Skip to content
Home » தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #2 – ஹிமாச்சல் சலோ

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #2 – ஹிமாச்சல் சலோ

இமயமலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி பயணிக்கும் எண்ணற்ற நதிகளில், மிக முக்கியமானது பார்வதி. இந்த நதி பாயும் இடம் பார்வதி பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

கற்பனைக்கும் அப்பாற்பட்ட இயற்கைக் காட்சிகளைக் காண விரும்பும் நபர்கள் பார்வதி பள்ளத்தாக்குப் பகுதிக்குத் தாராளமாகப் பயணிக்கலாம். பனிபடர்ந்த மலைகளுக்கு நடுவே பார்வதி நதி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் காட்சி, இயற்கையின் பிரமிப்பையும் அழகையும் ஒரு சேர வெளிப்படுத்துவதாக இருக்கும்.

கூடாரங்கள் அமைத்து தங்குவதற்கும் டிரெக்கிங்கில் ஈடுபடுவதற்கும் பார்வதி பள்ளத்தாக்கு பேர்போன இடம். மேலும், மனித நடமாட்டம் அற்ற பல பகுதிகள் அங்கே உண்டு. இதனாலேயே இயற்கையுடன் இணைந்த வாழ்வை அனுபவிப்பதற்காக அங்கு வருவோர் அநேகம்.

அது 2016ஆம் ஆண்டு. குளிரின் தாக்கமும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்திடாத மார்ச் மாத வாக்கில், டெல்லியில் இருந்த நண்பர்கள் நாங்கள் ஐவர் இணைந்து ஹிமாச்சலுக்குச் செல்ல திட்டமிட்டோம். ஆனால் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள சிம்லா, குலு, மணாலி உள்ளிட்ட பிரபலமான இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு விருப்பமில்லை. தேடியபோது பார்வதி பள்ளத்தாக்கு குறித்து எங்களுக்குத் தெரியவந்தது.

அப்போது ஜியோ அறிமுகமாகியிருக்கவில்லை என்பதால் இணையத்தின் பயன்பாடு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. பார்வதி பள்ளத்தாக்குப் பகுதிக்குச் செல்லும்படி ஹிமாச்சலை பூர்வீகமாகக்கொண்டிருந்த டெல்லி வாழ் தோழி திருஷ்டியிடம் இருந்து எங்களுக்கு ஆலோசனை கிடைத்தது. அத்துடன் ஓர் எச்சரிக்கையும் இணைந்தே வந்தது.

‘டிரெக்கிங் என்ற பெயரில் ஆள் அரவம் இல்லாத பகுதிகளுக்குச் செல்லவேண்டாம். ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள டிரெக்கிங் வழித்தடங்களுக்குச் செல்வதே பாதுகாப்பானது. தனியாகவும் குழுவாகவும் அங்குள்ள அத்துவானக் காட்டுக்குள் சென்று காணாமல் போனவர்களின் பட்டியல் மிக நீளம்’ என்றாள்.

இந்தப் பயணத்துக்குத் திட்டமிட்ட நாங்கள் ஐவரும் ஆபத்தைச் சாகசமாகப் பார்க்கும் வயதுடையவர்கள் என்றாலும், அச்சமயம் தேவையில்லாமல் எந்தவொரு சிக்கலிலும் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. மிகவும் பரபரப்பான சூழலுக்கு நடுவே கிடைக்கவிருந்த 4 நாள்கள் இடைவெளியில்தான் இதற்குத் திட்டமிட்டிருந்தோம். டெல்லியிலிருந்து பார்வதி பள்ளத்தாக்கு பகுதிக்குக் கிளம்பிச் செல்வதற்கும், அங்கிருந்து திரும்பி வருவதற்கும் தலா ஒரு நாள் கழிந்துவிடும் என்கிற நிலையில், மீதமிருந்த 2 நாட்களுக்கு அங்குள்ள இடங்களைப் பார்க்க முடிவு செய்யப்பட்டது.

ஓரிரு நாட்கள் கழித்து டெல்லியில் இருந்து அதிகாலை 6 மணிக்குக் கிளம்பினோம். முதல்முறையாக ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு, அதுவும் நண்பர்களுடன் செல்வதால் உற்சாக மனநிலையில் இருந்தேன். சோனிபட், கர்னால், அம்பாலா, பிலாஸ்பூர், மண்டி வழியாகப் பயணித்து மாலை 7 மணிக்குக் கசோல் என்கிற இடத்தை அடைந்தோம்.

பார்வதி பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருந்த மிக முக்கியமான சிறு நகரம் கசோல். பள்ளத்தாக்கு பகுதிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பல தங்குமிடங்களும் உணவகங்களும் அங்கிருந்தன. அதிகாலையில் டிரெக்கிங் செல்ல திட்டமிடுபவர்கள் பெரும்பாலும் இரவில் இங்கு தங்கிவிடுவது வழக்கம். நாங்களும் அவ்வாறே முடிவு செய்திருந்தோம்.

கசோலில் அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் டோஷ் என்றழைக்கப்பட்ட கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்து குட்லா எனப்படும் மற்றொரு இடத்துக்கு டிரெக்கிங் செல்வதே எங்கள் திட்டம்.

‘டோஷில் இருந்து தொடங்கும் கரடுமுரடான பாதையில் நடந்து அடர்ந்த காடு, சிறிய நீர்வீழ்ச்சி, குறுகிய பாலங்கள் உள்ளிட்டவற்றைக் கடந்து குட்லாவுக்குச் சென்றுவிட்டால் போதுமானது. அனைத்துப் பக்கமும் பனிபடர்ந்த மலைகளைப் பார்த்து ரசித்தபடி மணிக்கணக்கில் அமர்ந்திருக்கலாம்’ என்றெல்லாம் திருஷ்டி எங்களிடம் சொல்லி அனுப்பியிருந்தாள். முதல் நாள் டோஷ், இரண்டாம் நாள் மணிகரன். இதுதான் திட்டம்.

கசோலை அடைந்தபோது 13 மணிநேர தொடர் பயணம் தந்த களைப்பு எங்களுக்கு இருந்தாலும், மறுநாள் குட்லாவுக்கு டிரெக்கிங் செல்லப்போகும் ஆர்வம் எங்களை உற்சாகமாக வைத்திருந்தது. முன்பதிவு செய்திருந்த விடுதியில் உடைமைகளை வைத்தவிட்டு, சாப்பிடுவதற்காக வெளியே சென்றோம். எங்கள் பயணத் திட்டத்தை முழுவதுமாக மாற்றிப்போட்ட ஒரு சந்திப்பு அப்போது நடந்தேறியது.

·
எந்நேரமும் பரபரப்புடன் இருக்கும் டெல்லியில் இருந்து கிளம்பி வந்த எங்களுக்கு, எவ்விதப் பரபரப்பும் இல்லாத கசோலின் குளுமையான இரவு மிகவும் ரம்மியமாகத் தெரிந்தது. அந்நகரை ஒட்டி மிகவும் அமைதியாகப் பார்வதி நதி ஓடிக்கொண்டிருந்தது.

ஹிமாச்சலிலும் உத்தரகண்டிலும் உள்ள சுற்றுலா பகுதிகளில் பிரெட் ஆம்லெட், மேகி, ஆலூ பராத்தா ஆகிய மூன்று வஸ்துக்கள்தான் பெரும்பாலும் கிடைக்கும். எங்களுக்கு இது முன்பே தெரியுமென்றாலும், இவற்றைத் தாண்டி வேறு ஏதாவது கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதை அறிய ஒவ்வொரு உணவகமாக நோட்டம்விட்டுக்கொண்டிருந்தோம்.

அப்போது, அருகருகே அமைந்திருந்த இரு உணவகங்களின் முகப்பிலும் அதுவரை பார்த்திடாத புதிய மொழியில் ஏதோ எழுதியிருந்ததைக் கவனித்தேன். நிச்சயமாக அது இந்திய மொழி அல்ல என்பது தெரிந்தது. அது குறித்து நண்பர்களிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களுக்கும் அது என்ன மொழி என்பது தெரியவில்லை.

என்னவாக இருக்கும் என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது, எனக்கு அருகே நின்றுகொண்டிருந்த நண்பன் சௌரவ், ‘நான் விசாரித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, அந்த இரண்டில் அதிகம் கூட்டமில்லாத உணவகத்துக்குள் நுழைந்தான். ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தவன், ‘அது ஹீப்ரூ மொழி’ என்றான்.

அதைக் கேட்டதும் நாங்கள் நால்வரும் ஆச்சரியப்பட்டோம். உடனே, ‘இங்கு எதுக்கு ஹீப்ரூ மொழியில் எழுதியிருக்கிறார்கள்?’ என்று நான் கேட்க, ‘வேறு எதற்கு? இஸ்ரேலியர்களுக்காகத்தான்!’ என்றான்.

‘இஸ்ரேலியர்களா?’ என்றபடி நாங்கள் நெற்றியைச் சுருக்க, ‘ஆம். இங்கே அதிகளவில் இஸ்ரேலியர்கள் வருவார்களாம். அதற்கான காரணத்தைக் கேட்டேன். சுற்றுலாவுக்காக வந்து செல்வார்கள் என்று அங்கிருந்தவர் அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தார்’ என்றான் சௌரவ்.

அந்நேரத்தில் எங்கள் அனைவரது சிந்தனையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அந்த உணவகத்துக்குள் நாங்கள் ஐவரும் நுழைந்து மெனு கார்ட்டை வாங்கிப் பார்த்தோம். இஸ்ரேலி டிஷ்ஷஸ் என்கிற தலைப்பின் கீழ் பல உணவுகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அவற்றில் ‘ஹம்மஸ்’ என்கிற பெயர் மட்டுமே இப்போதும் என் நினைவில் உள்ளது. பொதுவாக அனைத்தும் மிகவும் வித்தியாசமாக இருந்தன.

இஸ்ரேலி உணவுகளை எங்களில் யாருமே அதற்கு முன்பு சாப்பிட்டது கிடையாது என்பதால், ஒன்றிரண்டை வாங்கிச் சாப்பிட ஆசைப்பட்டோம். ஆனால் ஆர்வத்தில் வாங்கிவிட்டு பின்னர் பிடிக்காவிட்டால் உணவும் வீண் காசும் வீண் என்பதால் ஆசையைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினோம்.

அதன்பிறகு வழியில் தென்பட்ட ஒரு நடுத்தரமான உணவகத்துக்குச் சென்று ஆலூ பராத்தா, மேகி போன்ற உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம். ஒவ்வொன்றாக வந்தது. சாப்பிடத் தொடங்கினோம். எங்கள் குழுவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகன்ராஜ் என்கிற நண்பனும் இருந்தான். நாங்கள் இருவரும் எங்களுக்குள் தமிழில் பேசினோம்.

எங்களுக்கான உணவுகளை எடுத்து வந்து கொடுத்துக்கொண்டிருந்த அந்த உணவகத்தில் வேலை பார்க்கும் நபர் இதைக் கவனித்திருப்பார் என்றே நினைக்கிறேன். அவராகவே எங்களிடம், ‘சௌத் இந்தியனா?’ என்று ஹிந்தியில் கேட்டார்.

எங்கள் ஐவருக்கும் ஹிந்தி புரியும் என்றாலும் அதைச் சரளமாகப் பேசத் தெரிந்த ஆள் சௌரவ் மட்டுமே. அதேநேரம் எதிரே இருக்கும் நபருக்கு ஒரு விஷயத்தைப் புரியவைக்கும் அளவுக்கான உடைந்த ஹிந்தியில் பேச எங்கள் நால்வருக்கும் தெரியும்.

ஆமாம் என்றபடி அவரைப் பார்த்துத் தலையசைத்ததும், ‘சுற்றிப் பார்த்துவிட்டீர்களா? இல்லை இனிமேல்தானா?’ என்றார்.

‘மாலையில்தான் வந்து சேர்ந்தோம், நாளை சுற்றிப்பார்க்கவேண்டும்’ என சௌரவ் கூறியதும், ‘எங்கெங்கே செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

‘நாளை குட்லா. நாளை மறுநாள் மணிகரன்’ என்று அவருக்கு சௌரவ் பதில் சொல்லி முடித்ததுதான் தாமதம், ‘மலானா போகவில்லையா?’ என்று கேட்டார்.

‘மலானாவா? அங்கே என்ன இருக்கிறது?’ என்று மற்றொரு நண்பன் அக்‌ஷய் அவரிடம் கேட்கவும், ‘அருகில்தான். அது மிகவும் தனித்துவமான இடம். அங்கிருப்பவர்களை நாம் தொடக்கூடாது. வெளியாட்களுக்கு அங்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன’ என்றார்.

அவர் சொல்வதுபோன்ற ஓர் இடம் அருகில் இருப்பதாக திருஷ்டி எங்களிடம் சொல்லவில்லை என்பதால், அந்தத் தகவல் எங்களை ஆச்சரியப்படுத்தியது.

‘எதனால் வெளியாட்களுக்குக் கட்டுப்பாடுகள்?’ என்று அவரிடம் கேட்டான் அக்‌ஷய்.

‘அவர்கள் உயர்குடி ஆரியர்கள். வெளியாட்களைவிடத் தங்களை மிகவும் உயர்வாகக் கருதுகிறார்கள்’ என்று பதிலளித்தார்.

‘அங்கு எப்படிச் செல்வது?’ என்று அவரிடம் கேட்டேன்.

‘பக்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் அந்தக் கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி கிடையாது. நடந்துதான் செல்லவேண்டும். உங்களுக்கு வேண்டுமென்றால் நானேகூட அழைத்துச் செல்கிறேன். எனக்குத் தெரிந்த ஒருவர் அங்கு உணவகம் வைத்திருக்கிறார்’ என்றார்.

பேசிவிட்டு பதில் சொல்வதாக அவரிடம் கூறிவிட்டு, மலானா செல்வது குறித்து எங்களுக்குள் விவாதித்தோம். அவர் சொன்னதை வைத்து அது விசித்திரமான இடம் என்பது புரிந்தது. இதனாலேயே மறுநாள் டோஷுக்கு பதிலாக மலானாவுக்குச் செல்ல நாங்கள் ஒருமனதாக முடிவெடுத்தோம்.

உணவருந்தி முடித்துவிட்டு அந்நபரிடம் எங்களது முடிவைச் சொல்லி, மறுநாள் அங்கு அழைத்துச் செல்லும்படி கூறினோம். மகிழ்ச்சியுடன் அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

‘மலானாவுக்கு அழைத்துச் செல்வதற்காக உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும்?’ என்று கேட்டபோது, ‘அங்கு சென்றுவிட்டு வந்த பிறகு நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’ என்றார்.

அதன்பிறகு அவரது பெயரை நண்பன் மனோகர் கேட்டதும், வினய் தாக்கூர் என்று பதிலளித்த அந்நபர், காலை 8 மணி வாக்கில் அதே உணவகத்துக்கு வரும்படி எங்களிடம் கூறினார். அதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றோம்.

டோஷ் டிரெங்கிங்குக்காக ஆர்வத்துடன் இருந்த எங்களை, மலானா டிரெங்கிங் திட்டம் மேலும் உற்சாகத்துக்குள்ளாக்கியது. அது குறித்து பேசிக்கொண்டே விடுதிக்குத் திரும்பினோம். சிறிது நேரத்திலேயே அனைவரும் தூக்கத்தில் விழுந்தோம்.

மறுநாள் காலை 6 மணி தொடங்கி ஒவ்வொருவராக எழுந்து குளித்து தயாராகி, வினய் தாக்கூர் சொன்னதற்கு 10 நிமிடங்கள் முன்பாகவே அந்த உணவகத்துக்குச் சென்றுவிட்டோம். ஆனால் ஓர் அவசர வேலையாக அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்றுவிட்டதாக அங்கிருந்த ஒருவர் கூறினார்.

(பயணிப்போம்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *