்துவந்தார். அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் பெண்கள் அணியாத ஆடைகளைத் தயக்கமின்றி உடுத்தினார். முன்புறம் மேலங்கியும் கீழே கால்சட்டையுமென டெனிம் துணியாலான ஓவரால்ஸை அணிவார். முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டு ஆண்பிள்ளைகளோடு சைக்கிள் ஓட்டுவார். இதைக் கண்ட கோயோயாகானைச் சேர்ந்த தாய்மார்கள் ‘எத்தனை அவலட்சணமான பெண்!’ என அவரைப் பழித்தார்கள்.
ஆனால் அவர் வயதொத்த மாணவர்கள் அவரின் உடை, தோற்றம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டனர். பாடப்புத்தகம், நோட்டு, ஓவியம், பட்டாம்பூச்சி, காய்ந்த மலர்கள், வண்ணங்கள், தந்தையின் நூல்கள் என்று தனக்கு விருப்பமானவற்றை எல்லாம் பள்ளிக்கு எடுத்துப்போவார். எப்போதும் சிறுபிள்ளைத்தனமாகச் சண்டையிட்டு அடுத்தவர்களைப் பற்றி வம்புபேசும் காரணத்தால் மாணவியரோடு பழகுவதில் ஃப்ரீடாவுக்கு விருப்பமில்லை. தனக்கேற்ற குழுவைத் தேடிக்கொள்ள முயற்சிசெய்தார்.
பள்ளியில் பல மாணவர் குழுக்களிருந்தன. கச்சுச்சா என்ற குழுவோடு இணைந்துகொண்டார் ஃப்ரீடா. கச்சுச்சா என்பது விளையாட்டு வீரர்கள் அணிந்துகொள்ளும் தொப்பியின் பெயர். குழுவின் உறுப்பினர்களான ஏழு மாணவர்களும் 2 மாணவியரும் புத்திசாலிகள், குறும்புக்காரர்கள். மாணவர்களின் பெயர் மிகேல் லிரா, ஹொஸே கோமெஸ் ரொப்லிடா, அகஸ்டின் லிரா, ஹெசூஸ் ரீயாஸ் ஈ வாயேஸ், அல்ஃபோன்ஸோ வில்லா, மேனுவெல் கோன்சாலெஸ் ராமிரேஸ், அலஜேண்ட்ரோ கோமெஸ் அரியஸ். கார்மென் ஹைமேவும் ஃப்ரீடாவும் குழுவிலிருந்த மாணவியர். பின்னாளில் அனைவரும் வழக்கறிஞர், கவிஞர், பேராசிரியர், இதழியலாளர், வரலாற்றாளர் எனத் தத்தம் துறைகளில் தலைசிறந்து விளங்கினார்கள்.
இந்த ஏழு பேரும் ஏதாவது முக்கியமான செயல்பாட்டினால் ஒன்றிணைந்தார்களா என்றால், கிடையாது. எதன்மீதும் யார்மீதும் சிறிதும் மதிப்பும் மரியாதையுமின்றித் திரிந்தார்கள். கவித்துமான, சமத்துவ சமுதாயமும் தேசியவாதமும் கலந்த கோட்பாட்டின்மீது நம்பிக்கைகொண்டிருந்தார்கள். நாட்டின் எதிர்காலம் குறித்த உயர்ந்த இலட்சியம் கொண்டிருந்ததோடு, பள்ளிச் சீர்திருத்தம் வேண்டும் எனப் போராடினார்கள். அதே நேரம் வகுப்பில் குழப்பம் விளைவிப்பதிலும் ஒழுங்கின்றிச் செயல்படுவதிலும் தேர்ந்தவர்கள்.
ஒரு முறை பள்ளிக்குள் கழுதையைக் கூட்டிவந்து அதன்மீது ஏறிச் சவாரிசெய்தார்கள். நாயின்மீது பட்டாசைக் கட்டிக் கொளுத்திவிட்டார்கள். இன்னொரு முறை குண்டு வெடித்துத் தீயணைப்புத் துறையை அழைக்கவேண்டியதாயிற்று. வேறொரு நாள் வகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரின் தலைக்குமேல் கூரையில் பட்டாசை வெடிக்கவைத்தார்கள். கச்சுச்சா குழுவின் நகைச்சுவையுணர்வினால் ஃப்ரீடா கவரப்பட்டார். சீக்கிரமே அதன் மற்ற உறுப்பினர்களைப்போலவே சிலேடை மொழியிலும் சாதுரியமான பேச்சிலும் தேர்ந்தவரானார். அதுமட்டுமின்றி, கச்சுச்சாக்களின் நட்பின் வழியாக தோழமை, விசுவாசம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.
குறும்பும் அட்டகாசமும் செய்வதோடு நின்றுவிடாமல் பல்வேறு புத்தகங்களைப் படிக்கும் அறிவாளிகளாகவும் இருந்தனர் கச்சுச்சா குழுவினர். பள்ளிக்கு அருகிலிருந்த நூலகம்தான் அவர்களின் சந்திப்பு இடம். விவிலியத்தோடு டுமா, புஷ்கின், டால்ஸ்டாய் போன்ற செவ்வியல் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தார்கள். ஸ்பானிஷ், ஆங்கிலம், ஜெர்மன் என மூன்று மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார் ஃப்ரீடா. யார் சிறந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள், யார் அதை முதலில் படித்து முடிக்கிறார்கள் என்பதில் ஏழு பேருக்கும் போட்டி வேறு.
படித்து முடித்தவுடன் அதை நாடகம்போல நடித்தும் காட்டுவார்கள். ஹெச்.ஜி.வெல்ஸ், விக்டர் ஹ்யூகோ, ஜூல்ஸ் வெர்ன், தாஸ்தயோவ்ஸ்கி ஆகியோரின் நூல்களிலிலிருந்து திரட்டிய தகவல்களைக் கொண்டு புதிய பயணக் கதைகள் படைப்பார்கள். இமயமலையின்மீது ஏறுவார்கள், ரஷியாவிலும் சைனாவிலும் நடப்பார்கள், அமேசான் காடுகளில் திரிவார்கள். அந்தக் கதைகளைக் கேட்போர் மெய்மறந்து வாயைப்பிளந்தபடி உட்கார்ந்திருப்பார்கள்.
(தொடரும்)

