உறக்கத்திலிருந்து நீங்கள் விழித்தெழும்போது தூக்கத்தோடு தூக்கமாக உங்கள் எல்லா நினைவுகளும் வெள்ளம்போல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டால் என்னாகும்? எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியாது. வீட்டிலுள்ள ஒருவரையும் உங்களால் அடையாளம் காணமுடியவில்லை. அது உங்கள் வீடு என்னும் நினைவே இல்லை. உங்கள் வீதி, ஊர், நாடு அனைத்தும் அந்நியமாகத் தோற்றமளிக்கின்றன. என்ன செய்வீர்கள்? எப்படித் தொடங்குவீர்கள்? எங்கிருந்து?
காஃப்காவின் கதையில் வரும் விற்பனைப் பிரதிநிதியான கிரெகார் சம்ஸா காலை எழுந்திருக்கும்போது ஒரு மாபெரும் பூச்சியாக மாறியிருப்பதை உணர்கிறான். இந்த உருமாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது விளக்கப்பட்டிருக்காது. ஏன் அவ்வாறு நிகழவேண்டும் என்னும் கேள்வியை காஃப்கா தொடங்கி எவரும் எழுப்புவதில்லை. நான் இனி மனிதனல்ல, பூச்சி மட்டுமே என்று கிரெகார் உணர்கிறான். இது கிரெகார் அல்ல என்பதாலும் ஒரு பூச்சியைக் கொண்டு எதையும் சாதிக்கமுடியாது என்பதாலும் குடும்பத்தினர் அவனைவிட்டு விலகி நிற்கின்றனர். வீட்டில் மட்டுமல்ல சமூகத்திலும் தனக்கு இனி இடமில்லை; தேவையற்ற சுமையாகவே இனி நான் கருதப்படுவேன் என்பதை கிரெகார் உணர்கிறான். அந்த மனிதப் பூச்சி அனைவரிடமிருந்தும், அனைத்திடமிருந்தும் அந்நியப்பட்டுத் தனித்து நிற்கும்போது இன்னொரு உருமாற்றம் நிகழ்கிறது. அவனுக்குள்ளும் அவனுக்கு வெளியிலும்.
பூச்சியாக மாறினாலும் கிரெகாருக்கு நினைவுகளாவது எஞ்சியிருக்கின்றன. நினைவுகளும் இல்லை என்றால் என்னாகும்? ஒருவேளை இதுதான் என் உடல்போலும் என்று அவன் நினைத்துக்கொள்வான். இப்படித்தான் உறங்கப்போனேன், இப்படித்தான் விழித்திருக்கிறேன் என்று கருதிக்கொள்வான். ஒரு பூச்சியாகப் பிறந்து, பூச்சியாக வளர்ந்து, பூச்சியாக விழித்தெழுவதுதான் தன் இயல்பு; அதுவே தன் வாழ்க்கை என்று அவன் முடிவு கட்டிவிடுவான். அவன் பெயர் என்ன? தெரியாது. ஒரு விற்பனைப் பிரதிநிதியாக அவன் வாழ்ந்த வாழ்க்கை எப்படியிருந்தது? தெரியாது. அவனைக் கண்டு அச்சத்தோடும் அருவருப்போடும் முகத்தைத் திருப்பிக்கொள்பவர்கள் யார்? தெரியாது. அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன்? எங்கே வசிக்கிறான்? அவன் அடையாளம் என்ன? எதுவும் தெரியாது.
நினைவுகளின்றி வாழ்வதென்பதும் வரலாறு இல்லாமல் வாழ்வதென்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நான் யார் என்று தெரியாது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாது. நான் எப்படி இங்கே வந்தேன்? என்னவாக இருந்தேன்? என்னவாக மாறியிருக்கிறேன்? என் தாய் யார்? என் தாய்மொழி எது? எது என் வீடு? எது என் நாடு? எது என் அடையாளம்? யார் என் நண்பர்கள்? நான் என்ன கற்றுக்கொண்டிருக்கிறேன்? நான் வாழும் சமூகம் எத்தகையது? என் சமூகம் என்னை என்னவாகக் காண்கிறது? என் அடையாளத்தை யார் வரையறுக்கிறார்கள்? என்னைச் சுற்றி என்ன விதமான அரசியல் நடைபெற்று வருகிறது? என் கடந்த காலம் எப்படி இருந்தது? நான் இப்போது எதிர்கொள்ளும் சிக்கலுக்கும் குழப்பத்துக்கும் தீர்வு உண்டா? என் நினைவுகள் எப்படி அழிந்துபோயின? அவற்றை எப்படி மீட்டெடுப்பது? இந்நிலை மாறுமா? மாறாது என்றால் எப்படி மாற்றியமைப்பது? எங்கிருந்து தொடங்குவது? எப்படி முன்னேறுவது? எனக்கென்று ஒரு எதிர்காலம் உண்டா? ஆம் எனில் அது இதேபோல் அச்சமூட்டக்கூடியதாகத்தான் இருக்குமா?
