Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வங்கப்பிரிவினை என்று எழுத ஆரம்பித்தால் அதில் கர்சன் பிரபுவின் பெயரையும் நம் திலகரையும் விட்டுவிட்டு ஆரம்பிப்பது சரியாக அமையாது. ஜார்ஜ் நாதேனியல் பரோன் கர்சனே வங்கப் பிரிவினையை முன்னின்று நடத்தியவர். பிரிவினையை எதிர்க்கச் சுதேசத்தை கையில் எடுத்தவர் பால கங்காதர திலகர். அவரே சுதேசமெனும் புரட்சித் தீ நாடு முழுதும் பரவக் காரணமானவர். 1899 முதல் 1947 வரையிலான வைஸ்ராயிகளில் மிக மோசமானவராகப் பதிவு செய்யப்பட்டவர் கர்சன். இந்தியர்களிடம் அவரின் அணுகுமுறை அப்படிப்பட்டதே. இந்தியர்களை, இந்தியாவைப் பற்றிய அவரது நிலைப்பாட்டின் மூலம் அவரைச் சிறிது புரிந்துகொள்ளலாம்.

‘இந்தியர்களுக்குத் தங்களை ஆளும் திறமையில்லை, சத்தியம் என்பது மேற்கத்திய கோட்பாடு, இந்தியர்கள் என்பவர்கள் ஒழுங்கற்ற, அறியாமை நிரம்பிய கட்டுப்பாடற்ற சிறுவர்கள்’ என இந்தியாவின் சமஸ்தான மன்னர்களைப் பற்றி அவர் கூறியிருப்பது இதற்கான சான்று. வங்கப் பிரிவினைக் குறித்த எண்ணம் ஏதோ ஒன்றிரண்டு ஆண்டுகளில் முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டது என்று சொல்ல முடியாது. அதற்கான எண்ணம் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே விதைக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் 1866ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரிசா பஞ்சத்தின்போது விளைந்தது.

ஒரிசா, பீஹார், அசாம் மற்றும் வங்காளம் நான்கையும் உள்ளடக்கியதே வங்காள மாகாணம். பஞ்சத்தில் ஏற்பட்ட நெருக்கடி, மரணங்கள், நிர்வாகச் சீர்கேடு ஆகியவை அம்மாகாணத்தை நிர்வாக அடிப்படையில் பிரிக்கத் தூண்டியது. இது ஒரு காரணம்தான் என்றாலும், பின்னால் சில அரசியல் காரணங்களும் இருக்கத்தான் செய்தன. ஒரிசா பஞ்சத்திற்குப் பின்னர் 1901ஆம் ஆண்டு மத்திய மாகாணங்களின் தலைமை ஆளுநராக இருந்த ஃப்ரேசர், வங்காள மாகாணத்தின் மறுசீரமைப்புக் குறித்தான திட்டக்கோப்பை கர்சனுக்கு எழுதுகிறார். திட்டக்கோப்பில் இருக்கும் எல்லை வரையறை இந்திய வரைபடத்தையே மாற்றும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

ஆனால் அக்கோப்பு கர்சனின் கைகளுக்கு வருவதற்கே 14 மாதங்கள் ஆனதென்பதை என்னெவென்று சொல்வது. அதன் பின்னரே வங்கப்பிரிவினைக் குறித்து 1902ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்சன் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமைச் செயலாளர் ஜார்ஜ் ஹாமில்ட்டன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘ஒரு தனிமனிதன் ஆட்சி செய்ய இயலாத அளவுக்கு, சந்தேகத்திற்கு இடமின்றி வங்காள மாகாணம் மிகப்பெரியதாக உள்ளது’ என்று குறிப்பிடுகிறார்.

உண்மையிலேயே அவ்வளவு பெரியதா வங்காள மாகாணம்? ஆம் என்பதே பதில். அக்காலகட்டத்தில் வங்காளம், இங்கிலாந்தின் மக்கள்தொகையைவிட 2 மடங்குப் பெரியது. வங்காள மாகாணம் வடமேற்கே டெல்லியைத் தாண்டியும், கிழக்கே அசாம் பள்ளத்தாக்கு வரையிலும் நீண்டிருந்தது. அசாமும் வங்காளத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே இருந்து வங்காளத்தின் ஒரு பகுதியாகவே அறியப்பட்டது.

பல்வேறு பகுதிகள் வங்காள மாகாணத்துடன் இணைந்திருந்ததால், ஆட்சி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன. கர்சன் இவ்விவகாரத்தை கையில் எடுத்த பின்னர், 1903ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியின் தொடக்கக் காலத்தில் வங்கப் பிரிவினைக்கு ஒப்புதல் கொடுக்கிறார்.

இதேவேளை, ஆரிய சமாஜம் போன்ற இயக்கங்கள் முன்னெடுத்த பசு பாதுகாப்புப் போராட்டங்கள், ஹிந்து இஸ்லாமியர்களுக்கு இடையேயான பிளவைத் தீவிரப்படுத்தின, கூர்மையாக்கின. இவ்வாறான சமூகப் பின்னணியில்தான் வங்கப் பிரிவினை நிகழ்ந்தது

1905ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி, புதிய வங்கப் பிரிவினைத் திட்டம் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டது. கிழக்கு வங்காளப் பகுதியாக அசாம், அதன் தலைநகராக டாக்கா நிர்ணயிக்கப்பட்டது. அதன் மக்கள்தொகை 3.1 கோடி. முழுவதும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியாகவே இருந்தது. பெரும்பாலும் ஹிந்துக்கள் வாழும் பகுதியான மேற்கு வங்காளம் கல்கத்தாவைத் தலைநகராகக்கொண்டு பிரிக்கப்பட்டது. அதன் மக்கள்தொகை 5.1 கோடி.

மக்கள்தொகையை மட்டும் மனத்தில் வைத்து எல்லை வரையறை செய்யப்பட்டிருப்பின் கிளர்ச்சி ஏற்பட்டிருக்காது. நிர்வாக ரீதியில் பிரிப்பதாக ஒப்புக்குச் சொல்லிவிட்டு மதத்தின் அடிப்படையில் எல்லைகளை வரையறை செய்தார் கர்சன். கிழக்கு வங்காளம் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கப்பட்டதாகவும், நிர்வாகத்தில் கீழ்மட்டத்தில் இருந்ததாகவும் பிரிட்டிஷார் பதிவு செய்தனர்.

வங்காளம் அப்போது தேசிய இயக்கத்தின் மையம். கல்கத்தாவை சுற்றியே அதன் அரசியல் இருந்துவந்தது. இந்த மையத்தை உடைத்தால் என்ன ஆகும்? தேசியவாத இயக்கம் பலவீனப்படும். அதுவே பிரிட்டிஷாரின் விருப்பம்.

‘இந்தியாவில் ஜனங்களின் எண்ணப்படி நிர்வாகம், ஆட்சிமுறை நடைபெறவில்லை. கத்தியின் பலம்கொண்டே ஆட்சி நடக்கிறது. நம்மை ஏழ்மைபடுத்தும் முறையை மாற்ற விரும்புவது ராஜதுரோகம் இல்லை. இதில் சுதேசியம் எனும் முயற்சி ஒரு நல்ல துணையாகும்’ என்று திலகர் முழங்கினார். சுரேந்திரநாத் பேனர்ஜி தலைமையில் பெரிய அளவிலான எதிர்ப்பு அலை எழுந்தது. சுதேசி இயக்கம் உருவாகி, பிரிட்டிஷ் பொருட்கள் புறக்கணிக்கப்பட்டன. அக்டோபர் 16, 1905 வங்காளப் பிரிவினை அமலுக்கு வந்த நாள் துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை. அதனை அடைந்தே தீருவேன்’ என முழக்கம் வங்கம் முழுதும் எதிரொலித்தது. ஆங்கிலேயப் பொருட்கள் தீயிட்டு எரித்தனர். சுதேச இயக்கம் வலுப்பெறத் தொடங்கியது. வங்கப்பிரிவினைக் காங்கிரஸில் மிதவாதிகள், தீவிரவாதப் பிரிவினர் என இரு பிளவினை உண்டாக்கியது.

இவ்வாறு சுதேசமெனும் தேசிய இயக்கம் நாட்டின் பல்வேறு இடங்களில் வலுப்பெற்று வந்தாலும் தமிழகம் அதில் பின்தங்கியபடிதான் இருந்தது. அதனால் கோபமுற்ற பாரதி, தமிழ்நாட்டை ‘தூங்குமூஞ்சி மாநிலம்’ எனச் சீற்றத்துடன் சுட்டிக்காட்டி பத்திரிகையில் கட்டுரை எழுதினார். யாரேனும் சுதேசத் தேசிய இயக்கத்தைத் தமிழகத்தில் வலுப்படுத்த வரமாட்டார்களா, முன்னெடுத்துச் செல்ல மாட்டார்களா என்று ஏங்கியிருந்த பாரதிக்கு, வ.உ.சியின் வரவு புத்துயிர் கொடுத்தது.

வ.உ.சி ஏற்கெனவே தன்னால் தொடங்கப்பட்டிருந்த சுதேசி பண்டகசாலை, சுதேசியத் துணிகள் போன்றவை மட்டும் சுதேசம் வளர்க்கப் போதாது என்பதை வங்கப்பிரிவினை நிகழ்விற்குப் பின் உணர்ந்திருந்தார். வங்கப்பிரிவினைக்கு எதிர்வினையாற்றவும், திலகரின் சுதேசி இயக்கத்தைத் தமிழகத்தில் வலுப்படுத்தவும் எண்ணிக்கொண்டிருந்த வ.உ.சியின் மனத்தில் யாரால், எப்படிச் சுதேசிக் கப்பல் எண்ணம் துளிர்விட்டது என்ற உண்மை தெரியவில்லை.

ஏற்கெனவே தூத்துக்குடி வணிகர்களைக் கடல் வாணிபத்தில் பிரிட்டிஷார் புறக்கணிப்பதும், கோரிக்கைகள் மறுக்கப்படுவதுமாக இருந்தது. உள்ளூர் வணிகர்கள் அவமானப்படுத்தப்படும் நிகழ்வுகளும் அரங்கேறின. இதனால் உள்ளூர் வணிகர்கள் ஒன்றுசேர்ந்து கப்பல் வாங்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர். அந்த முயற்சிக்கு உறுதுணையாய் வ.உ.சி இறங்கினார். தூத்துக்குடி, கொழும்பு துறைமுகங்களுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்தினைத் தொடங்க திரு .முகம்மது ராவுத்தர் மற்றும் ஏட்டு குருநாத ஐயரிடமும் நிதியுதவி பெற்றார். மும்பையைச் சேர்ந்த முக்கிய வர்த்தகர் எஸ்ஸாஜி டாட்ஜிபாய் அவர்களின் நிறுவனத்திற்குச் சொந்தமான ஷாலைன், இப்ஸிவிச் என இரு கப்பல்களை 1906 ஏப்ரல் மாதம் வாடகைக்கு வாங்கினார்.

இதைக் கவனித்த ஆட்சியர், ‘சுதேசக் கப்பல் ஒரு தேறாத முயற்சி’ என பிரிட்டிஷாருக்கு ஓர் அறிக்கையளித்து வ.உ.சியின் முயற்சியை உதாசீனப்படுத்தினார். பெயரளவில் பிரிட்டிஷார் உதாசீனப்படுத்தினாலும் உள்ளூர பயம்கொண்டனர். தங்களுக்கெதிராகக் கப்பல் வந்திறங்கியது எரிச்சலைக் கொடுத்தது. கப்பல் உரிமையாளரை மிரட்டினர். ஒருசில மாதங்களிலேயே வாடகைக் கப்பல் மூலம் நடைபெற்ற வணிகத்திற்கு மூடுவிழா நடத்தினர்.

பிரிட்டிஷாரின் இந்தச் செயல் மேலும் வ.உ.சியைக் கோபத்திற்குள்ளாக்கியது. மனம் தளராமல் இலங்கை சென்று இன்னொரு கப்பலை வாடகைக்கு எடுத்து வந்தார். வ.உ.சியின் அயராத முன்னெடுப்பின் காரணமாக வாடகைக் கப்பல் என்றளவில் இருந்த ஏற்பாடு 1906 அக்டோபரில் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிமிடெட் என்று பதிவு செய்யப்பட்டது. இனி வாடகைக் கப்பல் நம் தொலைநோக்குப் பார்வைக்குக் கைகொடுக்காது என்பதை ஊகித்தார் வ.உ.சி.

நாட்டிற்குச் சொந்தமாகக் கப்பல் வாங்க வேண்டியதன் அவசியத்தை மற்றவர்களுடன் விவாதித்தார். மேலும் சுதேசம் குறித்தும், சுதேசியக் கப்பலின் அவசியத்தை எடுத்துரைக்க, கப்பல் வாங்கத் தேவையான நிதியைத் திரட்ட கடலூர், தஞ்சை, சென்னை, மதுரை, சேலம் முதலான மாவட்டங்களுக்கும் பயணம் செய்தார். இலங்கையின் கொழும்புவரை சென்று உரையாற்றினார். சுதேசக் கப்பல் வாங்குவதில் மக்களின் பங்கும் இருக்க வேண்டியதை அவசியமாகக் கருதினார். தமிழ்நாட்டில் சுதேசம் நங்கூரமிட்டு வளரும் இடமாகத் தூத்துக்குடி மாறியது.

தமிழகத்தில் சுதேசத்திற்கான சாத்தியக் கூறுகள் வ.உ.சியின் முயற்சியால் ஆங்காங்கே பரவியதென்பதை 1906 டிசம்பர் மாத இறுதியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பிரிட்டிஷாருக்கு அனுப்பிய அறிக்கையில் ‘வெள்ளையர் எதிர்ப்பு மனநிலை தூத்துக்குடியில் மேலோங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டதை வைத்து அறியலாம்.

தமிழகத்தில் வ.உ.சியின் சுதேசக் கருத்துகள் வலுவாக வேரூன்ற ஆரம்பித்தன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *