1911, ஜூன் 18ஆம் தேதி, மாலை 6 மணி. வடக்குக் கேரளத்தின் கண்ணனூர் சிறைச் சாலை.
‘சிதம்பரம் பிள்ளை … சிதம்பரம் பிள்ளை’ எனச் சத்தமாகச் சிறை வாசலில் யாரோ அழைக்கும் சப்தம் கேட்டு வ.உ.சி. கண் விழித்தார். சிறைக் கம்பிகளின் அருகே சென்று பார்த்தார். சிறையின் இளநிலை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தார்.
‘உங்களுக்கு ஆட்சியர் ஆஷைத் தெரியுமா?’ என்று கேட்டார்.
‘நன்றாகத் தெரியும்’ பதிலளித்தார் வ.உ.சி.
‘எப்படி?’
‘நான் இங்கே அடைக்கப்பட்டதற்கும், சுதேசி கப்பல் நிறுவனத்தின் அழிவிற்கும் அவர்தான் காரணம்.’
‘நேற்று மணியாச்சி ரயில் சந்திப்பில் யாரோ ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.’ அதிர்ச்சியுடன் கூறினார்.
கண்கள் விரியக் கேட்ட வ.உ.சி, மெல்லிய புன்னகையுடன், ‘நீங்கள் எனக்கு ஒரு நல்ல செய்தியைக் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் நீண்டகாலம் வாழ்க’ என்றார்.
வ.உ.சியின் பதிலில் இருந்த மகிழ்ச்சி அதிகாரியைக் கொதிப்படையச் செய்தது. ஏற்கெனவே கோவைச் சிறைச் சாலையில் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம். பின்னர் இங்கே 1910ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதல் சிறைத் தண்டனை. இருந்தாலும் என்னவொரு ஆணவம், மகிழ்ச்சி இவருக்கு? என எண்ணினார் அதிகாரி.
‘இப்பொழுதே மன்னரின் முடிசூட்டு நாளை முன்னிட்டு நடைபெற இருக்கும் உங்களது விடுதலை மனுவை ரத்து செய்கிறேன்’ என எச்சரிக்கை விடுத்தார். அதற்குச் சற்றும் அசராமல் ‘எனது வாழ்நாள் முழுதும் சிறையிலேயே கழிக்க நேர்ந்தாலும் எனக்குக் கவலையில்லை’ எனப் பதிலுரைத்துத் திருப்பியனுப்பினார் வ.உ.சி.
நன்றியுணர்விலும் பெருந்தன்மையிலும் சிறந்த மனிதர் வ.உ.சி. இருந்தும் அப்படி மகிழ்ச்சியெனக் கூறக் காரணம், கொடுஞ்சிறை வாழ்க்கையைவிடச் சுதேசிக் கப்பல் எனும் தொலைநோக்குத் திட்டம் கரைந்து கொண்டிருப்பது அவருக்குக் கோபத்தையும் வேதனையையும் தந்துகொண்டிருந்ததே.
ஆஷ் படுகொலை குறித்த விசாரணையைத் தமிழகம் முதல் புதுச்சேரி வரை துருவித் துழாவி நடத்திக்கொண்டிருந்தனர் ஆங்கிலேயர்கள். ஆட்சியர் ஆஷின் படுகொலை தமிழகத்தில் பெரும் அதிர்வை, ஆங்கிலேயர்களுக்கு மட்டுமல்ல தமிழர்கள் பலருக்கும் ஏற்படுத்தி இருந்தது என்பதில் எள்ளளவும் ஆச்சரியமில்லை. சுதேசிய இயக்கத்தில் இருந்தோர், சுதேசி கப்பல் நிறுவனத்தில் பங்குகள் வாங்கியோர், மிதவாதிகள், வ.உ.சியோடு தொடர்பிலிருந்தவர்கள் எனப் பலரும் பயத்தில் இருந்தனர்.
ஆங்கிலேயர்களின் தேடுதல் வேட்டையைத் துரிதப்படுவதைக் கண்டு நம்மையும் கைது செய்துவிடுவார்கள் என்ற நடுக்கத்தில், ஆஷின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் ஏராளம் என்கின்றன குறிப்புகள். அது மட்டுமின்றி, தங்கள் விசுவாசத்தைக் காட்டிட ஆஷின் சவப்பெட்டியையும் சுமந்துசென்றனர். இன்னும் ஒருபடி மேலே சென்று ஆஷுக்கு நினைவிடம் அமைக்க வசூலித்த ரூ.3002 தொகையைக் கொடுத்த 38 பேரில், ஒரேயொருவர் மட்டுமே ஐரோப்பியர். மற்ற அனைவரும் நம்மவர்களே. விசுவாசத்தைக் காட்டுவதில் ஆங்கிலேயர்களையே விஞ்சினர்.
உயிர் பயம் அவர்களைக் கொன்றுகொண்டிருந்தது. என்பிலியாய் துடித்துக் கொண்டிருந்தனர். மறுபக்கம் படுகொலை செய்த வாஞ்சிநாதனுக்கு இறுதிச் சடங்குகளைக்கூடச் செய்ய மறுத்துவிட்டார் அவரது தந்தை ரகுபதி ஐயர்.
பாளையங்கோட்டையில் உள்ள ஆங்கிலத் தேவாலயத்தில் ஆஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஏப்ரல், 1912 அன்று அடிக்கல் நாட்டப்பட்ட ஆஷின் நினைவிடம், 28 ஆகஸ்ட் 1913 அன்று ஆட்சியராகப் பதவியேற்ற ஜே.சி.மோலோனியால் திறந்து வைக்கப்பட்டது. ‘தென்னிந்தியாவில் இதுவரை நடந்ததிலேயே மிகவும் கொடூரமான அரசியல் குற்றம்’ என்று அவர் ஆஷின் கொலையைக் குறிப்பிட்டார். ஆஷ் அடக்கம் செய்யப்பட்ட தேவாலயத்தில், அவரது சக அதிகாரிகள் கல்லறைக் கல் ஒன்றை எழுப்பினர். இதற்கிடையில் தூத்துக்குடி நகராட்சி ஒரு பிரம்மாண்டமான நினைவிடத்தை எழுப்பத் திட்டமிட்டது. இறுதியில், பிரதான கிரேட் காட்டன் சாலையின் கிழக்கு முனையில் ஒரு தோட்டத்தில் எண்கோண மண்டபம் மட்டுமே கட்டப்பட்டது.
ஆஷின் படுகொலைக்கு எதிர்வினையாற்றப் பல்வேறு அடக்குமுறைகளை வேகமாக ஆங்கிலேய அரசு எடுத்ததற்குக் காரணமுண்டு. இதற்கு முன்னர் இந்தியாவில் குறிப்பிடும்படி நடந்தேறிய கலவரங்கள், கலகங்களுக்கு ஆங்கிலேயர்களின் தூக்கத்தைத் தொலைக்கச் செய்த வரலாறு இருந்தது. குறிப்பாக 1806இல் நடந்தேறிய வேலூர் கலகம், அதன் பின்னர் 1857இல் நடந்த சிப்பாய்க் கலகம் இரண்டையும் சொல்லலாம். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாகக் கிளர்ச்சி நீடித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. சிப்பாய் கலகம் இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது. சிப்பாய்க் கலகம் நடப்பதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்தியர்களை நிர்வாகம் மற்றும் சட்டரீதியான அனைத்துப் பதவிகளிலிருந்தும், அதிகார அமைப்புகளிலிருந்தும் வெளியேற்றிய கார்ன்வாலிசின் சீர்திருத்தமே கிளர்ச்சி உருவாக மூலக் காரணம் எனலாம். இரண்டாவதாக, சிப்பாய்களின் கைகளில் இருந்த என்ஃபீல்டு ரகத் துப்பாக்கித் தோட்டாக்களின்மேல் பசுக் கொழுப்பும், பன்றிக் கொழுப்பும் தடவப்பட்டதாகச் சொல்லப்படும் வதந்தியே முக்கியக் காரணமென வரலாற்றாய்வாளர்கள் பெரும்பாலானோர் பதிவு செய்கின்றனர்.
தோட்டாவைத் துப்பாக்கியில் வைத்துச் சுடுவதற்கு முன்பு வெடிமருந்து இருக்கும் பகுதியின் பின்புறத்தைக் கடித்து இழுக்க வேண்டும். தோட்டாக்களில் பசுவின் கொழுப்பைத் தடவியிருப்பதாக வந்த செய்திகள் இந்திய சிப்பாய்களின் மத உணர்வைப் புண்படுத்தின. மே 10, மீரட்டில் நடந்த சிப்பாய்க் கலகம் அவ்வளவு எளிதாக அடங்கவில்லை. ஆங்கிலேயர்களால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. முடிவில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே ஒற்றுமையில்லாத காரணத்தினால் தோல்வியடைந்தது. கலகங்கள், எழுச்சிகளின் விளைவாக உருவான பதற்றம்தான் பின்னர் கிளர்ச்சிகளாகவும், அரசியல் வன்முறைகளாகவும் வெளிப்பட்டன. இதன் விளைவாய் கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர் (1775 – 1862) பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கிடைத்த சரியானதொரு சந்தர்ப்பத்தை பிரிட்டிஷ் அரசு நழுவ விடவில்லை. விக்டோரியா மகாராணி தன்னை இந்தியாவின் பேரரசியாக அறிவித்துக்கொண்டார். 1858இல் நவம்பர் 1 அன்று விக்டோரியா மகாராணி பிரகடனத்தை வெளியிட்டார். பிரிட்டிஷ் கிழக்கிந்திய ஆட்சிக்கு முடிவு கட்டினார்.
இந்தியர்களை இனி பிரிட்டிஷாருக்கு எதிராகக் கலகங்களோ, எழுச்சியோ ஏற்படாதவாறு நிர்வகிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பிரகடனத்தின் பின் ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை உணர்ந்த இந்தியர்கள், ஆங்காங்கே தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 27 ஆண்டுகளுக்குப் பின் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆலன் ஆக்டெவியன் ஹியும் என்பவரால், இந்தியர்களுக்கான உரிமைகளை அமைதியான வழியில் பெறும் பொருட்டு 1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் காங்கிரஸ் இயக்கம் தொடங்கப்பட்டது.
பம்பாயில் காங்கிரசின் முதல் தேசியக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 72 பிரதிநிதிகள் இந்தியா முழுவதிலுமிருந்து கலந்துகொண்டனர். இந்தியக் காங்கிரஸ் உருவானது. பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாக இருப்போம் என உறுதியளித்தனர். ஆயினும் வருங்காலத்தில் முழுச் சுதந்திரத்தைக் கோரியதும் இதே காங்கிரஸ்தான் என்பது தனி வரலாறு. ஒரு கலகத்தின் விளைவாய் இந்தியா, விக்டோரியா மகாராணியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் என்கிற பேரியக்கமும் தோன்றியது. இவ்வாறு அரசியல், பொருளாதாரம், மத உணர்வு, தேசிய உணர்வு ஆகிய அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய அழுத்தத்தின் விளைவாகவே ஆஷ் கொலை போன்ற சம்பவங்களும் அதன்பின் நிகழ்ந்தவையும்.
தென்னிந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த ஒரே கொலைச் சம்பவம் எனலாம். ஆங்கிலேயர்களால் வேகமாக ஒடுக்கப்பட்டது. சுப்பிரமணிய பாரதி குறிப்பிட்டதுபோல ‘மெட்ராஸ் மாகாணத்தில் பயங்கரவாத இயக்கம் பிறக்கும்போதே இறந்து விட்டது’ எனச் சொல்லலாம். நாம் வ.உ.சியை, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றே பள்ளிப் படிப்பில் மதிப்பெண் பெறும் குறுகிய மனப்பாங்குடன் அறிந்து வைத்திருக்கிறோம். அவரின் பின்புலம், இளமைக் காலம், சுதேசிக் கப்பல் வாங்குவதற்கு எதிர்கொண்ட இன்னல்கள், நெல்லை எழுச்சி, கடுங்காவல் தண்டனை என்பன போன்றவற்றை அறிந்திருக்க மாட்டோம். அடுத்தடுத்த அத்தியாயங்களில் அதனைக் காண்போம்.
(தொடரும்)

