எங்கு காணினும் அரசியலே எனுமளவிற்கு வீடு, நாடு, பணியிடம் என எல்லாத் துறைகளிலும், எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது அரசியல். எனில், எதனை இங்கு நாம் அரசியல் என்கிறோம்? எப்பொருளில் அச்சொல்லை நாம் பயன்படுத்துகிறோம்?
இன்றைய காலத்தில் அதிகாரத்தைக் கைவசப்படுத்துதல், அதற்காக அறமற்ற எவ்வகையான செயலையும் செய்தல், எந்த எல்லைக்கும் செல்லுதல் எனும் பொருளில்தான் அரசியல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் அதிகாரப் போட்டியும், ஆதிக்க வெறியும் நிறைந்துள்ளதோ அங்கெல்லாம் அரசியல் என்ற சொல் ஊடுருவி நமது வாழ்வினில் பிரிக்க முடியாத அங்கமாய் வியாபித்திருக்கிறது. ஆனால் சங்க காலத்தில் அரசியல் என்ற சொல்லுக்கான பொருள் யாதெனத் தெரியுமா?
இன்று நாம் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்தும் பொருளில் பயன்படுத்தும் அரசியல் என்ற சொல் உண்மையில் அப்பொருளில் உதயமாகவில்லை. எனில், அரசியல் என்ற சொல் எப்போது எப்படித் தோன்றியிருக்கும்?
ஆதி காலத்தில் குகைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்து தனித்து வாழ்ந்திருந்த மனிதன், குழுக்களாய் வாழத் தொடங்கினான். இடம்விட்டு இடம்பெயர்ந்து நாடோடிகளாய் வாழ்ந்திருந்த மக்கள் ஓரிடத்தில் நிலையாய் வாழத் தொடங்கினர். அவ்விதம் அவர்கள் குழுக்களாய் ஓரிடத்தில் வாழத் தொடங்கியபோது, தங்களை வழிநடத்திச் செல்லவும் பாதுகாக்கவும் அக்குழுவில் வலிமை, அறிவு, வீரம், ஈகை என அனைத்திலும் உயர்நிலையில் இருந்த ஒருவனைத் தங்களின் தலைவனாகத் தேர்ந்தெடுத்தனர். அத்தலைவன், தன்னுடன் இணைந்து மக்களைப் பாதுகாக்கக் குழுவினை அமைத்தான். இதுவே அரசு என்ற அமைப்பு உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.
மக்களை அரசன் எவ்விதம் ஆள வேண்டுமென்ற கோட்பாட்டினை உருவாக்கி அதற்கு அரசியல் என்று பெயரிட்டனர். ஆம், அரசியல் என்ற சொல் அரசாளும் முறையைக் குறிக்கும் சொல்லாகத்தான் தோன்றியது. ஆட்சி என்ற சொல்லுக்கு உரிமை, ஆளுகை, அதிகாரம் ஆகிய பொருள்களை வழங்குகிறது தமிழ் அகராதி. அரசாட்சி என்பது அரசுத் துறைகளைக்கொண்டு நிர்வாகம் அமைத்து நாட்டையும் மக்களையும் எவ்விதம் அரசன் நிர்வகிக்க வேண்டுமென்பதைக் குறிக்கும் சொல்லாய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அரசியல் என்பது அரசாட்சி புரிவதற்குரிய கோட்பாட்டினைக் குறிக்கும் சொல் என்றால், அக்காலத்தில் அரசாட்சி முறைகளும் கோட்பாடுகளும் என்னென்னவாக இருந்திருக்கும் என்கின்ற கேள்வி எழுகிறதல்லவா? எத்தகைய கோட்பாட்டினை அரசாளும் முறையாகச் சங்க காலத்தில் வகுத்திருந்தனர் என்று அறிந்துகொள்ளும் ஆவல் எழுகிறதல்லவா?
சங்க காலத்தில் இக்கோட்பாட்டினைத் தொகைச்சொல்லாய் உருவாக்கினர். தொகைச்சொல் என்பது ஒரே வகையைச் சேர்ந்த பல பொருள்களை அல்லது கருத்துகளை, ஒரு பொதுவான சொல்லால் சுருக்குவது.
‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’ எனும் தொடரில் இருவினை என்பது நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளையும் குறிக்கிறது. இதில் இருவினை என்பது தொகைச்சொல். முக்காலம் எனும் தொகைச்சொல், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களை உணர்த்துகிறது. நாற்பொருள் என்னும் தொகைச்சொல் அறம், பொருள், இன்பம், வீடு எனும் பொருள்களை உணர்த்துகிறது. ஐம்புலன் என்னும் தொகைச்சொல் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐந்து புலன்களையும் உணர்த்துகிறது. இவ்வகையில் அரசாட்சிக்குரிய கோட்பாடுகளாக அறுகுணங்களையும், அறுதொழில்களையும் வகுத்தனர். இவற்றைக்கொண்டு அரசியல் கோட்பாட்டினை உருவாக்கினர்.
அரசர்க்குரிய அறுதொழில்கள் யாவை?
மக்களை அரசன் பாதுகாத்து வழிநடத்த, அரசர் கடைபிடிக்க வேண்டிய அறுதொழில்களாக ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந்தெறுதல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது சங்க இலக்கியம்.
ஓதல் என்றால் ஓதுதல். சங்க காலத்தில் ஓதுதல் என்பது கல்வி பயில்வதைக் குறிக்கிறது. ஔவையாரின் ஆத்திசூடியில் வரும் ‘ஓதுவது ஒழியேல்’ எனும் சொற்றொடர் கல்வி பயில்வதை நிறுத்தாதே எனும் பொருளில் கூறப்பட்டிருக்கிறது. பண்டைய காலத்தில் தலைவன் கல்வி கற்பதற்காகத் தலைவியைப் பிரிந்துசெல்வதை அகப்பொருள் இலக்கணம் ‘ஓதற்பிரிவு’ என்று அழைக்கிறது. வேட்டல் என்பது சங்க காலத்தில் வேள்விகள் (யாகங்கள்) மூலம் இறைவழிபாடு செய்வதைக் குறிக்கிறது. ஒரு சிறந்த இலக்கை நோக்கி மனத்தை நிலைநிறுத்தி, அதை அடைவதற்கான முயற்சியையும், விருப்பத்தையும் குறிக்கும் சொல்லாகவும் வேட்டல் பயன்படுத்தப்படுகிறது. ஈதல் என்பது வறியவர்களுக்கும் புலவர்களுக்கும் கொடை அளிப்பதைக் குறிக்கிறது. படைக்கலம் பயிறல் என்பது போர்க்கலை மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெறுவதைக் குறிக்கிறது. பல்லுயிரோம்பல் என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. பகைத்திறந்தெறுதல் என்பது பகைவர்களின் திறமை அறிந்து போரில் வெல்லும் நெறிகளைக் கற்று நாட்டைப் பாதுகாத்தலைக் குறிக்கிறது.
தொடர்ந்து கல்வி பயின்றுகொண்டே இருப்பது, வேள்விகள் செய்து இறை வழிபாடு செய்வது, இல்லாதவருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடை அளிப்பது, தனது நாட்டு மக்களையும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பது, பகைவர்களின் வலிமை அறிந்து அவர்களை வெல்வதற்குரிய திறமைகளை வளர்த்துக்கொள்வது ஆகியன ஒரு மன்னன் தன் நாட்டை அறநெறிப்படி ஆளத் தேவையானவையாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
ஒரு மன்னன் எதிரிகளிடமிருந்து தனது நாட்டைப் பாதுகாக்க, அவனிடம் இருக்க வேண்டிய அறுகுணங்களாய் ஆறு அரசியல் உத்திகளையும் வகுத்தனர் அக்கால மக்கள். ஒரு மன்னன் தனது நாட்டைப் பாதுகாக்கவும், பகைவர்களை வெல்லவும் பயன்படுத்த வேண்டிய அரசியல் உத்திகளாக, நட்பு, பகை, செலவு, இருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல் ஆகிய ஆறு கொள்கைகளைக் கூறுகின்றனர். இவை நட்பு, போர், பயணம், காத்திருப்பு, பிளவுபடுத்துதல், மற்றும் கூட்டணி சேர்தல் ஆகியவற்றைக் குறிக்கின்றது.
நட்பு என்பது வலிமையான வேற்று அரசர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளுதல். பகை என்பது பகைவர் மீது பகைகொண்டு போர் தொடுத்தல். செலவு என்பது போருக்காகப் பயணம் மேற்கொள்ளுதல் அல்லது பகைவர் மீது படையெடுத்துச் செல்லுதல். இருக்கை என்பது போர்புரிய ஏற்ற காலம் கருதி காத்திருத்தல் அல்லது ஓர் இடத்தில் தங்கியிருத்தல். கூடினரைப் பிரித்தல் என்பது பகைவர் கூட்டணியில் உள்ளவர்களைப் பிரித்துப் பலவீனப்படுத்துதல். கூட்டல் என்பது தமக்கு ஆதரவானவர்களையும் வலிமையான அரசர்களையும் சேர்த்துக் கொண்டு வலிமையைக் கூட்டுதல். இவ்வகையாகச் சங்க காலத்தில் வகுத்தளிக்கப்பட்ட ஆறு அரசியல் உத்திகளும் தற்கால அரசியலுக்கும் பொருந்தும் வகையில் இருக்கின்றன.
பண்டைய காலத்தின் இந்த ஆறு குணங்களும் இன்றும் உலக நாடுகளுக்கிடையிலான உறவுகளிலும் தொழில் போட்டியிலும் மிக முக்கியமானவையாக உள்ளன. இக்கால அரசியலில் நட்பு என்பது இரு நாடுகள் பரஸ்பரம் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளுதலைக் குறிக்கிறது. பகை என்பது நேரடியாகப் போர் செய்யாவிடினும் பொருளாதாரத் தடைகள் அல்லது கருத்து மோதல்கள் மூலம் எதிர்ப்பைக் காட்டுதலைக் குறிக்கிறது. செலவு என்பது ஒரு நிறுவனம் அல்லது நாடு தனது எல்லையை விரிவுபடுத்த அதிரடியாக எடுக்கும் நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இருக்கை என்பது தக்க சமயம் வரும் வரை அமைதியாகக் காத்திருந்து, தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ளுதலையும் வெளிப்படுத்துவதையும் குறிக்கிறது. தன் பலம் குறைவாக இருக்கும்போது, எதிரி நம்மைவிட வலிமையாக இருக்கும்போது, நேருக்கு நேர் மோதாமல் அமைதியாக இருந்து நமது பொருளாதாரத்தையும் ராணுவத்தையும் பலப்படுத்திக்கொள்ளும் காலத்தைக் குறிக்கிறது. கூடினரைப் பிரித்தல் என்பது எதிரணி நாடுகளுக்கு இடையே உள்ள பிளவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பலவீனப்படுத்துவதைக் குறிக்கிறது. கூட்டல் என்பது ஒத்த கருத்துடைய நாடுகளுடன் கூட்டணி அமைத்து வலிமையைப் பெருக்குவதைக் குறிக்கிறது. நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் சந்தைப்போட்டியில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைத் தனிமைப்படுத்த மற்ற நிறுவனங்கள் கைகோர்ப்பது இதற்குச் சிறந்த சான்றாய் கூறலாம்.
இப்படியாக எக்காலத்திற்கும் பொருந்துவதான கொள்கைகளையும் கோட்பாட்டினையும் அரசியல் அமைப்புகளாய் உருவாக்கி எழுச்சிமிகு சமுதாயத்தை உருவாக்கியிருக்கின்ற சங்க காலத்தவர்களை முற்போக்குவாதிகள் என்று கூறுவது மிகவும் பொருத்தமானதே. நாட்டின் முன்னேற்றம் குறித்த அவர்களின் சிந்தனைகள் யாவையுமே முற்போக்குச் சிந்தனைகள்தான்.
கம்ப ராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தின் அரசியல்படலத்தில் இராமன் சுக்கிரீவனுக்குக் கூறுவதுபோல் ஆட்சியாளருக்கான அறிவுரையைக் கூறுகிறார் கம்பர்.
வாய்மை சால் அறிவின்
வாய்த்த மந்திர மாந்தரோடும்,
தீமை தீர் ஒழுக்கின் வந்த
திறத் தொழில் மறவரோடும்,
தூய்மை சால் புணர்ச்சி பேணி, துகள்
அறு தொழிலை ஆகி,
சேய்மையோடு அணிமை இன்றி,
தேவரின் தெரிய நிற்றி.
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – உண்மையான, சிறந்த அறிவு பெற்ற மந்திரி மாந்தர்களோடும்;
தீமைதீர் – தவறு செய்யாத;
ஒழுக்கின் வந்த – ஒழுக்க நெறியில் வாழும்;
திறந் தொழில் மறவரோடும் – திறமையான போர்த்தொழில் புரியும் வீரர்களுடனும்;
தூய்மைசால் புணர்ச்சி பேணி – தூய்மையான நட்பு/உறவு கொண்டு;
துகள் அறுதொழிலை ஆகி – துகள் (குற்றம்), அறு (அற்ற) செயல்களைச் செய்து;
சேய்மையோடு அணிமை யின்றி – சேய்மை என்றால் தொலைவு, அணிமை என்றால் அண்மை (அருகில்), அவர்களிடம் மிகத் தூரமும் இல்லாமல், மிக நெருக்கமும் இல்லாமல்;
தேவரின் தெரிய நிற்றி – தேவர்களைப்போல நிலைத்திருப்பாயாக.
அறிவும், வாய்மையும் பெற்ற நன்மாந்தர்களை அமைச்சர்களாகக் கொண்டு, தீய எண்ணம் மனத்தில் இல்லாமல் நல்லொழுக்கம் உடைய மறவர்களைப் படைவீரர்களாகக் கொண்டு, நீயும் மனத்தூயவனாக இருந்து அத்தகையவர்களோடு நட்புபூண்டு வாழ வேண்டும். மேலே கூறப்பெற்ற இத்தனை பேருடனும் நீ பழகும்பொழுது, மிகவும் நெருங்கிப் பழகிவிடாமலும், அதிகத் தூரத்தில் அவர்களை வைத்துவிடாமலும் (சேய்மையோடு அணிமை இன்றி) பழக வேண்டும். மிகவும் நெருங்கினால் பொருந்தாத உரிமைகளை அவர்கள் பெற்றுக்கொள்ள முயல்வார்கள். தூரத்தே அவர்களை வைத்துவிட்டால் அவர்களால் கிடைக்கும் நற்பயனை நீ அடைய முடியாமல் போய்விடும். எனவே காட்சிக்கு எளியனாய், நெருங்குதற்கு அரியனாய், நற்செயல் செய்பவனாய் நீ அரசாட்சி புரியவேண்டும் என்று இராமன் சுக்ரீவனுக்கு உரைப்பதன் மூலம் எக்காலத்திற்கும் பொருந்துகின்ற ஆட்சியாளருக்கான அறிவுரையைக் கூறுகிறார் கம்பர்.
சேய்மையோடு அணிமை இன்றி எனும் பொருளில் வள்ளுவரும் ‘அகலாது, அணுகாது தீக்காய்வார் போல்க’ என்ற குறளின் மூலம் உரைக்கிறார். குளிரில் தீக்காய்பவர்கள், நெருப்பிற்கு மிக அருகில் செல்லாமலும், மிகத் தூரத்தில் விலகாமலும், சரியான தூரத்தில் பயன் பெறுவதைப்போல என்பது இதன் பொருள்.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் – குறள் (691)
இங்கு வெறும் வேந்தர் என்று கூறாமல், இகல் வேந்தர் என்கிறார் வள்ளுவர். இகல் என்ற சொல்லுக்குப் பகை, போர், சிக்கு, வலிமை, அளவு, புலவி ஆகியவை பொருள்களாகும். ஆதலால் போர்க்குணம் அல்லது பகைக்குணம் கொண்ட வலிமையான வேந்தரைச் சார்ந்து வாழ்பவர்கள் அவரிடம் மிக நெருங்கியும் பழகாமல், மிக விலகியும் இருக்காமல், தகுந்த தூரத்தில் வைத்துப் பக்குவமாகப் பழக வேண்டும் என்கிறார்.
இவ்விதமாக அரசர்க்கும், அரசரைச் சார்ந்து வாழ்பவருக்கும் உரிய கோட்பாட்டினை வகுத்தவர்கள், அரசர்கள் நல்லாட்சி புரியவும், அரசியல் பணிகளை மேற்கொள்ளவும், அவர்களுக்கு உதவிபுரிய நிர்வாகக் குழுக்களை அமைத்தனர்.
அரசர் காலத்தில் இருந்த அரசு நிர்வாகக் குழுக்களைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
(தொடரும்)

