Skip to content
Home » பனிப்போர் #6 – பெர்லின் என்ற பரிசோதனைக் களம்

பனிப்போர் #6 – பெர்லின் என்ற பரிசோதனைக் களம்

1948ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் பெர்லின் நகரம் ஒரு விசித்திரமான புவியியல் சிக்கலில் மாட்டியிருந்தது. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான அந்தப் பிசகாத அமைதி தொடருமா என்பதைத் தீர்மானிக்கப்போவது இந்தச் சிக்கல்தான். மூன்றாம் ரெய்ஹின் (ஆம், ஹிட்லர் தனது சாம்ராஜ்யத்தை அவ்வாறுதான் அழைத்துக்கொண்டார்) முன்னாள் தலைநகரான பெர்லின், நான்கு வருடக் குண்டுவீச்சுகளாலும், சோவியத் படைகளின் இறுதித் தாக்குதலாலும் உருக்குலைந்து, சந்திரனின் மேற்பரப்பைப்போல மாபெரும் இடிபாடுகளின் குவியலாகக் காட்சியளித்தது. அந்நகரம் சோவியத் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் சுமார் 170 கிலோமீட்டர் ஆழத்தில் தனித்துவிடப்பட்டிருந்தது. நேச நாட்டுப் படைகளின் ஒரு சிறு நிலப்பரப்பு, போர்க்காலத்தில் நண்பனாகவும், அமைதிக்காலத்தில் மின்னல் வேகத்தில் எதிரியாகவும் மாறிய சோவியத் வல்லரசின் கட்டுப்பாட்டிலிருந்த நிலத்தால் முழுமையாகச் சூழப்பட்டிருந்தது. பெர்லினை மேற்கத்திய நாடுகளோடு இணைக்கும் உயிர்நாடிகளைத் துண்டிப்பது என்பது, அந்த நகரத்தின் கழுத்தில் சுருக்குக் கயிற்றை மாட்டுவதற்குச் சமம். 1948 கோடையில், ஜோசப் ஸ்டாலின் அந்தச் சுருக்கை இறுக்கத் தயாரானார்.

மேற்கத்திய கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளின் உயிர்வாழ்வு சில மெல்லிய நூலிழைகளையே நம்பியிருந்தது. சுமார் 32 கிலோமீட்டர் அகலம் கொண்ட மூன்று வான்வழிப் பாதைகள். இவை போர்க்கால ஒப்பந்தங்களால் வரையறுக்கப்பட்டவை. சட்டரீதியாக இவற்றுக்கு எந்தப் பெரிய பிடிமானமும் இல்லை. ஒரே ஒரு நெடுஞ்சாலை, சில ரயில் பாதைகள் மற்றும் சோவியத் கட்டுப்பாட்டிலிருந்த நீர்வழிகள் மூலமாகக் கால்வாய் போக்குவரத்து. இதைவிடப் பெரிய சிக்கல் என்னவென்றால், பெர்லின் நகரத்திற்குத் தேவையான மின்சார உற்பத்தி நிலையங்கள் சோவியத் கட்டுப்பாட்டுப் பகுதியில்தான் இருந்தன. இந்த நெருக்கடி சோவியத் யூனியன் கையாண்ட மிரட்டல் ராஜதந்திரத்திற்கு ஒரு வசதியான ஆயுதமாகப் பயன்பட்டது.

இந்த நெருக்கடியைத் தொடங்கி வைத்தது சோவியத் ஆக்கிரமிப்பு அல்ல. மேற்கத்திய நாடுகளின் ஒரு புதிய நடவடிக்கைதான். 1948 ஜூன் 20ஆம் தேதி, மேற்கத்திய நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் டாய்ச்ச மார்க் (Deutsche Mark) என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தின. இது பணவீக்கத்தைத் தடுத்து நிறுத்தவும், மேற்கத்திய நாடுகள் வெளிப்படையாகத் திட்டமிட்டுக்கொண்டிருந்த தனி மேற்கு ஜெர்மனி அரசுக்கான நிதி அடித்தளத்தை அமைக்கவும் கொண்டுவரப்பட்டது. மாஸ்கோவின் பார்வையில், தனி நாணயம் என்பது தனிப் பொருளாதாரம். தனிப் பொருளாதாரம் உருவானால், ஜெர்மனியை ஒரே நாடாக, நடுநிலை நாடாக வைத்திருக்க வேண்டும் என்ற சோவியத் ராஜதந்திரத்தின் கனவு தகர்ந்துவிடும். நான்கு நாட்களுக்குப் பிறகு ஸ்டாலினின் பதிலடி வந்தது. ஜூன் 24 அன்று நள்ளிரவு ஒரு நிமிடத்திற்கு, பெர்லினுக்கும், மேற்கு ஜெர்மனிக்கும் இடையிலான அனைத்து ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு என்ற அதிகாரப்பூர்வமான காரணம் யாரையும் ஏமாற்றவில்லை. பெர்லினின் 25 லட்சம் மக்கள் மெல்ல மெல்ல மூச்சுத் திணறிச் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

அமெரிக்க அதிபர் ட்ரூமன் நிர்வாகத்தின் முன்னால் மூன்று வழிகள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் பின்னால் பயங்கரமான விளைவுகள் காத்திருந்தன. பெர்லினிலிருந்து வெளியேறுவது என்பது, சோவியத்தின் மிரட்டல் வேலை செய்கிறது என்பதையும், உலகின் மற்ற இடங்களில் அமெரிக்கா கொடுத்த வாக்குறுதிகளையும் இப்படித்தான் அவர்கள் மீறுவார்கள் என்பதையும் உலகிற்குக் காட்டிவிடும். ஆயுதம் ஏந்திய படைகளுடன் முற்றுகையை உடைப்பது என்பது, துப்பாக்கிச் சூட்டிற்கு வழிவகுக்கும். அணு ஆயுதக் காலத்தில் அது எதில் போய் முடியும் என்பதை யாராலும் நிம்மதியாகக் கணிக்க முடியாது. விமானப் போக்குவரத்து ஆரம்பத்தில் ராணுவத் திட்டமிடுபவர்களால் ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கருதப்பட்டது. சோவியத் துண்டிக்கத் துணியாத அந்த மூன்று வான்வழிப் பாதைகளை இது நம்பியிருந்தது. அமெரிக்க விமானத்தைச் சுட்டு வீழ்த்துவது என்பது, போர் பிரகடனத்திற்குச் சமம் என்பதை சோவியத் யூனியன் உணர்ந்திருந்தது. ஆனால், 25 லட்சம் மக்களுக்கு அந்த வான்வழியாக அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவது என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒரு கணிதமாகவே தெரிந்தது. இதையெல்லாம் கேட்ட ட்ரூமன், தன் வழக்கமான அதிரடிப் பாணியில், ‘நாம் பெர்லினில் இருக்கிறோம். அவ்வளவுதான்’ என்றார். ஜூன் 26 அன்று, முதல் போக்குவரத்து விமானங்கள் பறக்கத் தொடங்கின.

இந்தச் சவால் முழுவதும் சுத்தமான கணக்கீட்டைப் பொறுத்தது. 25 லட்சம் மக்கள் உயிர்வாழக் குறைந்தபட்சம் தினமும் 4500 டன் பொருட்கள் தேவை. ஒரு விமானம் 10 டன் சுமக்கும் என்றால், தினமும் 450 விமானங்கள் பறக்க வேண்டும். ஆனால் ஆரம்பத்தில், ஒரு நாளைக்கு வெறும் 80 டன் பொருட்களைத்தான் அவர்களால் கொண்டுசேர்க்க முடிந்தது. இந்த மோசமான தொடக்கம், விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே முன்னுதாரணம் இல்லாத ஒரு மாபெரும் சாதனையாக மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஸ்டாலின் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

இந்த மாபெரும் மாற்றத்திற்குக் காரணம், அமெரிக்க விமானப்படையின் வரலாற்றில் ‘விமானப் போக்குவரத்துப் பிரிவின் தந்தை’ என்று போற்றப்படுகிற மேஜர் ஜெனரல் வில்லியம் டன்னர். இரண்டாம் உலகப் போரின்போது, இமயமலைத் தொடரின் மேலாக ஆபத்தான பாதையில் இந்தியாவிலிருந்து சீனாவிற்குத் தேவையான பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்லும் பணியைச் செய்து முடித்த அனுபவம் அவருக்கு இருந்தது. அதே ஈவிரக்கமற்ற துல்லியத்தை அவர் பெர்லினில் புகுத்தினார். டன்னரின் முக்கிய விதி இதுதான்: எந்தவிதமான தன்னிச்சையான முடிவுகளுக்கும் இடமில்லை. தீர்மானிக்கப்பட்ட பாதைகள், தீர்மானிக்கப்பட்ட உயரங்கள், தீர்மானிக்கப்பட்ட இடைவெளிகள். ஒருமுறை தரையிறங்கத் தவறினால், வானிலேயே வட்டமடிக்கக் கூடாது; வந்த வழியே திரும்பிச் செல்ல வேண்டும். தரைப்பணியாளர்கள் 10 நிமிடங்களில் சரக்குகளை இறக்கி விமானத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும்.

டெம்பல்ஹாஃப் விமான நிலையம், நாஜி காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கட்டடம். ஆனால் இப்போது அது ஜனநாயகத்தின் உறுதியைக் காட்டும் அடையாளமாக மாறியிருந்தது. அங்கு ஒவ்வொரு 90 விநாடிகளுக்கும் ஒரு விமானம் தரையிறங்கியது. ஜெர்மானியத் தொழிலாளர்கள் எறும்புகளைப்போல விமானத்தைச் சூழ்ந்துகொண்டு சரக்குகளை இறக்கினார்கள். 30 நிமிடங்களுக்குள் விமானம் மீண்டும் வானில் பறந்தது. பிரிட்டனின் ராயல் விமானப்படை, ஏவ்ரோ யார்க்ஸ் விமானங்களைக் கேடோ விமான நிலையத்தில் இறக்கியது. பிரெஞ்சுப் பகுதியில் இருந்த பெர்லினில் டெகல் என்ற புதிய விமான நிலையம் வெறும் 90 நாட்களில் கட்டப்பட்டது (பெர்லினில் பிரெஞ்சு பகுதி எங்கே வந்தது என்று எண்ண வேண்டாம். இது நடந்த காலகட்டத்தில் பெர்லின் நகரம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது – அமெரிக்கப் பகுதி, பிரிட்டிஷ் பகுதி, பிரெஞ்சு பகுதி, மற்றும் சோவியத் ஒன்றிய பகுதி). பொறியாளர்கள் கணித்ததைவிட மூன்று மடங்கு வேகமாக, 20,000 தொழிலாளர்கள் இலையுதிர் கால மழையையும் பொருட்படுத்தாமல் உழைத்தார்கள். டெகல் விமான நிலையப் பாதைக்கு இடையூறாக இருந்த சோவியத் ரேடியோ கோபுரம் எந்த முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டது. சோவியத் மிரட்டல்களுக்குப் பணிவது இனி வேலைக்காகாது என்பதை மேற்கத்திய நாடுகள் உணர்ந்துவிட்டன என்பதையே இந்த இடிப்பு உணர்த்தியது.

இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்ட விமானிகளில் ஃபர்ஸ்ட் லெப்டினன்ட் கெயில் ஹால்வர்சன் என்ற ஒருவருக்குக் கிடைத்த புகழ் ராணுவ அளவீடுகளைத் தாண்டியது. 1948 ஜூலையில் டெம்பல்ஹாஃப் வேலிக்கு வெளியே ஜெர்மானியக் குழந்தைகள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார் ஹால்வர்சன். தன்னிடம் இருந்த இரண்டு ரிக்லீஸ் சூயிங்கம் துண்டுகளை அவர்களுக்குக் கொடுத்தார். அந்தக் குழந்தைகள் அதை மிகக் கவனமாகப் பங்கிட்டுக்கொண்டதைக் கண்ட அவர், அடுத்தமுறை வரும்போது மிட்டாய்கள் போடுவதாக வாக்களித்தார். தன் விமானத்தை அடையாளம் காண, விமானத்தின் சிறகுகளை ஆட்டிக்கொண்டே வருவேன் என்றார். கைக்குட்டைகளைக் குட்டிப் பாராசூட்டுகளாக மாற்றி, அதில் சாக்லேட்டுகளைக் கட்டி வானிலிருந்து வீசினார். அமெரிக்க உற்பத்தியாளர்களும் பள்ளிக்குழந்தைகளும் கொடுத்த நன்கொடைகள் இதைப் பெரிய அளவில் மாற்றி, லிட்டில் விட்டில்ஸ் என்ற பெயரில் சுமார் 23 டன் மிட்டாய்கள் வானிலிருந்து கொட்டப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எதிரி நாட்டு மக்கள் என்று முத்திரைக்குத்தப்பட்டத் தங்களை, மனிதநேயத்தோடு பார்க்கிறார்கள் என்பதை ஜெர்மானியர்கள் உணர்ந்தார்கள். அந்த விமானங்களுக்கு அவர்கள் வைத்த பெயர் ரோசினன்பாம்பர். அதாவது உலர் திராட்சை வீசும் விமானங்கள்.

ஸ்டாலினின் கணிப்புகள் ஆரம்பத்தில் நியாயமாகவே தெரிந்தன. விமானப் போக்குவரத்திற்குத் தேவையான சரக்குகளின் அளவு கற்பனைக்கு எட்டாதது; குளிர்காலப் பனிமூட்டமும், உறைபனியும் விமானங்களை முடக்கிவிடும்; இவ்வளவு பொருட்செலவு பிடிக்கும் ஒரு திட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் அளவுக்கு ஜனநாயக நாடுகளுக்கு மன உறுதி இருக்காது. மேற்கு பெர்லின் மக்கள் சோவியத் பகுதியில் பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்று சோவியத் அதிகாரிகள் அறிவித்தார்கள். 20 லட்சம் மக்களில் வெறும் 20,000 பேருக்கும் குறைவானவர்களே இதை ஏற்றார்கள். பெரும் மக்கள் திரள் சோவியத்தின் அந்தச் சலுகையைவிட, வானிலிருந்து வரும் குறைந்தபட்ச உணவே மேல் என்று முடிவெடுத்தனர். 1948 முதல் 1949 வரையிலான குளிர்காலமும் சற்றே சாதகமாக இருந்தது. சற்றே சாதகம் என்றாலும், அந்த டிசம்பர் 1948 குளிர் விமான நிலையங்களைப் பல நாட்களுக்குக் கடுமையான மூடுபனியைத் தன்னகத்தே கொண்டுதான் இருந்தது. ஒருநாளைக்கு வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே வீடுகளைச் சூடாக்க முடியும்; உணவின் அளவு 1800 கலோரியாகக் குறைந்தது; மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் மூடிக்கிடந்தன. சந்தேகங்கள் பெருகின; ஆனால் விமானங்கள் தொடர்ந்து பறந்தன.

சோவியத் கணிப்புகளை அந்தத் துல்லியமான புள்ளிவிவரங்கள் சுக்குநூறாக்கின. 11 மாதங்களில் 2.80 லட்சம் விமானங்கள் மூலம், 23.80 லட்சம் டன் பொருட்கள் வந்து சேர்ந்தன. 1949 ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பரேட்தான் இந்தச் செயல்பாட்டின் உச்சம். ஒரே நாளில் 1398 விமானங்கள் மூலம், 12,946 டன் பொருட்கள் வந்து சேர்ந்தன. இது முற்றுகைக்கு முந்தைய பெர்லினின் தினசரி தேவையைவிட அதிகம். இந்தச் சாதனையில் 101 உயிர்கள் பலியாகின. 25 லட்சம் மக்களைக் காப்பாற்றக் கொடுக்கப்பட்ட இந்த விலை பெரியதல்ல என்றே கருதப்பட்டது.

1949 மே 4ஆம் தேதி, சோவியத் அதிகாரிகள் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவந்தனர். பேச்சுவார்த்தைகளின் மூலம்தான் இந்த முடிவு எட்டப்பட்டது என்று அவர்கள் கூறினாலும், மேற்கத்திய நாடுகள் எந்தவொரு முக்கியமான சலுகையையும் அவர்களுக்கு விட்டுத்தரவில்லை. மே 12 நள்ளிரவில், மேற்கு ஜெர்மனியிலிருந்து முதல் ரயில் பெர்லினுக்குள் நுழைந்தது. 11 மாத உறுதியற்ற நிலை முடிவுக்கு வந்ததை எண்ணி கூடியிருந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். எதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதைத் தானே முடுக்கிவிட்டதைத் தவிர ஸ்டாலினுக்கு இதனால் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக அவர் பெரும் ராஜதந்திரத் தனிமைப்படுத்தலுக்கு ஆளானார். ஃபெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி என்கிற மேற்கு ஜெர்மனியின் அடிப்படை சட்டம் மே 23 அன்று அமலுக்கு வந்தது. செப்டம்பரில் பிரதமராகப் பொறுப்பேற்ற நவீன மேற்கு ஜெர்மனியின் தந்தை கான்ராட் அடினாவர், தோற்கடிக்கப்பட்ட ஒரு எதிரி நாட்டை 10 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளின் தவிர்க்க முடியாத கூட்டாளியாக மாற்றினார். ஜெர்மன் டெமாக்ரட்டிக் ரிபப்ளிக் என்கிற கிழக்கு ஜெர்மனி அக்டோபர் 7 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முற்றுகையை வைத்து எதைத் தடுக்க நினைத்தார்களோ, அந்தப் பிரிவினை நிரந்தரமானது.

முற்றுகையின் இறுதி வாரங்களில், 1949 ஏப்ரல் 4 அன்று வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தம் (North Atlantic Treaty – NATO) கையெழுத்தானது. 12 நாடுகள் கூட்டாக இணைந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உறுதியேற்றன. இதன் 5வது பிரிவு, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று அறிவித்தது. அமெரிக்க செனட் சபை ஜூலை 21 அன்று 82-3 என்ற வாக்குகளில் இதற்கு ஒப்புதல் அளித்தது. இது அமெரிக்காவின் ராஜதந்திர வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம். அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் தனது பிரியாவிடை உரையில் எச்சரித்திருந்த நிரந்தரமான அமைதிக்கால ராணுவக் கூட்டணிக்கு அமெரிக்கா இப்போது ஒப்புக்கொண்டிருந்தது. பெர்லின் நெருக்கடி உருவாக்கிய இரு கட்சி ஒருமித்த கருத்துதான் இதைச் சாத்தியமாக்கியது.

பனிப்போரின் அடுத்தடுத்த நகர்வுகளைத் தீர்மானிக்கும் இரண்டு முக்கிய விதிகளை இந்த பெர்லின் விமானப் போக்குவரத்து உலகிற்கு உணர்த்தியது. ஒன்று, பெர்லினில் மேற்கத்திய நாடுகளின் இருப்பு குறித்து எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. இரண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்களுக்குத் தங்களைக் காக்க யார் எந்த அளவுக்குச் செலவு செய்வார்கள் என்ற உண்மை புரிந்தது. எந்தவொரு ராஜதந்திர வார்த்தைகளாலும் கொடுக்க முடியாத நம்பிக்கையை இது அவர்களுக்குக் கொடுத்தது. மேற்கத்திய நாடுகளின் பலவீனத்தைக் காட்ட நினைத்த ஸ்டாலின், அதற்குப் பதிலாக அவர்களின் உறுதியைக் காட்டும் ஒரு மாபெரும் நினைவுச்சின்னத்தைத் தன் கைகளாலேயே கட்டியெழுப்பினார். தோல்வியடைந்த எதிரியின் சிதைந்த தலைநகரான பெர்லின், இப்போது பனிப்போரின் மிக வலிமையான அடையாளமாக மாறியிருந்தது. முற்றுகைக்குப் பதிலாக வந்த பெர்லின் சுவர், மக்களின் மாபெரும் எழுச்சியால் உடையும் வரை, இந்த அடையாளம் அப்படியே நீடித்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *