ஏனென்றால் வரலாறு நமக்குப் புதிய கண்களை அளிக்கிறது. நம் இதயத்தை அகலப்படுத்துகிறது.
கண்டுபிடிப்பு என்பது புதிய இடங்களுக்குச் செல்வதல்ல. புதிய கண்களைக் கொண்டு பார்ப்பதுதான் என்கிறார் பிரெஞ்சு நாவலாசிரியர் மார்சல் புரூஸ்ட். வரலாறு சட் சட்டென்று மாறும் துறையல்ல. எப்போதும் நமக்குப் புதிய தரவுகள் கிடைத்துக்கொண்டே இருக்காது. நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். புதிய கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கவேண்டும். ஏற்கெனவே உள்ள தரவுகளைப் புதிய கண்களைக் கொண்டு பார்வையிடும்போது புதிய வெளிச்சங்கள் கிடைக்கக்கூடும் என்கிறார் ரொமிலா தாப்பர். கருத்தாக்கங்களுக்கும் இது பொருந்தும். காலம் காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் கருத்துகளை, அவை காலம் காலமாகப் பின்பற்றப்படுகின்றன எனும் ஒரே காரணத்தால் நாமும் ஏற்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. கேள்விகள் எழுப்பலாம். விடைகளைக் கண்டறியலாம். நம் பார்வைகளையும் மாற்றியமைத்துக்கொள்ளலாம். இதற்கு வரலாறு உதவுகிறது.
எடுத்துக்காட்டுக்கு, சாதி, மதம், இனம், பண்பாடு, பாலினம், கலை, இலக்கியம் போன்றவை சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்கள். பண்பாடு என்னும் குடையின்கீழ் இவற்றைத் தொகுக்கமுடியும். வரலாறுக்கு மிக நெருக்கமான ஒரு துறை, பண்பாடு. பண்பாட்டு வரலாறு என்றே ஒரு புதிய, தனித்த துறைகூட உருவாகியிருக்கிறது. பண்பாட்டை இரண்டாகப் பிரிக்கும் வழக்கம் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது. மேல்தட்டு மக்களின் பழக்கவழக்கங்களையும் சிந்தனை முறைகளையும் உயர் பண்பாடு என்றும் பிறவற்றைத் தாழ்ந்த பண்பாடு என்றும் அழைத்தனர். பண்பாட்டில் உயர்வு, தாழ்வில்லை என்பதை அறிவுலகம் ஏற்பதற்கு காலம் அதிகம் பிடித்தது. பழங்குடி மக்களின் பண்பாட்டை எப்படி அணுகவேண்டுமோ அதேபோல்தான் மேட்டுக்குடி மக்களின் பண்பாட்டையும் அணுகி, ஆராயவேண்டும் என்பதை இன்றைய ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மிக முக்கியமாக, மேல்தட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே பண்பாடுதான் இருக்கமுடியும் என்பதும் மற்றவர்கள் அனைவரையும் ஒரே குடையின்கீழ் தொகுத்துவிடமுடியும் என்பதும்கூடக் குறுகலான பார்வைதான்.
எடுத்துக்காட்டுக்கு, மரக்கறி உணவை மட்டும் உண்பதுதான் எங்கள் பண்பாடு என்று பல பிராமணர்கள் இன்று கோருகின்றனர். ஆனால் இது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையா என்றால் இல்லை என்கிறார் ரொமிலா தாப்பர். சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து தமிழ்நாடுவரை ஒரு குழுவுக்கு ஒரே உணவு வழக்கம் எப்போதுமே நிலவியது கிடையாது என்கிறார் தாப்பர். ஹரப்பன் நாகரிகத்துக்குப் பிறகு மலர்ந்த வேத காலத்தில் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் பிராமணர்களுக்கு இருந்திருக்கிறது. துதிப்பாடல்களின் தொகுப்பான வேதத்தில் பால், நெய் போன்றவை அதிக அளவில் வேள்வியில் பயன்படுத்தப்பட்டது குறித்த குறிப்புகள் உள்ளன. இதன் பொருள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமல்ல. எல்லோரையும்போல் பிராமணர்களும் மாட்டுக்கறி உண்டிருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாத் தருணங்களிலும் இல்லாவிட்டாலும் சடங்கின் ஒரு பகுதியாகவும் விருந்தாளிகளை வரவேற்கும் பொருட்டும் மாட்டுக்கறி பரிமாறப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் தாப்பர்.
1960களில் வெளிவந்த பாடப்புத்தகங்களில் இச்செய்தி இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. பொய், பிராமணர்கள் பசுமாட்டை வணங்கியவர்கள். அவர்கள் பசு மாமிசம் உண்டிருக்க வாய்ப்பே இல்லை என்று இன்றுவரை இந்துத்துவர்கள் மறுத்து வருவதோடு தாப்பரைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்து மதத்துக்கு எதிரானவர் என்றும் அதன் நீட்சியாக, இந்தியாவுக்கே எதிரானவர் என்றும் அவர்கள் தூற்றி வருகிறார்கள். அவர்கள் வரையறுக்கும் இந்து பண்பாட்டை யார் மறுத்தாலும் அவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரைக் குத்தப்படுகின்றனர். இந்துத்துவர்களைப் பொருத்தவரை இந்து பண்பாட்டில் பசு மாமிசம் இல்லை.
பிராமணர்கள் புலால் உணவை மறுக்கும் வழக்கத்தைப் பின்னர் கடைபிடிக்கத் தொடங்கியதற்குக் காரணம் தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதற்கு. உயர்ந்த இடத்தில் தங்களை நிறுவிக்கொள்வதற்கு. இப்போதும் மாமிசம் உண்ணாத பிராமணர்களும் இருக்கிறார்கள், நன்றாக உண்பவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் உணவை ஒரே அலகாகக் கொண்டு பிராமணப் பண்பாடு என்ற ஒன்றை வரையறுக்கமுடியாது என்பதே உண்மை. இந்து பண்பாடு என்பதும் ஒன்றல்ல.
பண்பாடு எனும் பதமே குறைபாடுள்ளதுதான் என்பது தாப்பரின் கருத்து. அதனால்தான் அவர் பண்பாடுகள் என்று அழைக்கிறார். இந்து பண்பாடு அல்ல, இந்து பண்பாடுகள். இஸ்லாமியப் பண்பாடு அல்ல இஸ்லாமியப் பண்பாடுகள். எந்தக் குழுவுக்கும் பொதுவான உணவு வழக்கம் என்றொன்று இருந்ததில்லை. உணவு வழக்கங்கள்தான் உள்ளன. மரபு என்று சொல்லாதீர்கள். மரபுகள் என்று அழைக்கத் தொடங்குங்கள். சமூகமல்ல, சமூகங்கள். நம்பிக்கையல்ல, நம்பிக்கைகள். பார்வையல்ல, பார்வைகள். மொழியல்ல, மொழிகள். அடையாளம் அல்ல, அடையாளங்கள். கடந்த காலம் அல்ல, கடந்த காலங்கள். வரலாறு அல்ல வரலாறுகள். பன்மைத்துவம் நம்மை வேறுபடுத்துவதில்லை. அதுவே நம்மை இணைக்கிறது என்கிறார் தாப்பர். இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும்.
எந்தப் பண்பாடும் தனித்திருப்பதில்லை. ஒரு பண்பாடு இன்னொன்றோடு உரையாடுகிறது. கொண்டும் கொடுத்தும் வளர்கிறது. அருகருகில் வாழும் இரு பண்பாடுகளை எடுத்து ஆராய்ந்தால் இரண்டுக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளையும் காணலாம், வேறுபாடுகளையும் உணரலாம். கலப்பற்ற பண்பாடு என்றொன்று எப்போதும் இருந்ததில்லை. இனியும் தோன்ற வாய்ப்பில்லை. உணவு, உடை, கலை, இலக்கியம், சமயம், வழிபாட்டு முறை, பழக்கவழக்கம், நம்பிக்கை அனைத்துக்கும் இது பொருந்தும். முகலாயப் பாணி உடையை இந்துக்கள் அணிகிறார்கள். கற்பூரம், கொடிக்கம்பம், தேர் திருவிழா என்று பல பண்புகளை கிறிஸ்தவம் இந்து மதத்திடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறது. சாதிய பாகுபாடும்தான். சூஃபி மதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. கிரேக்க தாக்கத்தை பௌத்தத்தில் காணமுடியும். காந்தாரக் கலை இல்லாவிட்டால் சுருள்முடியோடு புன்னகைக்கும் புத்தர் நமக்குக் கிடைத்திருக்கமாட்டார். எனக்கு எனது பண்பாடு போதும் என்று யாரும் கதவை மூடிச் சாத்தமுடியாது.
சாதிக்கும் இது பொருந்தும். சாதி முறை எப்போது எப்படி தோன்றியது போன்ற கேள்விகளுக்கான விடைகளில் வேண்டுமானால் ஆய்வாளர்களுக்கு மத்தியில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை, சுத்தமான, தனித்துவமான சாதிக்குழு என்றொன்று எப்போதும் இருந்ததில்லை என்பதுதான். இதை மரபியல் சோதனைகளும் உணர்த்துகின்றன. ‘இந்தியாவில் கலப்பற்ற சாதியென்று எதுவும் இல்லை. எல்லாவிதமான சாதிக்குழுக்களுக்குள்ளும் கலப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ‘கீழ்ச்சாதி’ என்று கருதப்படுபவர்களோடும் பிற சாதியினர் திருமண உறவுகள் ஏற்படுத்தியிருக்கின்றனர். அவ்வாறு நடைபெறும்போதெல்லாம் கலப்பு மரபணுக்களைக் கொண்டவர்களாக அவர்கள் மாறுகிறார்கள்’ என்கிறார் இத்துறை சார்ந்த முக்கிய ஆய்வாளர், டேவிட் ரீச்.
என் சாதி, என் மரபு, என் முன்னோர் வழக்கம் என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டுக்கொள்வது அர்த்தமற்றது என்பதை அறிவியலும் வரலாறும் உணர்த்துகின்றன. ‘இந்தியாவில் மட்டுமல்ல எங்குமே நூறு சதவிகிதம் தூய்மையான, கலப்பே இல்லாத மனிதக் குழு என்று மரபியலைப் பொருத்தவரை சாத்தியமில்லை. நம் மூதாதையர்கள் குறித்து நாம் வளர்த்துவைத்திருக்கும் பிம்பங்களும் பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டிருக்கும் கதைகளும் உண்மையல்ல. ஒவ்வொருமுறை தரவுகளைக் கொண்டு ஆராயும்போதும் இந்த வாதங்களெல்லாம் உடைபடுவதைப் பார்க்கமுடிகிறது’ என்கிறார் ரீச்.
அவர் ஒரு முஸ்லிம். அவருடைய சிந்தனைமுறை இது, பண்பாடு இது. அவர் ஒரு கிறிஸ்தவர். அவர் இப்படித்தான் செயல்படுவார். அவர் ஓர் இந்து. அவர் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவராகத்தான் இருக்கவேண்டும். அவர் ஒரு பிராமணர், எனவே அறிவாளியாகத்தான் இருக்கவேண்டும். இவர் ஒரு தலித். இவர் இப்படித்தான் இருப்பார். யூதர்கள் கிருமிகள் அல்லது யூதர்கள் திறமைசாலிகள். அமெரிக்கர்கள் அறிவாளிகள் அல்லது அமெரிக்கர்கள் நிறவெறி கொண்டவர்கள். இப்படி நமக்குள் ஏராளமான கெட்டித்தட்டிப்போன நம்பிக்கைகள் நிறைந்திருக்கின்றன. ஒரு பெரிய குழுவை இப்படித்தான் பாரபட்சத்தோடு மதிப்பிடுகிறோம்.
நல்ல முத்திரை மட்டுமல்ல, தப்பெண்ணத்தோடு குத்தப்படும் முத்திரைகூடத் தவறானதுதான். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால், பாலினத்தின் பெயரால், நாட்டின் பெயரால் முன்தீர்மானங்களை வளர்த்து வைத்துக்கொள்வது தவறானது மட்டுமல்ல, பல நேரங்களில் ஆபத்தானதும்கூட. வீட்டில் மாட்டுக்கறி வைத்திருக்கிறார் அல்லது ரகசியமாகக் கடத்திச் செல்கிறார் என்று ஆராயாமல் வந்தடைந்த முன்முடிவோடு இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகளை நாம் காண்கிறோம். ‘உனக்கு அவ்வளவு திமிரா? நீ எப்படி குதிரைமீது ஏறி வலம் வரலாம்? நீ எப்படி இரு சக்கர வாகனம் ஓட்டலாம்? நீ எப்படிச் சடலத்தை எங்கள் வீதி வழியாகக் கொண்டு வரலாம்?’ இக்கேள்விகள் தலித்துகளை நோக்கி எழுப்பப்பட்டுள்ளன. வாய் பொத்தி, கைகட்டி நிற்கவேண்டிய ஒரு சமூகம் நிமிர்ந்து நிற்க யத்தனித்த காரணத்துக்காக (எனில் குற்றங்களுக்காக என்று பொருள்) தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட சம்பவங்களை நாம் கடந்த வந்திருக்கிறோம். இக்குற்றங்களின் வேர் போலிப் பண்பாட்டுக் கருத்தாக்கங்களில், போலிப் பெருமிதங்களில் அடங்கியிருக்கிறது.
நாம் அனைவரும் கலப்பினத்தோர் எனும் உண்மையை வரலாற்றிடமிருந்து பெற்றிருந்தால் சாதிய பாகுபாடு குறையும். தூய்மைவாதம் தீங்கான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதற்கு இந்திய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் சாட்சி. மதம் என்பது ஓர் அடையாளம் மட்டுமே. ஒரே அடையாளமல்ல. அதைக் கொண்டு ஒரு மனிதனின் செயலைத் தீர்மானிக்கக்கூடாது என்னும் பாடத்தை வரலாற்றிடமிருந்து கற்றிருந்தால் மதவாதம் தணியும், வகுப்புவாத மோதல்கள் குறையும். மதவாதம் இதுவரை எத்தனை கோடி பேரைக் கொன்றொழித்திருக்கிறது என்று கேட்டால் வரலாறு புட்டு புட்டு வைக்கும்.
வரலாறு கற்றால் என்னாகும்? புதிய கண்கள் பெறலாம். நான், என் வீடு, என் குடும்பம், என் மரபு என்னும் வசதியான பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியில் வந்து உலகின் நீள, அகலங்களைக் காணலாம். பின்வரும் புதிய புரிதல்கள் நமக்கு உண்டாகலாம். பல வீடுகள், பல குடும்பங்கள் இருப்பதுபோல் பல பண்பாடுகள் உலகில் இருக்கின்றன. எனக்குப் புனிதமான ஒன்று இன்னொருவருக்கும் அவ்வாறே இருக்கவேண்டியதில்லை. என் நம்பிக்கையை இன்னொருவர்மீது புகுத்தவேண்டியதில்லை. நான் என் மரபை எப்படி உயர்வாகக் கருதிப் போற்றுகிறேனோ அவ்வாறே இன்னொருவரும் செய்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.
வேற்றுமைதான் உலகம், வேற்றுமைதான் இயக்கம் என்பதை நாம் ஏற்கும்போது உயர்வுக்கும் தாழ்வுக்கும் இடையிலான எல்லைக்கோடு மறையும். வேற்றுமையின் இயல்புகளை அறிவதற்கு ஒரு வழி, வரலாறு கற்பது.
(தொடரும்)

