பெரியசாமித் தூரன் என்கிற பெ.தூரன் மிகப்பெரிய தமிழறிஞர். பாரதி ஆய்வாளர்களில் முதன்மையானவர். தம் பாடல்கள் வழியாக தமிழிசை இயக்கம் வேரூன்றக் காரணமாக இருந்தவர். அதற்காக எண்ணற்ற இசைப்பாடல்களை அவர் இயற்றினார். ‘முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’ என கோவில்தோறும் ஒலிக்கும் பாடலை எழுதியவர் அவர்தான்.
தூரன் ஆற்றல் மிக்க மரபுக்கவிஞர். பாரதியாரை அடுத்து உருவான நாமக்கல் கவிஞர் மரபுவழியில் எழுதிய முக்கியமான கவிஞர். அவர் குழந்தைகளுக்கான பாடல்களையும் இயற்றினார். முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் உழைத்து, தமிழின் முதல் நவீன கலைக்களஞ்சியத்தையும் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியத்தையும் அவரே உருவாக்கினார்.
23 மார்ச் 1931 அன்று பகத்சிங், சுகதேவ், இராஜகுரு மூவரையும் அன்றைய ஆங்கில அரசு தூக்கிலிட்டபோது, அதை எதிர்த்து நாடெங்கும் பரவிய மாணவர் கிளர்ச்சியில் தூரனும் பங்கேற்றார். அதன் விளைவாக, கல்லூரிப் பட்டப்படிப்பை முடிக்காமலேயே வெளியேறினார். அதைத் தொடர்ந்து தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் தொடங்கிய ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1934ஆம் ஆண்டில் காந்தியடிகள் ஹரிஜன நிதி திரட்டும்பொருட்டு கோவைக்கு வந்தபோது, அவருக்கு வரவேற்புரை ஆற்றி அவருடைய உரையையும் தமிழில் மொழிபெயர்த்தார்.
ஜாக் லண்டன் எழுதிய The Call of the Wild என்னும் நாவலை ‘கானகத்தின் குரல்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர் தூரன். அது இன்றளவும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் முக்கியமான நூல்களில் ஒன்றாக இருக்கிறது. கவிதை, சிறார் பாடல், கட்டுரை, சிறுகதை என்று பல வடிவங்களிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தூரன் எழுதியிருக்கிறார்.
கதையம்சமும் கட்டுரையம்சமும் ஒருங்கே பொருந்திவந்த சொல்லோவியங்களைத் தீட்டுவதில் தூரனுக்கு நல்ல திறமை இருந்தது. பாத்திரச்சித்தரிப்புகளாகவும் காட்சிச்சித்தரிப்புகளாகவும் அமைந்த அந்தச் சொற்சித்திரங்களுக்கு வாசகர்களிடையில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. ‘தூரன் எழுத்தோவியங்கள்’ என்னும் தலைப்பிலேயே அவருடைய நூலொன்று அமுத நிலையம் வழியாக 1959ஆம் ஆண்டில் வெளிவந்தது. எழுதப்பட்டு அறுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அந்த எழுத்தோவியங்கள் இன்றும் மங்காமல் உயிரோட்டத்துடன் உள்ளன.
அந்தப் புத்தகத்தில் பத்து எழுத்தோவியங்களும் மூன்று குறு நாடகங்களும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமையில் அமைந்து தூரனின் எழுத்தாற்றலை இந்த உலகுக்குத் தெரிவித்தபடி உள்ளன.
0
முதல் எழுத்தோவியமான ‘அன்னை தந்த ஒளி’ ஒரு கிராமத்தில் வாழும் அறிவு வளர்ச்சி குறைந்த இளைஞனொருவனின் செயல்பாடுகளை வாசிப்பவர்களின் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.
கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் அந்த இளைஞனைச் சொங்கப்பன் என்று பெயரிட்டு அழைத்தனர். அவனுடைய உண்மையான பெயர் என்ன என்பதே அவனுக்குத் தெரியாது. தன்னுடைய சொந்த ஊர், பெற்றோர் பற்றிய விவரங்கள் எதுவுமே அவனுக்கும் தெரியாது. எந்தக் கேள்விக்கும் அவன் மிகவும் நிதானமாக யோசித்த பிறகே பதில் சொல்வான். வேகம் என்பதே அவன் வாழ்க்கையில் இல்லை. ஆனால் வேலை என்று வந்துவிட்டால் வஞ்சகமில்லாமல் உழைப்பான்.
பத்து வயதில் ஆதரவில்லாமல் காட்டுப்பாளையம் என்கிற அந்த ஊருக்கு வந்து சேர்ந்தவன் அவன். அந்த ஊரைச் சேர்ந்த பெரிய பண்ணையார் அவனுக்குச் சோறு போட்டு தம் வயற்காட்டிலேயே வைத்துக்கொள்கிறார். அன்றுமுதல் வயல்வேலைகள் அனைத்தையும் அவன் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யத் தொடங்குகிறான். வேளை தவறாமல் அவனுக்குச் சாப்பாடு கிடைத்துவிடுகிறது. அதுவே போதும் என்கிற ஆனந்தமயக்கத்தில் அவன் வயலில் பாடுபடுகிறான். அவனுடைய செயலின் வேகத்தையும் கச்சிதத்தையும் பார்த்த பண்ணையார் தன் பண்ணையிலேயே அவன் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துகொடுக்கிறார்.
சொங்கப்பனின் மந்தம் நிறைந்த பேச்சின் காரணமாக, அவனை பேச்சுக்கிழுத்து வம்பு வளர்ப்பது அந்த ஊர் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்காகிவிடுகிறது. ஒருநாள் யாரோ ஒருவன் ‘நீ யாரு? உங்கப்பா யாரு? உங்கம்மா யாரு? ‘ என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறான். இருட்டு நேரத்தில் காட்டு வழியில் அகப்பட்டதுபோல அக்கேள்விகள் அவன் மூளையில் சிக்கிக்கொண்டுவிடுகின்றன. பதில் சொல்லமுடியாமல் தத்தளித்தபடி இருக்கிறான் சொங்கப்பன்.
அந்தக் கூட்டத்தில் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த யாரோ ஒருவன் சொங்கப்பனுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு ‘சொங்கப்பனை சங்கம்புதரிலிருந்து எடுத்துவந்திருப்பாங்க’ என்று கேலி செய்வதுபோல ஒரு பதிலைச் சொல்கிறான். அந்தக் கிராமத்தில் யாருக்கும் வேண்டாத பூனைக்குட்டிகளையும் நாய்க்குட்டிகளையும் பல பொருட்களையும் ஊருக்கு வெளியே இருக்கும் சங்கம்புதரில் வீசியெறிவது ஒரு வழக்கம். பெரிய பண்ணையாரின் கட்டளைக்கிணங்கி பல குட்டிகளை அவனே அந்தப் புதரில் கொண்டுவந்து வீசியிருக்கிறான். அதையெல்லாம் நினைத்துப் பார்த்த சொங்கப்பன் ’ஆமாமாம். நான் சங்கம்புதரில் பிறந்தவன்’ என்று சொல்கிறான். எல்லோரும் அவனுடைய பதிலைக் கேட்டு சிரிக்கிறார்கள். அவனும் அவர்களோடு சேர்ந்து சிரித்துவிட்டுச் செல்கிறான்.
அதே ஊரில் ராமாத்தா என்ற பெயருடைய ஆப்பக்காரி வசித்து வருகிறாள். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளிலேயே கணவனைப் பறிகொடுத்தவள் அவள். குழந்தைகளும் இல்லை. தனிக்கட்டையாகவே அக்கிராமத்தில் அவள் காலம் கழித்துவருகிறாள். காலையில் மாவுச்சட்டியை வைத்திருக்கும் கூடையைத் தலைமீது சுமந்து சென்று சந்தைமுக்கில் மரத்தடியில் உட்கார்ந்து ஆப்பம் சுட்டு வியாபாரம் செய்வாள். ஏதோ ஒரு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதால் அவளும் சோர்வில்லாமல் உழைத்துவருகிறாள்.
முதுமையின் காரணமாக அவள் உடல் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ச்சியடையத் தொடங்குகிறது. முன்புபோல மாவுக்கூடையைத் தூக்கிக்கொண்டு செல்லமுடியாமல் தடுமாறுகிறாள். தற்செயலாக அதைக் கவனித்த சொங்கப்பன் வேகமாக அவளை நெருங்கிவந்து, அவள் தலையிலிருந்த கூடையை இறக்கி தன் தலையில் ஏற்றிவைத்துக்கொண்டு சந்தைவரைக்கும் சுமந்துசெல்கிறான். வழக்கமாக அவள் கடைவிரிக்கும் மரத்தடியில் கூடையை வைத்துவிட்டு திரும்பிக்கூடப் பார்க்காமல் கிராமத்துக்குத் திரும்பிவிடுகிறான். சுமைகூலியாக எவ்வளவு பணம் கேட்பானோ அல்லது சாப்பிடுவதற்கு எத்தனை ஆப்பம் கேட்பானோ என நினைத்து நினைத்து ராமாத்தா சங்கடப்படுகிறாள்.
ஆனால் சொங்கப்பன் ஒருவார்த்தைகூட வாய்திறந்து பேசவில்லை. கூடையை இறக்கிவைத்துவிட்டு மெளனமாகச் சென்றுவிடுகிறான். ஒருநாள் அல்ல, இருநாள் அல்ல, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் ராமாத்தாவுக்கு உதவியாக அவன் கூடையைச் சுமந்துவருகிறான்.
ராமாத்தா மெல்ல மெல்ல அவனைப் புரிந்துகொள்கிறாள். ஒருவித தாய்மையுணர்வு அவள் நெஞ்சில் சுரக்கிறது. அவனைத் தன் மகனாகவே நினைத்துக்கொள்கிறாள். அவன் வயிறார உண்ணும் வகையில் ஒருநாளாவது ஆப்பம் சுட்டுத் தரவேண்டும் என நினைக்கிறாள். ஆனால் அவன் எதையும் அவளிடம் எதிர்பார்ப்பதில்லை.
ஒருநாள் அவள் உடல்நலம் கெட்டு படுத்த படுக்கையாகிறாள். அவளை விசாரிக்கவந்த சொங்கப்பனிடம் படுத்தவாக்கிலேயே அரிசி ஊறவைக்கவும் அரைக்கவும் சொல்லிக்கொடுக்கிறாள். அடுத்தநாள் முதல் ஆப்பக்கடை இயங்கப்போகிறது என்கிற மகிழ்ச்சியில் அவனும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறான். அடுத்தநாள் உற்சாகமாக அவளுடைய வீட்டை அடைகிறான். ஆனால் அன்றும் அவள் படுத்த படுக்கையாகவே இருக்கிறாள். சொங்கப்பனையே அடுப்பைப் பற்றவைக்கச் சொல்லி அவனுக்கு ஆப்பம் சுடுவதற்குச் சொல்லிக் கொடுக்கிறாள் ராமாத்தா. பிறகு தட்டில் அடுக்கிய ஆப்பங்களையும் அவனையே சாப்பிட வைக்கிறாள். அவன் ஆர்வத்துடன் உண்ணுவதைப் பார்த்து ராமாத்தாவுடைய கண்களும் மனமும் நிறைகின்றன.
அவன் உண்டுமுடிக்கும் வரைக்கும் காத்திருக்கும் ராமாத்தா, அவனிடம் வீட்டு மூலையில் உள்ள ஒரு பள்ளத்தைக் காட்டி, அந்த இடத்தில் வாழ்நாள் முழுதும் தான் சம்பாதித்துச் சேர்த்த இரண்டாயிரம் ரூபாயைப் புதைத்து வைத்திருப்பதாகவும் தன் மரணத்துக்குப் பிறகு அந்தப் பணத்தை அவன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறாள். நல்லதொரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொண்டு இல்லறவாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்றும் அவனுக்குச் செய்யும் உதவியால்தான் தனக்கு மோட்சம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறாள். அவள் சொற்கள் எதுவும் அவனுக்குப் புரியவில்லை. ஆயினும் தனக்கு நல்லது நடக்கவேண்டும் என்கிற ஏதோ எண்ணத்தில்தான் எல்லாவற்றையும் அவள் செய்கிறாள் என்று மட்டுமே நம்பிக்கையாக இருந்தது.
அதன் பிறகு, ஆப்பக்கூடையைத் தூக்கிக்கொண்டு ராமாத்தாவோடு சந்தைக்குச் செல்லும் வாய்ப்பு அவனுக்கு அமையவே இல்லை. சில நாட்களிலேயே அவள் இறந்துவிடுகிறாள். யாருக்கும் தெரியாமல் அந்தப் பணத்தை எடுத்துச் சென்று அதே ஊரில் உள்ள கோவில்பணிகளுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிடுகிறான் சொங்கப்பன். அவனுடைய உளறல் பேச்சின் வழியாக ராமாத்தாவின் வீட்டில் புதையல் இருப்பதைத் தெரிந்துகொண்டு இரவு நேரத்தில் வந்த கள்வர்கள் அவனைப் பிடித்துத் தாக்குகிறார்கள். அவன் முதுகெலும்பு உடைந்துபோகிறது. பழையகாலம் போல அவனால் விசையோடு வேலை செய்ய முடிவதில்லை. ஆயினும் பெரிய பண்ணையார் அவனுக்காக மனம் இரங்கி, ஆதரவு காட்டி தன்னோடே வைத்துக்கொள்கிறார்.
அன்றுமுதல் மனித இயல்புக்கு எட்டாத ஓர் அமைதி சொங்கப்பனின் முகத்தில் குடிகொள்கிறது. மாலை நேரத்தில் அம்பாள் கோவிலில் மணியோசை எழும்போதெல்லாம் அவன் கண்களில் ஒரு பரவச ஒளி தோன்றி நிறைகிறது. கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவருமே அந்தப் பிரகாசத்தைக் கண்டு அவனை மிகுந்த மதிப்புடன் நடத்தத் தொடங்குகிறார்கள். சமுதாயத்தில் ஆரம்பக்காலத்தில் கேலியும் கிண்டலுமாகப் பார்க்கப்பட்ட ஒருவன், அதே சமுதாயத்தால் கௌரவத்தோடு பார்க்கப்படுகிறான். தமிழில் எழுதப்பட்டிருக்கும் மானுடச் சித்திரங்களில் சொங்கப்பனின் சித்திரம் மகத்தான ஒன்று. அந்தப் பெருமை தூரனையே சாரும்.
0
சொங்கப்பனைப்போலவே அபூர்வமான இன்னொரு கிராமத்து மனிதன் முத்துசாமி. கிட்டத்தட்ட ஒரு நாவலாக எழுதக்கூடிய அளவுக்கு அவன் வாழ்வில் ஏராளமான திருப்பங்களும் தியாகங்களும் அமைந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் சுருக்கி சாராம்சப்படுத்தி சின்னஞ்சிறு சொற்சித்திரமாக ‘விதியின் பிழை’ என்னும் தலைப்பில் தூரன் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையும் இப்புத்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
அக்கட்டுரையில் முத்துசாமியை ஒரு சிறைக்கைதியாகத்தான் முதலில் காட்டுகிறார் தூரன். ஒரு கொலையைச் செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்று அந்தச் சிறைக்கு வந்தவன் அவன். அவனுக்குத் தூக்குத்தண்டனைதான் கிடைத்திருக்கவேண்டும். ஆயினும் அப்போது அவன் பதின்ம வயதின் இறுதியில் இருந்ததால் நீதிபதிகள் பரிவு காட்டி அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிவிட்டனர்.
சிறையில் அவனைப் பார்த்தவர்கள் அனைவருமே ஆச்சரியத்தில் மூழ்கிவிடுகிறார்கள். ஒரு குற்றவாளிக்குரிய எந்த அம்சமும் அவனிடம் இல்லை. சிறைவாசிகள் அனைவருமே இவனால் ஒரு கொலையைச் செய்யமுடியுமா என்று புரியாமல் குழம்புகிறார்கள். பதினைந்து ஆண்டுகள் அவன் சிறையிலேயே கழிக்கிறான்.
அதே சிறையில் மாரியப்பன் என்னும் வயது முதிர்ந்த கைதியும் இருக்கிறான். எப்போதும் கசப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்தியபடி இருப்பவன் அவன். எப்படியோ மாரியப்பனுக்கும் முத்துசாமிக்கும் இடையில் நட்பு உருவாகி வலுப்பெறுகிறது. முத்துசாமியின் விடுதலைச் செய்தி அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘விடுதலையாகி வெளியே சென்று என்ன செய்யப் போகிறாய்? ‘ என்று கேட்கிறான் மாரியப்பன். ‘எனக்குச் சொந்தமாக நிலம் இருக்கிறது. அதில் பயிரிட்டு ஒரு விவசாயியாக வாழ்வேன்’ என்று நம்பிக்கையோடும் மனக்கிளர்ச்சியோடும் பதில் சொல்கிறான் முத்துசாமி.
விடுதலையாகி கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்ற முத்துசாமி ஒருசில நாட்களிலேயே மீண்டும் கைதியாக சிறைக்கு வந்து சேர்கிறான். ஒருவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறைத்தண்டனைக்கான காரணம் புரியாமல் குழம்புகிறார்கள்.
ஒருநாள் மாரியப்பனும் முத்துசாமியும் தனிமையில் உரையாடும் வகையில் சூழல் அமைகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சிறைக்கு வந்த காரணத்தையும் இப்போது சிறைக்கு வந்த காரணத்தையும் முத்துசாமி முதன்முறையாக, விரிவாக அவனிடம் சொல்லிப் பகிர்ந்துகொள்கிறான். அதன் வழியாகத் தன் மனச்சுமையைக் கரைத்துக்கொள்ள நினைக்கிறான்.
முத்துசாமியின் பெற்றோர் அவன் சிறியவனாக இருக்கும்போதே இறந்துவிட்டனர். சித்தப்பாவின் பராமரிப்பில் அவன் வளர்கிறான். முத்துசாமி வளர்ந்து வாலிப வயதைத் தொட்டபோது, குடும்பச்சொத்து முழுவதையும் வசப்படுத்திக்கொள்ள விழையும் சித்தப்பாவின் தந்திரத்திட்டத்தை அவன் மெல்ல மெல்லப் புரிந்துகொள்கிறான். அதற்குள் அந்தச் சித்தப்பாவின் சதிவலையில் அவன் சிக்கிவிடுகிறான். ஊரில் நிகழ்ந்த ஒரு கொலைக்கும் அவனுக்கும் தொடர்பு இருப்பதாக அந்தச் சித்தப்பாவே கதைகட்டி முத்துசாமி சிறை புகக் காரணமாக இருக்கிறார். பணத்தை இறைத்து பொய் சாட்சிகளை உருவாக்கி, அவனுக்குத் தண்டனை கிடைக்கவும் செய்கிறார். பிறகு எல்லாச் சொத்துகளையும் தன் குடும்பமே கட்டியாள வழிசெய்துகொள்கிறார். இதுவரை ஒரு கட்டம்.
விடுதலை பெற்று கிராமத்துக்குத் திரும்பும் முத்துசாமியின் மனத்தில் ஒரே ஆசைதான் இருந்தது. தனக்குச் சொந்தமான நிலத்தில் தாமே உழைத்துச் சாப்பிடுவதுதான் அந்த ஆசை. ஆனால் அதற்கு வழியில்லை என்பதை அவன் ஊருக்குத் திரும்பிய கணத்திலேயே புரிந்துகொள்கிறான். தொடக்கத்தில் தன் அத்தை மகளைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது அவனுடைய ஆசையாக இருந்தது. எதிர்பாராத விதமாக, தண்டனை பெற்று அவன் சிறைக்கு வந்துவிட்ட காரணத்தால் அப்பெண்ணைத் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார் சித்தப்பா.
ஆனால் விதி வேறொரு கணக்கு போட்டுவைத்திருந்தது. சித்தப்பாவின் தந்திரத்தைப் புரிந்துகொண்ட அத்தை மகள் அவர் இருக்கும் வீட்டில் தன்னால் வாழமுடியாது என்றும் தனிக்குடித்தனம் சென்றால் சேர்ந்து வாழலாம் என்றும் தன் கணவனிடம் எடுத்துரைக்கிறாள். அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தன் மகன் வீட்டைவிட்டு வெளியேறிவிட, சொந்த வீட்டில் ஆதரவற்றவராக விடப்படுகிறார் சித்தப்பா. தன் மீது வைத்திருக்கும் ஏதோ ஒரு பற்றுதான் அவளை இந்தப் பழியுணர்ச்சிக்குத் தூண்டியிருக்கவேண்டும் என்று நினைக்கிறான் முத்துசாமி. அந்தப் பற்றை எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்று தோன்றுகிறது அவனுக்கு. அது மட்டுமல்ல, மேலும் அவனுக்கு, தனக்குரிய வயலில் தனியே பயிரிட்டு விவசாயம் பார்க்கும் அளவுக்கு எதுவும் தெரியவில்லை. எப்போதும் சிறைக்கூடத்தில் இன்னொருவர் ஏவலுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்து பழகிய அவனால் எதையும் சுதந்திரமாகச் செய்ய இயலவில்லை.
அத்தம்பதியினருக்கு ஓடிப் பிடித்து விளையாடும் மகனொருவன் இருக்கிறான். ஒருநாள் எல்லோருடைய முன்னிலையிலும் அச்சிறுவனைப் பிடித்து கொலைசெய்ய முற்படுவதுபோல நடிக்கிறான் முத்துசாமி. அதைப் பார்த்த அனைவருமே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்பவர்களாக மாறிவிடுகிறார்கள். அதன் விளைவாக அவனுக்குக் கிடைத்த தண்டனை அவனுடைய இரண்டாவது சிறைவாசத்துக்கான காரணமாகிறது.
இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு தண்டனைக்கைதி அந்தச் சிறைக்குள் நுழைகிறான். முத்துசாமியைப் பார்த்ததும் சிரித்தவாறு ‘உன்னுடைய சித்தப்பாவைக் கொன்றுவிட்டேன். இருபதாண்டுகளுக்கு முன்பாக பொய் சாட்சி சொன்னதற்காக எனக்கு எழுதிவைப்பதாகச் சொன்ன நிலத்தை உன் சித்தப்பா கடைசிவரை எழுதிவைக்கவே இல்லை. அதனால் அவருடைய கணக்கை முடித்துவிட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே செல்கிறான்.
ஒருவருடைய பேராசை எந்த எல்லைவரைக்கும் மானுடரைத் துரத்தியடிக்கிறது என்பதை நேருக்குநேர் காட்சிப்படுத்திவிடுகிறார் தூரன். இத்தகு குற்றங்களுக்கான காரணம் மனிதப்பிழையா, விதியின் பிழையா என பிரித்தறிவது கடினம். ஒரு விவாதப்புள்ளியை நோக்கிக் கொண்டுவந்து நிறுத்துகிறார் தூரன்.
0
ஒரு புலிக்கும் ஒரு வேட்டைக்காரனுக்கும் இடையில் நிகழும் போரை ஒரு துப்பறியும் கதைக்குரிய விறுவிறுப்போடும் சுவாரசியத்தோடும் ‘பஞ்சுக்காலன்’ என்னும் கட்டுரையில் எழுதியிருக்கிறார் தூரன். இங்கே பஞ்சுக்காலன் என்பது புலிக்கு அவர் சூட்டியிருக்கும் பெயர். ஒரு கணத்தில் புலியும் வேட்டைக்காரனும் நேருக்கு நேர் நிற்கிறார்கள். வேட்டைக்காரன் மீது பாய்வதற்குப் புலி தயாராக உள்ளது. புலியை வீழ்த்த துப்பாக்கியோடு நிற்கிறான் வேட்டைக்காரன். யாருக்கு மரணம் நேரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு பெருகும் வேளையில், ஏதோ ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்த ஓர் ஆந்தை தனக்கு இரையாகக் கிடைத்த எலியைக் கொன்ற மகிழ்ச்சியில் ஓசையெழுப்புகிறது. அந்த ஓசையால் ஒரு கணம் புலியின் கவனம் பிசகிவிட, அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வேட்டைக்காரன் அடுத்தடுத்து குண்டுகளைப் பாய்ச்சி புலியைச் சுட்டு வீழ்த்துகிறான்.
0
தூரனின் ஒவ்வொரு சொல்லோவியமும் நுட்பமான சித்தரிப்போடும் செறிவோடும் அமைந்துள்ளது. அந்தக் கட்டமைப்பே அதன் கலைமதிப்பை உயர்வானதாக்குகிறது.
‘யார் விளையாட்டு? ‘, ‘கணவன் ‘, ‘கங்கணம் ‘ என்கிற மூன்று நாடகங்களும் இத்தொகுதியில் இணைந்திருக்கின்றன. ஒரு நாடகம் வரலாற்றுப்பின்னணியிலும் இரு நாடகங்கள் சமூகப்பின்னணியிலும் அமைந்துள்ளன.
‘கணவன்’ என்னும் நாடகம் ஒரு பெண்ணின் மனத்தில் நிகழும் உணர்ச்சிப்போராட்டத்தை சிறிதும் மிகையின்றி சித்தரிக்கிறது. புத்தகத்தின் முற்பகுதியில் அமைந்த சொல்லோவியத்தின் மாற்றுவடிவமாகவே இந்நாடகத்தை தூரன் எழுதியிருக்கிறார்.
மனைவியையும் இரு குழந்தைகளையும் கைவிட்டு இன்னொரு பெண்ணோடு வெளியேறிவிடுகிறான் கணவன். வருமானத்துக்கு வழியில்லாமல் திண்டாடும் மனைவி ஒரு செல்வந்தரின் வீட்டில் வேலைக்காரியாகச் சேர்ந்து கிடைக்கும் ஊதியத்தில் அரைவயிற்றுக் கஞ்சிக்கு வழி செய்துகொள்கிறாள். எந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாலும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்கு மேல் அவளுக்குச் சம்பளம் கொடுப்பவர்கள் ஒருவருமில்லை. அவள் நிலையை அறிந்துகொண்ட செல்வந்தரின் மகள், முப்பது ரூபாய் சம்பளம் தரத் தயாராக இருக்கும் இன்னொரு செல்வந்தரின் முகவரியைக் கொடுத்து, அடுத்தநாள் சென்று சந்திக்கும்படி சொல்கிறாள்.
அடுத்தநாள் அந்தப் புதிய செல்வந்தரின் வீட்டுக்குச் செல்லும் ஆவலுடன் ரயில்நிலையத்துக்குப் போகிறாள் அவள். அங்கே கணவனின் ஆசைநாயகியைத் தற்செயலாகப் பார்க்கிறாள். கணவன் நோயுற்று படுத்த படுக்கையாக இருப்பதாகவும் எங்காவது சம்பாதித்துத்தான் அவனைக் காப்பாற்றவேண்டிய நிலையில் தான் இருப்பதாகவும் ஒரு முப்பது ரூபாய் கிடைக்கக்கூடிய அளவுக்கு ஏதேனும் ஒரு வேலையை அமைத்துக் கொடுத்தால் நெருக்கடி காலத்தில் உதவியாக இருக்கும் என்று அழுது மன்றாடுகிறாள். தொடக்கத்தில் ஆத்திரமும் வெறுப்பும் கொப்பளித்தாலும் இறுதியில் மனமிரங்கி, செல்வந்தரின் மகள் கொடுத்த வேலைக்கான கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டு தன் வீட்டுக்குத் திரும்பிவிடுகிறாள். நம்பவைத்து நட்டாற்றில் கைவிட்டுச் செல்லும் குணம் நிறைந்த ஆண்களுக்கு நடுவில் பழியுணர்ச்சியைக் கடந்து, நீதியுணர்ச்சியோடு செயல்படுபவராக பெண்களைச் சித்தரித்திருக்கும் விதம் பாராட்டவேண்டிய ஒன்று.
மானுடக்கூட்டத்தில் மிக எளிய மனிதர்களாகக் காட்சியளிப்பவர்களாக இருந்தாலும் தம்முடைய எளிய பண்புகளாலும் நேசத்தாலும் வாழும் அரிய மனிதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இருவகையான மனிதர்களும் சேர்ந்த கலவையாகவே இச்சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தூரன் தன் காலத்து அரிய மனிதர்களையே அழகிய சொல்லோவியங்களாக இப்புத்தகத்தில் சித்தரித்திருக்கிறார்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, இசைப்பாடல், சிறார் பாடல் என எந்த வடிவத்தில் எழுதினாலும், அந்த வடிவத்துக்கே உரிய மிகச்சிறந்த படைப்புகளை அளிக்கும் ஆற்றல் தூரனிடம் நிறைந்திருந்தது என்பதற்கு ‘தூரனின் எழுத்தோவியங்கள்’ ஒரு சாட்சி.
0