0
ஏன் வரலாறு? இத்தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றும்போதெல்லாம் காஃப்காவின் கதையிலிருந்து தொடங்குவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறேன். சற்றே அச்சுறுத்தும் தொனி வந்தாலும் உரையாடலைத் தொடங்குவதற்கான ஒரு புள்ளியாக இந்தக் கதை எனக்குப் பலமுறை உதவியிருக்கிறது. ‘நான் யார் என்பதை என் அப்பா, அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் அல்லவா? நண்பர்களிடம் கேட்டால் சொல்லமாட்டார்களா? பள்ளிக்கு வந்தால் ஆசிரியர் சொல்ல மாட்டாரா?’ உங்கள் அப்பா, அம்மா யார் என்பதை எப்படி அறிவீர்கள்? உங்கள் நண்பர்கள் யார் என்று எப்படித் தெரியும்? இரண்டு பேர் இரண்டு விதமாகச் சொன்னால் எதை ஏற்பீர்கள்? நீங்கள் எந்தப் பள்ளியில் படிக்கிறீர்கள் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? இங்கே இருக்கும் இவ்வளவு பேரில் உங்கள் ஆசிரியரை எவ்வாறு அடையாளம் காண்பீர்கள்? அவர் உங்களை நினைவில் வைத்திருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
சல்மான் ருஷ்டியின் கதையொன்றில் பல நகரங்கள் கடும் சோகத்தில் மூழ்கியிருந்தன. எந்த அளவுக்கு என்றால் தங்கள் பெயர்களையே மறந்துவிடும் அளவுக்கு. அதேபோல் ஒரு முழு நாடும் தனது கடந்த காலத்தை மறந்துவிடும்போது என்ன நடக்கும்? அந்நாட்டில் வாழும் அனைவரும் தாங்கள் எங்கே வாழ்கிறார்கள் என்னும் உணர்வே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கடந்த காலம் என்றொன்று இருக்காது. நாம் எப்படி இங்கே வந்தோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்னும் அச்சம் கலந்த திகைப்போடு அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கும். கடந்த காலம் தெரியாததால் நிகழ்காலம் அவர்களுக்கு ஒரு புதிராக இருக்கும். நிகழ்காலம் புதிராக இருப்பதால் எதிர்காலம் குறித்து எந்தக் கனவும், எந்தத் திட்டமும் அவர்களிடம் இருக்காது. கடந்த காலம் குறித்த நினைவுகளும் கற்பனைகளும் கலந்ததுதான் வரலாறு. ஒவ்வொரு மனிதனுக்கும் வரலாறு உண்டு. ஒவ்வொரு இடத்துக்கும் வரலாறு உண்டு. ஏன் வரலாறு எனும் கேள்விக்கான எளிய விடை, வரலாறின்றி எதுவுமில்லை என்பதுதான்.
இங்கிருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து செல்வேன். அடுக்கடுக்காகப் பல கேள்விகளை எழுப்புவேன். வரலாறு என்றால் என்ன? வரலாற்றாசிரியர் என்பவர் யார்? வரலாறு என்பது ஆளுமைகளா, நிகழ்வுகளா? ஆளுமை என்றால் ஒருவரைக் குறித்துப் பலவிதமான சித்திரங்கள் கிடைப்பதேன்? ஒரு நாட்டின் வரலாற்றைப் பலரும் பலமுறை பலவிதங்களில் மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே இருப்பது ஏன்? கடந்த காலம் என்பது ஒன்றா, பலவா? ஒரு வரலாறு எவ்வாறு எழுதப்படவேண்டும்? சான்று என்று எதனை அழைக்கமுடியும்? ஓர் ஆளுமை அல்லது நிகழ்வு குறித்துப் பலவிதமான சான்றுகள் கிடைக்கும்போது, அவை ஒன்றுக்கு ஒன்று முரணாக அமைந்திருக்கும்போது எதனைச் சரியென்று ஏற்கவேண்டும்? அதற்கான அளவுகோல் என்ன? வரலாறு எழுதப்படும் முறையும் புரிந்துகொள்ளப்படும் முறையும் எவ்வாறு காலப்போக்கில் மாற்றமடைந்துள்ளன? வரலாறு ஒரு நவீனத் துறையாக வளர்ந்தது எப்படி? அதை எவ்வாறு கற்பது?
வரலாற்றின் அடிப்படை கேள்விகளை எழுப்புவதுதான் என்பதால் கேள்விகள்மூலமாகவும் விடைகள்மூலமாகவும் விவாதங்கள்மூலமாகவும் (ஏனென்றால் பல கேள்விகளுக்கு விவாதங்களே விடைகளாக வந்து சேரும்) வரலாற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தி, என் உரையை முடித்துக்கொள்வேன்.
இன்னொரு பக்கம், ஆசிரியர்களோடும் இதே தலைப்பில் பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறேன். தொடர்ந்து நிகழ்த்தி வருகிறேன். அவர்களோடு இன்னமும் விரிவாக, இன்னமும் ஆழமாக விவாதிக்கவேண்டியிருக்கும். வரலாற்றின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் பாடத்திட்டங்களை எவ்வாறு ஒழுங்கு செய்துகொள்வது, வகுப்புகளை எவ்வாறு திட்டமிட்டுக்கொள்வது, எளிமையாக எவ்வாறு விஷயங்களை மாணவர்களுக்குக் கொண்டு செல்வது, பாடப்புத்தகங்கள் ஏன் சுவையற்றவையாக அமைந்துள்ளன, அவற்றைக் கடந்து அவர்கள் வாசிக்கவேண்டிய நூல்கள் என்னென்ன, பிற இடங்களில் வரலாறு எவ்வாறு கற்பிக்கப்படுகிறது, வரலாற்றைக் கண்டு பலர் அஞ்சுவது ஏன், வரலாறு ஏன் சர்ச்சைக்குரிய ஒரு துறையாக விளங்குகிறது, வரலாறு ஏன் அலுப்பூட்டும் ஒரு பாடமாகப் பலரால் கருதப்படுகிறது உள்ளிட்டவற்றுக்கும் என் உரையாடலில் முக்கியத்துவம் அளிப்பேன்.
0
இந்நூல் பொதுவாசகர்களுடன் நான் மேற்கொள்ளும் ஒரு விரிந்த உரையாடல். ஏன் வரலாறு நாம் அனைவருக்குமானது, அதை ஏன் நாம் அனைவரும் கற்கவேண்டும் என்பதற்கு என்னால் இயன்ற விடைகளை இங்கே அளித்திருக்கிறேன். நான் ஆய்வாளன் கிடையாது. வரலாற்றாசிரியனும் கிடையாது. தொடர்ந்து கற்பதில் ஆர்வமுள்ள ஒரு மாணவன்; கற்றதை என்னால் இயன்றவரை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதில் ஆர்வம் காட்டும் ஓர் எழுத்தாளன். அவ்வளவுதான்.
எனக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையிலும் கற்றுவரும் நூல்களிலிருந்து திரட்டிக்கொண்ட வெளிச்சங்களிலிருந்தும் இந்நூலை உருவாக்கியிருக்கிறேன். குறிப்பாகச் சொல்வதானால்:
1) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நான் எடுத்துவரும் வகுப்புகள்.
2) ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள். வகுப்பறையிலும் வகுப்பறைக்கு வெளியிலும் அவர்களோடு நான் மேற்கொண்டுவரும் விவாதங்கள்.
3) ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களுக்கு மேற்கொண்ட பயணங்களிலிருந்து பெற்றவை.
4) பல்வேறு கருத்தரங்கங்களில் ஒரு மாணவனாகக் கலந்துகொண்டதில் கிடைத்த அனுபவம்.
5) வரலாற்றாளர்களுடன் நான் மேற்கொண்ட நேர்காணல்கள், உரையாடல்கள்.
6) பள்ளி, கல்லூரிப் பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள்.
7) நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள்.
ஓர் எளிய அறிமுக நூலாக மட்டுமே இதனைக் கொள்ளவேண்டும். விரிவாக வாசிப்பதற்கு ஒரு தனிப்பட்டியலை நூலின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.
(தொடரும்)

