மேலாண்மை (Management) என்ற கருத்தாக்கம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (சுமார் 1880-1910) தொழிற்புரட்சியின் விளைவாக முறையான கோட்பாடுகளுடன் உருவானதாகக் கூறப்படுகிறது.
ஓர் இலக்கினை அடைவதற்காகத் தம்மிடம் இருக்கும் வளங்களைச் சரியான முறையில் திட்டமிட்டு ஒருங்கிணைத்து இயங்கும் செயல்முறையே மேலாண்மை ஆகும். இங்கு வளங்கள் என்பது மனித வளம், நிதி வளம், தொழில்நுட்பம், நேரம் போன்றவற்றைக் குறிக்கிறது. திட்டமிடல், ஒழுங்கமைத்தல், பணியமர்த்துதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவை மேலாண்மையின் முக்கியத் தூண்களாகும்.
நிறுவனத்தின் இலக்குகளைக் குறைந்த செலவில், அதிக செயல்திறனுடன் அடைவதே மேலாண்மையின் முக்கிய நோக்கம். உற்பத்திப் பெருக்கத்தால், பணியாளர்களைக் கையாளுவதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் முறையான மேலாண்மைமுறை தேவைப்பட்டது. அப்போது ஃபிரடெரிக் வின்ஸ்லோ டெய்லர் அறிவியல் பூர்வமான முறைகளை அறிமுகப்படுத்தினார். இவர் அறிவியல் மேலாண்மையின் தந்தை (டெய்லரிசம்) என்று அழைக்கப்படுகிறார். இவர் எழுதிய ‘அறிவியல் மேலாண்மைக் கோட்பாடுகள்’ என்ற புத்தகத்தின் மூலம் இது ஒரு தனித்துறையாகவே பரவலாக அறியப்பட்டது.
1916இல் ஹென்றி ஃபயோல் ‘தொழிற்சாலையில் பொது நிர்வாகம்’ என்ற புத்தகத்தின் மூலம் நிர்வாகக் கோட்பாடுகளை உருவாக்கி மேலாண்மைச் செயல்பாடுகளை முறைப்படுத்தினார். அது ஃபயோலிசம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இவர் நிர்வாகக் கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
1950களுக்குப் பின் பீட்டர் எஃப். டிரக்கர் அவர்கள் ‘இலக்குகளின் மூலம் மேலாண்மை’ என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். இது மேலாளர்களும் பணியாளர்களும் இணைந்து இலக்குகளை நிர்ணயிப்பதை வலியுறுத்துகிறது. 1959இல் ‘அறிவுசார் பணியாளர்’ என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கினார். எதிர்காலத்தில் உடல் உழைப்பைவிட அறிவு மற்றும் தகவல்களைக் கையாளும் பணியாளர்களே முக்கியத்துவம் பெறுவார்கள் என்று கணித்தார். அதனால் இவர் ‘நவீன மேலாண்மையின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
மேலாண்மை முன்னோடிகளென மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இம்மூவரும் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களின் கோட்பாடுகளில் சில முக்கியமான பொதுவான மேலாண்மைக் கருத்துகள் காணப்படுகின்றன.
மூவருமே மேலாண்மை என்பது தற்செயலாக நடக்கும் ஒன்றல்ல, அது சில குறிப்பிட்ட விதிகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்று நம்பினர். வேலையைச் செய்வதற்கு முன்பே அதைத் திட்டமிடுவது அவசியம் என்பதிலும், ஒரு பெரிய பணியைப் பல சிறிய பகுதிகளாகப் பிரித்து, தகுதியானவர்களிடம் ஒப்படைப்பதின் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதிலும், முறையாகத் திட்டமிட்டு, தகுதியான பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்துச் செயல்படுவதே மேலாண்மை என்பதிலும் மூவரும் உடன்படுகின்றனர்.
இம்மூன்று முக்கிய மேலாண்மைப் பண்புகளையும் பண்டைய காலத்தில் பழந்தமிழர்கள் கடைபிடித்திருக்கின்றனர். ஓர் அரசர், நிர்வாக வசதிக்காகத் தனது ராஜ்ஜியத்தை, மண்டலம் (பிரதேசம்), நாடு (மாகாணம்), ஊர் (நகரம்), பேரூர் (பெரிய கிராமம்), மற்றும் சிற்றூர் (சிறிய கிராமம்) எனச் சிறிய பகுதிகளாகப் பிரித்து, குறுநில மன்னர்களையும், ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற நிர்வாகக் குழுக்களையும் அமைத்து அதற்குத் தகுதியான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தி இருப்பதன் மூலம் சங்க காலத்திலேயே இத்தகைய மேலாண்மைப் பண்புகளைப் பழந்தமிழர்கள் கடைபிடித்திருப்பதை அறிய முடிகிறது.
ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் எனும் மேலாண்மைக் கருத்தினை உரைத்திருக்கிறார் வள்ளுவர்.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின் (குறள் 484)
காலத்தையும் இடத்தையும் ஒன்றாக இணைத்து நாம் சூழ்நிலை என்கிறோம். ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமெனில் சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டும். அரசியல் சூழ்நிலை என்ன, பொருளாதாரச் சூழ்நிலை மேலோங்கி இருக்கிறதா, சமுதாய சூழ்நிலை எப்படி இருக்கிறது போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்பதனையே ‘காலம் கருதி இடத்தாற் செயின்’ என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.
ஒரு செயலுக்குத் தேவையான கருவி, ஏற்ற நேரம், செய்யும்முறை, மற்றும் அதனைச் செய்து முடிக்கும் ஆளுமைத்திறன் போன்ற மேலாண்மைப் பண்புகளை ஒரு சிறந்த அமைச்சனின் இலக்கணமாகக் கூறியிருக்கிறார் வள்ளுவர்.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. (குறள் 631)
ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான கருவியும், அதற்கு ஏற்ற காலமும், அச்செயலைச் செய்யும் முறையும் மற்றும் அச்செயலின் அருமையும் ஆராய்ந்து அதனைச் சிறப்பாகச் செய்து முடிப்பவனே சிறந்த அமைச்சன் ஆவான் என்கிறார் வள்ளுவர்.
இங்கு அமைச்சன் என்பவனைச் செயல்பாட்டுத் தலைவன் எனவும் கொள்ளலாம். அமைச்சன் அல்லது தலைவன் என்பவன் எவ்விதம் செயல்பட வேண்டுமென உரைக்கும் வள்ளுவர், அத்தலைவன் ஒரு பணியாளனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறார்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (குறள் 517)
ஒரு பணியை ஒருவரிடம் ஒப்படைப்பதற்கு முன், அப்பணிக்குத் தேவையான திறன், ஆர்வம் மற்றும் அறிவு அவரிடம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். அந்நபர் அப்பணியை எப்பொருள்களைக் கொண்டு, எப்படிச் செய்துமுடிப்பார் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து, அவர் மீது நம்பிக்கை வந்த பிறகு அந்தப் பணியை அவரிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். இது சிறந்த நிர்வாகத்திற்கேற்ற குறளாகும்.
20ஆம் நூற்றாண்டில் நிறுவனங்கள் பெருகத் தொடங்கிய வேளையில் அறிவியல் மற்றும் நிறுவன மேலாண்மையாக உருவாக்கப்பட்ட இந்த மேலாண்மைக் கோட்பாடுகள், காலத்தின் ஓட்டத்தில் உண்டான தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதவள மேலாண்மை, தகவல் மேலாண்மை, கால மேலாண்மை, பணியாளர் மேலாண்மை, செயல் மேலாண்மை, வள மேலாண்மை எனப் பல்வேறு வடிவங்களைப் பெற்றுவிட்டன.
இதேபோன்று சங்க காலத்திலும் மேலாண்மை என்ற கருத்தாக்கம் அக்காலத்திற்கேற்ற வடிவத்தில் விவசாயம், வணிகம் மற்றும் அரசாட்சி போன்றவற்றில் கடைபிடிக்கப்பட்டது.
சங்க இலக்கியத்தில் மேலாண்மை என்பது நீர் மேலாண்மை, வேளாண்மை, வணிகம் மற்றும் நிர்வாகத் திறனுடன் இணைந்தே பேசப்படுகிறது. குறிப்பாக, நீர்நிலைகளைப் பாதுகாத்தல், மழையை நம்பி வேளாண்மை செய்தல், மற்றும் யவனர்களுடன் வணிகம் செய்தல் போன்ற மேலாண்மைக் கருத்துகள் பல பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
புறநானூற்றின் 18ஆம் பாடலில் குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியன் நெடுஞ்செழியனிடம், நிலம் குழிந்த இடங்கள் அனைத்திலும் நீர்நிலைகளை அமைத்து, நீரைத் தேக்கி வைப்பவனே நிலத்தை ஆள்பவன் என்று நீர் மேலாண்மையின் சிறப்பை வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
நீர் இன்றமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே;
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.
தண்ணீர் இல்லாமல் இயங்காத உடம்பு அனைத்திற்கும், உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் ஆவர். உணவை முதன்மையாகக் கொண்டது உணவினாலான உடல். உணவு எனப்படுவது, நிலத்தோடு நீரும் சேர்ந்த கலவையே. நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்கள் இவ்வுலகில் வாழும் உடலையும், அதனுள் இருக்கும் உயிரையும் படைத்தவர்கள் ஆவர். வானத்தை மட்டுமே நம்பி இருக்கும் புன்செய் நிலங்களைக் கொண்ட பரந்த நாட்டை ஆளும் மன்னன் நீர்நிலை வசதிகளைச் செய்து தராவிட்டால், அவன் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த நிலம் வளம் தராது. எனவே, நான் கூறுவதை ஏளனமாகவோ, தாழ்வாகவோ நினைக்காமல் விரைந்து செயல்படு. நிலம் குழிந்த இடங்களில் நீர்நிலைகளை அமைத்து, நீர்நிலை பெருகச் செய். நீரைத் தடுத்து நிலைநிறுத்தியவர் இவ்வுலகில் புகழை நிலைநிறுத்தியவர் ஆவர். நீர்நிலைகளை உருவாக்காதவர் இவ்வுலகில், தம்மையும் தம் புகழையும் நிலைநிறுத்தாதவர் ஆவர்.
இப்படியாக மழையை மட்டும் நம்பி இருக்காமல் நிலம் குழிந்த இடத்தில் நீர் நிலைகளை உருவாக்கி விவசாயம் செய்தால் மழை இல்லாத காலங்களிலும் நாடு செழிக்கும் எனும் நீர் மேலாண்மைக் கருத்தை வலியுறுத்துகிறார் புலவர் குடபுலவியனார்.
இவற்றைப்போல் இன்னும் ஏராளமான மேலாண்மை கருத்துக்கள் சங்க காலத்தில் இருந்துள்ளன. அவற்றில் வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
(தொடரும்)

