தந்தையின் வற்புறுத்தலின்படி தூத்துக்குடி வந்திருந்தாலும், சிதம்பரனாரின் தனிப்பெருங்குணம் மாறவில்லை. ஒட்டப்பிடாரத்தில் இருந்தபோதே மனத்தில் குடியேறியிருந்த சுதேசி எண்ணம், ஆன்மிகத் தேடல், தமிழாய்வு போன்றவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தது தூத்துக்குடி நகரமே.
வ.உ.சி வழக்கம்போல் பிரச்சினையென யார் வந்தாலும் தீர்வுகாணும் முயற்சியை விடவில்லை. தொடக்கத்தில் வழக்குகள் அவ்வளவாக வரவில்லை. அவரது வாதத்திறமையைப் பார்த்து வழக்குகள் வரத்தொடங்கியிருந்தன. அச்சமயம் வ.உ.சிக்கு உதவிசெய்வதாக ஒருவன் வீடுதேடி வந்தான். ‘உங்களுக்கு வேண்டிய வழக்குகளைத் தினமும் கொண்டு வந்து தருகிறேன். ஆனால் அதற்கொப்ப தரகுத்தொகை வேண்டும்’ என்று வியாபாரம் பேசத் தொடங்கினான். வ.உ.சிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வள்ளியம்மையிடம் ஆலோசனை கேட்டார். இதற்கு வள்ளியம்மை, பொருளை மட்டுமே ஈட்டி வாழவேண்டிய அவசியம் இல்லை என்று வ.உ.சியிடம் கூறினார். ‘நம்மை நாடிவரும் வழக்குகள் மட்டும் போதுமானது. யாருக்கும் வளைந்து கொடுக்க வேண்டாம். குற்றவாளி எனத் தெரிந்த வழக்கினை எடுக்கவும் வேண்டாம்’ எனக் கூறி வ.உ.சியின் அறநெறியில் சரிவுவராது காத்து நின்றார்.
தற்காத்துத் தற்கொண்டற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்ணென்று
தன் கற்பையும், உடல் நலத்தையும் காப்பதோடு தன் கணவனையும் அன்புடன் பேணி, குடும்பத்திற்குப் புகழைத் தரும் நற்பண்புகளைக் காத்து, சோர்வில்லாமல் கடமைகளைச் செய்பவளே உண்மையான மனைவி என்கிறது திருக்குறள். அங்ஙனம் வாழ்ந்து காட்டியவர் வள்ளியம்மை என்பதை வ.உ.சி எழுதிய வள்ளியம்மை சரித்திரம் நூலின் மூலம் அறியலாம்.
திருவள்ளுவரின் மனைவி வாசுகிக்கு நிகராகப் போற்றப்பட வேண்டியவர் வள்ளியம்மை. வ.உ.சி எனும் ஆளுமை ஆற்றிய ஆன்மிகம், மொழி ஆராய்ச்சி, சுதேசியப் பணிகளில் உறுதுணையாக நின்றவர் வள்ளியம்மை. பணம், பொருள் மட்டுமல்ல சாதியப் பாகுபாடுகளையும் ஒதுக்கித் தள்ளியே வாழ்ந்துவந்தார் வள்ளியம்மை. அதற்குச் சான்றாக, இரு கண்களிலும் பார்வையிழந்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஞானியைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார் வ.உ.சி. தன் வீட்டிலேயே தங்கவைத்துப் பார்த்துக்கொண்டார். அவர் பெயர் ஸ்ரீஇராமையா தேசிகர். அவரிடம் தமிழ், ஆன்மிகம், தத்துவம் எனத் தினமும் உரையாடிக் கொண்டிருப்பார். கண் பார்வையில்லாத ஞானிக்கு அவரின் மனம் நோகாமல் உணவளித்து, பணிவிடைசெய்து காப்பாற்றி வந்தார் வள்ளியம்மை. இது புரியாது, அயலார் அனைவரும் கண் காது வைத்துப் பழிச்சொல் பேசினர். அக்கம்பக்கம் பகிர்ந்தனர். முடிவாக வ.உ.சியின் காதுகளுக்கே விஷயம் வந்தது. மனைவி வள்ளியம்மையுடன் இது குறித்து கலந்துரையாடினார். தன்னால்தான் இந்த அவப்பெயர் வள்ளியம்மைக்கு ஏற்பட்டது எனும் குற்றவுணர்வில் மனம் வருந்தினார்.
அதற்கு வள்ளியம்மை சற்றும் வருந்தாமல் வ.உ.சியிடம், ‘தங்களுக்குத் தெரியாதா? துறவிகளுக்கு ஏது குலம்? உயிர்களனைத்தும் ஒன்றாயிருக்கையில் அவற்றைப் பகுத்துப் பார்ப்பது அறியாமை அல்லவா! உயிர்கள்தோறும் இறைவன் வீற்றிருக்கிறான் என்பது தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லையல்லவா? பழிப்பார் பழிக்கட்டும்; நாம் நமது மனம் கூறும்வழி நடப்போம்’ என மறுமொழி கூறிச்சென்றார்.
தன்னையும், தன் குடும்பத்தினரையும் வள்ளியம்மை உபசரித்த விதம், உறவினர்கள், நண்பர்கள், சாதுக்கள் ஏழைகள் ஆகியோரை அவர் உபசரித்த நேர்மை ஆகியவற்றை நூல் முழுக்கப் பாடிப்பாடி மகிழ்கிறார் சிதம்பரனார்.
இல்லமதில் ஒன்றுமே யில்லை யென்னாள். எக்காலும்
நல்லுணவு தான்சமைத்து நல்குவாள், அல்லலொழித்து
இன்புறவே செய்திடுவாள், எப் பணியுமுள்ள முடன்
அன்புமிகு நல்லாள் அமைந்து.
இப்படியான கவிதைகளை வள்ளியம்மை சரித்திரத்தில் பல இடங்களில் காணலாம்.
வள்ளியம்மை தமிழ்க் கல்வியிலும் சிறந்து விளங்கினார். அவர், ஒவ்வொரு குறளையும் பொருளுடன் கூறியிருக்கிறார் என்பதனை,
வள்ளுவன் குறளை வளனுறப் படித்துக்
கொள்ளும் விதத்தில் கூறுவள் உரையுடன்
என்ற வ.உ.சியின் எழுத்தில் காணலாம்.
இத்தகைய நன்றியறிதல், விருந்தோம்பல் போன்ற பண்புகளில் சிறந்து விளங்கிய வள்ளியம்மை, திருமணமான 6 ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டுப் படுத்தப்படுக்கையானது துரதிர்ஷ்டம். எவ்வளவோ மருந்துகள் கொடுத்தும் அவரை உயிர் பிழைக்கவைக்கும் உபாயம் கிடைக்கவில்லை. மருத்துவர்களும் செய்வதறியாது திகைத்தனர். வ.உ.சி துவண்டுபோனார்.
1901இல் வள்ளியம்மை இவ்வுலகை விட்டு மறைந்தார். வ.உ.சி தனித்துவிடப்பட்டார். துன்பத்தில் அமிழ்ந்தார். மகாபாரதத்தில் வரும் கங்கையை இழந்த மன்னன் சாந்தனுபோல, நிலையான அழகு என்று போற்றப்படும் நற்பண்பு, அறிவு, புத்திக்கூர்மை, குணநலன்கள் ஆகியவை மேலோங்கி வாழ்ந்த வள்ளியம்மையை இழந்து தத்தளிப்பதாக வ.உ.சி தன் இரங்கற்பாக்களில் குறிப்பிடுவது நம் கண்களில் நீர்வரவழைக்கிறது. வ.உ.சி மட்டும் வருந்தவில்லை. அவருக்கு வந்த பல்வேறு இரங்கற்கடிதங்கள் இதனை நமக்கு எடுத்துரைக்கின்றன.
இரண்டாம் வரம்
வள்ளியம்மையின் மறைவிற்குப்பின் அவர்களின் இளைய பாட்டனாரின் பேத்தி மீனாட்சியை வ.உ.சிக்கு மணமுடிக்கப் பேசினர். முதல் மனைவியின் பிரிவிலிருந்து வெளிவராத சிதம்பரனார், மறுமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. பெரும் வற்புறுத்தலுக்குப் பின்னரே சம்மதித்தார். மீனாட்சி அம்மாளின் வயது 13. முறையான கல்வியில்லை. ஆனாலும் அவர் துவளாத நெஞ்சம்கொண்டவர் என்பதை வ.உ.சி அவர்களின் சிறைவாசக் காலத்தில் புரிந்துகொள்ள முடியும்.
மீனாட்சி அம்மாள் இல்லையெனில் வ.உ.சி தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையிலேயே தன் வாழ்நாளைக் கழித்திருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. முதல் மனைவி வள்ளியம்மை வ.உ.சியைத் திருமணத்திற்குப் பிறகு முதல் 6 ஆண்டுகள் காத்துவந்தார். பின்னர் வந்த மீனாட்சியம்மாள் அவரை ஆயுசுக்கும் பேணிக்காத்தார். வள்ளியம்மை வ.உ.சிக்குக் கிடைத்த முதல் வரமெனில், மீனாட்சியம்மாள் 2வது வரம் என்பதை மறுப்பதற்கில்லை.
வ.உ.சி தனிச்சிறப்புமிக்க மனிதராகவே இல்லற வாழ்வில் விளங்கினார். இல்லற வாழ்வில் தன் இரு மனைவிகள் ஆற்றிய பங்களிப்புகளுக்கும் முழுச் சுதந்திரம் வழங்கிய வ.உ.சியின் நல்லெண்ணம் கவனிக்கத்தக்கது. மனைவியைப் பற்றிய தனது பாராட்டை வரிக்கு வரி பாடலாக வெளிப்படுத்தியவர் என்றால், அவரது திறந்த மனப்பான்மை எவ்வளவு உயர்ந்தது என்பதை நாம் அறியலாம்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பெண்களை மதிக்கும் உயர்ந்த பண்பை உடையவராக இருந்ததால், அவரின் இரு மனைவிகளும் இன்றளவும் நினைவுகூரப்படுகின்றனர்.
0
1904 முதல் 1905 இடையிலான காலத்தில் சைவ சித்தாந்தச் சபையில் இணைந்து, சைவ சித்தாந்த நூல்களை ஆராயத் தொடங்கினார் வ.உ.சி அதற்குத் துணைபுரிந்தவர், வள்ளிநாயகம் எனும் சைவ சித்தாந்த பண்டிதர். ஏற்கெனவே தன் சுயமுயற்சியால் தமிழ் இலக்கிய நூல்களைக் கற்றிருந்த வ.உ.சி, வள்ளிநாயகத்தின் வழிகாட்டுதலில் மேலும் ஆழமாக ஆராய்ச்சியில் இறங்கினார். அதன் பிறகு ‘திருக்குறள் முதலதிகார ஆராய்ச்சி’, ‘அருளுடைமை’, ‘தவம்’, ‘கல்லாமை’, ‘நிலையாமை’, ‘ஒழுக்கம்’ முதலான தலைப்புகளில் தொடர்ந்து உரையாற்றிவந்தார். வ.உ.சியின் மறக்கமுடியாத அரசியல் நுழைவு இந்தக் காலக்கட்டத்திலேயே நடந்தேறியது. அதற்குக் காரணமாக வங்கப்பிரிவினை அமைந்தது.
(தொடரும்)

