Skip to content
Home » அரிய கல்வெட்டுகள் #4 – பரணி நோன்பு

அரிய கல்வெட்டுகள் #4 – பரணி நோன்பு

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரன் குறித்துப் பாடப்படும் இலக்கியத்தின் பெயர் ‘பரணி’.

‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி’ என்பது இச்சிற்றிலக்கியத்துக்கான இலக்கணமாகும். இதைப் பாடுவோர் ‘கொச்சகக்கலி’ எனும் பாட்டின் உறுப்பாகிய ‘ஈரடிக் கலித்தாழிசை’ முறையில் அதை மேற்கொள்வது வழக்கம்.

மயக்கறு கொச்சகத் தீரடி இயன்று
நயப்புறு தாழிசை உறுப்பிற் பொதிந்து
வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானைவெங் களத்தில்
குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே

என்கிற பன்னிரு பாட்டியல் சூத்திரத்தால் இதை அறியலாம். கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு, காளிகோயில் உள்ளிட்ட பல்வகைச் சிறப்புகள் இதில் அமையப்பெறும்.

நட்சத்திரங்களில் ஒன்றான ‘பரணி’, கொற்றவைக்கு உரியதாகக் குறிக்கப்பெற்றது. கொற்றவை போர்க்கடவுள் என்பதால், போரில் வெற்றி பெற்றதும் அவளுக்குப் படையலிட்டுக் கொண்டாடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனாலேயே அந்தக் கொண்டாட்டத்தைப் பாடும் இலக்கியத்துக்குப் பரணி என்கிற பெயரே நிலைத்துவிட்டது.

தொல்காப்பியத்தின் பேராசிரியர் உரையில் (தொல்.செய். 149) பரணி கொண்டாட்டம் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

காடுகெழு செல்விக்குப்
பரணி நாளில்
கூழ் கொடுத்துத்
துணங்கை ஆடல்
தாழிசைப் பாடல்களால் பாடப்படும்

மீன பரணி

கேரளத்தின் கொடுங்கலூர் பகவதி கோவிலைக் கண்ணகி கோவில் என்றே அறிஞர் பெருமக்கள் கருதுவர். அங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் மீன பரணி என்கிற திருவிழாவும் ஒன்றாகும். கேரளத்தின் தாய் தெய்வக் கோவில்களில் நடைபெறும் பரணி விழா தமிழ் மரபிலிருந்தே சென்றதாக மு. இராகவையங்கார் கூறுகிறார். கேரள வரலாற்றாசிரியரான பத்மநாப மேனன் இவ்விழா குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

கும்ப மாதம் (மாசி) பரணி நட்சத்திரத்தில் இவ்விழா நடைபெறுகிறது. விழாவில், பொற்கொல்லருக்கு முதல் உரிமை. மலையான் தட்டான் என்கிற சாதியின் மூப்பன் கொடுங்கலூர் அரச குடும்பத்தின் மூத்தவரைக் கண்டு வணங்கி கோவிலில் விழா நடந்த அனுமதி கேட்பார். அரசராகக் கருதப்படும் அந்நபர், தட்டானும் அவரது மருமகனும் அணிய இரண்டு பவளமாலைகளைக் கொடுப்பார். இந்த மாலைகளை அணிந்துகொண்டு அவர்கள் கோவிலுக்குச் சென்று அதை மூன்றுமுறை வலம் வருவார்கள். அதன்பிறகு கோடித் துணி, பொன்தாலி, பவளமணி ஆகியவற்றைக் கோழிக்கல்லில் வைப்பார்கள். இதிலிருந்து விழா ஆரம்பமாகும்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் குன்னத்து மரபில் வந்த வயதான நம்பூதிரிப்பெண் ஒருவர் கருவறையைச் சுற்றியுள்ள இடங்களில் நீரைத் தெளிப்பார். இது கோவிலைப் புனிதப்படுத்தும் சடங்கின் அடையாளம். ‘இனி கோவில் நடை திறக்கலாம்’ என்று கூறுவார். இதன்பிறகு நம்பூதிரி அடிகள் கருவறை நடைதிறந்து பூசையைத் தொடங்குவார். இதன் தொடர்ச்சியாகக் கோவில் வளாகத்தில் கொடிகள் தொங்கவிடப்படும். இதுவே கோவிலின் கொடியேற்று விழா. கொடி கட்டும் உரிமை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வசம் உள்ளது. இந்தப் பணி முடிந்ததும், மலையான் தட்டான் மூப்பன் அச்செய்தியை அரசரிடம் தெரிவிப்பார். அதன்பிறகு அரசர் ஏற்கெனவே கொடுத்திருந்த இரண்டு பவள மாலைகளை அவரிடமே திருப்பிக் கொடுப்பார். அச்சமயம் தட்டார்களுக்கு அரசர் ஓலை உடைகளைக் கொடுப்பார். இந்த மீன பரணி விழா ஆரம்பமாகி முடியும் வரை சேத்திரபாலனுக்குரிய நேர்ச்சை நைவேத்தியம் நடைபெறாது.

இவ்வாறு பகவதி எனும் கண்ணகியுடன் தொடர்புபடுத்தி பரணி விழா நடைபெறுகிறது. பழந்தமிழரின் கொற்றவை – காளி வழிபாடே கேரளத்தில் இன்றும் பகவதி (கண்ணகி) வழிபாடாகத் தொடர்கிறது. கொற்றவையின் நட்சத்திரம் பரணி எனத் தொல்காப்பியத்தில் வருவதைப் போன்றே, கலிங்கத்துப்பரணியில் கொற்றவைக்கு தன்னையே பலி கொடுக்கும் வழக்கமும் இருந்தது.

அடிக் கழுத்தினுடன் சிரத்தை அரிவராலோ
அரிந்தசிரம் அணங்கின்கை கொடுப்பராலோ
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ
குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ

எனப்படும் பரணி வழிபாடு, வீரம் சார்ந்த வழிபாடாகக் கொற்றவை வழிபாட்டுடன் இணைந்து நிகழ்த்தப்படுவதை அறியலாம்.

காங்கியனூர் பரணி நோன்பு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காங்கியனூர் என்கிற ஊரில் ஏழுகல்மேடு எனப்படும் இடத்தில் ஏழு கற்கள் நிறுவப்பட்டுள்ளன. பரணி நோன்பு நோற்று இறந்த பெண்ணின் நினைவாக அங்கு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அப்பெண்களின் தந்தை பெயரும் கணவன் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்தமைப்பின் அடிப்படையில் அவை பொ.யு. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

போர்க்களம் செல்லும் ஆண்கள் கொற்றவைக்கு நேர்ந்துகொண்டு பலியிட்டுக்கொள்ளும் மரபு இருந்ததற்கு நிறைய தற்பலி நடுகற்களும், கல்வெட்டுகளும், இலக்கியங்களும் சான்றாக இருக்கின்றன. ஆனால் பெண்கள் இவ்வாறு பரணி நோன்பு நோற்றதற்குச் சான்றுகள் எங்கும் கிடைக்கவில்லை. சில பெண்கள் தம்மைப் பலியிட்டுக் கொள்ளும் வகையிலான காக்கதீயர்கள் காலத்துச் சிலைகள் அரிதாகக் கிடைத்துள்ளன. அந்த வகையில் காங்கியனூரில் கிடைத்துள்ள பரணி நோன்பு கல்வெட்டுகள் அரிதானவை.

முதல் கல்வெட்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ
குறுக்
கையு
டையா
ன் பட்டன்
மகள் சிறு
வுடையான் வ
டுகன் அக
முடையாள் தி
ருவி நோ
ற்ற பர
ணி
த்தறி

குறுக்கையுடையான் பட்டன் மகளும் சிறுவுடையான் வடுகனின் மனைவியுமான திருவி, பரணி இருந்து இறந்ததைக் குறிக்கும் நினைவுக் கல்.

இரண்டாம் கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ தண்
டலை பாக்கமு
டையாந் மகள்
வலையனுடை
யாந் பட்டன் அ
கமுடையாள் கொ
ற்றி நோற்ற பரணி

தண்டலை பாக்கமுடையான் மகளும் வலையனுடையான் பட்டனின் மனைவியுமான கொற்றி, பரணி இருந்து இறந்ததைக் குறிக்கும் நினைவுக்கல்.

மூன்றாம் கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ
ஸ்ரீமெய்
யூர் காமன் ம
கள் நங்கி வ
ண்டகப்பா
டி உடையா
ன் தித்தி அ
கமுடை
யாள் னோற்ற
பரணித் தறி

மெய்யூர் காமன் மகளும் வண்டகப்பாடி உடையான் தித்தியின் மனைவியுமான நங்கி, பரணி நோற்று இறந்ததன் நினைவுக்கல்.

நான்காம் கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ
தவரி கு
ணிமுத்த
நழகன்
குறுக்கை
ய் உடையா
ன் நம்ப
ந் அகமு
டையாள்
பாலை நோற்ற தறி

குறுக்கை உடையான் நம்பனின் மனைவியும், தவரி குணிமுத்தன் அழகனின் மகளான பாலை, பரணி நோற்று இறந்ததன் நினைவாக நடப்பட்ட கல்.

ஐந்தாம் கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ
தெநித்த
முத[ன்]
மகள்
[குறுக்கை]யு
டையாந்
அகமுடை
யாள் மா
றி நோற்ற
பரணித் தறி

தெனித்தமுதன் மகளும் குறுக்கையுடையான் மனைவியுமான மாறி, பரணி நோற்று இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்ட நினைவுக்கல் இது.

இக்கல்வெட்டுகள் வேறு சில விவாதங்களையும் தொடங்கி வைத்தன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவானூரிலுள்ள தனியார் வயலில் தனிக் கல்வெட்டுகள் இருக்கின்றன. அவை சமண சமயத்தினர், ‘நிசீகை’ எனும் உண்ணாநோன்பு நோற்று இறக்கும் மரபினை ‘கைப்பாணி’ என்கிறது. அந்த வகையில் காங்கியனூரில் உள்ள கல்வெட்டுகளும் இவ்வாறான கைப்பாணி மரபைச் சேர்ந்தது என விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியின் தொல்லியல் பேராசிரியர் முனைவர் த. ரமேஷ் கூறுகிறார்.

கைப்பாணி குறித்து சில குறிப்புகள்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் வசிக்கும் கூவனூர் பரமசிவ நயினார் என்பவர் வீட்டுக் கொல்லையில் உள்ள பலகைக் கற்களில் பொ.யு. 10ஆம் நூற்றாண்டு காலகட்டத்து எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. குப்பை பிரமாணி என்கிற சமணர் 12 நாள் நோற்று மறைந்த பின்னர் அவர் நினைவாக நடப்பட்ட நிசீதிகை (பாணித்தறி) பற்றியது முதல் கல்வெட்டு. இக்கல்வெட்டின் இரண்டு பக்கங்களிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் சில மந்திரச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.

‘கைபாணி’ என்ற தொகைச்சொல் சமண சமய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. சமண சமயக் கோட்பாட்டின்படி தேவர், மனிதர் ஆகியோருடைய உயிர்கள், சுட்டு விரலும் ஆட்காட்டி விரலும் விரிந்திருக்கும் நிலையில் இருப்பதுபோல் பிரியும் (இதற்குப் பாணி முகமெனவும், பாணி முக்தாகதி என்கிற வேறு பெயர்களும் உண்டு). விலங்குகளின் உயிர் பிரியும்போது ‘ப’ என்கிற வடிவில் பிரியும் (இதற்கு லாங்கல கதி என்பது பெயர்). நரகர் உயிர் பிரிவதற்கு ‘கோமூர்த்தி கதி’ என்று பெயர். ‘தத்துவார்த்த சூத்திரம்’ எனும் நூலில் இதற்கான விளக்கம் உள்ளது.

இந்தமுறை ‘பாணிமுகம்’ எனச் சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது (குணமாலையாரி லம்பகம் 948). கல்வெட்டில் ‘கைபாணி’ எனவும் ‘பாணித்தறி’ எனவும் குறிப்பிடப்படும் இம்மரபைச் சுட்டிக்காட்டும் வகையில் பாணிச் சின்னங்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. ‘பிரமாணி’ என்ற சொல்லுக்கு சாஸ்திரங்களில், வல்லவர் என்பது பொருள். எனவே சமண சாஸ்திரங்களில் வல்லவரொருவர் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து (சல்லேகனை) உயிர்பிரியும் பாங்கினை நினைவுகூர இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளதாகக் கருதலாம்.

இதை அடிப்படையாகக்கொண்டு, சமணம் சார்ந்த கைப்பாணி கல்வெட்டுகளாகக் காங்கியனூர் கல்வெட்டுகளைச் கருத, போதிய முகாந்திரம் உள்ளதாகக் கூறலாம்.

(தொடரும்)

 

படம்: பெண்ணின் தற்பலி, காங்கியனூர் கல்வெட்டு

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *