கடுமையான பனிப்பொழிவு, மைனஸ் டிகிரி குளிர் என அமெரிக்கக் குளிர்காலம் வாட்டி வதைக்கும் தன்மையுடையது. அப்படி ஒரு கடுங்குளிர் காலத்தில் ஒரு நாள் ஏதோ வேலையாகக் கேட் தோட்டத்தில் இருந்தார். மிகவும் குளிராக இருந்ததால், 5 வயது ஹெலன் அச்சமயம் சமையலறைக்குச் சென்று குளிர்காய எண்ணினாள்.
சமையலறை இருக்கும் திசை தெரியும் என்பதால் தட்டுத் தடுமாறி அங்கு சென்றுவிட்டாள் ஹெலன். அடுப்பில் நெருப்பு எரிந்துகொண்டிருப்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது. தீ என்றால்கூட என்னவென்று தெரியாது. ஆனால் அந்த அறைக்குள் சென்று குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டால் குளிருக்கு இதமாக இருக்கும் என்று தெரிந்திருந்தது. அச்சமயம் குடிக்க நீர் தேவைப்பட்டதால் கைகளால் துழாவினாள். அடுப்பின் மிக அருகிலேயே தேடியதால் எதிர்பாராவிதமாக அவளது மேல்சட்டையில் தீப்பிடித்துக்கொண்டது. தீயின் வெப்பம் தாளாமல் ஹெலன் அலறத் தொடங்கினாள்.
சத்தம் கேட்டு சமையலறைக்கு ஓடி வந்த கேட், மேல்சட்டை தீப்பிடித்து எறிந்துகொண்டிருக்கும் நிலையில் அலறியபடி இருந்த ஹெலனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து நின்றுவிட்டாலும், உடனடியாகச் செயல்பட்டு மேல்சட்டையில் பிடித்திருந்த தீயை கேட் அணைத்துவிட்டார். நல்ல வேளையாக உடையில் பிடித்த நெருப்பு குழந்தையின் உடலைச் சுடவில்லை. தக்க சமயத்தில் கேட் வந்து காப்பாற்றிவிட்டதால் ஹெலனுக்கு பெரியளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தன்னுடைய குழந்தையை அணைத்துக்கொண்டு கேட் கதறி அழுதார்.
அப்போதுதான், ஹெலனின் குறைபாடுகளை இனியும் அவளிடம் மறைப்பது அவளுடைய உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். ஆனால், குழந்தையிடம் அவளது குறைபாட்டை எடுத்துக்கூறும் முன்பு அவளுடைய எதிர்காலத்துக்கான கல்வியை உறுதிசெய்யவேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.
சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ‘லாரா ஃப்ரிட்ஜ்மேன்’ என்கிற நாவலைப் படிக்கும் சந்தர்ப்பம் அச்சமயம் கேட்டுக்கு வாய்த்தது. அந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான லாராவும் ஹெலனைப்போல் கண் தெரியாத, காது கேளாத, வாய் பேச முடியாத பெண். ஆனால் அவள் கல்வி கற்றுப் பல சாதனைகளைப் படைத்தாள் என நேர்மறை எண்ணங்களை விதைக்கும் வகையில் அந்நாவல் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்து முடித்ததும் தன் மகளின் வாழ்க்கை இருண்டு போகாது, நிச்சயமாகக் கல்வி என்ற விளக்கு அவளுக்கு ஒளியைக் காண்பிக்கும் என்கிற நம்பிக்கை கேட்டுக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லை சந்தித்து, ஹெலன் குறித்து அவரிடம் பேசினார் கேட்.
பெர்கின்ஸ் கல்வி நிலையத்தில் ஹெலனை சேர்த்துவிடும்படி ஆலோசனை கூறிய அந்த மனிதாபிமானமுள்ள விஞ்ஞானி, ‘உங்கள் மகளை உடனிருந்து பார்த்துக்கொள்ள ஓர் உதவியாளர்/காப்பாளர் தேவை’ என்கிற கருத்தைக் கேட்டிடம் வலியுறுத்தினார். அதை ஆமோதித்துவிட்டு வீடு திரும்பினார் கேட்.
ஒரு நாள், ஹெலனுக்கு இருக்கும் குறைபாடுகளை ஆர்தரும் கேட்டும் அவளுக்குப் புரிய வைக்க முயன்றார்கள். இது குறித்து தன்னுடைய சுயசரிதையில், ‘நான் மற்றவர்களைவிட வித்தியாசமானவள் என்பதை முதன்முதலில் எப்போது உணர்ந்தேன் என்பது எனக்கு நினைவில்லை’ என்று ஹெலன் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயத்தில், அதாவது 1886 அக்டோபர் 26 அன்று கேட்டுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் ஹெலனுக்காகக் கேட் ஒதுக்கிவந்த நேரம் குறைந்தது. இதனாலேயே, தனக்கு மட்டுமே கிடைத்து வந்த பெற்றோரின் கவனிப்பையும் அரவணைப்பையும் பங்கு போட்டுக்கொள்ள இன்னொரு குழந்தை வந்துவிட்டதாக எண்ணி அதைச் சற்றே பொறாமையோடு அணுகியதாகச் சுயசரிதையில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் சிறு சிறு அசைவுகளை உணர்ந்தும் அதன் கைகள், கால்கள், முகம் போன்றவற்றைத் தொட்டுப் பார்த்தும் அதன் மீது ஹெலனுக்கு பாசம் உருவானது.
கேட்டுக்கு குழந்தை பிறந்துவிட்டதால் ஹெலனை கவனித்துக்கொள்ளத் தீவிரமாக ஆள் தேடினார்கள். எப்போதும் ஹெலனுடனேயே இருக்கவேண்டும், அவளது தேவைகளைப் புரிந்துகொண்டு பணிவிடை செய்யவேண்டும், அவளுடன் கல்வி நிறுவனத்துக்குச் செல்லவேண்டும் என்பதால் கருணை, அன்பு, பொறுமை ஆகியவை நிறைந்த ஒரு காப்பாளரை ஹெலனின் பெற்றோர் தேடினார்கள். இந்த விஷயம் கேள்விப்பட்டு பலரும் வந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சம்பளம் மற்றும் இதர வசதிகளுக்காக வந்தார்களே தவிர, உண்மையிலேயே குறைபாடுகள் இருந்த 5 வயதுக் குழந்தைக்குக் காப்பாளராக இருக்கவேண்டும் என்கிற தியாக உணர்வு அவர்களிடம் இருக்கவில்லை.
கண், வாய், மூக்கு, செவி, மெய் ஆகிய ஐம்புலன்களில் மூன்று புலன்கள் ஹெலனிடம் இல்லை. மெய் அதாவது தொடுதல் மற்றும் நுகர்தல் ஆகியவற்றை வைத்து மட்டுமே தன்னைச் சுற்றியுள்ளதைக் குழந்தை ஹெலனால் உணர முடியும் என்ற நிலை இருந்தது. இத்தகைய குழந்தையின் கல்விக்கும் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள சேவை மனப்பான்மையும் தியாக உள்ளமும், அனைத்துக்கும் மேலாக மிகுந்த பொறுமையும் வேண்டும்.
வேலைக்கு விண்ணப்பித்திருந்த பலரையும் கேட் நிராகரித்தார். மீதமிருந்தவர்களில் ஒருவரை நியமித்தபோது அவரால் இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதன்பிறகு நியமிக்கப்பட்டவர்கள் அரை நாளிலேயே ஓடிவிட்டனர். கேட் நம்பிக்கை இழந்தார்.
அப்போது ஆனி சல்லிவன் என்கிற 20 வயதேயான இளம்பெண் காப்பாளர் பணிக்காக விண்ணப்பித்திருந்தார். ஆனியை பணியமர்த்த முதலில் கேட் மிகவும் தயங்கினார். ‘மிகவும் சிறு பெண்ணாக இருக்கிறாளே? இவளால் ஹெலனை சமாளிக்க முடியுமா? அப்படியே சமாளித்தாலும் மிகுந்த அன்போடு பழகிவிட்டு பிறகு திருமணம் என்று சொல்லி வேலையை விட்டு நின்றுவிட்டால் தன் மகளின் மனம் உடைந்துவிடுமே!’ என்றெல்லாம் அவர் யோசித்தார். ஆனாலும் ஏதோ உள்ளுணர்வால் ஆனியை வேலைக்கு நியமிப்பதாகக் குறிப்பிட்டு தங்கள் வீட்டுக்கு வரும்படி கேட் கடிதம் எழுதினார்.
1887ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று ஆனி சல்லிவன் என்கிற தேவதை ஹெலன் கெல்லரின் வாழ்வில் ஓர் இனிய தென்றலாக நுழைந்தார். பெர்கின்ஸ் கண்பார்வையற்றோர் கல்வி நிறுவனத்தில் உதவியாளர் பயிற்சியை முறையாகப் படித்து முதல் வகுப்பில் தேறியவர் ஆனி. ஆனால் அவருக்கு ஹெலனை எப்படி கல்வி கற்கத் தயார் செய்வதென்று முதலில் புரியவில்லை, ஆனால் நிச்சயமாக இந்தக் குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நீண்ட யோசனைக்குப் பிறகு ஹெலனின் தொட்டு உணரும் திறனை இதற்குப் பயன்படுத்த ஆனி முடிவு செய்தார்.
தோட்டத்துக்கு ஹெலனை அழைத்துச்சென்ற ஆனி, குளிர்ந்த நீரை ஒரு பைப் வழியாக அவளது ஒரு கையில் பீய்ச்சியடித்து, மற்றொரு கையில் ‘வாட்டர்’ என்று ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்தாக எழுதினார். இந்த உலகத்தில் தான் தொட்டு உணரும் பொருட்களுக்குப் பெயர்கள் உண்டு என்கிற உண்மை அப்போதுதான் ஹெலனுக்குத் தெரிய வந்தது. அவளைப் பொறுத்தவரையில் இது மிகப்பெரிய சாதனை. முதல் நாளின் முடிவில் கிட்டத்தட்ட 30 வார்த்தைகளை மிகுந்த ஆர்வத்தோடு ஹெலன் கற்றுக்கொண்டாள். ஒரே மாதத்துக்குள் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொண்டாள்.
பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரெய்லி எழுத்து முறையை ஹெலனுக்கு ஆனி அறிமுகப்படுத்தினார். ஒரே மாதத்தில் அதன் மூலமாக ஹெலன் வாசிக்கக் கற்றுக்கொண்டாள். பிரெய்லி முறையில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளைத் தொட்டு உணர்ந்துகொண்டு, தான் புரிந்துகொண்டதை ஆனியின் கைகளில் அவள் எழுதிக்காட்டுவாள். ஒரு கட்டத்தில் உறவினர்களுக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு முன்னேறினாள். ஹெலனால் பார்த்து எழுத முடியாது என்பதால், எழுத நினைப்பவற்றை ஆனியின் கைகளில் அவர் எழுத, அவற்றைக் காகிதத்தில் எழுதுவார் ஆனி.
எந்நேரமும் பிரெய்லி வாசிப்பு, பொருட்களின் பெயர்களை அறிந்துகொள்ளுதல், ஆகியவற்றில் தன்னுடைய நேரத்தை ஹெலன் செலவிட்டதால், அவளது மனதில் குழப்பங்கள் குறைந்து அமைதி நிலவியது. இதனால் தோட்டத்தில் உலவும்போதோ அல்லது விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தாலோ முன்பு காண்பித்த வன்முறையையும் கோபத்தையும் ஹெலன் வெளிப்படுத்தவேயில்லை. அவளது பெற்றோருக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தங்களுடைய மகள் மூளைக்கோளாறு உள்ளவள் அல்ல என்று உறவினர்களிடமும் நண்பர்களிடமும் குறிப்பிட்டதோடு, அவள் எழுதிய அன்பு நிறைந்த கடிதங்களைக் காண்பித்துப் பெருமைப்பட்டுக்கொண்டனர்.
மூளை சரியில்லாதவள், மனநிலை பாதிக்கப்பட்டவள் என்றெல்லாம் முன்பு கூறியவர்கள், அச்சமயம் ஹெலனின் அமைதியான போக்கையும் அவளது எழுத்துத் திறமையையும் பார்த்து வாயடைத்துப்போனார்கள். தளராத மனமும் விடாமுயற்சியும்கொண்ட ஹெலனுடைய கல்வியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தவேண்டும் என்கிற எண்ணம் ஆனிக்கு உண்டானது. ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை.
(தொடரும்)

