Skip to content
Home » ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #5 – மணவாழ்வும் பேருந்தும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #5 – மணவாழ்வும் பேருந்தும்

டீயகோ மெக்சிகோவின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவர். வேறு யாரையும்விட அதிக எண்ணிக்கையில் சுவரோவியங்களை வரைந்தவர். உள்ளார்ந்த விசையினால் உந்தப்பட்டவரைப்போலச் சரளமாகவும் வேகமாகவும் ஓவியம் தீட்டும் ஆற்றல் பெற்றவர். ‘நான் வெறும் கலைஞனல்ல. மரம் பூக்களையும் பழங்களையும் தருவதுபோல ஓவியம் வரையவேண்டும் என்ற உயிரியல் விழைவினால் இயக்கப்படுபவன்.’

அன்றாட நிகழ்வுகள், உடல்நலிவு, அரசியல் என்று எதுவும் ஓவியம் தீட்டுவதற்கு இடைஞ்சலாவதை விரும்பாதவர். நாட்கணக்கில் சாரத்தில் நின்றபடி வரைவார். அங்கேயே உணவருந்தி, தூங்கவும் செய்வார். படைப்பில் ஈடுபட்டிருக்கையில் அவருக்குத் துணையாக நண்பர் பட்டாளம் அங்கே வருகை தருவதுண்டு. அனுபவமும் கற்பனையும் கலந்த கதைகளை இட்டுக்கட்டி அவர்களுக்குச் சொல்வது அவருக்குப் பிரியமான பொழுதுபோக்கு.

0

டீயகோ 1887இல் குவானாஹாடோவில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவர் தந்தை டீயகோ ரிவேரா அகோஸ்டா பள்ளி ஆசிரியர், தாய் மரியா பரியண்டாஸ் மிட்டாய்க் கடை நடத்தினார். டீயகோவுக்கு மூன்று வயதாகும்போது சுவரில் எதையாவது வரைவார், கிறுக்குவார். பெற்றோர் அவர் தொடர்ந்து வரைய ஊக்குவித்தனர். பத்து வயதாகையில் ஓவியக் கலையைக் கற்றுத்தரும் பள்ளியில் சேர்த்துவிடுமாறு பெற்றோரிடம் கேட்டார். பகலில் வழக்கமான பள்ளிக் கல்வி, இரவில் மெக்சிகோவின் தலைசிறந்த சான் கார்லோஸ் கலைப் பள்ளி எனப் பயின்றார்.

மாணவப் பருவத்தில் பல பரிசுகளையும் உதவித்தொகைகளையும் வென்றார். பின்னர் கலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1907இல் ஓவியக் கலையைக் கற்றுக்கொள்வதற்காக மாநில ஆளுநரின் உதவித்தொகை கிடைத்ததால் ஐரோப்பாவுக்குச் சென்றார். முதலில் ஸ்பெயினில் ஓராண்டுக்காலத்தைக் கழித்த பிறகு பாரிஸுக்குச் சென்றார். அங்கே பிக்காஸோ, கெட்ரூட் ஸ்டெயின் போன்ற மரபொழுங்கைக் கேள்வி கேட்கும் கலைஞர்கள், அறிவாளிகள் போன்றோரின் நட்பு கிடைத்தது. அங்கே ரஷ்யப் பெண்ணொருவரோடு பதிவுத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கை நடத்தினார்.

1921இல் ஐரோப்பிய வாழ்க்கையையும் மனைவியையும் விட்டுவிட்டு மெக்சிகோ திரும்பினார். மெக்சிகோ அரசு கேட்டுக்கொண்டபடி நேஷனல் ப்ரிபரேட்டரி பள்ளியில் சுவரோவியங்களைத் தீட்டும் பணியில் ஈடுபட்டார். தொடக்கத்தில் ஐரோப்பிய ஓவியப் பாணிகளின் தாக்கம் இருந்தாலும் காலப்போக்கில் மெக்சிகோ கலாசாரம் வெளிப்பட்டது.

வயல்களிலும் சுரங்கங்களிலும் உழைக்கும் உழைப்பாளிகளையும் பள்ளியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையும் புரட்சியில் மீட்கப்பட்ட நிலங்களை மீண்டும் உழைப்போருக்கே பங்கிட்டுத் தருபவர்களையும் சித்தரித்தார். மக்கள் சக்தியைப் பறைசாற்றும் பிரம்மாண்டமான ஓவியங்களைப் பள்ளிச் சுவர்களில் தீட்டினார். மக்களிடமிருந்து வெளிப்படும் கலையை எல்லோருக்கும் பொதுவானதாக்க வேண்டுமென்றும் கலையில் மேட்டிமைத்தனத்தை ஒழிக்கவேண்டுமென்றும் கூறினார்.

1923இல் மக்கள் கலையை முன்னெடுக்க கூட்டமைப்பொன்றை நிறுவினார். இந்தக் கூட்டமைப்பின் முயற்சியால் மக்கள் அன்றாடம் புழங்கும் பொருட்கள் கலைத்தன்மை கொண்டவை, அவர்களின் வெளிப்பாட்டுக்கு வடிவம் தருபவை என்ற எண்ணம் மக்களிடையே பரவியது. பாரம்பரியக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு ஊக்குவிக்கப்பட்டது. மெக்சிகோவின் பாரம்பரிய உடைகள் உயர்வாகக் கருதப்பட்டன. நகரங்களில் வசிக்கும் மேட்டுக்குடிப் பெண்களும் அவற்றை அணிந்தனர். பிரெஞ்சு உணவுக்குப் பதிலாக மெக்சிகோ உணவு வகைகளை உண்ணும் வழக்கம் அதிகரித்தது. பாரம்பரிய மெக்சிகோ இசை, நாடக வடிவங்களை நிகழ்காலக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளில் பயன்படுத்தினர்.

0

ஃப்ரீடாவை முதன்முதலில் நேஷனல் ப்ரிப்பரேட்டரி பள்ளி மாணவியாகச் சந்தித்திருந்தார் டீயகோ. 1928இல் மீண்டும் ஃப்ரீடாவைச் சந்திக்கையில் ஏற்கனவே பல பெண்களுடன் திருமணமும் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவும் கொண்டிருந்தார். அந்த உறவுகளின்மூலம் பிள்ளைகளும் பெற்றிருந்தார். டீயகோ அழகனில்லை, பருமனான உடலமைப்பு கொண்டவர். ஆனால் நகைச்சுவையுணர்வும் துடிப்பும் வசீகரமுமிக்கவர். மென்மையானவர், பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நடப்பவர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக புகழ்பெற்றவர் என்பதால் பெண்கள் கூட்டம் அவர்மீது மிகுந்த நாட்டம்கொண்டது.

ஃப்ரீடாவும் டீயகோவும் எதையும் இட்டுக்கட்டிக் கதைபோலச் சொல்வது வழக்கம். அவர்களிருவரின் சந்திப்பு குறித்து விவரிக்கையிலும் அதைத்தான் செய்தார்கள். ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் தான் வரைந்த ஓவியங்களில் நான்கைக் கையிலெடுத்துக்கொண்டு கிளம்பினார் ஃப்ரீடா. சாரத்தின்மேல் நின்று சுவரோவியங்களை வரைந்துகொண்டிருந்த டீயகோவைப் பார்த்து ‘கீழே இறங்கி வாருங்கள். முக்கியமான விஷயமொன்றைப் பேசவேண்டும்,’ என்றார்.

ஊன்றுகோலோடு இளம்பெண்ணொருத்தி கீழே நிற்பதைக் கண்டார் டீயகோ. அவளுடைய துணிச்சலும் தைரியமான பேச்சும் அவளைக் கவனிக்கவைத்தது. கீழே இறங்கிவந்து ஓவியங்களைப் பார்த்தார். ஃப்ரீடாவின் திறமை ஓவியங்களில் மிளிர்ந்தது. ‘எனக்குப் புகழாரம் சூட்டுவதை விரும்பவில்லை. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை மறைக்காமல் சொல்லுங்கள்,’ என்று கறாராகக் கூறினார் ஃப்ரீடா.

அந்த ஓவியங்களுள் மூன்று வேறு ஓவியங்களின் தாக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் தன்னோவியம் மட்டுமே எந்தச் சாயலுமின்றிக் காணப்படுவதாகவும் தன்னுடைய கருத்தைச் சொன்னார் டீயகோ. ‘என்ன ஆனாலும் ஓவியம் வரைவதை நிறுத்திவிடாதே,’ என்றும் கூறினார். வீட்டில் இன்னும் பல ஓவியங்கள் இருப்பதாகவும் அடுத்த வாரம் வீட்டுக்கு வந்து அவற்றைப் பார்த்து அவருடைய கருத்தைத் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஃப்ரீடா.

வீட்டு முகவரியைச் சொல்லும்போதுதான் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் ஃப்ரீடாவைப் பள்ளியில் சந்தித்தது டீயகோவுக்கு நினைவு வந்தது. ‘நீ, நீ…’ என்றார். டீயகோ தன்னை அடையாளம் கண்டுகொண்டார் என்பது ஃப்ரீடாவுக்குப் புரிந்தது. ‘ஆமாம் அந்தப் பெண்ணேதான். அதற்கும் இப்போதிருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த ஞாயிறன்று வீட்டுக்கு வருவீர்கள் அல்லவா?’ படபடவென்று பேசினார் ஃப்ரீடா.

சொன்னபடியே ஞாயிறன்று ஃப்ரீடாவின் வீட்டுக்குப் போனார் டீயகோ. அதுவரையில் ஃப்ரீடா வரைந்த ஓவியங்கள் எல்லாவற்றையும் பார்த்து அவரின் கலைத் திறமையைப் புரிந்துகொண்டார். 21 வயதான ஃப்ரீடாவின் ஆற்றலும் உற்சாகமும் திறமையும் டீயகோவின் மனதைக் கவர்ந்தன. கோயோயாகானிலிருந்த நீல வீட்டுக்கு அடிக்கடி சென்று ஃப்ரீடாவுடன் நேரம் செலவழிக்கத் தொடங்கினார். காலப்போக்கில் இருவருக்குமிடையே காதல் அரும்பியது. அப்போது டீயகோவின் வயது 41.

டீயகோவுக்கும் ஃப்ரீடாவுக்குமிடையே ஏற்பட்டிருந்த காதலைப் புரிந்துகொண்டார்கள் காஹ்லோ தம்பதியர். ஃப்ரீடாவின் தாய்க்கு டீயகோவை அறவே பிடிக்கவில்லை. ‘வீட்டு வாசல்படியில் நிற்கும் குண்டு தேரை போன்ற தோற்றம் கொண்டவர்,’ என்று எரிச்சல்பட்டார்.

இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்; கூடவே டீயகோ கடவுள் நம்பிக்கையற்றவர், கம்யூனிஸ்ட். இப்படிப் பலவிதங்களில் முரண்கள் இருந்தாலும் நல்ல வருமானம், அரசாங்கம், கலையுலகம் என எல்லா இடங்களிலும் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதால் மகளை நன்றாகப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை ஃப்ரீடாவின் தந்தை கில்லெர்மோ காஹ்லோவுக்கு இருந்தது. ‘யானையும் புறாவும் போன்ற ஜோடி’ என அவர்களைக் குறிப்பிட்டார்.

‘புத்திசாலி ஆனால் அழகியில்லை, வாழ்க்கை முழுவதும் உடல்நலிவினால் சிரமப்படுவார், முன்கோபமும் குறும்புத்தனமும் கொண்ட குட்டிப் பிசாசு,’ எனத் தன் மகள் குறித்த எல்லாவற்றையும் டீயகோவிடம் வெளிப்படையாகச் சொன்னார் கில்லெர்மோ. ‘நன்றாக யோசியுங்கள், அப்படியும் என் மகளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமிருந்தால் என்னுடைய சம்மதத்தைத் தருகிறேன்,’ என்றார்.

ஃப்ரீடாவின் வெளிப்படைத்தன்மையும் புத்துணர்ச்சியும் மறைக்கப்படாத பாலியல் விழைவும் டீயகோவைச் சுண்டியிழுத்தன. ஃப்ரீடாவின் தைரியமும் விஷமத்தனமும் அவருக்குள்ளிருந்த குறும்புக்காரச் சிறுவனைக் கவர்ந்தன. இருவருமே மரபைத்தாண்டிய சிந்தனையும் புதிதாக எதையாவது செய்யவேண்டுமென்ற முனைப்பும் கொண்டவர்கள். இந்தக் காரணங்களால் அவர்கள் இருவரின் உறவிலும் சலிப்பென்பதே இருக்கவில்லை.

முரண், நகைச்சுவை, அவல நகைச்சுவை கொண்டதுதான் வாழ்க்கை என இருவரும் நம்பினார்கள். பொருள்முதல்வாதக் கொள்கை கொண்டோரை இருவரும் வெறுத்து ஒதுக்கினார்கள். இயங்கியல் பொருள்முதல்வாதம், சமூக யதார்த்தவாதம் ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார்கள். ஆனால் அவர்களின் யதார்த்தவாதம் கற்பனை சூழ்ந்தது.

‘ஃப்ரீடா வாழ்க்கையை அதீத எதார்த்தத்தோடு அணுகுகிறார், அவரைப் பொறுத்தவரை மாயைகளே கிடையாது என்பது பிரச்சனைக்குரியது,’ என்றார் ரிவேரா. ஃப்ரீடாவோ ‘ரிவேரா உணர்ச்சிகளற்றவர்’ என்று புலம்புவார். ரிவேரா அதிக உணர்ச்சிவயப்படாதவர் என்பதால் ஃப்ரீடாவின் குற்றம்சொல்லும் வழக்கத்தையும் சுட்டெரிக்கும் பார்வையையும் சமாளிக்க முடிந்தது. வேலை நேரத்தை இழப்பதும் முட்டாள்தனமும் டீயகோவுக்கு அறவே பிடிக்காத இரண்டு விஷயங்கள் என்று ஃப்ரீடா ஒருமுறை எழுதினார். ஒரு முட்டாள் நண்பனைவிடவும் பல புத்திசாலி எதிரிகள் மேல் என்று பல முறை சொல்லியுள்ளார் டீயகோ.

ஃப்ரீடாவின் தனித்தன்மை டீயகோவைக் காதலுறச் செய்தது. ஃப்ரீடா தலையில் சூட்டிக்கொள்ளும் ரிப்பன்களும் மலர்ச்செண்டுகளும் அணிந்துகொள்ளும் மெக்சிகோ பாரம்பரிய அணிகலன்களும் ஆடைகளும் அவற்றோடு ஃப்ரீடாவின் ஓவியங்களில் இயல்பாக வெளிப்பட்ட மெக்சிகோ கலாசாரச் சின்னங்களும் டீயகோவை வெகுவாகக் கவர்ந்தன.

1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி கோயோயாகான் நகர சபையில் 42 வயதான டீயகோவும் 22 வயதான ஃப்ரீடாவும் திருமணம் செய்துகொண்டனர். டீயகோ சாம்பல் வண்ணக் கோட்டு சூட்டு, தொப்பி, பட்டையான பெல்ட், அதில் சொருகப்பட்ட கைத்துப்பாக்கி எனத் தன்னுடைய வழக்கமான உடையிலிருந்தார். ஃப்ரீடா முழு நீளப் பாவாடை, மேலாடை, அதன்மேலே சிவப்பு வண்ணச் சால்வை அணிந்திருந்தார். டீயகோவின் தோள்பட்டையை எட்டும் உயரம்தான் இருந்தார் ஃப்ரீடா. இருவரும் அருகருகே நிற்கையில் பெரிய நாய் பொம்மையின் பக்கத்தில் வைக்கப்பட்ட சின்ன பதுமையைப்போலத் தோற்றமளித்தது.

திருமணப் பதிவின்போது நெருங்கிய நண்பர்களும் சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்களும் மட்டுமே உடன் இருந்தனர். தன்னைவிட இருமடங்கு அதிக வயதுகொண்டவரை ஃப்ரீடா மணமுடித்தது அவரது நண்பர்களுக்கு வியப்பளித்தது. ஆனால் ஃப்ரீடா அந்த விமர்சனங்களைப் புறந்தள்ளினார். டீயகோ ரிவேரா மெக்சிகோவின் தலைசிறந்த ஓவியர்களுள் ஒருவர், அவரிடம் தான் எத்தனையோ விஷயங்களை கற்றுக்கொள்ளமுடியும் என நம்பினார்.

புதுமணத் தம்பதியர்க்கு ஃப்ரீடாவின் பெற்றோர் நீல நிற வீட்டில் வரவேற்பும் விருந்தும் ஏற்பாடு செய்திருந்தனர். தாய் மட்டில்டேவுக்கு இன்னமும் மணமகனின் தோற்றமும் வயதும் குறித்த சங்கடம் தீரவில்லை. டீயகோ கொழுத்த விவசாயியைப்போல இருக்கிறார் என்றார்.

திருமண வரவேற்புக்கு டீயகோவின் சமீபத்திய முன்னாள் மனைவி லூப் மாரின்னும் அழைக்கப்பட்டிருந்தார். வந்தவர் சும்மா இல்லாமல் ஃப்ரீடாவின் ஊனமான கால்களைப்பற்றிக் கிண்டல் பேசினார். ஃப்ரீடா தன் பங்குக்கு அவரிடம் சண்டைக்குப் போனார். இதையெல்லாம் புன்சிரிப்புடன் பார்த்தபடியே மதுவருந்தும் இடத்துக்குப் போனார் டீயகோ. தன் பொருட்டு இரண்டு பெண்கள் சண்டையிடுவதை ரசித்துப் புன்முறுவல் பூத்தார். மது அருந்திய பிறகு ஏற்பட்ட உற்சாகத்தில் கைத்துப்பாக்கியை எடுத்து குண்டு தீரும் வரையில் வானை நோக்கிச் சுட்டுத் தள்ளினார். விருந்தினர்கள் கவலையோடு அங்குமிங்கும் ஒளிந்துகொண்டனர்.

திருமண வரவேற்பில் நடந்த குளறுபடிகளால் ஃப்ரீடா கவலையும் கோபமும் கொண்டார். அன்றைய இரவை டீயகோவுடன் கழிக்காமல் தவிர்த்தார். சில நாட்கள் வரையிலும் டீயகோவின் வீட்டுக்குப் போகாமல் தன்னுடைய எரிச்சலை வெளிப்படுத்தினார். டீயகோவுடனான உறவு எப்படி இருக்குமென்பதற்கு அன்றைய இரவு முன்னோட்டமாக அமைந்தது.

0

திருமணத்துக்குப் பிறகு ஃப்ரீடா ஓவியம் வரைவதைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டார். முழுநேரமும் டீயகோவின் மனைவியாக அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்வதில் முனைப்பு காட்டினார். அந்தச் சமயத்தில் தேசிய மாளிகையில் மெக்சிகோ வரலாற்றைச் சித்தரிக்கும் சுவரோவியங்களை வரையும் பணியில் ஈடுபட்டிருந்தார் டீயகோ. ஒரு நாளில் பத்துப் பன்னிரெண்டு மணிநேரம் வரையில் ஓவியம் தீட்டுவார்.

கணவருக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுக்கொண்டார் ஃப்ரீடா. ஒவ்வொரு நாளும் டீயகோ வேலைசெய்யும் இடத்துக்குச் சாப்பாட்டை எடுத்துச் செல்வார். இன்னொரு பக்கம் தன்னால் முன்னைப்போல அதிக அளவில் வரைய முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தாலும் நல்ல மனைவியாக இருந்து புகழ்பெற்ற ஓவியரான கணவர் திறம்படப் பணிசெய்ய உதவுவது தன்னுடைய பொறுப்பு என்றும் எண்ணினார்.

இந்தக் காலகட்டத்தில் ஃப்ரீடா வரைந்த ‘த பஸ்’ (பேருந்து) என்ற ஓவியம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஃப்ரீடாவுக்கு நேர்ந்த பேருந்து விபத்தை நினைவூட்டும் உணர்ச்சிகளைத் தூண்டும் நாடகீயமான ஓவியமல்ல. பேருந்தின் உள்ளே அமர்ந்திருக்கும் ஆறு பயணிகளின் எளிமையான சித்தரம். கடைவீதிக்குச் சென்று திரும்பும் தாய், தண்ணீர்க் குழாய் பழுதுசெய்பவர், குழந்தையை ஏந்தியிருக்கும் இந்தியப் பெண், வேடிக்கை பார்க்கும் சிறுவன், ஆங்கிலம் பேசும் வெளிநாட்டவர், மேற்கத்திய ஆடை அணிந்த மெக்சிகோ நங்கை என ஆறு பேரும் பேருந்தின் பக்கவாட்டு இருக்கையில் ஜன்னலையொட்டி அமர்ந்திருக்கிறார்கள்.

நம்மைப் பார்க்கும்படி உட்கார்ந்திருந்தாலும் அவரவர் சிந்தனையில் மூழ்கியிருக்கிறார்கள். முகமறியா இந்த நபர்கள் வழக்கம்போல ஃப்ரீடாவும் எந்த அச்சமுமின்றிப் பேருந்தில் பயணம் செய்யலாம் என்பதைச் சுட்டுவதுபோல அமைந்துள்ளது. விபத்தினால் தனக்கேற்பட்ட உடல் பாதிப்பு, உளவலி இரண்டையும் சரிசெய்துகொள்ளும் வெளிப்பாடாக இந்த ஓவியம் அமைந்திருக்கலாம்.

இதே சமயத்தில் ‘டைம் ஃப்ளைஸ்’ (நேரம் பறக்கிறது) என்ற தன்னோவியம் ஒன்றையும் வரைந்தார் ஃப்ரீடா. இந்த ஓவியத்தில் கைகளில் பூ வேலைப்பாடு செய்யப்பட்ட மெல்லிய வெள்ளை வண்ண மேலாடையணிந்து காணப்படுகிறார் ஃப்ரீடா. கழுத்தில் பெரிய பச்சை ரத்தினக்கல் மாலையும் காதில் நீண்ட, கனமான மெக்சிகோ பாணிக் காதணிகளையும் போட்டிருக்கிறார். சுருக்கமாகச் சொல்வதென்றால், டீயகோவுக்குப் பிரியமான தோற்றத்தில் காணப்படுகிறார் ஃப்ரீடா.

பின்னணியிலுள்ள ஜன்னலில் தொங்கும் பெரிய கறுப்பு வண்ணத் திரைச்சீலைகளில் தடித்த சிவப்பு வண்ண அலங்காரக் கயிறு கட்டப்பட்டுள்ளது. இடது தோளுக்கு மேலேயுள்ள பலகையில் அலாரம் அடிக்கும் கடிகாரம் காணப்படுகிறது. ஜன்னலுக்கு வெளியே தெளிந்த வானில் வானவூர்தி பறக்கிறது. மொத்தத்தில் டீயகோவுடனான மணவாழ்க்கை, ஓவியப் பாணியில் ஏற்பட்ட வளர்ச்சி போன்றவைகளைச் சுட்டுவதற்காக வரையப்பட்ட ஓவியமாக இருக்கலாம்.

1930ஆம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் ஓவியம் வரையவேண்டுமென்று டீயகோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டீயகோ புகழ்பெற்ற ஓவியர் என்பதால் வித்தியாசமான விருந்துகளுக்கு அழைக்கப்பட்டார். சான் ஃப்ரான்சிஸ்கோவின் உயர்குடியினர் மத்தியில் யானை-புறா தம்பதியர் பிரபலமாகினர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *