காதல் என்னவெல்லாம் செய்யும் என்று இலக்கியத்திலும் வரலாறுகளிலும் படித்திருப்போம். காதலுக்காக தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகானை வரலாறு நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. லைலாவின் பிரிவால் பைத்தியமான மஜ்னுவையும், காதலுக்காக உயிர் தியாகம் செய்த ரோமியோ ஜூலியட்டையும் நாம் இலக்கியத்தில் படித்திருக்கிறோம். ஆனால் காதலுக்காகத் தனி ஒரு மனிதன் மலையைப் பிளந்த கதை தெரியுமா? பாதையின்றிச் சிரமப்பட்ட கிராம மக்களுக்குப் பாதை உருவாக்கிய கதை தெரியுமா? இவரது கதையைக் கற்பனை செய்துபார்த்தால்கூட கொஞ்சம் மிகையாகத்தான் தோன்றும். ஆனால் அதை நேரில் சாதித்துக் காட்டி இந்திய மக்களால் ‘மலை மனிதன்’ என்று கௌரவிக்கப்பட்ட அந்த மனிதனின் பெயர் தஸ்ரத் மான்ஜி.
பீஹார் மாநிலம் கையா மாவட்டத்தில், சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட கிராமம் கெஹ்லோர். இது முசஹர் என்ற பட்டியல் இனமக்கள் பெருவாரியாக வாழும் பகுதி. அந்தக் கிராமத்தில் விவசாய விளைப்பொருட்கள், விறகுகள் போன்றவை கிடைத்தாலும், அதைச் சந்தைப்படுத்துவதற்கும், மருத்துவத் தேவை, இன்னபிற தேவைகளுக்கும் அருகில் உள்ள நகரமான வாசிர்கன்ஜ் என்ற பகுதிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் அந்தக் கிராமம் முழுவதும் மலைகளால் சூழ்ந்துள்ளதால் 15 கிலோமீட்டர் அருகில் உள்ள வாசிர்கன்ஜ் நகரத்திற்குச் செல்ல 55 கிலோ மீட்டர் சுற்றித்தான் செல்ல வேண்டும்.
இந்த மலைக்கிராமத்தில் ஜனவரி 14, 1934இல் அதே முசஹர் இனத்தில் பிறந்தவர்தான் தஸ்ரத் மான்ஜி. பெரிதாகப் படிப்பறிவு இல்லாதவர். இந்தியாவின் நிலக்கரி தலைநகர் என்று அழைக்கப்படும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பத் நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றி வந்தார். சில ஆண்டு காலம் அங்கு பணியாற்றியபின் சொந்த கிராமத்திற்கே திரும்பி அங்கு விவசாயம் செய்துவந்த அவர், பல்குனி தேவி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். தஸ்ரத் தன் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து அந்தப் பொருளை அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்துவந்தார். தனக்குக் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன் மனைவியோடு வாழ்ந்துவந்தார்.
1959ஆம் ஆண்டு ஒருநாள், மலையின் ஓரம் மரம் வெட்டிக்கொண்டிருந்த தஸ்ரத் மான்ஜி, அந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடிச்சென்றார். அங்கு அவரது மனைவி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். மலையின் மறுபுறம் மரம் வெட்டிக்கொண்டிருந்த தஸ்ரத்துக்குத் தண்ணீரும் உணவும் எடுத்துக்கொண்டு மலைச்சரிவுகளின் வழியே வந்த அவரது மனைவி பல்குனி தேவி, தவறி விழுந்து பலமான காயத்திற்கு உள்ளானார். பக்கத்து ஊரில் உள்ள மருத்துவமனைக்குப் போவதற்குச் சாலை வசதி இல்லாமல் மலையைச் சுற்றிச் சென்றதால் அவரது மனைவி போகும் வழியிலே உயிர் இழந்தார். சரியான சாலை வசதி இருந்திருந்தால் நிச்சயமாக அவரது மனைவியைக் காப்பாற்றியிருக்க முடியும். சாலை வசதி இல்லாத காரணத்தினாலே அவர் மிகவும் நேசித்த அவரது மனைவியை இழக்க நேரிட்டது.
ஒரு வருட காலம் வரை தனது மனைவியின் பிரிவால் வாடிய மான்ஜி, தனக்கு நேர்ந்த துயரம் இனி யாருக்கும் நேரக்கூடாது என்று முடிவு செய்து 1960ஆம் ஆண்டு இந்த மலைகளுக்கு இடையே ஒரு சாலை அமைக்க முடிவு செய்தார். ஆனால் அதற்காக அரசாங்கத்திடம் மனு கொடுத்துக் காத்திருக்கவில்லை. சாலை அமைத்துத் தரக்கோரி யாரிடமும் பண உதவியோ, பொருளுதவியோ கேட்கவில்லை. ஒரு சிறு உளியையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு மலையை உடைக்கத் தாமே புறப்பட்டார்.
ஓங்கி உயர்ந்து நின்ற மலையைத் தன்னிடமிருந்த சிறு உளியைக் கொண்டு உடைக்கத் தொடங்கினார். அந்த ஊர் மக்கள் அனைவரும், ‘மனைவி இழந்த சோகத்தால் மான்ஜி பைத்தியமாகி விட்டான்… அதனால்தான் இப்படி எல்லாம் செய்கிறான்’ என்றார்கள். அவரது உறவினர்களேகூட அவருடைய செயலைக் கேலி செய்தனர். ஆனால் அவர் யாருடைய ஏளனத்தையும் பொருட்படுத்தாமல், தன் நோக்கம் ஒன்றிலே குறியாக இருந்தார். அங்கு எந்திரங்கள் இல்லை. பொறியாளர்கள் இல்லை. மிகப் பெரிய கருவிகள் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் இருந்தது. அது தஸ்ரத் மான்ஜியின் மன உறுதி.
வெயில் மழை என்று பாராமல் தொடர்ந்து மலையைக் குடைய ஆரம்பித்தார். கதிரவன் உதயம் முதல் மறையும் வரை தொடர்ந்து பணியாற்றினார். இதற்கிடையில் சிறுசிறு கூலி வேலைகளைச் செய்து அதன் மூலம் வரும் பணத்தை மலையை உடைப்பதற்குத் தேவையான கருவிகளை வாங்குவதற்காகச் சேமித்தார். ஒருகட்டத்தில் அவரது சேமிப்பு போதாதபோது தனது ஆடுகளை விற்று தனக்குத் தேவையான கருவிகளை வாங்கினார். அவர் மேற்கொண்ட பணி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகக் கடினமாக இருந்தது. காரணம், தொடக்கத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தது. ஆனால் காலங்கள் செல்லச் செல்ல அவரது முயற்சிகள் ஒன்றுசேர்ந்து அந்த மலையை அசைத்தது.
ஒன்றல்ல இரண்டல்ல, தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் போராடி, தனது விடாமுயற்சியின் மூலம், 1982ஆம் ஆண்டு அந்த மிகப்பெரிய மலையை குடைந்து, 360 அடி நீளம், 30 அடி அகலம் 25 அடி ஆழம் கொண்ட ஒரு பாதையைத் தனி ஒரு மனிதனாக உருவாக்கினார். இந்தப் பாதையின் மூலம் அருகில் உள்ள வாசிர்கன்ஜ் நகரத்திற்கு வெறும் 15 கிலோமீட்டர் பயணத்தில் செல்ல முடியும். அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்லவும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், வாழ்வாதாரத்திற்காகச் சந்தைக்குச் செல்லவும் அந்தப் பாதை பயன்படுகிறது. யாரெல்லாம் தொடக்கத்தில் அவரைக் கேலி செய்தார்களோ அவர்களுக்கும் அந்தப் பாதை பயணம் செய்ய அனுமதிக்கிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் துயரம், ஒரு சமூகத்தின் வாழ்வையே மாற்றியமைத்து.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவரது சாதனை அந்தப் பகுதியைத் தாண்டி வெளியில் தெரியாமல் இருந்தது. காலப்போக்கில் அவரது புகழ் காற்றில் பரவி பத்திரிகையாளர்களையும் அதிகாரிகளையும் அந்தப் பகுதிக்கு ஈர்த்தது. மக்கள் அவரது சாதனையை உணர்ந்து அவரை ‘மலை மனிதர்’ என்று அழைக்கத் தொடங்கினர்.
இன்று அவரது பெயரிலேயே அந்தச் சாலை ‘தஸ்ரத் மான்ஜி சாலை’ என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. நிதிஷ்குமார் அவர்கள் பீகாரின் முதலமைச்சராக இருந்தபொழுது மான்ஜியின் சாதனையையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அவரை தனது முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்துக் கௌரவித்தார். மேலும் பீகார் மாநிலத்தின் கையா மாவட்டத்தில் உள்ள கர்ஜனி என்னும் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தையும் அன்பளிப்பாக வழங்கினார். ஆனால் அவர் அந்த நிலத்தை மருத்துவமனை கட்டுவதற்காக அரசாங்கத்திடமே மீண்டும் நன்கொடையாகக் கொடுத்துவிட்டார். பீகார் அரசாங்கம் அந்த இடத்தில் ஒரு மருத்துவமனையைக் கட்டி அதற்கு ‘தஸ்ரத் மான்ஜி மருத்துவமனை’ எனப் பெயரிட்டது.
பாதையை உருவாக்கியதன் மூலம் பல பேர் வாழ்க்கைக்குப் பாதையை உருவாக்கிய தஸ்ரத் மான்ஜி, பித்தப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். பீகார் மாநில அரசாங்கம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது. 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி தனது 73வது வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் செய்து அரசாங்கம் அவரைக் கௌரவித்தது. அவர் வாழ்ந்த ஊரிலே அவருக்கான நினைவிடமும் எழுப்பப்பட்டது. அவரது மறைவுக்குப் பின் 2016ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அவரது பெயரில் தபால் தலை வெளியிட்டது. இவரது வாழ்க்கையை மையப்படுத்தி 2015ஆம் ஆண்டு ‘மான்ஜி: தி மௌண்டைன் மேன்’ எனும் திரைப்படம் வெளியானது.
மலை போன்ற துன்பத்தையும் நம்பிக்கை என்னும் உளியால் உடைக்க முடியும். ஒருவர் மலையையே உளியால் உடைத்தார் என்றால் அவரது நம்பிக்கை எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு நல்ல செயலைத் தொடங்கத் தயங்கும்போது தஸ்ரத் மான்ஜியின் வார்த்தைகளை நினைவில்கொள்ளுங்கள்: ‘கடவுள் செய்வார் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டு இருக்காதீர்கள். யார் கண்டது மனிதன் செய்வான் என்ற நம்பிக்கையில் கடவுள் காத்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ’.
(தொடரும்)

