Skip to content
Home » ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

ஏனென்றால் நம் அடையாளங்கள் அனைத்தும் வரலாற்றோடு பிணைந்திருக்கின்றன.

நான், எனது நம்பிக்கை, எனது தேர்வு, எனது அரசியல் அனைத்தையும் என் அனுபவங்கள் தீர்மானிக்கின்றன. என் அனுபவங்களை நானே சுயசார்போடு, உள்ளிருந்து உற்பத்தி செய்கிறேனா என்றால் இல்லை. நான் ஒரு தீவல்ல. என் சமூகத்தின், நான் வாழும் காலத்தின் ஒரு பகுதி. எனவே என் அனுபவங்களில் என் சமூகத்தின் அனுபவங்கள் கலந்திருக்கின்றன. என் காலத்தின் சுவடுகள் பதிந்திருக்கின்றன. என் சிந்தனைகள் என்று நான் சொல்லிக்கொள்பவற்றில் மனிதச் சிந்தனைகளின் தொகுப்பு கலந்திருக்கிறது. என் அறிவு என்பது சமூக அறிவின் ஒரு பகுதி தானே தவிர, முழு முற்றான ‘எனது’ அறிவல்ல.

அறிவு ஒரு துறை என்றால் அந்தத் துறைக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அது என் வரலாறும்தான். எழுத்து என்பது நானே சுயமாகக் கற்றுக்கொண்ட ஒரு தொழில்நுட்பமா என்றால் இல்லை. நான் முறைப்படி வரலாறு கற்றுத் தேர்ந்தவனா என்றால் இல்லை. பலதரப்பட்ட ஆய்வாளர்களிடமிருந்து கற்று, உள்வாங்கி எளிமையாகப் பொது வாசகர்களுக்குக் கடத்திச் செல்லும் ஒரு பாலமாக என்னை நான் மதிப்பிடுகிறேன். டால்ஸ்டாயிடமிருந்து கற்கிறேன். பாரதியிடமிருந்து, புதுமைப்பித்தனிடமிருந்து, ரொமிலா தாப்பரிடமிருந்து கற்கிறேன். இன்னும் எனக்கு ஏராளமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் அவர்களுடைய படைப்புகளிலிருந்தும் மிகுதியானவற்றைப் பெற்றுக்கொள்கிறேன். அந்த வகையில் ஐசக் நியூட்டன் மட்டுமல்ல நாம் எல்லோருமே மற்றவர்களின் தோள்மீது ஏறி நிற்பவர்கள்தாம். நமக்கு முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் சமகாலத்தவர்களிடமிருந்தும் கற்பவர்கள்தாம். அந்த வகையில் ஒரு மரபின் தொடர்ச்சியாகவே என்னை நான் காணமுடியும். அந்த மரபுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது.

பள்ளி ஆசிரியர், மருத்துவர், விவசாயி, தகவல் தொழில்நுட்பப் பணியாளர் என்று தொடங்கி நம் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் திரட்டி வைத்திருக்கும் கூட்டறிவுக்குத் திடமான வரலாறு இருக்கிறது. ஒரு விவசாயி புதிதாகக் கருவிகளை உற்பத்தி செய்யத் தேவையில்லை. அவர் பயன்படுத்தும் கருவிகள் சமூகத்திடமிருந்து பெற்றவை. எப்போது, எங்கே, எதைப் பயிரிடவேண்டும், எப்படிப் பராமரிக்கவேண்டும், என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது, எப்போது அறுவடை, எப்படிச் சந்தைக்குக் கொண்டு செல்லவேண்டும், எவ்வளவு விலை வைக்கவேண்டும் என்று தன் தொழில் சார்ந்த அனைத்து அடிப்படைகளையும் சமூகமே அவருக்குக் கற்றுக்கொடுக்கிறது. அதனால் அவர் வாழும் வரலாறு.

நான் என்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறேன் என்பதை மட்டுமல்ல, என்னை என்னவாகக் காண்கிறேன் என்பதையும் என் வரலாறுதான் தீர்மானிக்கிறது. என்னுடைய தனிப்பட்ட வரலாறு என்பது என் சமூக வரலாற்றின் நீட்சி. என்னோடு (தெரிந்தோ, தெரியாமலோ; எனக்கு ஏற்பு இருக்கிறதோ, இல்லையோ) ஒட்டிக்கொண்டிருக்கும் அனைத்து அடையாளங்களும் வரலாற்றால் உருவாக்கப்பட்டவை, வளர்த்தெடுக்கப்பட்டவை. அடையாளமற்ற வாழ்வு இல்லை என்பதை வரலாறற்ற அடையாளம் கிடையாது என்றும் புரிந்துகொள்ள முடியும்.

0

மொழியை எடுத்துக்கொள்ளுங்கள். சங்க இலக்கியத்துக்கும் நமக்கும் என்ன தொடர்பு? வாசித்துப் புரிந்துகொள்ளும் புலமை இல்லாதவர்கள்கூட, ‘நாங்கள் தமிழர்கள்; காதலுக்கும் வீரத்துக்கும் பெயர் பெற்றவர்கள், தெரியுமா’ என்று சங்கப் பண்பாட்டைச் சுட்டிக்காட்டிப் பெருமிதம் கொள்வதை எப்படிப் புரிந்துகொள்வது? வள்ளுவன் தன்னை ‘உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்றும் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்றும் எப்படி நம்மால் இன்று பெருமிதம் கொள்ளமுடிகிறது? வள்ளுவருக்கும் கனியன் பூங்குன்றனாருக்கும் 21ஆம் நூற்றாண்டில் வாழும் நமக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்? ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்று சொல்லும்போதே நம் உள்ளம் குழைவது ஏன்?

ஏனென்றால் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய அடையாளங்களை நாம் கடந்த காலத்திலிருந்து, குறிப்பாகத் தமிழ் எனும் மரபிலிருந்து வரித்துக்கொண்டிருக்கிறோம். நான் தமிழன். எனக்குத் தனியே ஒரு குணமுண்டு என்று முழங்கும்போது நாம் நம் கூட்டு நினைவுகளிலிருந்து, கூட்டு அறிவிலிருந்து, கூட்டு பண்பாட்டிலிருந்து ஒரு மரபைத் தேர்ந்தெடுத்துச் சொந்தம் கொண்டாடுகிறோம். அடையாளம் இயங்கும் விதம் இது.

ஒரு மொழி அதைப் பேசுபோர் அனைவரையும் ஓர் இழையில் இணைக்கிறது. நாம் வாழும் சமூகத்திடமிருந்து நமக்கு வந்து சேர்ந்த சொத்து அது. பழந்தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்ல, அதைக் கண்டறிந்தோர், நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தோர், உரை எழுதியோர், புகட்டியோர் என்று பலரும் மொழி என்னும் அடையாளக் கண்ணிக்குள் அடங்கியிருக்கிறார்கள். பாரதியின் சொற்கள் என் இதயத்தை வருடும்போது நான் பேசிக்கொண்டிருப்பது வெறும் தமிழல்ல, அது பாரதியின் தமிழ் என்னும் உணர்வு மேலிடுகிறது. பாரதியிடமிருந்து, புதுமைப்பித்தனிடமிருந்து, ஜெயகாந்தனிடமிருந்து நான் கற்கும்போது என் மொழி மட்டுமல்ல, என் மொழியுணர்வும் கூர்மையடைகிறது. தமிழ் எனது பெருமிதத்துக்குரிய அடையாளமாக மாறுகிறது.

தமிழன் எனும் குழுவில் நான் உறுப்பினராக இருப்பதற்குக் காரணம் மொழி. என் தாய்மொழி இந்தியாக இருந்திருந்தால் நான் வேறொரு குழுவின் உறுப்பினராக இருந்திருப்பேன். அப்போது என் கண்ணோட்டம் இதேபோல்தான் இருந்திருக்கும் என்று சொல்லமுடியாது. சங்க இலக்கியப் பண்புகள் எனக்கு அன்னியமானவையாக இருந்திருக்கும். சமஸ்கிருதச் செவ்வியல் படைப்புகளோடு உணர்வுபூர்வமாகக் கலந்திருப்பேன். அஸ்வகோஷரையும் காளிதாசரையும் கொண்டாடிக் கொண்டிருப்பேன். பிரேம்சந்த், ஸ்ரீலால் சுக்லா, பீஷம் சாஹ்னி போன்றோர் என் ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள். என் சிந்தனை முறை வேறு பண்பாட்டுத் தளத்தில் மையம் கொண்டிருக்கும். என் விருப்பு, வெறுப்புகள் மாறியிருக்கும். என் உலகப் பார்வை முற்றிலும் வேறொன்றாக இருந்திருக்கலாம். என் அரசியல் தேர்வும் மாறியிருக்கலாம். என் பண்பாட்டு அடையாளத்தை என் மொழிதான் உறுதி செய்கிறது.

மொழி எவ்வாறு ஓர் அதிகார அமைப்பாகச் செயல்படுகிறது என்பதை ஜி.என். தேவியோடு உரையாடியபோது கற்றுக்கொண்டேன். இலக்கிய விமரிசகர், முன்னாள் பேராசிரியர், பண்பாட்டுச் செயற்பாட்டாளர், ‘பாஷா ஆராய்ச்சி, வெளியீட்டு மையத்தின்’ நிறுவனர். இந்தியா முழுக்கச் சுற்றித் திரிந்து பழங்குடிகளின் மொழிகளைப் பதிவு செய்திருக்கிறார்.

‘மொழிகள் ஒவ்வொரு நாளும் மாறுகின்றன. பண்பாடு மாறும்போது மொழியும் மாறுகிறது. இந்த மாற்றம் இயல்பாக நடைபெறுகிறது. ஆனால் மொழிகள் இயல்பானவை அல்ல; அவை பண்பாட்டின் கனிகள். சொற்களை உருவாக்கவும் சொற்களைக் கொண்டு வாக்கியங்களை உருவாக்கவும் மனிதனுக்கு மிக நீண்டகாலம் தேவைப்பட்டிருக்கிறது. விலங்குகளால் நிகழ்காலத்தை மட்டும் உணரமுடியும். மனிதனால் மட்டுமே கடந்த காலத்தை நினைவுகூர்ந்து பேசமுடியும். எதிர்காலம் குறித்துக் கனவு காணவும் முடியும். மொழியே இந்த இரண்டையும் சாத்தியப்படுத்துகிறது. அந்த வகையில், ஒரு மனிதனை மொழியே மனிதனாக மாற்றுகிறது’ என்கிறார் கணேஷ் தேவி.

மனிதர்கள் சமமற்றவர்கள் என்பதால் மொழிகளும் சமமற்றவையாக அமைந்திருக்கின்றன. ‘சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம் மூன்றும் அரசியல் அதிகாரம் மிக்க மொழிகளாக இருந்திருக்கின்றன. அதிகாரமற்ற மொழிகள் அதிகாரமுள்ள மொழிகளின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த ஆதிக்கம் எதிர்க்கப்பட்டு முற்றிலும் புதிய மொழிகள் தோன்றியிருக்கின்றன. மாற்றங்கள் வெளியிலிருந்தும் வந்திருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, இஸ்லாத்தின் வருகையால் உருது என்னும் புதியமொழி நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்த மொழியுடனான பரிமாற்றங்கள் மூலம் வடஇந்திய மொழிகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒருமொழி மாற்றம் காணும்போது அந்த மொழியைப் பேசும் மக்களின் சிந்தனைப் போக்கிலும் மாற்றம் நிகழ்கிறது. இந்த மாற்றத்தை அவர்களுடைய இலக்கியத்தில் நீங்கள் தெளிவாகக் காணலாம். இந்தப் போக்குகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு இந்திய இலக்கிய வரலாற்றைப் புரிந்துகொள்வது மிகவும் சவாலானது.’

எழுதப்படும் மொழி, எழுத்தில்லாத மொழி எனும் பாகுபாடு உலகெங்கும் நிலவுவதை கணேஷ் தேவி சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் இந்நிலை என்ன என்று கேட்டபோது அவர் அளித்த விடை இது. ‘இந்தியாவில், சுதந்திரத்துக்குப் பிறகு எந்தெந்த மொழிகளுக்கெல்லாம் எழுத்துவடிவம் இருந்ததோ, எந்தெந்த மொழிகளெல்லாம் அச்சிடப்பட்டதோ அந்த மொழிகளைப் பேசும் மக்களுக்கு மட்டுமே தனி மாநிலம் கிடைக்கப்பெற்றது. அதன்படி, பதினான்கு மொழிகளைக் கொண்ட ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அது அரசியலமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையாக உருவானது. இன்று அதில் இருபத்திரண்டு மொழிகள் உள்ளன. பள்ளிக்கல்விமுதல் உயர்கல்விவரை அரசு அளிக்கும் அத்தனை நிதியுதவிகளும் சலுகைகளும் பட்டியலில் இடம்பெற்ற மொழிகளுக்கு மட்டுமே கிடைத்தன. விடுபட்டுப்போன மொழிகளைப் பேசுபவர்கள் பட்டியலிலுள்ள ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதுதான் அவர்களுக்கிருந்த ஒரே வாய்ப்பு. அப்போதுதான் அவர்களால் மேற்கொண்டு படிப்பைத் தொடரமுடியும்; பணியில் சேரமுடியும்; வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்திக்கொள்ளமுடியும். ஆக ஒருவருடைய தாய்மொழியே சுமையாக மாறும் கொடுமை நிகழ்ந்தது.’

மொழிகள் எவ்வாறு காணாமல் போகின்றன என்பதையும் அவர் பகிர்ந்துகொண்டார். ‘1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 1600க்கும் மேற்பட்ட தாய்மொழிகள் இந்தியாவில் இருந்தன. 1971இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது பத்தாயிரம் பேருக்கு அதிகமானோர் பேசும் மொழியை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அப்போது நூற்றுக்கும் கூடுதலான மொழிகள் மட்டுமே பதிவாயின. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் உருவாக்கப்பட்டது. 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்துதான் வெளிவந்தது. அதனால்தான் பத்தாயிரம் பேர் என்னும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன் பின்னணியில் அரசியல் நிர்ப்பந்தம் இருந்தது. ‘நம்மைப் பொருத்தவரை, 1961ஆம் ஆண்டுக்கும் 1971ஆம் ஆண்டுக்கும் இடையில் 1500 மொழிகள் தொலைந்துபோய்விட்டன. எனில், அந்த மொழிகளைப் பேசிவந்த மக்கள் என்ன ஆனார்கள்?’

‘ஜனநாயகம் தழைக்கவேண்டுமானால் எல்லா மொழிகளும் பேசப்பட வேண்டும்’ என்கிறார் கணேஷ் தேவி. ‘எழுத்து வடிவம் கொண்ட மொழிகள் – எழுத்து வடிவமில்லாத மொழிகளென்றோ அச்சேறிய மொழி – அச்சேறாத மொழியென்றோ, நகர மக்கள் பேசும் மொழி – நாடோடிகள் பேசும் மொழியென்றோ பாகுபாடுகள் இருக்கக்கூடாது. வீதிமுதல் நாடாளுமன்றம்வரை எல்லாக் குரல்களும் ஒலிக்க வேண்டும். ஆனால் இது நடப்பதில்லை. நாடாளுமன்றத்தில் கடந்த அறுபது ஆண்டுகளில் மூன்று சதவிகித மொழிகள் மட்டுமே ஒலித்திருக்கின்றன. அதிகார வர்க்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்பின்மை பெருகுவதற்கும் ஒருவரைவிட்டு ஒருவர் விலகிநிற்பதற்கும் அடிப்படைக் காரணம் இதுதான்.’

ஒருவேளை சாந்தாளி, காசி, மிசோ அல்லது ஏதேனும் ஒரு பழங்குடி மொழியைப் பேசுபவனாக இருந்திருந்தால் என்னுடைய உலகமே வேறொன்றாகத்தான் இருந்திருக்கும் இல்லையா?

0

மொழி, மாநிலம், நாடு, பாலினம் உள்ளிட்ட அடையாளங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு என்பதை வரலாறு நமக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. நாஜிக்களும் யூதர்களும் ஒரே மொழி பேசினாலும் அங்கே அவர்களை மொழி இணைக்கவில்லை. காரணம், இனம் எனும் அடையாளத்தை அங்கே வெறுப்பு அரசியல் கூர் தீட்டி வைத்திருந்தது. மற்ற எல்லா அடையாளங்களையும் அது முற்றாக அழித்துவிட்டது. இனவெறி மிகும்போது ஒரு யூதர் சக ஜெர்மானியராக அல்ல ஒரு யூதராக, அதாவது அகற்றப்படவேண்டிய ஒரு கிருமியாக (ஹிட்லர் அவர்களை இப்படித்தான் அழைத்தார்) சுருங்கிப்போனார். இனவொழிப்பு தொடங்கியது இப்படித்தான்.

என் மொழிப்பற்று, என் நாட்டுப்பற்று, என் பண்பாட்டுப் பெருமிதம் அளவு கடந்து போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது என் பொறுப்பு. ஆண் எனும் அடையாளத்தை ஆணாதிக்கக் கருத்தியலோடு நான் இணைத்துப் புரிந்துகொள்ளும்போது நான் அநீதி இழைப்பவனாக மாறுகிறேன். என் மொழி மட்டுமே உயர்ந்தது, என் நாடு மட்டுமே சிறந்தது, என் பண்பாடுதான் இருப்பதிலேயே மேலானது என்று நான் களமாடத் தொடங்கும்போது பிற மொழிகளை, பிற நாடுகளை, பிற பண்பாடுகளை இழிவாகப் பார்க்கும் குற்றத்தைப் புரியத் தொடங்குகிறேன். காந்தியிடமிருந்ததும் நாட்டுப்பற்றுதான். அவரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிடமிருந்ததும் நாட்டுப்பற்றுதான். இந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதைப் புரிந்துகொள்ள நாம் வரலாற்றை நாடவேண்டும்.

நம்முடைய அடையாளங்களைப் புரிந்துகொள்ளும்போது நாம் நம்மை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்கிறோம். அது நடக்கும்போது மற்றவர்களோடு இணக்கமான உறவு நமக்கு உண்டாகிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *