Skip to content
Home » வாசிக்கும் கலை #2 – வளப்படுத்த வேண்டிய வாசிப்பு வளையம்!

வாசிக்கும் கலை #2 – வளப்படுத்த வேண்டிய வாசிப்பு வளையம்!

ஆர்வமில்லாமல் ஒரு விஷயத்தில் ஈடுபடுவதில் எவ்விதப் பயனும் இல்லை என்பது நாம் அறிந்ததே. இது வாசிப்பிற்கும் மிகச் சரியாகப் பொருந்தும். ஒரு புத்தகத்தின் மீது ஆர்வம் இல்லாமல் அதனை யாரும் வாங்கிப் படிக்க விரும்புவதில்லை. சிலர் படிக்கும் புத்தகத்தோடே பயணிப்பர். சிலர் புத்தகத்தைக் கையில் எடுத்தவுடனேயே தூங்கி வழிவர். ஆக வாசிப்பு என்பது ஒரு கலை. சிலர் இந்தப் புத்தகம்தான் வேண்டும் என்று விடாப்பிடியாக அதனை வாங்கி படிப்பார்கள். சிலரோ எந்தப் புத்தகம் கைக்கு கிடைத்தாலும் அதிலுள்ள விஷயங்களைக் கற்றுக்கொள்வர். புத்தகங்களைத் தேர்வு செய்வதில் உள்ள கவனமான செயல்பாடானது அந்தப் புத்தகத்தை ஆர்வமுடன் வாசிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது கொஞ்சம் சவாலான பணியே. நம்மையும் நமது விருப்பங்களையும் பற்றி ஓரளவிற்கு அறிந்த நமது ஆசிரியர்களிடமோ அல்லது புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களிடமோ கேட்டு நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்யலாம். புலிட்சர் விருது, சாகித்ய அகாதெமி, பால புரஸ்கார் விருது, புக்கர் விருது மற்றும் பல தேசிய புத்தக விருதுகளில் தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களையும் உங்களது வாசிப்பு வளையத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கலாம்.

முழுவதுமாக மற்றவர்களின் பரிந்துரையின்படி புத்தகங்களை வாங்குவதில் கொஞ்சம் ரிஸ்க் இருக்கிறது. இவ்வாறான தருணங்களில் நமது தனிப்பட்ட ரசனை மறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆரம்பகால வாசிப்பு காலங்களில் நாம் மற்றவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை வாங்கத் தொடங்கினாலும், தொடர்ச்சியான நல்ல வாசிப்புப் பழக்கத்தின் வாயிலாக, போகப்போக நாமே நமது ரசனையின் அடிப்படையில் நல்ல புத்தகங்களை தேடத் தொடங்கிவிடுவோம் என்பதே உண்மை. நமக்குக் கிடைக்கும் இந்த முதிர்ச்சியான சூழலில், நல்ல புத்தகங்களை நமது வாசிப்பு வளையத்திற்குள் கொண்டுவருவதோடு, மற்றவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களையும் ஓரளவிற்கு மதிப்பீடு செய்யமுடியும்.

ஒரு புத்தகக் கடைக்கோ புத்தகத் திருவிழாவிற்கோ செல்லும்போது, நானும் இரண்டு புத்தகங்களை வாங்குகிறேன் என்று கண்களை மூடிக்கொண்டு எதையாவது வீட்டிற்கு வாங்கிக்கொண்டு வந்துவிடாதீர்கள். அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம், முதல் இரண்டு பக்கங்கள் அல்லது நடுவில் ஏதேனும் ஒரு சில பகுதிகள் என வாசியுங்கள். அப்போது இதனை வாங்கலாம் அல்லது இந்தப் புத்தகம் வேண்டாம் என உங்கள் மனது உங்களுக்குச் சொல்லும். அதற்கேற்ப உங்களது முடிவுகளை மேற்கொள்ளலாம். மாறாக வெறுமனே குறிப்பிட்ட ஒரு புத்தகத்தைப் பெருமைக்காகப் படிப்பதில் ஒரு பலனும் இல்லை. இதில் காலவிரயம் மட்டுமின்றி, தேவையற்ற பண விரயமும் வந்துசேரும்.

வாசிப்பு செயல்பாட்டின் முதல் அடியை எடுத்துவைக்கும் ஒருவர், புகழ்பெற்ற நபர் ஒருவர் பரிந்துரைத்தார் என்பதற்காகத் தனக்கு துளியும் சம்பந்தமும் விருப்பமும் இல்லாத புத்தகத்தை வாசிப்பது சரியானது அல்ல. இது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதாகிவிடும். அந்த நபர் பரிந்துரைத்த புத்தகம் மிகவும் பிரபலமானதாகவும் விற்பனையில் பெரும் சாதனை புரிந்த புத்தகமாகக்கூட இருக்கலாம். அது உங்களுக்கு எந்த விதத்தில் உபயோகமானதாக அல்லது விருப்பமானதாக இருக்கும் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

புதிதாக வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்ளும் ஒருவர், புத்தகத் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள், ஆசிரியரின் எளிமையான எழுத்து நடை, தெரிந்துகொள்ள வேண்டிய புதிய விஷயங்கள், சிறிது கதை அல்லது நிகழ்கால அனுபவங்கள் போன்றவையே. இவற்றை பூர்த்தி செய்யும் புத்தகங்களையே ஆரம்பகால வாசிப்பிற்கு பயன்படுத்தவேண்டும். இதன் வாயிலாக வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து பின்னாளில் கடினமான புத்தகங்களையும் வாசிக்கத் தேவையான ஆர்வத்தை ஏற்படுத்தும். மாறாக வெறுமனே அழகான அட்டைப் படத்தையும் தள்ளுபடி விலையையும் பார்த்து ஏமார்ந்துவிடாதீர்கள்.

உங்களுக்கு உண்மைச் சம்பவங்கள், சுயசரிதை, புகழ்பெற்ற நபர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவை விருப்பமா? அல்லது சிறுகதைகள், நாவல்கள் போன்ற கற்பனையான கதைகளின்மீது அதிக விருப்பமா? அல்லது நகைச்சுவையான கட்டுரைகளின்மீது விருப்பமா? அல்லது அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்புலங்களை அறிந்துக்கொள்வதில் ஆர்வமா? அல்லது கவிதைப் புத்தகங்களின் மீது விருப்பமா? அல்லது அரசியல் தொடர்பான படைப்புகளா? அல்லது புராண இதிகாசங்களை விரும்புகிறீர்களா? என்பதை அடிப்படையாகக்கொண்டு அதற்கேற்ப புத்தகங்களை தேர்வு செய்யலாம்.

இப்போது புத்தக அறிமுகங்கள் மற்றும் விமர்சனங்கள் ஆகியன தினசரிகள், பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் என அனைத்து வடிவங்களிலும் படிக்கக் கிடைக்கிறது. இதனை வாசித்தும் நமக்கான நல்ல புத்தகங்களைத் தேர்வுசெய்து வாங்கலாம். ஆன்லைன் புத்தக விற்பனை இணையத்தளங்களில், குறிப்பிட்ட புத்தகத்தைப்பற்றி அதனை வாசித்தவர்களின் கருத்துகளை உங்களால் அதிகளவில் பெறமுடியும். புத்தகங்களின் பின்பக்கம் காணப்படும் புத்தகத்தின் சுருக்கம் அல்லது சிறிய அறிமுகத்தைக் கொண்டு பெரும்பாலும் நல்ல புத்தகங்களை அடையாளம் காணலாம்.

நீங்கள் ஏற்கெனவே படித்து முடித்த புத்தகங்களில் உங்களுக்கு விருப்பமான நூலாசிரியர்களின் மற்ற புத்தகங்களையும் உங்களது புதிய புத்தகத் தேர்விற்குப் பயன்படுத்தலாம். இன்றைய டிஜிட்டல் உலகில் குறிப்பிட்ட நூலாசிரியரின் மற்ற புத்தகங்களைக் கண்டறிவது மிகவும் எளிது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரே கிளிக்கில் மொத்த புத்தகப் பட்டியலையும் உங்களால் பெறமுடியும். அதுபோலவே உங்களுக்கு விருப்பமான துறை சார்ந்த புத்தகங்களையும் இணையத்தின் வாயிலாக எளிதில் பெறலாம். இன்னும் சில வெப்சைட்கள் துறை வாரியாக சிறந்த புத்தகங்களைத் தகுந்த மதிப்பீட்டுடன் காட்சிப்படுத்துகின்றன.

உங்களது நண்பர்கள், உங்களுடன் பணியாற்றும் உங்கள் சகப் பணியாளர்கள் மற்றும் உங்கள் பகுதியில் வசிக்கும் வாசிப்பில் ஆர்வம் உடையவர்கள் என அனைவரையும் சேர்த்து ஒரு வாசிப்புக் குழுவினை ஏற்படுத்திக்கொள்வது நல்ல நன்மைகளைப் பெற்றுத்தரும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைவரும் சேர்ந்து சந்தித்து, அவரவர் படித்த புத்தகங்களைப்பற்றி விவாதித்துக்கொள்ளலாம். மேலும், குழுவிலுள்ள நபர்கள் ஒருவருக்கொருவர் தங்களது புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வதும் நல்ல செயல்பாடாக அமையும்.

இளமைப் பருவத்திலேயே வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துவது அவர்களுக்கு நம்மால் கொடுக்கப்படும் மிகப்பெரிய சொத்து போன்றது. பாடப் புத்தகங்கள் மட்டுமே நமக்கான வாசிப்பு என்பதைக் குழந்தைகளின் மனதிலிருந்து அகற்றவேண்டியது பெற்றோர், ஆசிரியர்களின் கடமை. சிறுவர்களுக்கான புத்தகங்கள் இன்று அதிகளவில் வெளிவருகின்றன என்பதால், அவற்றில் நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது கொஞ்சம் சவாலான பணியே. நமது குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற சரியான புத்தகங்களை அவர்களுக்கு வழங்குவது நமது கடமை.

மிகவும் சிறிய குழந்தைகளுக்குப் படங்களுடன் ஓரிரு வார்த்தைகளுடன் கூடிய புத்தகங்களை வழங்குவது அவர்களின் வாசிப்பு ஆர்வத்தை அதிகப்படுத்தும். அடுத்தபடியாக எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல்களையும் குழந்தைப் பாடல்களையும் அவர்களது வாசிப்புப் பட்டியலில் இணைக்கலாம். குழந்தைகளுக்கு சாக்லேட் அல்லது அவர்களது விளையாட்டுப் பொருள்களின்மீது எவ்வளவு ஆர்வம் ஏற்படுகிறதோ, அதே அளவு ஆர்வத்தை புத்தகங்களின் மீதும் ஏற்படும் சூழலை உருவாக்க வேண்டும்.

புத்தகங்களின் உள்ளடக்கம் மட்டுமின்றி, புத்தக அமைப்பும் குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. அதாவது குழந்தைகள் எளிதாகப் பக்கங்களைத் திருப்புவதற்கு ஏதுவாக, வளைக்கப்பட்ட பக்க விளிம்புகள், தடிமனான அட்டைப் பக்கங்கள், விளையாட்டுப் பொருள் அல்லது வண்ணமயமான பழத்தின் வடிவத்தில் அமையப்பெற்ற புத்தகங்கள் போன்றவற்றைக் கவனத்தில்கொண்டு குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கலாம். இந்த வடிவமைப்புடன் கூடிய நல்ல புத்தகங்கள் இன்றைய சூழலில் நிறையவே கிடைக்கிறது என்பது உண்மையில் நல்ல விஷயம்.

பள்ளி செல்லும் சிறுவர்களுக்காக அவர்களின் கற்பனைத்திறனை மேம்படுத்தும் புத்தகங்களை வாங்கலாம். அவர்களது அன்றாட வாழ்வில் அவர்கள் மேற்கொள்ளும் வழக்கமான செயல்களான நண்பர்களுடன் விளையாடுவது, குடும்பத்தினருடன் சேர்ந்திருப்பது, தாத்தா பாட்டி வீட்டிற்குச் செல்வது, மாமாவுடன் கொஞ்சி மகிழ்வது மற்றும் பள்ளியில் நடைபெறும் உரையாடல்கள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் விஷயங்களை அதிகம் கொண்ட புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல பலனளிக்கும்.

குடும்ப உறவுகளின் நன்மைகள், சமூகப் பங்களிப்பின் அவசியம், பிறருக்கு உதவும் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ளுதல், நல்ல நட்புகளை அடையாளம் காணுதல் மற்றும் வாழ்க்கை வெற்றிக்கான ஊக்கம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட புத்தகங்களைத் தேர்வுசெய்வது உங்கள் குழந்தையின் வாசிப்புச் செயல்பாட்டினை அதிகரிப்பதோடு, அவர்களை நல்ல பண்பட்ட மனிதராக உருவாக்க வழிவகுக்கும்.

குழந்தைகளுக்கான புத்தகத் தேடுதலின்போது உங்களை அறியாமலேயே, நீங்கள் சிறுவயதில் படித்து ரசித்த புத்தகங்கள் உங்கள் பட்டியலில் வரலாம். இவற்றை உங்கள் குழந்தைகளுக்குப் பரிந்துரைப்பதில் ஒன்றும் தவறில்லை என்றாலும், இவற்றை மட்டுமே அவர்களின்மீது திணிக்கக்கூடாது என்கிறார் புகழ்பெற்ற சிறுவர் எழுத்தாளரான லிபி க்ளீசன் அவர்கள். இதற்கான காரணமாக லிபி க்ளீசன் குறிப்பிடுவது, உலகமும் குழந்தைகளும் நிறையவே மாறிவிட்டார்கள் என்பதாகும். ஆம், அன்று உங்களுக்கு விருப்பமான ஒரு புத்தகம், இன்று உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

குழந்தைகளுக்கான வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி நாமும் அவர்களுடன் சேர்ந்து வாசிப்பதாகும். இன்னும் சொல்லப்போனால் அவர்களது கதைப் புத்தகத்தை வாங்கி, நல்ல உற்சாகத்துடன் அவர்களுக்குப் படித்துக்காட்டுவதும் நல்லதொரு முயற்சியே. அதிலும் கதையில் வரும் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு வெவ்வேறு குரலில் மாடுலேஷன்களைக் கொண்டுவருவது நல்லது.

எந்த மாதிரியான புத்தகங்கள் எவ்வாறான நன்மையை கொடுக்கும் என்பதற்கான அடிப்படை ஞானத்தை வளர்த்துக்கொள்வது புத்தகத் தேர்விற்கான சிறந்த அடித்தளமாக அமையும். அதாவது பெரும் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள், அவர்களின் வாழ்க்கையைப்பற்றி அறிந்துகொள்வதோடு, கடினமான தருணங்களை எதிர்கொள்வதற்கான வலிமையையும் தைரியத்தையும் நமக்குக் கற்றுக்கொடுக்கும். சுயமுன்னேற்றப் புத்தகங்கள் நமக்கான ஊக்கத்தை அதிகரித்து நம்மை நேர்மறையாகச் செயல்படத் தூண்டும். வரலாற்றுப் புத்தகங்கள் உலகளவிலான நமது புரிதலை மேம்படுத்தும். இலக்கியம், கதை போன்றவை நமது கற்பனைத்திறனை மேம்படுத்தி, மொழியறிவினை வளரச்செய்யும்.

இவையெல்லாம் பெரிய மலை போல் உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியானால், உங்களுக்கான வாசிப்புப் பழக்கத்தை கொண்டுவர, முதலில் உங்களது வாசிப்பு வளையத்திற்குள் வெறுமனே அன்றாட செய்தித்தாள்களை கொண்டுவர முயற்சிசெய்யுங்கள். இது உங்களது பொது அறிவினை வளர்ப்பதோடு, உலகளாவிய விஷயங்களையும் அறிந்துகொள்ள உதவும். இதுவே உங்களது வாசிப்புப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.

நமது அடிப்படை ஆர்வம் அல்லது நமது துறை சார்ந்த படைப்புகளை மட்டுமே நமது வாசிப்பு வளையத்திற்குள் வைத்துக்கொள்ளாமல், பல்துறை படைப்புகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், முற்றிலும் சம்பந்தமில்லாத தேவையற்ற புத்தகங்களை நமக்கான வாசிப்பு வளையத்திற்குள் திணிப்பதை விட்டுவிட்டு, நமக்குப் பிடித்த உணவு வகைகளை எவ்வாறு விரும்பித் தேர்வு செய்கிறோமோ, அதுபோல நமக்கான புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும். சில ஆண்டுகளுக்குப் பிறகு நமது புத்தகச் சேகரிப்பைத் திரும்பிப் பார்க்கும்போது, பல வண்ண மலர்களோடு பூத்துக் குலுங்கும் நந்தவனம் போல, பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்களோடு நமது சேகரிப்பும் இருக்கவேண்டும். இவை நமக்கு மட்டுமல்ல நமது எதிர்கால சந்ததியினருக்கும் நாம் விட்டுச்செல்லும் மாபெரும் சொத்து என்ற மனநிறைவோடு இதனை மேற்கொள்ளவேண்டும்.

எதையாவது வாசிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளர்த்துக்கொள்வதே, எதை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கி, எதையும் வாசிக்க முடியும் என்ற வழக்கத்தைக் கொண்டுவரும்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *