Skip to content
Home » முறிந்த பேனா #3 – கொலைக்களம்

முறிந்த பேனா #3 – கொலைக்களம்

எப்படியாவது அந்த வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கிவிட வேண்டும் என்று காவல்துறை மூலமாகத் தொடர் அழுத்தம். ஆனால், என்ன நடந்தாலும் கையெழுத்துப் போடமாட்டேன் என விடாப்பிடியாக நிற்கிறார், தன் மகனின் மரணத்துக்கு நீதிகேட்டு நிற்கும் தந்தை.

‘என் மகனின் உடலில் தடிகளால் அடித்ததற்கான எந்த தடயமும் இல்லை. கார் ஏற்றிய தடம்தான் இருந்தது. என் மகன் உங்கள் கட்சிக்காரன் அல்ல. தயவுசெய்து எதையாவது சொல்லி கணக்கு முடிக்கப் பார்க்காதீர்கள்’ என்று பலமுறை சொல்லிவிட்டார் அந்தத் தந்தை. ஆனாலும், உங்கள் மகனை அடித்துக் கொன்றது விவசாயிகள்தான். உங்கள் மகனை மட்டுமல்ல, மேலும் மூன்று பேரையும் கொன்றுவிட்டார்கள் என்று திரும்ப திரும்பச் சொன்னது காவல்துறை.

ஏன் இந்தக் குளறுபடி? யார் இவர்? என்னதான் நடந்தது? இந்தக் கேள்விகளுக்கு விடை காண நாம் தொடங்க வேண்டிய இடம் ஒரு போராட்டக் களம். தயாராகிக் கொள்ளுங்கள்.

2021ஆம் ஆண்டு. இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களை, அரசு திரும்பப்பெற வேண்டுமென்று நாடு முழுதும் வீதிகளில் விவசாயிகள் போராடி வந்த காலகட்டம் அது. அப்படி ஒரு போராட்டம்தான் அன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பன்பீர்பூர் பகுதியில் நடந்துகொண்டிருந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகளும், செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களும் பாதையில் நடப்போரும் பார்த்தபடி கடப்போரும் என வழக்கமான போராட்டங்களுள் ஒன்றாகத்தான் அதுவும் நடந்து கொண்டிருந்தது. அந்தக் குறுகலான சாலையில் முழக்கங்களுடன் நகர்ந்துகொண்டிருந்தது போராட்டக் குழு. எல்லாம் அமைதியாகத்தான் நிகழ்ந்தன.

சட்டென எங்கிருந்தோ கூட்டத்துக்குள் நுழைந்தது ஒரு எஸ்யூவி ரக கார். சற்றும் வேகம் குறைக்காமல் விவசாயிகள் பேரணியை இடித்துத் தள்ளிவிட்டு பின்னே வந்த இரண்டு வாகனங்களுக்கு வழியமைத்துக் கொடுத்தது. மூன்றும் சீறின. எதிரே வந்த பேருந்தால் கார்கள் வேகம் குறைத்தன. எனினும், இதற்கிடையில் தூக்கியெறியப்பட்ட உடல்கள். எங்கும் கூச்சல். மக்கள் சிதறியபடி ஓட்டம். வாகனத்தைத் துரத்தியபடி ஒரு கூட்டம், அந்தக் கோபத்தில் ஒரு கலவரம் என மிகச்சிறிய நேரத்துக்குள் எல்லாம் முடிந்திருந்தது.

இந்தத் தீடீர் ‘தாக்குதலால்’ காயம்பட்டவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதற்குள், விவசாயிகள் நால்வர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் மூவர் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே மொத்தம் 8 உயிர்கள் பலியாகியிருந்தன. என்ன கணக்கு இடிக்கிறதா? ஆம். இந்த இரண்டு தரப்பிலும் சேராத, ஒருவரும் கொல்லப்பட்டார். அவர்தான் செய்தியாளர் ராமன் காஷ்யப்.

விவசாயிகளைக் கொன்றது போலவே, இந்தச் செய்தியாளரையும் கொன்றுவிட்டது அரசு என்று விவசாயிகள் தரப்பு சொல்ல, எங்கள் கட்சிக்காரர்களைக் கொன்றது போலவே இவரையும் அடித்துக் கொன்றுவிட்டார்கள் கலவரக்காரர்கள் என்றது பாஜக தரப்பு.

இந்த போட்டாபோட்டிக்கு இடையில், போனவர் வரவில்லையே என்று கலங்கத் தொடங்கியது குடும்பம். தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் (12 வயது மகள், 2 வயது மகன்) உடன் அப்பாவும் தம்பியும் இணைந்த இக்குடும்பத்தில் உழைக்கும் ஒரே நபர் அவர்தான். அப்பா விவசாயிதான். ஆனால், நிலமெல்லாம் இப்போது கிடையாது. பிறகெப்படி விவசாயி? நிலத்தை விற்கும் முன்பாக வாங்கிய விவசாயக் கடன் அவரை ஏட்டளவில் இன்னும் விவசாயியாக வைத்திருந்தது. இப்படி ஒரு குடும்பச் சூழலில்தான் ராமன் இதழியலைத் தேர்வு செய்திருந்தார்.

இதற்குமுன் ஆசிரியராகப் பணியாற்றியவர் எனினும் இதழியல் மீதுள்ள விருப்பத்தால், உள்ளூர் சேனல் ஒன்றுக்காகப் பகுதிநேர நிருபராகப் பணியாற்றி வந்தார்.
இதழியல் உலகில் இன்னும் கவனிக்கப்படாத அமைப்பு இந்தப் பகுதிநேர நிருபர்கள் என்றழைக்கப்படும் ஸ்ட்ரிங்கர்கள். இவர்களுக்கு மாதாந்திர ஊதியம் கிடையாது. தரும் செய்தி வெளியிடப்பட்டால் அதற்கென ஒரு சொற்ப பணம் கிடைக்கும். வைப்பு நிதி, காப்பீடு உள்ளிட்ட எந்தவிதமான பணிப்பாதுகாப்பும் இல்லை. ஆனால், நேரடியாக களத்துக்குச் சென்று செய்தியைத் தர வேண்டும். சில சேனல்களில் ஐடி கார்டு மட்டும் தருவதுண்டு.

சொல்லப்போனால், ஸ்விகி, சொமேட்டோ, ஊபர், ஓலா ஊழியர்கள் போல, இவர்கள் இதழியல் துறையின் நிரந்தரமற்ற ஊழியர்கள். அங்கு டெலிவரி செய்தால்தான் பணம். இங்கு இன்னும் ஒருபடி மேல். உணவை உண்டுமுடித்தால்தான் பணம் என்பதுபோல, டெலிவரி செய்யப்பட்ட செய்தி, பயன்படுத்தப்பட்டால்தான் பணம். சிலகோடி முடிச்சுகள் நிறைந்த சிக்கலான பெருங்கதை இது.

இப்படி ஒரு சூழலில்தான் ஒரு ஸ்ட்ரிங்கராக, அன்று செய்தி சேகரிக்கச் சென்றிருந்தார் ராமன் காஷ்யப். அந்தச் செய்தி வெளியான பிறகு, அவருக்குக் கிடைக்கவிருந்த தொகை என்ன தெரியுமா? 500 ரூபாய். (2021இல்).

ராமன் இறப்புக்குப் பின் வெளியான செய்திகளில் ஒன்று, அவர் இறந்துவிட்டதால் 500 ரூபாயை இழந்துவிட்டதாகத்தான் தலைப்பே வைத்தது.

கண்டிப்பாக இந்தச் செய்தி வெளியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது ராமனுக்கு. காரணம், அந்தப் போராட்டத்தின் நிகழ்விடத்துக்கு அருகிலுள்ள ஊரில், மாநிலத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றும் திட்டமிடப்பட்டிருந்தது. அவரது வழியில் கருப்புக் கொடி காட்டுவது இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. எனவே, இந்தச் செய்தியின் காட்சிகள் தேவைப்படும். நிச்சயமாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டுவிடும் என்று எண்ணித்தான் அன்று அந்தக் களத்தில் இருந்தார் ராமன். ஆனால், அதுதான் தனக்கு கடைசி நாளாக இருக்குமென்று அவருக்கு அப்போது தெரியாது.

ஆம். என்ன செய்வது? இப்படியொரு விபத்து நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்தான். விபத்தாகவே இருந்தாலும் இதற்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது என்று நாடு முழுவதும் குரல்கள் எழுந்தன. சரி, யார் இதைச் செய்தது?

இந்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா அந்த வாகனத்தில் இருந்ததாகச் சாட்சியங்கள் தெரிவித்தனர். ஆனால், அவர் அந்த சமயம் விழாவில் இருந்ததாக காவல்துறை அறிக்கை தெரிவித்தது. ஆனாலும், கூட்டத்திலிருந்த பலரும் அது ஆஷிஷ் மிஸ்ராதான் என உறுதியாகக் கூறினர்.

இறுதியில், காவல்துறை விசாரணை போதாதென்று கருதி, இந்த வழக்குக்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) நியமிக்கும் வரை, இதே வாதப்பிரதிவாதங்கள்தான் தொடர்ந்தன.

அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது இந்தக் குற்றச்சாட்டுகள் வருவதற்கு முகாந்திரமும் உண்டு. இந்தச் சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, விவசாயிகளுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை அது: ‘திருந்திவிடுங்கள், இல்லையென்றால் நாங்கள் திருத்துவோம். வெறும் இரண்டே நிமிடங்கள்தான் ஆகும்’. அத்துடன், இந்த மிரட்டலைச் சாதாரணமாக நினைக்காதீர்கள். என் பின்னணி தெரிந்தவர்களுக்கு இது புரியும் என்று நினைக்கிறேன் என்றும் பேசியிருந்தார்.

ஆம், 2000ஆம் ஆண்டில் நடந்த பிரபாத் குப்தா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதன்மையான நபராக இருந்தும், ஓர் இரவுகூட சிறையில் கழிக்காதவர் அவர். எனவே, ஆஷிஷ் மிஸ்ரா இதைச் செய்திருக்கவும் பின்னணியில் அமைச்சர் அஜய் மிஸ்ரா இருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்று யூகங்களும் ‘உறுதிப்படுத்தப்படாத’ தகவல்களும் அப்போது மாறி மாறிப் பரவின. ஆனால், விசாரணையில் உண்மை என்று ‘உறுதிப்படுத்தியது’ எஸ்ஐடி அறிக்கை. அத்துடன், இது ஒரு கோரமான விபத்து என்று நம்பிய பலருக்கும் அதிர்ச்சி தரும்படி, ‘இது ஒரு விபத்தல்ல’ என்ற மிகப்பெரிய திருப்பத்தையும் கொண்டுவந்தது.

இது ஒரு விபத்தே அல்ல. நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தெளிவான சதிச்செயல் என்று இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டது. ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இந்தச் சம்பவத்தில் இருக்கும் தொடர்பும் உறுதிசெய்யப்பட்டு கைது நடவடிக்கையும் நடந்து முடிந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட மூன்று விவசாயச் சட்டங்களையும் இந்திய அரசு திரும்பப்பெற்றுவிட்டது.

ஆனால், இது பாதி வெற்றிதான். இறந்த என் மகனுக்கு நீதி கிடைக்காமல் இது எப்படி முழு வெற்றியாகும் என்ற கேள்வியுடன் காத்திருக்கும் தந்தைக்கு என்ன பதில் சொல்வது?

ஒரு பத்திரிகையாளராகத் தன் கடமையைக் கடைசி நொடி வரை அவர் ஆற்றினார். அவர் எடுத்த காணொளிதான் இந்த மொத்த சதி வழக்கிலும் முக்கியமான ஆதாரமாக மாறிப்போனது. இந்தியா முழுக்க இந்த ஆதாரம் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்டது. வெறும் 500 ரூபாய்க்காக அல்ல. தான் ஆசைப்பட்ட இதழியலுக்காக உயிரை விட்ட ராமன் காஷ்யப்பின் கொலை வழக்கை அரசு தன் போக்கில்தான் கையாண்டது.

உயிரிழந்தோருக்கு 45 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு அரசு என்ன அறிவித்ததோ அதே அளவிலான உதவிகள் ராமன் காஷ்யப் குடும்பத்துக்கும் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஆனால், கடைசிவரை அதை ஒரு பத்திரிகையாளர் மீதான தாக்குதலாகவோ கொலையாகவோ அரசு கருதவேயில்லை.

மதியம் 3 மணிக்கு நடந்த சம்பவம். ஆனால் அதிகாலை 3 மணிக்குத்தான் தந்தைக்குத் தகவல் கிடைத்தது. முதலில் காவல்துறை பாஜகவைச் சேர்ந்தவர் என நினைத்தது. பின்னர் தந்தை வந்து அடையாளம் காட்டியதும் பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல என்று உறுதி செய்தது. ஆனாலும், இவர் கொலைக்கு காரணம் விவசாயிகள்தான் என்று முடிப்பதாகவே, காவல்துறை அறிக்கை இருந்தது. மகனை மீட்டுத்தர இனி முடியாதுதான். ஆனால், அதற்காக ஏதோ ஒரு தரப்பில் வைத்து கணக்கை நேர் செய்தால் போதுமா என்பதுதான் அவரது ஆதங்கமே!

என் மகன் மரணத்தைப் பத்திரிகையாளர் மீதான தாக்குதலாகக் கருதி, தனியாக நீதி விசாரணை வேண்டும் என்று குடும்பம் போராடியது. ஆனால், அரசும் நீதித்துறையும் இந்த வழக்கைப் பொதுவான வன்முறை வழக்குகளுடன் ஒன்றாகவே இணைத்து நடத்தியது.

இவரைச் செய்தியாளராக நீதித்துறை கருதாதது பெரிதல்ல. செய்தி நிறுவனங்களே அப்படிக் கருதவில்லை. எந்த நிறுவனத்துக்காகச் செய்தி சேகரிக்கப்போய் அவர் இறந்தாரோ அந்த நிறுவனம், இவரது இறப்புக்குக்கூட வரவில்லை. முறையான ஆறுதலோ மரியாதையோ செலுத்தவில்லை. ஏறக்குறைய 5 முதல் 6 மாதகாலம் பணிபுரிந்தார் என்ற போதும், அவர் ஒரு ஸ்ட்ரிங்கர்தான் என்பதால் அவருக்கு முறையான பணி நியமனக் கடிதம்கூட வழங்கப்பட்டிருக்காது. இவ்வளவுதான் ஸ்ட்ரிங்கர்களின் அங்கீகாரம்.

ஆஷிஷ் மிஸ்ரா பிணையில் வெளிவந்துவிட்டார். வழக்கு நடந்துகொண்டே இருக்கிறது. அதுவும் விவசாயிகள், பாஜக என்று பயணித்துக் கொண்டிருக்கிறது. பாவம் ஸ்ட்ரிங்கர்களைச் செய்தித்துறையும் கண்டுகொள்ளவில்லை. நீதித்துறையும் கவனம் கொடுக்கவில்லை.

நீதி வரும் காலத்தில் வெறுமனே தீர்ப்பில் மீதியிருக்கும் பெயராக மட்டுமே ராமன் காஷ்யப் இருப்பார். யாரும் இவரை நேரடியாகத் திட்டமிட்டு கொலை செய்தார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், செய்தித்துறையின் இந்த ‘ஸ்ட்ரிங்கர்’ அமைப்புமுறை தன் அலட்சியத்தால் இவரைப் பலவகைகளில் கொன்றுவிட்டது.

ஸ்ட்ரிங்கர்களைத் தமிழில் பகுதி நேர நிருபர்கள், பகுதி நேர செய்தியாளர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால், செய்தியாளர்களுக்குரிய பணிப்பாதுகாப்பும் இல்லை. நிறுவனங்கள் பகுதிநேர ஊழியராகக் கருதி ஊதியமளிப்பதும் இல்லை. எனவே பகுதி நேர செய்தியாளர்கள் என்று இனி ஸ்ட்ரிங்கர்களைச் சொல்வது பொருத்தமான பதமாக இருக்காது. ‘களத் தகவலர்’ என்று பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை.

எந்த விதமான பாதுகாப்பும் இன்றி களத் தகவலர்களைப் பயன்படுத்தும் அறமற்ற நிறுவனங்களின் இதயமற்ற இதழியலால், காரேற்றி களபலியாக்கப்பட்ட காஷ்யப்பின் கதை, நாடு முழுக்க இருக்கும் அனைத்து களத் தகவலர்களின் பணிவாழ்க்கைப் பாதுகாப்புக்கான ஒரு சோற்றுப் பதம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *