Skip to content
Home » மீடியா டவுன் #2 – ஒசாமா வேட்டை

மீடியா டவுன் #2 – ஒசாமா வேட்டை

நியூயார்க் நகரம். ஓர் அழகிய காலைப்பொழுது. நீல வானம். வானுயர்ந்த கட்டடங்கள். சுறுசுறுப்பாக இயங்கும் மக்கள் கூட்டம். இரண்டு பேர் வீதியில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னணியில் உலக வர்த்தக மையம். அதில் வந்து மோதுகிறது ஒரு விமானம். இப்படியாகத் தொடங்குகிறது அந்த ஆவணப்படம். மக்கள் தெறித்து ஓடுகிறார்கள். சுற்றிலும் புகைமண்டலம். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விமான விபத்தா? பயிற்சி பெறும் போர் விமானமா? தெரியவில்லை.

அதிபர் புஷ் பள்ளிக்குழந்தைகளைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். அவரிடம் தகவல் சொல்லப்படுகிறது. என்ன காரணமாக இருக்கலாம் என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கும்போதே இன்னொரு விமானம் இரண்டாவது கோபுரத்தில் மோதுகிறது. அப்போதுதான் தெரிகிறது. இது விபத்து அல்ல. தாக்குதல். திட்டமிட்ட தாக்குதல்! மூன்றாவது விமானம் பென்டகன் ராணுவத் தளத்திலும், நான்காவது விமானம் திறந்த வெளியிலும் வெடித்துச் சிதறுகின்றன. யாருக்கும் எதுவும் புரியவில்லை. யார் தாக்குகிறார்கள்? எதற்காக தாக்குகிறார்கள்?

எந்த பயங்கரவாத இயக்கங்களும் பொறுப்பேற்கவில்லை. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. களத்தில் இறங்குகிறது. கடத்தப்பட்ட விமானங்களின் விவரங்களைப் பெற்று அதில் பயணித்தவர்களின் பெயர்களை ஆராய்கிறது. அதில் ஒரு பெயர் மட்டும் எப்போதோ ஒருமுறை அல் காயிதாவுடன் தொடர்புடையது என்பது தெரிய வருகிறது. அப்போதுதான் புரிகிறது, தாக்குதல் நடத்தியது ஒசாமா பின்லேடன்!

அதன்பின் அமெரிக்க அரசும் சி.ஐ.ஏவும் எப்படி பின்லேடனைக் கண்டுபிடித்துக் கொன்றார்கள் என்பதுதான் நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஆண்டு வெளியான American Manhunt: Osama Bin laden என்கிற ஆவணப்படம்.

உண்மையில் எந்த ஒரு திரைப்படத்தையும் தாண்டிய சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது இந்த ஆவணப்படம். ஒசாமாவைப் பிடிக்க அமெரிக்கா வகுக்கும் திட்டம், அதற்கு ஒசாமாவின் பதிலடி, அதற்கு அமெரிக்காவின் எதிர்வினை எனத் திரைப்படத்திற்கு உரிய இலக்கணங்களுடன் ஆவணப்படம் எழுதப்பட்டிருக்கிறது.

9/11 தாக்குதலுக்கு முன் அமெரிக்காவுக்கும் ஒசாமாவுக்கும் இடையேயான பகையின் பின்னணி சொல்லப்படுகிறது. அதன்பின் ஒசாமா வெவ்வேறு நாடுகளில் நடத்திய தாக்குதல்கள், உயிரிழந்த பொதுமக்களின் காணொளிகள், 9/11க்குப் பிறகு அமெரிக்க மக்களின் மனதில் எழுந்த அச்சம், அதிர்ச்சி, மீள முடியாத சோகம் எல்லாவற்றையும் சொல்லி, இதற்கு நீதி வாங்கித் தருவேன் என அறிவிக்கிறார் புஷ். உயிருடனோ பிணமாகவோ ஒசாமாவைப் பிடிப்பேன் என்கிறார். அமெரிக்க சி.ஐ.ஏ புறப்படுகிறது. அதன்பின் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் பின்னடைவுகளும் சொல்லப்படுகின்றன.

முதலில் ஓசாமா இருக்கும் இடத்தினை ஆராய்ந்ததில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அவர் இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. தாலிபான்களைத் தாண்டி உள்ளே புகுந்து ஒசாமாவைத் தாக்குவது கடினம். அதற்காக ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை எதிர்த்து வரும் வடமாகாண படைகளின் உதவியைக் கோருகிறது சி.ஐ.ஏ. அவர்கள் உதவியுடன் சென்று தாலிபான் படைகளுடன் மோதுகிறது. ஒருகட்டத்தில் அமெரிக்கப் படையினரைத் தாலிபான்கள் சுற்றி வளைக்க, வானூர்தி தாக்குதல் தொடங்குகிறது. ஒரு திரைப்படத்தில் ஏற்படும் திகில் காட்சிகள் அனைத்தும் இதில் இடம்பெறுகின்றன. தாலிபான்கள் அமெரிக்கப் படைகளிடம் தோற்றுப் பின்வாங்க, ஒசாமா ஒளிந்திருப்பதாக அறியப்பட்ட டோராபோரா மலைகளில் காணப்பட்ட பதுங்கு குகைகள், சுரங்கங்கள் அனைத்திலும் குண்டுகளை வீசி அழிக்கிறது அமெரிக்கா. ஓர் இடம் பாக்கியில்லாமல் அழிக்கப்படுகின்றன. அவ்வளவுதான். ஒழிந்தான் ஒசாமா என வெளியேறுகிறது அமெரிக்கா. ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வந்துவிடுகின்றன; ஒசாமாவின் கதை முடிந்துவிட்டதாக. அப்போது திடீரென தொலைக்காட்சிகளில் தோன்றுகிறார் ஒசாமா. அமெரிக்கா என்னைக் கொன்றுவிட்டதாக நினைக்கிறது. நான் உயிரோடுதான் இருக்கிறேன். இதுதான் சாட்சி என்று காணொளி வெளியிடுகிறார். அதிர்ந்து நிற்கிறது அமெரிக்கா.

இதேபோல் இன்னொரு சம்பவம், ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற ஒசாமாவின் மறைவிடத்தைத் தேடுகிறது அமெரிக்கா. அதற்காகப் பல கைதுகள், சித்திரவதைகள் அரங்கேறுகின்றன. ஆனால் ஒரு துப்புகூட கிடைக்கவில்லை. எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுவிடுகின்றன. இறுதியாக ஒரு திட்டத்துக்கு வருகிறது அமெரிக்கா.

ஜோர்டன் அரசிடம் இருந்து ஓர் அழைப்பு. ‘ஹுமாம் கலில் அபு முலால் என்பவனைக் கைது செய்திருக்கிறோம். அவன் நமக்கு உதவுவான் எனத் தெரிகிறது’ எனக் கூறுகிறது ஜோர்டன் அரசு. ஹுமாம் கலில் தொடர்ந்து அல் காயிதா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில் கருத்து வெளியிட்டு வந்தவன். ஜோர்டன் அரசு அவனைக் கைது செய்ததில் இனி செய்ய மாட்டேன் என அழுதிருக்கிறான். அவனை உளவாளியாக அல் காயிதாவுக்குள் அனுப்பலாம் என அமெரிக்கா திட்டமிடுகிறது. ஹுமாமை அழைத்துவந்து பயிற்சியளித்து அல் காயிதாவுக்குள் ஊடுவ வைக்கிறது. எப்படியாவது தலைமையைச் சந்தித்து, ஒசாமா பதுங்கி இருக்கும் இடம், அவனுடன் இருக்கும் நபர்கள், அமைப்பு செயல்படும் விதம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று கட்டளை. ஹுமாமும் சரி என்று செல்கிறான். ஓரிரு வாரங்களில் அவன் வர வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறது சி.ஐ.ஏ. ஆனால் ஓரிரு மாதங்கள் ஆகியும் அவன் வரவில்லை. அவனைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. என்ன ஆனது? ஏன் அவன் வரவில்லை? ஒருவேளை அமெரிக்க அரசுக்குத் தண்ணி காட்டிவிட்டானா? அல் காயிதாவிலேயே இணைந்துவிட்டானா? நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டதா? அமெரிக்கா தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தபோது ஹுமாமிடம் இருந்து ஒரு தகவல். அல் காயிதா பற்றி பெரிய தகவல் ஒன்று இருக்கிறது. உடனே சந்திக்க வேண்டும்.

ஆறு சி.ஐ.ஏ வீரர்கள் உடனே கிளம்பி ஆப்கானிஸ்தான் செல்கிறார்கள். அங்கே இருக்கும் சி.ஐ.ஏவின் முகாமிற்கு ஹுமாம் வரவழைக்கப்படுகிறான். ஒரு காரில் அவன் மட்டும் தனியாக வருகிறான். அவன் சி.ஐ.ஏ முகாமை நெருங்கும்போது செய்திகளில் ஒரு காணொளி வெளியாகிறது. நான் என்றைக்கும் இந்த அமெரிக்கர்களுக்குத் துணைபோக மாட்டேன். காரில் இத்தனை கிலோ வெடிபொருள் இருக்கின்றன. கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தில் ட்ரிக்கர் இருக்கிறது. ஒரு அழுத்துதான். உருத்தெரியாமல் போகப்போகிறார்கள். வீடியோ வெளியிட்டுத்தான் செல்கிறான் அவன். இது தெரியாமல் சி.ஐ.ஏ முகாமின் கதவுகள் திறக்க, கார் உள்ளே நுழைய, சி.ஐ.ஏ அதிகாரிகள் காரிடம் வர, ஹுமாம் காரில் இருந்து இறங்கி ட்ரிக்கரை அழுத்த, டுமீர்… அங்கேயே ஆறு பேரும் மரணம். சி.ஐ.ஏவுக்கு பெரிய அடி. திரும்பிய பக்கமெல்லாம் விமர்சனம். என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? ஒசாமா வேட்டை என இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்கள்? ஆனால் ஒசாமாவை நெருங்கியபாடில்லை. இனி உங்களால் ஒசாமாவை பிடிக்கவே முடியாது. பேசாமல் எல்லோரும் வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள்.

அதன்பிறகு அமெரிக்காவுக்கும் ஒசாமாவுக்கும் இடையேயான பகை வேறு பரிமாணத்தை எட்டுகிறது. அமெரிக்கா வேறு சில திட்டங்களை வகுத்து இறுதியில் ஒசாமாவைப் பிடிக்கிறது. கொல்கிறது. அந்தச் சம்பவங்களை நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இப்போது ஆவணப்படத்திற்குப் பின் இருக்கும் அரசியலுக்கு வருவோம்.

இந்த ஆவணப்படத்தில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் இல்லை என்றாலும், ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது. அது அமெரிக்க அரசின் பிரச்சாரம். பின்லேடன் வேட்டையின் கதை முழுக்க முழுக்க அமெரிக்கப் பார்வையிலேயே விரிகிறது. இதனால் போகிற போக்கில் பல விஷயங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. திரிக்கப்படுகின்றன.

உதாரணமாக ஒசாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பகையின் பின்னணி. ஆப்கானிஸ்தானை சோவியத் ஆக்கிரமித்தபோது அவர்களை எதிர்த்த இஸ்லாமிய அமைப்பில் இயங்கியவர் ஒசாமா. ஒசாமாவுக்குப் பல நூறு கோடிகளில் நிதிகளைக் கொட்டிக்கொடுத்து அல் காயிதாவை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்தது அமெரிக்கா. இந்த விஷயம் ஆவணப்படத்தில் திரிக்கப்படுகிறது. நல்லெண்ணத்தில் தாங்கள் பணம் கொடுத்ததாகவும், ஆனால் பால்வார்த்த தங்களையே பாம்பு தீண்டிவிட்டதாகவும் புலம்புகிறது அமெரிக்கா.

அடுத்தது ஒசாமா – அமெரிக்காவின் பகை, அமெரிக்கச் சுதந்திரத்துக்கும் – இஸ்லாமிய பழமைவாதத்துக்கும் இடையேயான பகை என்கிறது ஆவணப்படம். அமெரிக்காவில் வழங்கப்படும் சுதந்திரம், பெண் உரிமை, சமத்துவம் எல்லாமும் பழமைவாத இஸ்லாமியரான ஒசாமாவுக்குப் பிடிக்கவில்லையாம். அதனால் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தினாராம்.

உண்மையில் ஒசாமா அமெரிக்காவை எதிர்த்ததற்கு முக்கியக் காரணம், மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையும், மத்தியக் கிழக்கு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடும்தான். குறிப்பாக ஒசாமாவின் சொந்த நாடான சவுதியில் அமெரிக்கா ராணுவத் தளம் அமைத்தது. மத்தியக் கிழக்கு எண்ணெய் வியாபாரத்திற்காக ஏகப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தியது. மத்தியக் கிழக்கு நாடுகளைத் துண்டாட நினைக்கும் இஸ்ரேலுக்குக் கண்மூடித்தனமாக ஆயுதங்களையும் ஆதரவையும் வழங்கியது. ஆப்கானிஸ்தானுக்கு உதவுவதாகச் சொல்லி சோவியத் வெளியேறிய பிறகு விலகிக்கொண்டது. இப்படியான காரணங்களுக்காகத்தான் ஒசாமா அமெரிக்காவை எதிர்த்தார்.

அதற்காக அவர் இஸ்லாமிய அடிப்படைவாதியல்ல; பொதுமக்களைக் கொல்லவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர் பயங்கரவாதிதான். பொதுமக்களைக் கொன்றுகுவித்தவர்தான். ஆனால் அவர் முன்வைத்த அரசியல் காரணங்கள் எல்லாவற்றையும் மறைத்து இஸ்லாமியர்களுக்கு அமெரிக்காவின் சுதந்திரம் பிடிக்கவில்லை என்பதே 9/11 தாக்குதலின் காரணம் என ஆவணப்படம் சுருக்குகிறது. ஒசாமா வேட்டையின்போது அமெரிக்காவால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கதைகளும், 9/11 விவகாரத்துக்குப் பிறகு பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் இஸ்லாமியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரித்ததும், கட்டுப்பாடு இல்லாமல் அந்நிய நாடுகளில் செய்த அமெரிக்காவின் அத்து மீறல்களும் இடம்பெறவில்லை.

ஆப்கானிஸ்தானில் ஒசாமாவின் பதுங்குக்குழிகளை அழித்தபோது பொதுமக்கள் இறந்துவிட்டதையும், அல் காயிதாவினரை விசாரிக்கும்போது நடத்தப்பட்ட சித்திரவதைகளும் மட்டுமே விமர்சனங்களாக முன்வைக்கப்படுகின்றன. அதுவும் பலரது உயிரை எதிர்காலத்தில் கொல்லப்போகும் ஒரு குற்றவாளியைக் கொல்ல, இப்படியான இழப்புகள் அவசியம்தான் எனக் கற்பிதம் செய்கிறது ஆவணப்படம்.

ஊடகக் கோட்பாடுகளில் ராபர்ட் என்ட்மேன் என்பவர் முன்மொழிந்த Framing Theory பற்றிப் படித்திருப்போம். Framing என்றால் கட்டமைத்தல் என்று பொருள். ஒரு கருத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றால் அதற்கு நான்கு படிநிலைகள் இருக்கிறது என்கிறார் என்ட்மேன். முதலில் பிரச்னை என்ன என்பதைச் சொல்ல வேண்டும். அடுத்து அதைப் பற்றி ஒரு விளக்கத்தை வழங்க வேண்டும். அது சரியா தவறா என ஆராய வேண்டும். பிறகு அதற்கான தீர்வாக நம் கருத்தைச் சொல்ல வேண்டும் என்கிறார் என்ட்மேன். இந்த நான்கு படிநிலைகளையும் பின்பற்றி ஒரு கருத்தை சொன்னோமானால் அது பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்கிறார்.

இதன்படி இந்த ஆவணப்படம் பயங்கரவாதம்தான் பிரச்னை என்கிறது. இதற்குக் காரணம் பின்லேடனின் தீவிர இஸ்லாமிய நம்பிக்கை என்கிறது. அடுத்ததாக யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்கிற எடைபோடும்போது ஒசாமா கெட்டவன் என்பதாலேயே அமெரிக்காவை நல்லவர்களாக முன்னிறுத்துகிறது. இதற்கான தீர்வு என்பது தனிநபரைக் கொல்லும் ராணுவ நடவடிக்கைதான் என்று சொல்கிறது. உண்மையில் பிரச்னையின் ஆணிவேரான அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையின் சுயநலம் ஓர் இடத்தில்கூட சுட்டிக்காட்டப்படவில்லை.

இதேபோல் Narrative Theory என்ற கோட்பாடும் உண்டு. கதாநாயகன் என்கிற ஒருவனை முடிவு செய்துவிட்டு அவன் பார்வையிலேயே சம்பவங்களை விவரிப்பது எதிர்த்தரப்பின் நியாயங்களை இருட்டடிப்பு செய்துவிடும். இதையும் அமெரிக்காவைக் கதாநாயகனாக நிறுத்தி இந்த ஆவணப்படம் செய்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஜோசப் நை (Joseph Nye) என்பவர் முன்மொழிந்த மெல்லாதிக்கம் (Softpower) எனும் கோட்பாடு முக்கியமானது. ஜோசப் நை, மெல்லாதிக்கம், வல்லாதிக்கம் என்கிற இரு வகை உத்திகளைப் பயன்படுத்தி மக்களின் மத்தியில் கருத்தை உருவாக்க முடியும் என்கிறார். இதில் வல்லாதிக்கம் (Hardpower) என்பது கட்டாயப்படுத்துவது. அதிகாரத்தின் மூலமாகவோ பணத்தின் மூலமாகவோ ஒரு விஷயத்தைத் திணிப்பது. இவ்வாறு செய்யும்போது மக்களுக்கு அச்செய்கையின் பின்னுள்ள நோக்கம் எளிதில் தெரிந்துவிடும். இதுவே மெல்லாதிக்கம்மூலம் கருத்தைத் திணித்தால் மக்களே விரும்பி அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள். மெல்லாதிக்கம் என்பது மூளை சலவை செய்து, அவர்களிடம் ஈர்ப்பை உருவாக்கி ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ள வைப்பது. மக்களிடையே ஏற்கெனவே இருக்கும் சில நம்பிக்கைகளைத் தூண்டிவிட்டு கருத்துகளை ஏற்றுக்கொள்ளச் செய்வது. இதன்படி பார்க்கும்போது இந்த ஆவணப்படம் ஒசாமா வேட்டை எனும் பெயரில் மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட வல்லாதிக்கத்தை நியாயப்படுத்தும் ஒரு மெல்லாதிக்க முயற்சியே.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *