Skip to content
Home » சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

கொடுங்கோல் என்றால் என்ன? செங்கோல் என்ற சொல்லின் எதிர்ப்பதம் கொடுங்கோல். செங்கோல் ஆட்சி என்பது அறநெறியுடன் செம்மையாக ஆட்சி புரிவதைக் குறிக்கிறது. நீதிநெறித் தவறிய அரசாட்சியைக் கொடுங்கோல் ஆட்சி அல்லது கொடுங்கோன்மை என்கின்றனர் சங்க இலக்கியத்தில்‌. எல்லோரும் அச்சப்படும் அளவிற்கு அரசாட்சி புரிபவனுடைய ஆட்சி விரைவில் அழிந்துவிடும் என்றும், அத்தகைய அரசன் கொடுமையான அரசனாகவே கருதப்படுவான் என்றும் கூறுகிறார் வள்ளுவர்.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். (குறள் 563)

வெருவந்தம் – அச்சம்; குடிமக்கள் அச்சம் கொள்ளும்படியான செயல்.
செய்து – செய்து
ஒழுகும் – நடக்கும்
வெங்கோலனாயின் – செங்கோலனாயின்; செங்கோலனாய் அரசன் இருந்தால்
ஒருவந்தம் – உறுதி, நிச்சயம்; அரசு நிச்சயமாக
ஒல்லைக் – விரைவில்
கெடும் – அழியும்.

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும் என்கிறார் திருவள்ளுவர். அப்படியானால் இன்றைய காலக்கட்டத்தில் கொடுங்கோல் ஆட்சி என்பது என்ன?

இன்றைய நவீன அரசியல் சூழலில் கொடுங்கோல் என்ற சொல் வழக்கொழிந்து போயிருந்தாலும், அடக்குமுறை ஆட்சி என்ற பெயரில் தொடரத்தான் செய்கிறது. இன்றைய கொடுங்கோல் ஆட்சி என்பது அதிகாரத்தைத் தனிப்பட்ட நலனுக்காகக் கையாண்டு, மக்களை அச்சத்திலும் அடக்குமுறையிலும் வைத்திருக்கும் ஆட்சியைக் குறிக்கிறது. அரசியல் சுதந்திரம் இல்லாமை, ஊடகக் கட்டுப்பாடு, மக்களின் எதிர்ப்பை அடக்குதல், மக்களின் உரிமைகளை மறுத்தல் ஆகியவை அடக்குமுறை ஆட்சியின் செயல்பாடுகளாய்க் கருதப்படுகின்றன. அத்தகைய அடக்குமுறை ஆட்சி செயல்பாடுகளை இக்காலத்தைய மக்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் மூலமாகவும், நீதித்துறையின் வலுவான சட்ட அமைப்புகள் மூலமாகவும், சமூக இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மூலமாகவும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இக்காலத்தில் நீதித்துறை மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் மக்கள், அக்காலத்தில் எவ்வகையில் கொடுங்கோல் ஆட்சியைக் கையாண்டனர்? சங்கக் காலத்தில் கொடுங்கோல் ஆட்சியாளரை மக்கள் நேரடியாக எதிர்த்துப் போராடவில்லை. ஆனால் கொடுங்கோல் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பிற நாட்டு அரசர்களைக்கொண்டு போர்செய்ய வைத்து அம்மன்னர்களின் ஆட்சியைத் தொலைக்கச் செய்தனர் என்று பழந்தமிழர் அரசியல் நூல் கூறுகிறது.

சங்க கால மன்னர்களின் அரசுரிமை பிறப்புரிமையாகவே இருந்தது. இதனால் அவர்கள் தனி அதிகாரம் பெற்றிருந்தனர். இத்தனி அதிகாரம் சில மன்னர்களை அறநெறி தவறி நடக்கச்செய்திருந்தது. அதிகார வெறியும் அதிகாரச் செருக்கும் அவர்களை அவ்வாறு நடக்கச்செய்திருந்தது. இவ்வாறு அறநெறி தவறிச் செயல்புரிந்த அரசர்களைக் கண்டு அறிஞர்கள் சிறிதும் அஞ்சவில்லை. அக்காலத்தில் அரசர்களைக் காட்டிலும் புலவர்களுக்கும், மக்களுடன் கலந்து பழகும் அறிஞர்களுக்கும் செல்வாக்கு மிகுந்திருந்தது. பொதுமக்களின் பாராட்டுக்குரிய புலவர்களிடம் மன்னர்களும் மதிப்பு வைத்திருந்தனர். இதனால் புலவர்கள் கூறும் அறிவுரைகளை மீறி நடக்க அரசர்கள் அஞ்சினர். அதனால் அரசர்கள் அநீதி புரியும்போதெல்லாம் புலவர்கள் அஞ்சாது அவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தினர். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

நலங்கிள்ளி எனும் அரசன் சோழ நாடு முழுவதையும் தானே ஆட்சி செய்ய வேண்டுமென்ற ஆசை கொண்டவனாக இருந்தான். அதனால் அவன் நெடுங்கிள்ளி எனும் உறையூர்ச் சோழனுடன் அடிக்கடிச் சண்டையிட்டு வந்தான். நலங்கிள்ளியின் இச்செய்கையைப் பொதுமக்கள் ஆதரிக்கவில்லை. இதனை அறிந்த புலவர் முதுகண்ணன் சாத்தனார் அவனுக்கு அறநெறியை எடுத்துரைத்தார்.

கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும்,
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி,
‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை’ என்போர்க்கு இனன் ஆகிலியர்

கொடியோர்த் – தீயவர்களை
தெறுதலும் – தண்டித்தலும்
செவ்வியோர்க்கு – செம்மையான குணமுடைய நல்லோர்களை
அளித்தலும் – காத்தலும்; (அளித்தல் என்ற சொல்லுக்குக் கொடுத்தல் மட்டுமில்லாமல் காத்தல், படைத்தல், ஈனுதல், சொல்லுதல் ஆகிய பொருள்கள் உள்ளன.)
ஒடியா முறையின் – வளைக்காத நேர்மையான நீதி முறையில்;
மடிவு – சோம்பல், சோர்வு
இலை ஆகி – இல்லாமல் ஆகி;
‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை’ – நன்மையால் நன்மையும், தீமையால் தீமையும் இல்லை
என்போர்க்கு – என்பவருக்கு
இனன் ஆகிலியர் – இனமானவன் ஆகிவிடாதே

தீயவர்களைத் தண்டித்தலையும், செம்மையான குணமுடைய நல்லோர்களைக் காத்தலையும், சோம்பல் இல்லாது, வளையாத நேர்மையான நீதி முறையினால் நீ செய்ய வேண்டும். இதுதான் அரசருக்குரிய அறநெறி. அவ்வாறன்றி, நல்லது செய்வதனால் எந்த நன்மையும் வரப்போவதுமில்லை, தீமை செய்வதனால் தண்டனை எதுவும் கிட்டப் போவதுமில்லை என்று சொல்பவர்களுள் நீயும் ஒருவனாகிவிடாதே என்று இப்பாடலின் மூலம் அரசருக்கு நீதி போதிக்கிறார் புலவர்.

புலவர் வெள்ளைக்குடி நாகனார் என்பவர் உழவுத் தொழில் செய்துவந்தார். மழை பெய்யாததால் அவருடைய விளைநிலம் விளையவில்லை. ஆனால் அரசாங்க ஊழியர்கள் வரி செலுத்தும்படி அவரை நெருக்கினர். விளைச்சல் இல்லாத காலத்தில் உழவர்கள் அனைவரிடத்திலும் அப்பொழுது வரி செலுத்துமாறு கெடுபிடி செய்தனர். இதனைக் கண்ட புலவர் வெகுண்டெழுந்து நேரே அரசரிடம் சென்றார். அரசாங்க ஊழியர்களின் இந்தக் கருணையற்ற செயலை அரசரிடம் எடுத்துரைத்தார். புலவரின் சொல் கேட்டு மன்னனும் இளகினான். புலவருக்கும் ஏனையோருக்கும் வரியைத் தள்ளி வைத்தான். புலவருக்கு அவரின் நிலத்தைச் சர்வமானியமாகவே கொடுத்துவிட்டான்.

மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்.
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.

மாரி பொய்ப்பினும் – மழை பெய்யாமல் ஏமாற்றினாலும்
வாரி குன்றினும் – வருவாய் அல்லது விளைச்சல் குறைந்தாலும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் – இயற்கை நியதிக்கு மாறாகச் செயற்கையான கேடுகள், பஞ்சம்/வறட்சி வந்தாலும்
காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம் – நாட்டை ஆளும் காவலரையே, அரசனையே பழிக்கும் இந்த அகன்ற உலகம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும் – இந்த உண்மையை, அறத்தினை அறிந்தவனான நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது – நடுநிலையற்றவர்/ கோள் மூட்டுபவர் பொதுவாகச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமல்
பகடுபுறந் தருநர் – பகடு (எருது), புறந்தருநர் (பாதுகாப்பவர்), எருதுகளைப் பாதுகாப்பவர்களான உழவர்கள்
பாரம் ஓம்பி – சுமையைக் காத்து, வரிச்சுமையைக் குறைத்து
குடிபுறம் தருகுவை யாயின் – மக்களைக் காப்பாயானால்
நின் அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே – உனக்குக் கட்டுப்பட்டு மக்கள் அடிபணிந்து நடப்பார்கள் அடங்காத தேரினை உடைய அரசனே.

மழை பெய்யாமல் ஏமாற்றினாலும், விளைச்சல் குறைந்தாலும், இயற்கை நியதிக்கு மாறாகச் செயற்கையான கேடுகள் வந்தாலும், நாட்டை ஆளும் காவலரான அரசரையே பழிக்கும் இந்த அகன்ற உலகம். இந்த உண்மையை அறிந்தவனான நீ, நடுநிலையற்றவர்/ கோள் மூட்டுபவர் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமல், உழவர்களின் வரிச் சுமையைக் குறைத்துக் காப்பாயானால் உனக்குக் கட்டுப்பட்டு மக்கள் அடிபணிந்து நடப்பார்கள் என்று வெள்ளைக்குடி நாகனார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் அறிவுறுத்த, அவரின் அறிவுரையை ஏற்று வரியைத் தள்ளிவைத்தான் அரசன் என்கிறது சங்க இலக்கியம்.

பாண்டியன் அறிவுடை நம்பி எனும் மன்னன் மக்களிடம் அளவுக்கு அதிகமாக வரி வாங்கினான். அதைக் கண்ட புலவர் பிசிராந்தையார் அஞ்சாமல் அரச நீதியை அவனுக்கு எடுத்துரைத்து அவன் செய்கையைத் தடுத்தார்.

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்கப் புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூடப் பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிப்பட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக்கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம்போலத் தானும் பயனடையாமல் உலகமும் கெடும். என்கிறார் பிசிராந்தையார்.

மக்களிடம் வரி வசூலிப்பதை, மலர் தன் வலியை உணராதவாறு வண்டு தேன் எடுப்பதைப்போல மக்களுக்குத் துன்பம் தராதவாறு வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது சங்க இலக்கியம். புதிய வரிகளை எதிர்ப்பதற்காகத் தங்களின் ஊரை விட்டு வெளியேறிவிடுவது அக்கால மக்களின் வழக்கமாக இருந்திருக்கிறது. வரியின் சுமையையும் மக்களின் கோபத்தையும் புரிந்துகொண்ட மன்னன், வரியைக் குறைத்து மக்களை மீண்டும் ஊருக்குத் திரும்ப வைத்த வரலாற்றுக் குறிப்புகளும் இருக்கின்றன. இவ்வாறு சங்கக் காலத்தில் அரசர்கள் மக்களுக்கு எதிரான செயல்கள் புரிந்தபோது, மக்கள் மன்னனிடம் வெளிப்படையாகச் சாடி, எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

முற்போக்கு என்பது வெறும் புதிய சிந்தனைகளை ஏற்கும் மனப்பான்மை மட்டுமல்ல. அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், தவறான செயல்களை எதிர்த்து நிற்பதும்தான். சங்க காலத்தில் தங்களை ஆளும் அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிந்தால் அவனை எதிர்த்துக் கேள்வி கேட்கவும், அவனுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தவும் மக்கள் தயங்கவில்லை. அதையும் தாண்டி அவன் திருந்தாமல் போனால், பிற நாட்டு அரசர்களைக் கொண்டு போர்செய்ய வைத்து அவனது அரசாட்சியைக் கவிழ்க்கவும் தயங்கவில்லை. அவ்வகையில் சங்க காலத்தில் ஆளும் மன்னனின் தவறான செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இத்தமிழ்ச்சமூகம் முற்போக்குச் சமுதாயமாய் இயங்கி இருக்கிறது என்பதனை இதன் மூலம் அறிகிறோம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *