Skip to content
Home » முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

கா.ஸ்ரீ.ஸ்ரீ என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு சமஸ்கிருதம், இந்தி, வங்கம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்பித்தார். பணி நிமித்தம் அவருடைய தந்தையார் பம்பாய்க்கு அருகில் கல்யாணுக்குக் குடியேறியபோது, அங்கிருந்த பள்ளியில் சேர்ந்து மராத்தியும் ஆங்கிலமும் கற்றார். ஏழாம் வகுப்பில் படிக்கும்போது காதில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு மருத்துவம் செய்துகொள்வதற்காக அவருடைய குடும்பம் சென்னைக்குக் குடிபெயரவேண்டிய நிலை ஏற்பட்டதால், சென்னையில் இருந்த பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.

சென்னையை அடுத்து, கா.ஸ்ரீ.ஸ்ரீயின் பெற்றோர் காஞ்சிபுரம், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு இடம் மாறியபோது, அந்தந்த ஊரைச் சேர்ந்த பள்ளிகளில் அடுத்தடுத்து படித்து பள்ளிக்கல்வியை முடித்தார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அதன் பிறகு சென்னைக்குத் திரும்பி இந்தி பிரச்சார சபையில் சிறிது காலம் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து சிறிது காலம் கலைமகள் இதழின் துணையாசிரியராகவும் பிறகு மஞ்சரி இதழில் பொறுப்பாசிரியராகவும் பணி புரிந்தார்.

மராத்தி மொழியில் காண்டேகர் எழுதிய ‘சகோரமும் சாதகமும்’ என்னும் சிறுகதையை கா.ஸ்ரீ.ஸ்ரீ முதன்முதலாக 1940இல் மொழிபெயர்த்தார். அச்சிறுகதை தினமணியில் வெளிவந்து, அவரைக் கவனிக்கத்தக்க மொழிபெயர்ப்பாளராக்கியது. அதைத் தொடர்ந்து பத்தாண்டு காலத்தில் காண்டேகருடைய நூற்றைம்பது சிறுகதைகளையும் ‘யயாதி’, ‘கருகிய மொட்டு’, ‘வெறும் கோவில்’, ‘சுகம் எங்கே?’ உள்ளிட்ட பதின்மூன்று நாவல்களையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழிபெயர்த்தார். காண்டேகரின் எழுத்துக்கு தமிழிலக்கிய உலகில் மிகப்பெரிய வாசகப்பரப்பை கா.ஸ்ரீ.ஸ்ரீ உருவாக்கினார். அது அவருடைய மாபெரும் சாதனை.

மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி, தன் சொந்தப் படைப்புகளையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ தொடர்ந்து எழுதி வந்தார். ‘நீலமாளிகை’ என்னும் தலைப்பில் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதியளித்தவர் புதுமைப்பித்தன். 1945இல் கலைமகள் வெளியீடாக வெளிவந்த ‘காந்தம்’ என்னும் அவருடைய முதல் நாவலுக்கு முன்னுரை எழுதியவர் க.நா.சு. காந்தம் நாவலின் கதைச்சுருக்கத்தை ஆர்வத்துடன் கேட்டு வாங்கிப் படித்த காண்டேகர் எழுதிய சிறப்புக்குறிப்போடு அந்த நாவல் வெளிவந்தது.

காந்தம் நாவலை கா.ஸ்ரீ.ஸ்ரீ, அன்றைய இலக்கியச் சூழலுக்கு இசைவாகப் பிற படைப்பாளிகளைப்போலவே குடும்பம் என்னும் தளத்தின்மீது கட்டியெழுப்பியிருக்கிறார். ஆனால் கதையின் போக்கில் தன் செல்திசை வேறு என்பதை வாசகர்களுக்கு உணர்த்தும் விதத்தில் நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து இணைத்துக்கொண்டே செல்கிறார். அதன் காரணமாகவே, அவருடைய சமகாலப் படைப்பாளிகளிடமிருந்து வேறுபட்டு நின்று, இன்றளவும் வாசிக்கத்தக்க ஒரு நாவலை அவரால் எழுதமுடிந்திருக்கிறது. 172 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்நாவலில், கதையின் களத்தை சென்னையில் தொடங்கி செங்கல்பட்டு, மாயவரம், பம்பாய், காசி என இயல்பாக வளர்த்து இமயமலை வரைக்கும் கொண்டுசெல்வது கா.ஸ்ரீ.ஸ்ரீக்குச் சாத்தியமாகியிருக்கிறது. குடும்பப் பின்னணியில் எழுதப்பட்ட பல நூறு நாவல்கள் மறைந்துவிட்ட சூழலில் கா.ஸ்ரீ.ஸ்ரீயின் காந்தம் தனித்த இடத்துடன் காலத்தைக் கடந்து இன்றளவும் வாசிப்புக்குரிய நாவலாக வாழ்ந்து வருகிறது.

பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்ட இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ ஒவ்வொரு விதமாக எழுதியிருக்கிறார். கடந்த நூற்றாண்டில் நாற்பதுகளில் இந்தக் கட்டமைப்பில் அவர் யோசித்திருப்பதே மிகப்பெரிய புதுமை என்று சொல்லவேண்டும். ஓர் அத்தியாயத்தின் கதை, யாரோ ஒருவர் மூன்றாம் நபராக நின்று சித்தரிப்பதுபோல அமைந்துள்ளது. இன்னொரு அத்தியாயம், குறிப்பிட்ட பாத்திரமே தோன்றி தன் கதையைத் தானே விவரிப்பதுபோல உள்ளது. மற்றொரு அத்தியாயம், கதைக்குத் தொடர்பில்லாத யாரோ ஒருவர் — ஆனால் நடந்தவற்றையெல்லாம் நேருக்கு நேராகப் பார்த்த அனுபமுள்ளவர் — எழுதிவைத்த நாட்குறிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியைப்போல அமைந்துள்ளது. பிறிதொரு அத்தியாயம் ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்துக்கு எழுதிய நீளமான கடிதத்தின் வடிவில் இடம்பெற்றுள்ளது. இப்படி வெவ்வேறு வடிவங்களில் அமைந்த கதைக்கூறுகளை ஒருங்கிணைத்து நாவலாக மாற்றுகிறார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்ற நாவலாசிரியர் என்றே சொல்லவேண்டும்.

காந்தம் நாவலின் முதன்மைப் பாத்திரங்கள் அனைவரும் பெண்களே. அவர்களுடைய செயல்பாடுகளே, நாவலை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. நாவலில் இடம்பெற்றிருக்கும் கமலா மூத்தத் தலைமுறையைச் சேர்ந்தவள். அவளுடைய மகளான காந்தம் இன்றைய தலைமுறையின் பிரதிநிதி. நீலவேணி, வைதேகி உள்ளிட்ட அனைவரும் காந்தத்தின் வயதை ஒத்தவர்கள்.

ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் விதத்தில் கமலாவின் அணுகுமுறை ஒன்றாக இருக்கிறது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பிற பெண்களின் அணுகுமுறை வேறொன்றாக இருக்கிறது. துயரம் என்பது காற்று, வெளிச்சம், இருள் ஆகியவற்றைப் போல வாழ்வில் எல்லாக் காலத்திலும் இருக்கும் ஓர் அம்சம். ஆனால் அதிலிருந்து மீட்சி பெறவும் கடந்து செல்லவும் எடுக்கும் நடவடிக்கைகளை ஒரு கணம் தொகுத்துப் பார்த்தோமெனில், ஒரு தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் உள்ள அணுகுமுறை வேறுபாட்டைப் புரிந்துகொள்ளமுடியும். துயரத்தை அல்ல, துயரத்தைக் கடந்துவரும் அணுகுமுறையை ஒரு கருவாகக் கொண்டிருப்பதாலேயே கா.ஸ்ரீ.ஸ்ரீயின் நாவல் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒரு படைப்பில் கலை அனுமதிக்கிற எல்லைக்குள் நின்று இம்மாற்றங்களைப் பதிவு செய்திருக்கிறார் கா.ஸ்ரீ.ஸ்ரீ.

கமலா காந்தத்தின் தாய். அவள் கணவன் ராஜகோபாலன். ஒருநாள் கமலாவுடைய தாயார் மரணப்படுக்கையில் இருப்பதாக ஊரிலிருந்து ஒரு தந்தி வருகிறது. கைக்குழந்தையான காந்தத்தைத் தூக்கிக்கொண்டு கமலா புறப்படுகிறாள். தனிமையில் அவளை வெளியூர்ப்பயணத்துக்கு அனுப்ப ராஜகோபாலனுக்குத் தயக்கமிருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. அவளை அனுப்பிவைக்க புகைவண்டி நிலையத்துக்கு வந்தபோது அதே ரயிலில் மனைவியை இழந்த அவளுடைய அத்தான் ரங்கராஜன் வேறொரு காரணத்துக்காகப் பயணம் செய்வது தெரியவருகிறது. ஒருவருக்கொருவர் பேச்சுத்துணையாக இருப்பார்கள் என்பதால், அவர்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கும் என ராஜகோபாலன் நினைத்து விடைகொடுத்து அனுப்பிவைக்கிறான்.

அடுத்து சில நாட்களில் சிகிச்சை பலனின்றி கமலாவின் தாயார் மறைந்துவிட்டதாக ராஜகோபாலனுக்குச் செய்தி வருகிறது. துக்கம் விசாரிக்க பயணம் செய்து, அவள் வீட்டுக்கு ராஜகோபாலன் செல்கிறான். வீட்டு முற்றத்தில் குழந்தை காந்தத்தை மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சியபடி இருக்கும் ரங்கராஜனைப் பார்த்து ஒருகணம் அவன் மனம் திகைப்பில் மூழ்குகிறது. இத்தனை நாட்களும் விடுப்பில் இங்குதான் இருக்கிறானா என்று யோசிக்கிறான். முதன்முதலாக அவன் மனத்தில் சந்தேகம் படர்கிறது. நேரம் செல்லச்செல்ல அந்தச் சந்தேகம் வலுவடைகிறது. நேருக்கு நேராக மனைவியைப் பார்த்து வசைமழை பொழிந்துவிட்டு ராஜகோபாலன் சென்னைக்குத் திரும்பிவிடுகிறான்.

மனமுடைந்த கமலா, தன் மீது விழுந்த பழியை நினைத்து நினைத்து துன்பத்தில் அமிழ்கிறாள். அப்பழியை அவளால் உதறிவிட்டுச் செல்லவும் முடியவில்லை. தான் குற்றமற்றவள் என வாதாடி நிறுவுவதற்கான வழியையும் அவளால் கண்டறிய முடியவில்லை. ஒருநாள் தீராத மனவேதனையோடு கிணற்றில் விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள். துன்பத்திலிருந்து விடுதலை அளிக்கும் மருந்தாக அவள் மரணத்தை நினைக்கிறாள்.

அவள் மரணத்துக்குப் பிறகே தான் சந்தேகப்பட்டவாறு கமலாவுக்கும் ரங்கராஜனுக்கும் இடையில் எவ்விதமான தவறான தொடர்பும் இல்லை என்பதை ராஜகோபாலன் புரிந்துகொள்கிறான். காலதாமதமாகப் பிறந்த ஞானத்தால் எந்தப் பயனுமில்லை. பலர் அவனை மறுமணத்துக்குத் தூண்டியபோதும் அதை அவன் ஏற்பதில்லை. தன் குழந்தை காந்தத்தைத் தனியே வளர்த்து ஆளாக்குகிறான். மனச்சுமையிலிருந்து விடுதலை பெறவும், குற்ற உணர்ச்சியைக் கடந்துவரவும் அவன் தன் மனத்தை பொதுத்தொண்டு என்னும் திசையை நோக்கித் திருப்பிவிடுகிறான்.

அடுத்த தலைமுறையைச் சேர்ந்த காந்தம் எதிர்கொள்ளும் பிரச்னை வேறு விதமானது. கல்லூரியில் சுதந்திர சிந்தனையோடு படித்துப் பட்டம் பெற்ற அவளுக்கு முடிந்தவரையில் விரைவில் திருமணம் செய்துவைத்துத் தன் கடமையை முடித்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார் நடுவயதைக் கடந்துவிட்ட ராஜகோபாலன். சந்திரசேகரன் என்னும் மாப்பிள்ளையைப் பேசி முடிக்கிறார். சந்திரசேகரனுக்குப் பெற்றோர் இல்லை. அவனுக்கு முகவரியாக இருப்பவர் அவனுடைய சித்தப்பா நாகநாதன். அவர் நகரத்தில் பெரிய செல்வந்தர். அவருடைய நிறுவனத்தைத்தான் சந்திரசேகரன் நிர்வகிக்கிறான். அவர் முன்னிலையில்தான் திருமணப்பேச்சு நடைபெறுகிறது.

லட்சக்கணக்கில் பணம் உள்ளவர் நாகநாதன். கார், மாடிவீடு என வாழ்பவர். ஆயினும் நகைகள், வரதட்சணை, கல்யாணச்செலவு என எல்லாவற்றையும் ராஜகோபாலன்மீது சுமத்துகிறார். நல்ல இடம் என்கிற ஒரே காரணத்துக்காக அவர் விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் ராஜகோபாலன் ஏற்றுக்கொள்கிறார். நாகநாதன் கேட்ட ஆயிரம் ரூபாய் வரதட்சணையைக் கொடுப்பதற்காகவும் திருமணச்செலவுக்காகவும் பல இடங்களில் கடன் பெறுகிறார்.

மணமேடையில் தாலி கட்டும் நிகழ்வு நடந்து முடிகிறது. ராஜகோபாலன் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார். காந்தமும் சந்திரசேகரனும் தனித்தனியாக இன்பக்கற்பனையில் மூழ்கியிருக்கிறார்கள். அடுத்து அம்மி மிதிக்கும் சடங்கு தொடங்கவிருக்கும் வேளையில் கூடுதலாக ஐநூறு ரூபாய் வேண்டும் என்கிற கோரிக்கையைப் புதிதாக முன்வைக்கிறார் சித்தப்பா நாகநாதன். சந்திரசேகரன் உட்பட அனைவரும் அதைக் கேட்டுத் திகைக்கிறார்கள். அது மரபல்ல என்றபோதும், பெரிய பணக்காரரான அவரிடம் அதை எடுத்துரைக்க மண்டபத்தில் இருக்கும் ஒருவருக்கும் துணிவில்லை.

பணம் வரும்வரை சடங்குகள் நிறுத்திவைக்கப்படுகின்றன. மணமக்கள் மேடையிலேயே அமர்ந்திருக்க, இதோ வருகிறேன் என கடன் வாங்கிவர மண்டபத்தைவிட்டு ஓடுகிறார் ராஜகோபாலன். பல இடங்களில் அலைந்து இறுதியாக ரங்கராஜனைச் சந்தித்து விவரங்களைச் சொல்கிறார். அவர் கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு மண்டபத்துக்குத் திரும்பி வருகிறார்.

அவர் வருகைக்கு முன்பாக மண்டபத்தில் வேறொரு காட்சி அரங்கேறிவிடுகிறது. பணத்தாசையால் தூண்டில் வீசும் நாகநாதனின் நடவடிக்கைகள் காந்தத்தின் மனத்தில் வெறுப்பைத் தூண்டுகின்றன. கணவனாக தன் கழுத்தில் மாலை சூட்டியிருக்கும் சந்திரசேகரனின் மெளனம் ஆத்திரத்தைத் தூண்டுகிறது. மண்டபத்தில் நிறைந்திருந்தவர்களின் அமைதி எரிச்சலை ஊட்டுகிறது. தன் தாயின் மரண வரலாற்றிலிருந்து அனைத்தையும் அறிந்தவள் அவள். ஆடவர்களின் தான்தோன்றித்தனமான போக்கின் காரணமாக அழிந்துபோன பல பெண்களின் வரலாறுகளையும் தெரிந்துவைத்திருப்பவள் அவள். அவளுடைய சமூகப்பார்வை விரிவானது.

மேல்நாட்டுப் பண்பாட்டில் சுதந்திர தாகத்தோடு பட்டப்படிப்பை முடித்திருந்த அவளால் அந்த வெறுப்பின் சுமையோடு மணமேடையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்க இயலவில்லை. கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி வீசிவிட்டு சினம்கொண்ட தெய்வத்தைப்போல எழுந்து நிற்கிறாள். சில கணங்களுக்கு முன்பாகத் தன் கழுத்தில் அணிவிக்கப்பட்ட தாலிக்கொடியைக் கழற்றி சந்திரசேகரனின் முகத்திலேயே வீசி எறிந்துவிட்டு மண்டபத்தைவிட்டு வெளியேறுகிறாள்.

எங்கு செல்கிறோம் என்கிற எந்த இலக்குமின்றி, கண்ணுக்குத் தெரிந்த திசையில் நடக்கிறாள் காந்தம். நடந்து, நடந்து கால்கள் வலிக்கத் தொடங்கியதும் வழியில் தென்பட்ட ராணுவ லாரியை நிறுத்தி உதவி கேட்டு நகரத்தைவிட்டே வெளியேறுகிறாள். சமீபத்தில்தான் தன் தங்கையைப் பறிகொடுத்த அந்த ஓட்டுநர் அவளைத் தன் தங்கையாகவே நினைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான். சென்னையைக் கடந்து செங்கல்பட்டை அடைந்ததும் காந்தத்துக்கு அங்கிருந்து வந்து தன்னோடு படித்த தோழியின் நினைவு வருகிறது. அவளைத் தேடிச் செல்ல முடிவெடுத்து, அந்த ஊரில் இறங்கிக்கொள்கிறாள்.

தோழி வீட்டில் தங்கியிருந்த சமயத்தில் நடந்தவை அனைத்தையும் ஒருமுறை தொகுத்துப் பார்த்துக்கொள்கிறாள் காந்தம். தான் எடுத்த முடிவு சரிதானா என ஒருமுறை பரிசீலனை செய்கிறாள். தன் பிழையாக அவளுக்கு எதுவும் தோன்றவில்லை.

திருமணத்தில் ஏற்பட்ட தடை மாபெரும் துயரம் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அந்த வெற்றிடத்தை எப்படிக் கடந்து செல்வது என்பதைப்பற்றி ஆழ்ந்து யோசிக்கிறாள். வெகுகாலம் தொடர்பில் இல்லாத தூரத்து அத்தை ஒருவரின் நினைவு வருகிறது. உடனே தோழியிடமிருந்து விடைபெற்று அவரைப் பார்க்கச் செல்கிறாள். கணவனை இழந்து, தனித்து வாழும் அத்தை, காந்தியடிகளின் உரையைக் கேட்டு சுற்றுப்புறத்தில் வசிக்கும் பிற பெண்களுக்கு கல்வியளித்தும் தொழிற்பயிற்சி அளித்தும் அனைவரும் சொந்தக்காலில் நிற்கும் வகையில் தொண்டாற்றியபடி வாழ்வதை நேருக்கு நேர் பார்க்கிறாள். தொண்டின் பாதையே தன் பாதை என முடிவெடுத்து அத்தையின் வழியில் நடக்கிறாள்.

காந்தம் கொண்டிருந்த ஆங்கில அறிவும் கூடுதலான கல்வித்தகுதியும் அவளுடைய களத்தை விரிவாக்கிக்கொள்ள உதவியாக அமைகின்றன. பல கிராமங்களில் அடுத்தடுத்து கிளைகளைத் தொடங்கி சொந்தத் துயரத்தை மறந்து உள்ளன்போடு உழைக்கிறாள். மாவட்ட அளவில் இயங்கிவரும் மையம் அவளைக் கண்டறிந்து, அவளைத் தன்னிடம் அழைத்துக்கொள்கிறது. புதிய திட்டங்களை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் அவள் செலுத்திய ஆர்வத்தின் காரணமாக, அவள் அனைவருடைய மதிப்புக்கும் உரியவளாக மாறுகிறாள். ஏழெட்டு மாதங்களிலேயே துயரத்தைக் கடந்து ஓர் ஆளுமையாக வளர்ந்துவிடுகிறாள்.

நீலவேணி ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண். கலைகளில் ஆர்வம் கொண்டவள். கல்வியிலும் சிறந்து விளங்குபவள். தந்தை இல்லை என்கிற குறை தெரியாமல் அம்மாவும் பாட்டியும் அன்பை மழையெனக் கொட்டி அவளை வளர்க்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றி அவள் நெஞ்சில் ஏராளமான கனவுகள் நிறைந்திருந்தன. எதிர்பாராத விதமாக, நீலவேணியுடைய அம்மாவும் பாட்டியும் அடுத்தடுத்து மறைந்துவிட, சகோதரனின் பராமரிப்பில் அவள் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

நீலவேணியின் பொறுப்பு குடும்பஸ்தனான அவனுக்குப் பெருஞ்சுமையாகத் தெரிகிறது. எப்படியாவது அவளுக்கு ஒரு திருமணத்தைச் செய்து தன் பொறுப்பை முடித்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறான். நாகநாதன் என்கிற வயதான ஒரு பணக்காரர் பெண் கேட்டு வந்தபோது அவனால் அக்கோரிக்கையை மறுக்கமுடியவில்லை. அப்பா வயதுள்ள ஒருவரோடு நீலவேணிக்குத் திருமணம் நடக்கிறது.

அந்தத் திருமணத்தின் விளைவாக ஆடம்பரமான ஒரு மாளிகையே அவளுடைய வசிப்பிடமாக மாறுகிறது. ஆனால் அந்த ஆடம்பரம் அவளுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அவளுடைய மனத்தில் பொங்கும் கலையார்வத்துக்கு அங்கே வடிகாலே இல்லை. நாகநாதனின் நெருக்கம் அவளைக் கவரவில்லை. நீலவேணியின் அன்பை நாகநாதனாலும் ஒரு கணம்கூடப் பெறமுடியவில்லை.

இந்தத் தருணத்தில்தான் சந்திரசேகரனுக்கும் காந்தத்துக்கும் திருமணம் நடைபெறுகிறது. தாலியைக் கழற்றி வீசிவிட்டு மணமேடையிலிருந்து வெளியேறிய காந்தத்தின் உறுதியான நடை நீலவேணியைக் கவர்கிறது. தன் பாதையைத் தானே வகுத்துக்கொள்வது பற்றிய ஒரு கருத்து முதன்முதலாக அவள் மனத்தில் திரண்டெழுகிறது. மரபான எண்ணங்களுக்கும் புதுமையான எண்ணங்களுக்கும் இடையில் சிக்குண்டு நீலவேணி சில நாட்கள் குழம்புகிறாள். மனம் பேதலித்து மருத்துவமனையில் சிறிது காலம் தங்கி மருத்துவம் பெற்று தெளிவு பெறுகிறாள். பிறகு விடுதலையான வாழ்க்கையை விரும்பி வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

கால்போன போக்கில் பயணம் செய்து, பார்ப்பதற்குப் பிடித்திருப்பதாகத் தோன்றும் ஏதோ ஓர் ஊரில் இறங்கி சிறிதுகாலம் தங்குகிறாள். அங்கே ஏதேனும் ஒரு மடத்தில் தங்கி, அங்கு வசிக்கும் பெண்களுக்குக் கல்வி கற்பிக்கிறாள். தனக்குத் தெரிந்த தையற்தொழிலையும் கற்பிக்கிறாள். சில மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறி வேறு ஊருக்குச் செல்கிறாள். மடமே இல்லாத ஊர்களில், அங்கு வசிக்கும் பெண்களே அவளுக்கு வசிக்க இடமளித்து ஆதரவு கொடுக்கிறார்கள். இப்படியே பல ஊர்களில் தங்கியபடி ஏழெட்டு மாதங்கள் பயணம் செய்து இறுதியாக காசியை அடைகிறாள்.

பயணம் பலவிதமான மனிதர்களை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறது. அவளிடம் இயல்பாகவே உள்ள தொண்டுமனம் அனைவரோடும் எளிதாக நெருங்கிப் பழகுவதற்குத் துணையாக இருக்கிறது. அந்தப் பயண வாழ்க்கையை இனிமையாக வைத்துக்கொள்வது எப்படி என்னும் கலையில் அவள் தேர்ச்சி பெறுகிறாள். அது அவளைக் கவலையற்றவளாக வாழவைக்கிறது. வாழ்ந்தது போதும் என்று தோன்றக்கூடிய தருணத்தில் இமயமலைக்குச் சென்று, அந்தப் பனிமலைச்சரிவில் தன் உயிரைவிட வேண்டும் என்னும் கனவோடு அவள் பயணம் தொடர்ந்தபடி இருக்கிறது.

நாவல் இப்படி ஒவ்வொருவருடைய அனுபவங்களையும் காட்சிப்படுத்தியபடி ஒரு படகுப்பயணத்தைப்போல முன்னோக்கி நகர்ந்துசெல்கிறது. ஏற்கனவே தன் மனைவி கமலாவின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டோம் என்கிற குற்ற உணர்வோடு வாழ்ந்துகொண்டிருந்த ராஜகோபாலன் மகளின் வாழ்க்கையையும் மலரவிடாமல் செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வையும் சேர்த்துச் சுமந்தபடி நகரெங்கும் மகளைத் தேடி அலைகிறார். பல மாதங்கள் தேடியும் மகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற துயரம் அவரை வாட்டுகிறது. தன் பிறவியே பாவம் நிறைந்ததாகிவிட்டது என அவருக்குத் தோன்றத் தொடங்குகிறது. அதிலிருந்து மீளும் வழியை அவரால் கண்டறிய முடியவில்லை. கடைசியில் பாவச்சுமையை இறக்கிவைக்க அவர் காசியை நோக்கிச் செல்கிறார். அங்கு சந்திக்க நேர்ந்த சில சாதுக்களோடு சிறிது காலம் தங்கியிருந்து உயிர்துறக்கிறார்.

மனைவியைப் பிரிந்த நாகநாதனும் சந்திரசேகரனும் கிட்டத்தட்ட அந்த நிலையைத்தான் தொடுகிறார்கள். ஆனால் அதன் உச்சத்தைத் தொடும்முன் ஒவ்வொரு நாளும் நிறுவனத்துக்காக ஆற்றவேண்டிய தினசரிச் செயல்களின் அட்டவணை அவர்களைத் திசைதிருப்பிவிடுகிறது. ஆயினும் தனிமைப்பொழுதுகளில் அவர்கள் செய்வதறியாமல் துயரத்திலேயே திளைத்திருக்கிறார்கள். செல்திசை அறியாத கப்பலாக நடுக்கடலிலேயே திகைத்து நிற்கிறார்கள்.

நல்லூழின் விளைவாக நீலவேணியும் காந்தமும் எழுதும் கடிதங்கள் அப்போது அவர்கள் கைகளில் கிடைக்கின்றன. அக்கடிதங்களால் நம்பிக்கை வரப்பெற்று இருவரும் ஓடோடி அவர்களைச் சந்திக்கிறார்கள். தன் தொண்டு வாழ்க்கையில் எவ்விதமான ஊறும் ஏற்படாத வகையில், இல்வாழ்க்கையில் ஆர்வம் கொண்ட காந்தம் சந்திரசேகரனோடு இணைந்துகொள்கிறாள். பயண வாழ்க்கையிலும் இமயமலைக் கனவிலும் நீலவேணி கொண்டிருக்கும் ஈடுபாட்டை அவளோடு உரையாடிப் புரிந்துகொள்கிறார் நாகநாதன். இல்வாழ்க்கையில் அவர் கொண்டிருந்த ஆர்வம் முற்றிலும் வடிந்துவிடுகிறது. எஞ்சிய வாழ்க்கையில் நீலவேணிக்குப் பிடித்தவனாக வாழ்ந்தால் போதும் என்கிற எண்ணம் மட்டுமே அவருடைய ஒரே விருப்பமாக இருக்கிறது. அதனால் அவளுடைய கனவுகளையே தம் வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். தன் சொத்து முழுவதையும் ஊரிலுள்ள தொண்டு நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு நீலவேணியோடு சேர்ந்து இமயமலையை நோக்கிப் பயணமாகிறார்.

காந்தப்புலம் தம்மைச்சுற்றியுள்ள அனைத்தையும் தம்மை நோக்கி ஈர்த்துத் தன்னோடு வைத்துக்கொள்கிறது. தொண்டுள்ளம் என்கிற காந்தம் சந்திரசேகரனை ஈர்த்துக்கொள்கிறது. தொண்டுள்ளத்தோடு இணைந்த இமயமலைக்கனவு என்கிற காந்தம் நாகநாதனை ஈர்த்துக்கொள்கிறது. காந்தம் என்னும் நாவலின் தலைப்பு ஒருபக்கம் நாவலில் இடம்பெற்ற முக்கியமான பாத்திரத்தின் பெயராக இருக்கும் நிலையில், இன்னொருபக்கம் நம்மை ஈர்க்கும் கொள்கையைக் குறிக்கும் படிமமாகவும் அமைந்துவிடுகிறது.

தமிழில் நாவல் உருவான காலத்திலிருந்தே பெண்களின் துயரம் என்னும் மையம் பல எழுத்தாளர்களால் தொடர்ச்சியாக எழுதப்பட்டு வருகிறது. அவற்றில் எண்ணற்ற படைப்புகள் துயரத்தின் எடையை அடையாளப்படுத்துவதோடு அமைந்துவிடுபவை. அந்தத் துயரத்தை மனத்துணிவோடு கடந்துபோகும் வழியை அடையாளப்படுத்தும் முயற்சிகள் மிகமிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். அந்த வகையில் கா.ஸ்ரீ.ஸ்ரீயின் ‘காந்தம்’ நாவல் முயற்சி ஒரு முன்னோடி முயற்சி என்றே சொல்லலாம்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ தன் முப்பதுகளையொட்டிய வயதிலேயே கச்சிதமான கட்டமைப்போடும் புதுமையான முயற்சியாகவும் காந்தம் நாவலை எழுதியிருக்கிறார். இதைத் தவிர, காற்றாடி என்கிற இன்னொரு நாவலையும் எழுதியிருக்கிறார். அவர் விரும்பியிருந்தால் அவரால் இன்னும் சிறப்பான படைப்புகளை அடுத்தடுத்து அளித்திருக்கமுடியும் என்றே தோன்றுகிறது. அதற்கான தடயங்களைக் கொண்டதாகவே அவருடைய நாவல் முயற்சிகள் அமைந்துள்ளன. ஆயினும் மொழிபெயர்ப்பில் அவர் செலுத்திய கவனத்தின் விளைவாக, அவரால் படைப்புமுயற்சிகளில் ஈடுபடமுடியாமல் போயிருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *