Skip to content
Home » அரிய கல்வெட்டுகள் #6 – வாதாபி ஜித்

அரிய கல்வெட்டுகள் #6 – வாதாபி ஜித்

‘மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
தொன் நகரம் துகள் ஆகத் துளைகெடும் கை வரை உகைத்துப்
பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்
இன்னை எண் இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்’

சோழவளநாட்டின் நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் பிறந்தவர் சிறுத்தொண்டர். இவரது இயற்பெயர் பரஞ்சோதியார். இவருடைய காலத்தில் மாமாத்திரர் என்னும் குலம் உயர்ந்து விளங்கியது. அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அரசர் குலத்துக்குப் படைத் தளபதியாகவும் அமைச்சராகவும் சேவைபுரிந்து வந்தார்கள்.

பொ.யு. 630 வாக்கில் பல்லவ நாட்டில் நரசிம்மவர்மர் ஆட்சிக்கு வந்ததும் சாளுக்கியர்கள் காஞ்சிக்குப் படையெடுத்தனர். பல்லவர்கள் எல்லைக்குட்பட்ட மணிமங்கலத்தில் நடைபெற்ற இப்போரில், பல்லவர்களே வெற்றி பெறுகிறார்கள். சாளுக்கிய படை தோற்று ஓடியது. பொ.யு. 642 வாக்கில் பல்லவப் படை சாளுக்கியத் தலைநகர் வாதாபியை முற்றுகையிட்டது. இந்தப் போரில் வாதாபி வீழ்ந்தது. பல்லவர்கள் வாதாபியில் நிகழ்த்திய அழிவால், அதன்பின் அந்நகரம் பல காலத்துக்குச் சாளுக்கியர்களின் தலைநகராக இருக்கவில்லை. பரஞ்சோதியார்தான் பல்லவ படைக்குத் தலைமையேற்றுச் சென்று வாதாபியை சூரையாடினார். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடல் சிறுத்தொண்ட நாயனார் புராணத்தில் வருகிறது. ‘வடபுலத்து வாதாபி நகரைத் துகள் ஆக்கியவர்’ என அது சிறுத்தொண்ட நாயனாரை குறிப்பிடுகிறது.

இப்போரின் விளைவால் நரசிம்மவர்மருக்கு ‘வாதாபி கொண்ட நரசிங்க போத்தரையன்’ எனும் சிறப்புப் பெயர் தோன்றியது. இப்பெயரைப் பல்லவ அரசருடன் இணைந்து மற்றொரு அரசரும் தன் பெயருடன் முன்னொட்டாக ‘வாதாபி ஜித்’ எனப் பெருமையாகக் கூறிக்கொள்கிறார்.

எதற்காகப் பல்லவர்-சாளுக்கியர் போர் நிகழ்ந்தது? எதனால் நரசிம்மவர்ம பல்லவர் காஞ்சியிலிருந்து வாதாபிக்கு படையை அனுப்பிவைத்து சாளுக்கிய பேரரசர் புலகேசியை கொன்று, அந்நகரை அழித்தார்? இந்திய அளவில் அன்று வலிமையான பேரரசராகத் திகழ்ந்த ஆளுமைமிக்க புலகேசியை கொன்று பல்லவ அரசருடன் ‘வாதாபி ஜித்’ பட்டத்தைப் பகிர்ந்துகொண்ட அரசர் யார்? இக்கேள்விகளுக்கான பதிலை ஒவ்வொன்றாகக் காண்போம்.

சாளுக்கிய மன்னர்களில் புகழ்பெற்றவர் இரண்டாம் புலகேசி (தவறுதலாக இவரை நாம் புலிகேசி என அழைக்கிறோம்). இவர் கடம்பர், மௌரியர், கூர்ச்சாரர், அலூபர், கங்கர், ராஷ்டிரகூடர், லாடர், காலாசூரியர், விஷ்ணுகுண்டினர், மாளுவர் உள்ளிட்ட பல இந்திய ராஜ்யங்களைக் கைப்பற்றியவர். வடதேசத்தில் புகழ்பெற்ற அரசராக விளங்கிய ஹர்ஷவர்த்தனரை நர்மதை நதிக்கரை நடைபெற்ற போரில் இரண்டாம் புலகேசி தோற்கடித்தார். வரலாற்றாய்வாளர்கள் இவரைச் சாளுக்கியர் குல திலகம் என்கின்றனர்.

வடவரசர்களை வென்ற புலகேசியின் பார்வை தமிழகம் நோக்கித் திரும்பியது. அச்சமயம் தமிழகத்தின் வடபகுதியை மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சிசெய்து வந்தார். இவரது ஆட்சி தெற்கே திருச்சிராப்பள்ளி வரையில் பரவியிருந்தது. தங்களது உறவினர்களான விஷ்ணுகுண்டினர்களை சாளுக்கியர்கள் தோற்கடித்து அவர்களது ராஜ்யத்தைக் கைப்பற்றிய செயலைப் பல்லவர்கள் எதிர்த்தார்கள்.

இதனால் தனது ஆறு வகைப் படையுடன் புலகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுத்தார். பெரும்படையுடன் வந்த புலகேசியை எதிர்கொள்ள முடியாமல், தன்னுடைய கோட்டைக்குள்ளேயே முகாமிட்டிருக்க வேண்டிய நிலைக்கு மகேந்திரவர்மர் தள்ளப்பட்டார். பல்லவர்களின் ஆளுகைக்குட்பட்ட ஆந்திரத்தின் குண்டூர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் சாளுக்கியர் வசம் சென்றது. சாளுக்கியப் படை காஞ்சியின் மதில்களைப் பலமாகத் தாக்கியது. மேலும் அச்சமயம் பல்லவர்களின் ஆளுமையின்கீழ் இருந்த சோழதேசம் வரையிலும் சாளுக்கியப் படை ஊடுருவியது. இத்தகவல்களைப் புலகேசியின் ‘மருடூரு சாசனம்’ தெரிவிக்கிறது.

தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை இழந்திருந்தாலும், தலைநகரைக் காப்பாற்றிக்கொண்டார் மகேந்திரவர்மர். இந்தப் படையெடுப்பின் தொடர்ச்சியாகக் குஜராத், மஹாராஷ்டிரம் மற்றும் தக்காணப் பகுதிகளில் அசைக்க முடியாத பேரரசராகப் புலகேசி உருவெடுத்தார். தனது தந்தை மகேந்திரவர்மர் அடைந்த அவமானத்தைக் கண்ட நரசிம்மவர்ம பல்லவர், தக்க சமயத்துக்காகக் காத்திருந்தார். நரசிம்மவர்மர் ஆட்சிக்கு வந்தபிறகு புலகேசி பலமுறை பல்லவ தேசம் நோக்கிப் படையெடுத்தது தெரிய வருகிறது.

திரும்பத் திரும்ப நடைபெற்ற சோழ, சேர, களப்பிர, பாண்டிய படையெடுப்புகளை நரசிம்மவர்மர் முறியடித்தார் என்றும், பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் புலகேசியை புறமுதுகிட்டு ஓடச்செய்து ஒவ்வொரு முறையும் அவருடைய முதுகான பட்டயத்தில் வெற்றியைக் குறிக்கும் எழுத்துகளை எழுதினார் என்றும், வாதாபியை அழித்தார் என்றும் ‘கூரம் செப்பேடு சாசனம்’ விவரித்துக் கூறுகிறது.

மணிமங்கலம் என்பது தற்சமயம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் உள்ளது. பரியளம் என்பது ஆந்திரத்தின் கர்நூல் தாலுக்காவில் உள்சளத்துக்கு அருகிலுள்ள பரியளு என்னும் ஊராக எடுத்துக்கொள்ளலாம். சூரமாரம் என்பது ஆந்திரத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த இரு ஊர்களுமே வாதாபியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் இரண்டு ராஜபாட்டைகளில் அமைந்திருந்தன. குறிப்பாக, பரியளம் என்பது கிழக்குப் பக்கமாக வரும் நெடுஞ்சாலையிலும் சூரமாரம் என்பது மேற்குப் பக்கமாக வருவதிலும் இருந்தன. வாதாபியை நரசிம்மவர்மர் கைப்பற்றியதை, அவர் ‘வாதாபிகொண்டவன்’ என தரித்துக்கொண்ட விருதிலிருந்தே விளங்கும். அவருடைய ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று வாதாபியில் கிடைத்திருப்பதும் இத்தகவலை நிரூபிக்கிறது.

வாதாபி ஜித் என்பது யார்?

வாதாபி போரில் இறந்த புலகேசியின் மகன் விக்ரமாதித்யனின் கர்நூல் செப்பேட்டில், மூன்று அரசர்கள் இணைந்து புலகேசியை வென்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் நரசிம்மவர்மர் என்பது தெளிவாகும் நிலையில் மற்ற இருவர் யார் என்கிற கேள்வி இயல்பாகவே எழும். சேர, சோழ, பாண்டியர்களே இம்மூவர் என கர்நாடக வரலாற்று ஆசிரியர்கள் கருதி வந்தார்கள். ஆனால் இக்கூற்று பிழையாகும். இலங்கை வேந்தன் மானவம்மா என்பவர், தாயாதி சண்டையில் நாட்டை இழந்து நரசிம்மவர்மரிடம் தஞ்சம் புகுந்திருந்தார். நரசிம்மர் வாதாபியை வென்றவுடன், தனது பெருஞ்சேனையை இலங்கைக்கு அனுப்பி வானவம்மாவை மீண்டும் அரசராக்கினார். இந்த இலங்கை வேந்தன் வாதாபி போருக்குச் சென்றதாக இலங்கையின் ‘குல வம்சம்’ கூறுகிறது. அப்படியென்றால் மற்றொரு அரசர் யார் எனத் தேடுகையில் அதற்கான விடை இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் கிடைத்தது.

இருக்குவேளிர் சாசனம்

கொடும்பாளூர் வேளிர் மரபினைக் கூறும் சாசனம் ஒன்று கொடும்பாளூர் மூவர் கோவிலில் உள்ளது. இது வடமொழிக் கல்வெட்டாகும். கிரந்த (சமஸ்கிருத) எழுத்தில் வெட்டப்பட்டுள்ள இதன் தொடக்கமும் இறுதியும் சிதைந்துவிட்டது. இதைப் ‘பூதி விக்கிரமகேசரி’ என்கிற அரசர் வெட்டியுள்ளார். கொடும்பாளூரில் மூன்று கோவில்கள் இருந்ததையும் இவ்வூரில் காளாமுக நெறியைப் பின்பற்றியவர்கள் இருந்ததையும் இக்கல்வெட்டு விரிவாகக் கூறுகிறது.

இச்சாசனத்தை 1907-1908இல் படி எடுத்து முதன்முதலாக வெங்கய்யா என்பவர் ஆராய்ச்சி செய்தார். பின்னர் நீலகண்ட சாஸ்திரி இதை மொழி பெயர்த்தார். மயிலை. சீனி வேங்கடசாமி இதைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பு பின்வருமாறு.

1) நாதகஜயூதஹர: புராஸித்

யானைகளின் நிரைகளைக் கவர்ந்தவன் முன்பிருந்தான்.

2) தத்வம்ச்ய: பரவீரஜின் – மளவஜித் ஸ்ரீவீரதுங்கோமுதோ ஜா(த)ஸ்மாத் அதிவீர இத்யநுபமஸ் தஸ்மாதபூத் ஸங்கக்ருத் அஸ்மாத் ஸ்ரீ ந்ருபகேஸரீ விவத்ருதே யோ பால ஏவோரகை: தத்ஸீனு: பரதுர்க்கமர்த்தன இதி க்யாதஸ் ஸ வாதாபிஜித்.

மழவர்களை வென்ற பரவீரஜித் அந்த வம்சத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு அனுபமான (இணையற்ற) அதிவீரன் பிறந்தான். அவனுக்கு ஸங்கக்ருத் பிறந்தான். வாதாபியை வென்ற பரதுர்க்க மர்த்தனன் என்று புகழ்வாய்த்தவன் மகனானான்.

3) தஸ்ய ஸமராபிராம புத்ர ஸித்ராமதேஜஸ. அதிராஜமங்கலாஜௌ யோ நிஜகான சளுக்கிம்

அவனுக்கு இந்திரனை ஒத்த வலிமைவாய்ந்த ஸமராபிராமன் மகன். அவன் அதிராஜமங்கலப்போரில் சளுக்கியரைக் கொன்றான்.

இக்கல்வெட்டின் வாயிலாக நிரூபகேசரி, பரதுர்க்கமர்த்தனன், மராபிராமன் எனும் மூன்று இருக்குவேளிர் அரசர்களை அடையாளம் காண முடிகிறது. கொடும்பாளூர் சிற்றரசன் நிரூபகேசரி தனது இளமை வயதில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று மூவர் கோயில் சாசனம் கூறுவதன் கருத்து என்னவென்றால், அவன் நாக பரம்பரையினரான பல்லவ அரசர்களோடு வளர்ந்தான். இந்த நிரூபகேசரி, சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசர் காலத்திலும் அவரது மகன் முதலாம் மகேந்திரவர்மர் காலத்திலும் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது.

நிருபகேசரியின் மகன் பரதுர்க்கமர்த்தனன் என்பவருக்கே ‘வாதாபி ஜித்’ என்கிற சிறப்புப் பெயர் இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. வாதாபி ஜித் என்றால், வாதாபி நகரத்தை வென்றவர் என்பது பொருள். ஸமராபிராமன் என்பவர் பரதுர்க்கமர்த்தனனின் மகன். இவர் யதுவம்சகேது என்றும் அறியப்படுகிறார். மேலும் இவர் அதிராசமங்கலத்தில் சாளுக்கியனை வென்றவர் என்றும் கூறப்படுகிறது.

கொடும்பாளூர் அரசர்களாகிய பரதுர்க்க மர்த்தனனும் அவன் மகன் ஸமராபிராமனும் மாமல்லனான நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள். அவருக்கு நண்பர்களாகவும் இருந்தார்கள். பல்லவ தேசத்தை நோக்கி படையெடுத்து வந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலகேசியைப் போரில் கொன்று, அதன்பிறகு அவருடைய தலைநகர் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்று அதைக் கைப்பற்றி, ‘வாதாபி கொண்ட நரசிம்மவர்மர்’ என அவர் பெயர்பெற்றதாகச் சரித்திரம் கூறுகிறது.

புலகேசியுடன் நரசிம்மவர்மர் போரில் ஈடுபட்டபோது, கொடும்பாளூர் அரசரான ஸமராபிராமனும் இணைந்து சாளுக்கியரான புலகேசியை வென்றார் போலும். ஆகவே, இவர் ‘சாளுக்கியனை வென்றவன்’ எனப் பெயர்பெற்றார். இவருடைய தந்தை பரதுர்க்கமர்த்தனன், நரசிம்மவர்மர் சார்பாக வாதாபி போரில் கலந்துகொண்டு வாதாபி நகரத்தை வென்று ‘வாதாபி ஜித்’ என்னும் பெயரைப் பெற்றார். இதனால், கொடும்பாளூர் அரசர்களாகிய இவர்கள், புலிகேசியை வெல்வதற்கு நரசிம்மவர்மருக்கு துணையாக இருந்தார்கள் என்பது தெரியவருகிறது.

ஆக, நரசிம்மவர்மர், மானவம்மா மற்றும் பரதுர்க்கமர்த்தன் எனும் வாதாபி ஜித் என இம்மூவரும் சேர்ந்து புலகேசியை வென்றவர்கள் என்பது உறுதியாகிறது. நரசிம்மவர்மரின் இந்த வெற்றி கர்நாடக மாநிலம் பதாமி (Badami) மலைத்தொடரில் இன்றைய இந்திய தொல்லியல்துறை அலுவலகத்துக்கு எதிரேயுள்ள பாறையில் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது. அதன் எதிரே இப்போரின் வெற்றிச்சின்னமாக நரசிம்மவர்மர் நிறுவிய வெற்றித்தூணும் உள்ளது. அந்தத் தூணின் அடிப்பகுதி மட்டுமே இன்று எஞ்சியுள்ளது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *