ஆகஸ்ட் 8, 2021 மாலை. EV5 தொலைக்காட்சியின் நிருபர் ‘சென்னகேசவலு’வுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் வெங்கட சுப்பையா. நந்தியால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் (போலீஸ் கான்ஸ்டபிள்).
அழைப்பை ஏற்று சந்திக்கக் கிளம்பினார் சென்னகேசவலு. போனவர் போனவர்தான். திரும்பவேயில்லை.
காவலர் வெங்கட சுப்பையா பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணமே, சென்னகேசவுலுவின் செய்திகள்தான். ‘வாருங்கள் உங்கள் செய்தி குறித்துப் பேச வேண்டும்’ என்று அழைத்து, செய்தியாளரைச் செய்தியாக்கிவிட்டார் சுப்பையா.
பாதுகாக்க வேண்டியவர்களே பாதிப்பு உண்டாக்கினால், அவர்களைப் பயிரை மேய்ந்த வேலி என்று குறிப்பதுண்டு. வழக்கமான குற்றத்தைவிடக் கூடுதல் தீவிரத்தன்மையுள்ள குற்றமான அவற்றை ‘Aggrevated offense’ என்று குறிப்பர். இந்த சம்பவமும் அப்படித்தான். ஆனால், இங்கு வேலி மேய்ந்தது பயிரை அல்ல, தன்னை அம்பலப்படுத்திய பத்திரிகையாளரின் உயிரை.
என்னதான் நடந்தது? யார் இவர்கள்? யார் இந்த சென்னகேசவலு?
தமிழ்நாட்டைத் தாண்டினால் மொத்த இந்தியாவும் இருபெயர் பழக்கத்தோடுதான் இருக்கிறார்கள் என்பது பெரும்பான்மை. ஆனால், இந்த எதுவும் வேண்டாம். குடும்பப் பெயர், குலப்பெயர், சாதிப்பெயர், இரண்டாம் பெயர் என எந்த வடிவிலும் அடையாள அரசியலைச் சுமக்காத, சுமக்க விரும்பாத நபர்கள் நாடு முழுக்க பலர் உண்டு. அப்படி ஒருவர்தான் இந்த சென்னகேசவலு. தனக்கு ஒரே பெயர்தான் அடையாளம் என்று அறிவித்துக் கொண்டவர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கர்னூல் மாவட்டம் நந்தியால் நகரில் உள்ள EV5 தொலைக்காட்சியின் உள்ளூர் நிருபராக (அதேதான், ஸ்ட்ரிங்கராக) பணிபுரிந்து வந்தவர்தான் சென்னகேசவலு.
EV5 என்பது தெலுங்கில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஒளிபரப்பாகும் ஒரு சிறிய தனியார் தொலைக்காட்சி. பெரிய சேனல் இல்லை, பெரிய சம்பளம் இல்லை. ஆனால் தன் பகுதியில் நடக்கும் எந்தவொரு அநியாயத்தையும் அம்பலப்படுத்துவதைத் தன் இதழியலின் இன்றியமையாத கடமையாகக் கொண்டு பணியாற்றியும் வந்தார். சேனல் ஒப்புக்கொள்ளாத சில செய்திகளை வெளியிடுவதற்காகவே தனக்கென ஒரு யூட்யூப் பக்கமும் நடத்தி வந்தார். ஆனால், இப்படியாக தான் சொல்லும் உண்மைகள் என்றேனும் தன்னைக் கொல்லும் என்று அவர் அறிந்திருக்கவில்லை.
ஜூலை 2021இல் தன் யுடியூப் சேனலிலும் EV5 தொலைக்காட்சியிலும் தொடராக அவர் வெளியிட்ட செய்திகள் அவரைக் கொல்லுமளவுக்கு வலிமையும் வீரியமும் கொண்டிருந்தன. அப்படி என்ன நடந்தது?
நந்தியால் காவல்நிலையத்தைச் சேர்ந்த வெங்கட சுப்பையா என்ற போலீஸ் கான்ஸ்டபிளுக்கு, அப்பகுதியில் சட்டவிரோதக் குழுக்களுடன் இருக்கும் நேரடித் தொடர்பை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் செய்தி அது. ஒன்று குட்கா, புகையிலையை சட்டவிரோதமாகக் கடத்தும் கும்பல். மற்றொன்று மட்கா என்று அழைக்கப்படும் சட்டவிரோத சூதாட்ட கும்பல். இந்த இரண்டும் கர்னூல் மாவட்டத்தில் பரவலாக நடந்து வந்தன. காவல்துறை இதனைக் கண்டும் காணாமல் விடுகிறது என்று செய்தி வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, ஒரு காவலரே இதில் பங்கு பெறுவதையும் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டார். செய்தி அம்பலப்பட்டதும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கியது.
அன்றைய கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதீர் குமார் ரெட்டி தலைமையில் விசாரணை நடந்தது. வெங்கட சுப்பையாவின் சட்டவிரோதத் தொடர்புகள் வெட்ட வெளிச்சமாயின. பெரிய வாதப் பிரதிவாதங்களெல்லாம் தேவைப்படவில்லை. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் காவலர் வெங்கட சுப்பையா. கூர்மையான இதழியலும் நேர்மையான விசாரணையும் இணைந்ததால் கிடைத்த வெற்றி என்று எல்லோரும் பாராட்டினர். அப்பகுதியில், சட்டவிரோத குட்கா, மட்கா நடவடிக்கைகளும் குறையத் தொடங்கின. ஆனால், சுப்பையாவின் மனதில் சூல்கொண்ட கோபம் மட்டும் குறையவேயில்லை. கோபம் வெறியாக மாறி, பழிதீர்க்க காலம் பார்த்துக் காத்திருந்தது. அன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி. சென்னகேசவலுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஆம், நீங்கள் சந்தேகப்பட்டது சரிதான். வெங்கட சுப்பையாவிடமிருந்துதான் அழைப்பு. ஆனால், வாக்குவாதமோ கோபம் கொப்பளிக்கும் தொனியோ அல்ல. வெளியான செய்தி குறித்து விவரங்கள் பேச வேண்டும். நமக்குள்ளான மனக்கசப்பை பேசித் தீர்த்துக் கொள்ளலாம். வீட்டுக்கு வாருங்கள் என்ற கனிவான அழைப்பு அது.
கர்னூல் மாவட்ட SP சுதீர் குமார் ரெட்டி சொன்னார், ‘சுப்பையா சென்னகேசவலுவை தன் வீட்டிற்கு அழைத்தான். பேச்சுவார்த்தை நடக்கும் என்று நம்பியே சென்னகேசவலு சென்றார். ஆனால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.’
ஆம். பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அவர்கள் பேசி வைத்திருந்தபடி வேறொன்று நடந்தது. வெங்கட சுப்பையாவும் அவரது சகோதரர் நானியும் சேர்ந்து சென்னகேசவலுவைத் தாக்கினார்கள். கையில் இருந்தது ஒரு திருப்புளி. ஆத்திரம் தீரும் மட்டும் பலமுறை முதுகில் குத்தினார்கள்.
ஏதாவது நடக்கக்கூடும் என்ற எண்ணம் இருந்ததால், தனது நண்பன் பிரதாப்பையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார் சென்னகேசவலு. சத்தம் கேட்டு வெளியிலிருந்து நண்பர் ஓடிவருவதற்குள் குத்திவிட்டுத் தப்பி ஓடினர் இருவரும்.
குத்துப்பட்ட இடங்களிலிருந்து ரத்தம் வழிய வழிய, கடுமையான காயங்களுடன் நந்தியால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சென்னகேசவலு அன்று இரவே உயிரிழந்தார்.
அப்போதையை ஆந்திரப் பிரதேச டிஜிபி கௌதம் சாவாங் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 302இன் கீழ் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவானது. அடுத்த இரண்டு நாட்களுக்குள், இருவரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
இவையெல்லாம் எஸ்பி சுதீர் குமார் ரெட்டி சிபிஜே அமைப்புக்கு நேரடியாக தொலைபேசியில் உறுதிப்படுத்திய தகவல்கள். பின்னர், சுப்பையா காவலர் பணியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார். கொலைக்கான நோக்கம் சென்னகேசவலு வெளியிட்ட செய்திகளுக்கான பழிவாங்கல்தான் என்றும் உறுதிப்படுத்தினார்.
ஆமாம். செய்தி வெளியிட்டார், அதற்காக கொல்லப்பட்டார் என்ற வெளிப்படையான வாக்குமூலத்துக்கு, சமூகத்தில் அவ்வளவு எளிதாக ஏற்பு வரும் என்பது யாரும் எதிர்பாராததுதான்.
தொடர்ந்து போராட்டங்களும் கண்டனங்களும் வந்தாலும் வழக்கின் நிலை என்ன என்பது குறித்து தகவலே இல்லை. இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரத்தில் இந்த வழக்கு ஏதோ ஒரு தூசி மண்டிய நீதிமன்றக் கோப்பாக, நிலுவையில் இருக்கும் வழக்குகளுள் ஒன்றாக இருக்கலாம். தவறிழைத்தவர்களைக் கைது செய்த அதிகாரிகள் நீதியையும் உறுதி செய்ய வேண்டும் என்று யுனெஸ்கோ இந்தக் கொலையைக் கண்டித்தது. சர்வதேச பத்திரிகை நிறுவனம் (ஐபிஐ), ரிப்போர்ட்ரஸ் வித்தவுட் பார்டர்ஸ், இதழியலாளர்களைக் காக்கும் மையம் (சிபிஜே) போன்ற சர்வதேச நிறுவனங்கள் பலவும் கண்டித்தன. இதழியலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்த இந்தச் சம்பவத்தில் விரைந்து விசாரணை வேண்டும் என்று ஒவ்வொரு அமைப்பும் கோரிக்கை வைத்தன.
ஆனால், சர்வதேசக் கண்டனங்கள் எல்லாம் வெறும் சடங்குகளாக மாறிவிட்ட சூழலில், இதுபோன்ற கொலை விவகாரங்களை அரசுகள் அதன்போக்கில் கையாள்வதைக் கேட்பாரில்லை என்பதுதான் வலி.
வெங்கட சுப்பையாவும் அவரது சகோதரர் நானியும் கைது செய்யப்பட்டனர், பிரிவு 302இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது . உறுதியானது. ஆனால் வழக்கின் இன்றைய நிலை குறித்து சிபிஜேயின் கடைசிப் பதிவு (மார்ச் 2025) ஒரு வலிக்கும் உண்மையைச் சொல்கிறது: ‘சிபிஜேயால் சந்தேக நபர்களின் வழக்கறிஞர்களின் தொடர்பு தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தேக நபர்களின் எந்தப் பொது அறிக்கையும் கிடைக்கவில்லை.’ தீர்ப்பு வந்ததா என்று வெளியே தெரியவில்லை. வழக்கு இன்னும் நடக்கிறதா என்று தெரியவில்லை.
அவர் ஒரு ‘பெருநிறுவன’ இதழியலாளர் இல்லைதான். தேசிய ஊடகங்கள் அவரை அறிந்திருக்கவில்லைதான். ஆனால் நந்தியால் மாவட்டத்தில் யாராலும் பார்க்க முடியாதவற்றை அவர் கண்கள் கவனித்தன. யாரும் சொல்ல முடியாததை, சொல்ல முன்வராததை, சொன்னார். ஆனால், அதற்கு விலை உயிர்தான் என்பது எந்த விதத்திலும் சரியானதல்ல. அவரது குடும்பம் இன்னும் காத்திருக்கிறது. நீதி வந்ததா என்று இன்னும் தெரியவில்லை.
(தொடரும்)

