டிசம்பர் 11, 2019. கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி தளத்தில் அந்த ஆண்டு அதிகமாகத் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய அளவில் அபிநந்தன் வர்த்தமான், லதா மங்கேஷ்கர், யுவராஜ்சிங் போன்ற பிரபலமானவர்கள் இருந்தனர். இந்த வரிசையில் நான்காவதாக இருந்த நபரின் பெயர் ஆனந்த் குமார்.
ஜூலை 12, 2019 அன்று ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட் வெளியீட்டில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் ‘சூப்பர் 30’ என்ற படம் வெளியானது. குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, உலக அளவில் 208 கோடி வரை அந்தப் படம் வசூல் செய்தது. அந்த ஆண்டு வெளியான இந்திப் படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 12வது இடத்தைப் பிடித்தது ‘சூப்பர் 30’. இந்தப் படத்தில் சிக்ஸ் பேக், சண்டை காட்சிகள் எதுவும் இல்லாமல் மிக இயல்பாக நடித்து தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார் ஹ்ருத்திக் ரோஷன். இப்படி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பின்புதான் கூகுளில் ஆனந்த் குமார் என்ற பெயர் அதிக அளவில் தேடப்பட்டது. காரணம், சூப்பர் 30 என்ற படம் கணிதவியலாளர் ஆனந்த் குமார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
ஜனவரி 1,1973 அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆனந்த் குமார், தனது பள்ளிப் படிப்பை பாட்னா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின் பாட்னாவின் புகழ்பெற்ற ‘பீகார் தேசியக் கல்லூரி’யில் இளநிலை கணிதமும் படித்தார். சிறுவயதிலிருந்து கணிதத்தில் ஆர்வமுள்ள ஆனந்த், வார இறுதி நாட்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் கணிதம் சம்பந்தப்பட்ட இதழ்களை வாசிப்பதற்காக, பாட்னாவிலிருந்து வாரணாசிக்குச் சுமார் 265 கிலோ மீட்டர் பயணம் செய்து, வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற ‘பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில்’ உள்ள மத்திய நூலகத்திற்குச் செல்வார்.
பட்டப்படிப்பு படிக்கும்பொழுது முழு எண்களையும், அவற்றின் பண்புகளையும் பயன்பாடுகளையும் ஆராயும் கணித முறையான எண் கோட்பாட்டில் கட்டுரை ஒன்றைத் தயார் செய்து சமர்ப்பித்தார். இந்தக் கட்டுரை இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியான ‘மேத்தமேட்டிக்கல் ஸ்பெக்ட்ரம்’ எனும் இதழில் பிரசுரமானது. இதன் காரணமாக அவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதற்கான நிதி வசதி அவரிடம் இல்லை.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் செல்வதற்கான நிதியைத் திரட்டும் பணியில் இருந்த ஆனந்த் குமாரின் வாழ்க்கையில் அவரது தந்தையின் மரணம் மிகப்பெரிய இழப்பாக இருந்தது. அஞ்சல் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவரது தந்தையின் வருமானத்தை மட்டுமே நம்பி அவரது குடும்பம் இயங்கியது. அவர் தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய காரணத்தினால் ஆனந்த் குமாரால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று மேற்படிப்பைத் தொடங்க இயலவில்லை.
1992இல் ஆனந்த் மாணவர்களுக்குக் கணித வகுப்பு எடுப்பதற்காக மாத வாடகை ரூபாய் 300இல் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தனது பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினார். எண் கணிதத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஆனந்த், எண் கணித வல்லுநரான ராமானுஜன் பெயரில் ‘ராமானுஜன் ஸ்கூல் ஆப் மேத்தமேடிக்ஸ்’ என்று அந்த நிறுவனத்திற்குப் பெயர் வைத்தார். அங்கு முதன் முதலில் படித்த மாணவர்கள் எண்ணிக்கை வெறும் இரண்டு. 2 மாணவர்களுக்கு மட்டுமே பாடம் எடுக்கிறோம் என்ற தயக்கமும் சோர்வும் சிறிதுமின்றி ஆனந்த் குமார் தன்னுடைய முழு உழைப்பையும் அந்த 2 மாணவர்களுக்காகச் செலவிட்டார். ஓராண்டுக்குள் மாணவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்தது. மூன்றாம் ஆண்டில் அந்த வகுப்பில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 500 ஆனது. நாளாக நாளாக அவரது வகுப்பு, மாணவர்கள் மத்தியில் பிரபலம் அடையத் தொடங்கியது. தொடக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்பெடுத்துக் கொண்டிருந்த ஆனந்த் குமார், பின்பு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பும் எடுக்கத் தொடங்கினார். இப்படியே 8 ஆண்டுகளில் ஆனந்த் குமாரும் அவருடைய நிறுவனமும் வளரத் தொடங்கின.
2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒருநாள் ஆனந்த் குமார் மாணவர்களுக்கு நுண்கணித வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அனூப் என்ற அந்த ஏழை சிறுவன்தான் ஆனந்த் குமாரின் வாழ்க்கையை மாற்றிவிட்டான்.
அனூப்பின் தந்தை அவனது குடும்பத்தைக் கைவிட்டுச் சென்ற பிறகு அவனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது. தனக்குப் படிப்பதற்கு ஆசை இருப்பதாகவும் ஆனால் அதற்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு வசதி இல்லாததால் உதவி செய்யுமாறும் வேண்டி ஆனந்தைப் பார்க்க வந்தான் அந்தச் சிறுவன். ஆனந்த் அந்தச் சிறுவனுக்கு இலவசமாக வகுப்பெடுத்து ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்தார். அப்போதுதான் ஆனந்த் குமாரின் மனதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்தின் விளைவாகத் தோன்றியதுதான் ‘சூப்பர் 30’ என்ற திட்டம்.
வருடந்தோறும் திறமையான, பொருளாதாரத்தில் பின்தங்கிய முப்பது ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி வகுப்பும், தங்குவதற்கான இடமும் உணவும் கொடுத்து ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதுதான் சூப்பர் 30 திட்டத்தின் நோக்கம். இதற்காக 2002ஆம் ஆண்டு அபயானந்த் என்கிற இந்தியக் காவல் பணி அதிகாரியுடன் இணைந்து சூப்பர் 30 திட்டத்தைத் தொடங்கினார்.
முதல் வருடத்தில் முப்பது மாணவர்களில் 18 மாணவர்கள் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதுவே இந்தத் திட்டத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக இருந்தது. எனவே இந்தத் திட்டத்தில் சேர்வதற்காக ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கினார்கள். ஆனந்த் குமார் மாணவர்களைத் தேர்வு மூலமாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினார். 2004ஆம் ஆண்டு 22 மாணவர்களும் 2005இல் 26 மாணவர்களும் சூப்பர் 30 திட்டத்தின்கீழ் தேர்ச்சி பெற்றனர். 2006ஆம் ஆண்டு 30 மாணவர்களில் 28 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாணவர்களுக்கு ரூபாய் 50,000 பரிசுத்தொகையை அறிவித்தார்.
2008ஆம் ஆண்டு சூப்பர் 30 திட்டத்தின் கீழ் பயின்ற முப்பது மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். அதே ஆண்டு அபயானந்த் சூப்பர் 30 திட்டத்திலிருந்து வெளியேறினார். ஆனாலும் ஆனந்த் குமாரின் தொடர் முயற்சியால் அடுத்து இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து 30 மாணவர்களும் சூப்பர் 30 திட்டத்தின் கீழ் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனந்த் குமாரின் முன்னாள் மாணவர்களும் சூப்பர் 30 திட்டத்தில் ஆசிரியர்களாகச் சேர்ந்து வகுப்பெடுத்து வருகின்றனர். இன்றுவரை வருடத்திற்கு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சூப்பர் 30 திட்டத்தின்கீழ் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தக் கல்வித் திட்டத்திற்கு அரசாங்கத்திடமிருந்தும் பல தனியார் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் நன்கொடைகள் வந்தபோதும் ஆனந்த் குமார் அவற்றை ஏற்க மறுத்தார். தனது ராமானுஜன் ஸ்கூல் ஆஃப் மேத்தமேடிக்ஸ் நிறுவனத்திலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு சூப்பர் 30 திட்டத்தை நிர்வகிக்கிறார்.
0
தீவிர காது வலியால் அவதிப்பட்டு வந்த ஆனந்த், மும்பையில் சிவாஜி பார்க் அருகில் உள்ள மிகவும் புகழ் பெற்ற இந்துஜா மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சைக்குச் சென்றார். அங்கு மிகவும் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவரான B.K.மிஸ்ரா அவரைப் பரிசோதித்து, அவருக்குக் காதிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பில் அக்கோஸ்டிக் நியூரோமா என்ற கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்த நோய் நாளடைவில் கேட்கும் திறனைப் பாதிக்கும் என்றார். இதனால் ஆனந்த் தனது வலது காதின் 80% கேட்கும் திறனை இழந்தார்.
செவிகள் பழுதானாலும் தன் சேவைகளைக் குறைவு இல்லாமல் இன்று வரை தொடர்ந்து வரும் ஆனந்த் குமாருக்கு மத்திய அரசு 2023இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 2009ஆம் ஆண்டு லிம்கா சாதனைப் புத்தகத்தில் ஆனந்த் குமாரின் பெயர் இடம் பெற்றது. பல மத்திய, மாநில அரசுகளின் விருதைப் பெற்ற ஆனந்த் குமார், 2019ஆம் ஆண்டு தான் எங்கு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நிறைவேறாமல் போனதோ அதே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வியின் தேவை குறித்து உரையாடினார். எங்கு அவருக்குக் கல்வி கிடைக்காமல் போனதோ அங்கு கல்வி குறித்து அவர் உரையாடியதுதான் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
எத்தனை துன்பம் வந்தபோதும், ஏழ்மை வாட்டியபோதும் தெளிவான குறிக்கோளும், நேர்மையான உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்பதற்கு ஆனந்த் குமார் ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஆனந்த் குமார் மட்டும் பாடம் எடுக்கவில்லை. அவரது வாழ்க்கையே நமக்கு ஒரு பாடம்தான்.
(தொடரும்)

