கடல் வாணிபத்தில் ஆங்கிலேயரின் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் ஏகபோகத்தை உடைக்க வேண்டும், சுதேச இயக்கம் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியதுதான் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் (Swadeshi Steam Navigation Company ). வ.உ. சிதம்பரம் பிள்ளை தொடங்கிய இந்தக் கப்பல் நிறுவனம், இந்தியர்களின் முதல் கப்பல் நிறுவனம் அல்ல. அதற்கு முன்பும் இந்தியர்கள் பலர் பிரிட்டிஷ் கப்பல் நிறுவனங்களுக்குப் போட்டியாகக் கப்பல் சேவைகளைத் தொடங்க முயன்றுள்ளனர். ஆனால் பெரும்பாலான முயற்சிகள் கடும் போட்டி மற்றும் நிதிச் சிக்கல்களால் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
இந்தியாவில் 1850களிலேயே பார்சி வர்த்தகர்களின் முதலீட்டில் பாம்பே ஸ்டீம் நேவிகெஷன் கம்பெனி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் 1890களில் டாடா நிறுவனமும் கப்பல் போக்குவரத்துத் துறையில் குதித்தது. ஆனால் பிரிட்டிஷ் நிறுவனமான P&O உருவாக்கிய கடும் போட்டியால் அந்த முயற்சிகள் ஒரே ஆண்டுக்குள் முடங்கின.
வங்கத்திலும் சுதேசக் கப்பல் முயற்சிகள் தோன்றின என்று வரலாற்றாசிரியர் சுமித் சர்கார் பட்டியலிடுவதாக ஆய்வாளர் ஆ. இரா.வேங்கடாசலபதி அவரது நூலில் கூறுகிறார். குறிப்பாக கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சகோதரர் ஜோதிந்திரநாத் தாகூர், 1884ஆம் ஆண்டு 5 கப்பல்களுடன் இன்லேண்ட் ரிவெர் ஸ்டீம் நேவிகேஷன் எனும் பெயரில் கப்பல் சேவையைத் தொடங்கினார். அக்கப்பல்கள் குல்னாவிலிருந்து பாரிசலுக்குப் பயணிகளையும், கல்கத்தா வரை சரக்குகளையும் கொண்டுசெல்ல வழிவகுத்தது. நாளடைவில் அவருடைய நிறுவனத்துக்கும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஃப்ளோட்டியல்லா நிறுவனத்திற்கும் கடுமையான போட்டி நிலவியது.
ஃப்ளோட்டியல்லா பயணிகளைக் கவர்வதற்காக இலவசப் பயணம், இலவச உணவு என இலவசங்களை வாரி வழங்கியது. பெரும் நெருக்கடியில்தான் இன்லேண்ட் ரிவெர் நிறுவனம் இந்தியக் கப்பல் வணிகத்தை மேற்கொண்டு வந்தது. ஹௌரா பாலத்தில் நடந்த ஒரு விபத்து அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. இறுதியில் அந்நிறுவனத்தைப் போட்டி நிறுவனமான ஃப்ளோட்டியல்லாவே விலைக்கு வாங்கியது. இப்படியாக 1905 முதல் 1930 வரையில் கிட்டத்தட்ட ரூ.10 கோடி முதலீட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட இந்தியக் கப்பல்களின் முயற்சி தோல்விக்கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களின் இதுபோன்ற வணிக முயற்சிகளுக்கான காரணம், இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல் வாணிபத்தை முன்னெடுத்துச் சென்று பிரிட்டிஷாரின் ஆதிக்க மனப்பாங்கை ஒடுக்க வேண்டும் என்கிற எண்ணம்தான். அதுமட்டுமல்லாமல், கடல் வாணிபம் முறையாகச் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்கிற வணிக எண்ணமும் அவர்களிடையே இருக்கத்தான் செய்தது. இப்படியான முந்தைய முயற்சிகளையும் அவற்றின் தோல்விகளையும் சிதம்பரனார் நன்கு அறிந்திருந்தார். ஆனால் அவரைத் தனித்துவப்படுத்தியது அவரது வியாபார நோக்கமற்ற சுதேசிய அரசியல் நிலைப்பாடே.
1906 ஆகஸ்ட் மாதத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனம் வெளியிட்ட முதலாவது விவர அறிக்கையின்படி, நிறுவனம் ரூ.5 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ரூ.25 மதிப்புள்ள 20,000 பங்குகள் வெளியிடப்பட்டன. இந்தியா, இலங்கை, பர்மா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஆசியர்களுக்கே பங்குகளை வாங்க அனுமதி வழங்கப்பட்டது. ‘ஐரோப்பியர்கள் பங்குதாரர்களாக இருக்கக்கூடாது’ என்ற நிபந்தனை ஆளுநர் லாலி மற்றும் பிற ஐரோப்பிய அதிகாரிகளுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
‘இந்தியாவின் பொருளாதாரச் சுதந்திரம் நிலைபெற வேண்டுமெனில், கடல் வாணிபத்தின் கட்டுப்பாடு இந்தியர்களின் கைகளில் இருக்க வேண்டும்’ என்று வ.உ.சி வலியுறுத்தினார். தூத்துக்குடி கொழும்பு கடல் வழிப் போக்குவரத்து அந்நாள்களில் முழுமையாக வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. தென்னிந்திய மக்களின் உழைப்பும் பணமும் வெளிநாடுகளுக்குச் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தன என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர்ந்திருந்தார் வ.உ.சி.
இதனால் தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவையை வெறும் வணிக முயற்சியாக அல்லாமல் இந்தியர்களின் பொருளாதார விடுதலைக்கான முதற்படியாக மாற்றிக்கொண்டிருந்தார். தன்னம்பிக்கையும் துணிச்சலும் நிரம்பிய வ.உ.சி, ‘நாம் தூத்துக்குடி கொழும்பு வழித்தடத்தில் மட்டும் அல்ல, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் முக்கியத் துறைமுகங்களுக்கும் கப்பல் சேவையை நடத்தும் திறன் கொண்டவர்கள்’ என்று தைரியமாக அறிவித்தார். அவரின் உலகளாவியப் பார்வை மற்றவர்களுக்குப் புரியும்படி தனது திட்டமிடலைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். அதில் கப்பல்களின் விலை, வருமானம், செலவுகள், எதிர்கால லாபம் என அனைத்தும் துல்லியமாகக் கணக்கிடப்பட்டிருந்தன.
உதாரணமாக 1250 முதல் 1500 நிகர டன் கொள்ளளவுகொண்ட 2 பெரிய நீராவிக் கப்பல்களை வாங்க ரூ.5 லட்சம் செலவாகுமென மதிப்பிடப்பட்டது. மேலும், ஒரு சிறிய நீராவிப் படகிற்காக ரூ.50,000 ஒதுக்கப்பட்டதுடன், கூடுதலாக ரூ.1 லட்சம் அவசர முதலீட்டுத் தொகையாகக் கணிக்கப்பட்டது. கப்பல்களை வாங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை இயக்குவதற்கான செலவுகளும் மிகப் பெரியவை. கப்பற்படை ஊழியர்களின் சம்பளம், நிலக்கரி, துறைமுகக் கட்டணங்கள், சரக்கு ஏற்ற இறக்கச் செலவுகள், விளம்பரச் செலவுகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் ஆகிய அனைத்தையும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.4.85 லட்சம் வரை செலவாகும் என வ.உ.சி கணித்திருந்தார்.
பயணிகள் முதல் சரக்குப் போக்குவரத்து வரை கிடைக்கும் வருமானம் பற்றி விரிவாகக் கணக்கீடு செய்து குறிப்பெடுத்து வைத்திருந்தார். ஆண்டுதோறும் 2.88 லட்சம் 3ஆம் வகுப்பு பயணிகள் பயணம் செய்வார்கள் என அவர் எதிர்பார்த்தார். அதற்கு டிக்கெட் கட்டணம் 2.50 காசு என நிர்ணயிக்கப்பட்டது. 2ஆம் வகுப்பில் 7,200 பயணிகள் (ஒரு டிக்கெட் ரூ.7.50 காசு) மற்றும் முதல் வகுப்பில் 3,600 பயணிகள் (ஒரு டிக்கெட் ரூ.15) பயணம் செய்வார்கள் எனக் கணிக்கப்பட்டது
பயணிகள் மட்டுமல்லாது, கால்நடை மற்றும் சரக்குப் போக்குவரத்தும் முக்கிய வருமானமாகக் கருதப்பட்டது. ஆண்டுதோறும் தூத்துக்குடியிலிருந்து ஏற்றுமதியாகும் பருத்தித் துணிகளும், கால்நடைகளும், தானிய மூட்டைகளும் கணக்கில் எடுத்துக்கொண்டு மதிப்பிட்டிருந்தார். மேற்கண்ட அனைத்து வருமான மற்றும் செலவுக் கணக்குகளின் அடிப்படையில், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்று வ.உ.சி நம்பிக்கை தெரிவித்தார். அவரின் இத்தகைய புள்ளிவிவரங்கள் நிறுவனத்தின் குழுவில் இருந்தோருக்குப் பெரும் வியப்பையும் நம்பிக்கையையும் அளிக்கத் தவறவில்லை.
மேலும் சுதேசக் கனவை உள்நாட்டுக் கப்பல்வழி வாணிபத்தோடு விட்டுவிடாமல் வெளிநாட்டுக் கப்பல்வழி வாணிபத்திற்கும் கொண்டுசெல்லும் பொருட்டு ரூ.5 லட்சம் என்ற மூலதனத்துடன் திட்டமிடப்பட்ட சுதேசிக் கப்பல் நிறுவனம், பின்னர் ரூ.10 லட்சம் மூலதனத்துடன் உருவாக்கப்படும் என அறிவித்தார். இந்தியர்களால் இந்தியர்களுக்காக நடத்தும் கப்பல் நிறுவனம் என்ற எண்ணத்தோடு, தேசபக்திகொண்ட அனைவரும் இதில் பங்கெடுக்க வேண்டும் என வ.உ.சி அழைப்பு விடுத்தார்.
கப்பல் வணிகத்தினால் கிடைக்கும் லாபத்தை இந்தியர்களுக்கே பயனளிக்க வேண்டுமென எண்ணினார். எனவேதான் சுதேசிக் கப்பல் நிறுவனத்தினைப் பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்படும் முதலீடுகளைக்கொண்டு இயங்கும் கூட்டுப்பங்கு நிறுவனமாக நிறுவினார். வெறுமனே பணக்காரர்களின் பணப்பங்களிப்பு மட்டுமில்லாமல் எளிய மக்களும், தலா ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகளை வாங்கி இந்தத் தேசிய முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
1906 அக்டோபர் 16ஆம் தேதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தில் தூத்துக்குடி வியாபாரிகள், முஸ்லிம் மரைக்காயர்கள், செட்டியார்கள் உள்ளிட்ட பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இயக்குநர்களாக இணைந்தனர். பாண்டித்துரை தேவர் நிறுவனத்தின் தலைவராகவும், வ.உ.சி உதவிச் செயலாளராகவும் பொறுப்பேற்றனர். அதிகாரப்பூர்வமாக ‘உதவிச் செயலாளர்’ என்ற பதவி இருந்தாலும், நிறுவனத்தின் முழு நிர்வாகமும் வ.உ.சியின் கைகளில் இருந்தது.
நிறுவனத்தின் அலுவலகப் பலகைகள், கடிதத் தலைப்புகள், விளம்பரத் தாள்கள் அனைத்திலும் ‘வந்தே மாதரம்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. விளம்பரப் பிரசுரங்களில்கூட’ தேசாபிமான அச்சகம் (கடலூர்)’ , ‘சுவதேச பாஸ்கரன் அச்சகம் ( தூத்துக்குடி)’ எனும் சுதேச உணர்வை வெளிப்படையாகத் தெரிவிக்கும் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதேசி இயக்கம் தனிப்பொருளாதார வடிவமாக மாறத் தொடங்கியிருந்தது.
(தொடரும்)

