Skip to content
Home » முறிந்த பேனா #9 – கழுத்துடைப்பும் கழிவுநீர் தொட்டியும்

முறிந்த பேனா #9 – கழுத்துடைப்பும் கழிவுநீர் தொட்டியும்

புத்தாண்டு இரவில் காணாமல் போன அந்தப் பத்திரிகையாளரை 3ஆம் தேதி வரை தேடிக்கொண்டே இருந்தது காவல்துறை. அதோ! அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே! என்ன இது, புதிதாக பூசப்பட்ட செப்டிக் டேங்கா? திடீரென ஒரு சந்தேகம். உடையுங்கள் இதை என்று உத்தரவிட்டார் ஆய்வாளர். உடைத்துப் பார்த்தால் உண்மை தெரிந்தது.

ஆம், உண்மை அங்கே உயிரற்ற உடலாய், சிதைக்கப்பட்ட மிச்சமாய் அந்தக் கழிவுநீர் தொட்டிக்குள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தது. ஊருக்கே செய்தி சொன்ன நபர் ஒரு சலனமும் இல்லாமல் உயிரிழந்து கிடந்தார். யார் இவர்?

அட, மாவோயிஸ்டுகளால் பிணை வைக்கப்பட்ட கோப்ரா கமாண்டரை விடுவிக்கும் பணியில் அரசுத் தரப்பில் இடைமுகமாக செயல்பட்ட முகேஷ் சந்திரகரா இது? துடிப்பான, ஊரறிந்த இளம் பத்திரிகையாளர். இவருக்கு ஏன் இப்படி? என்னதான் நடந்தது?

நாம் தொடங்க வேண்டிய நாள் 1 ஜனவரி 2025. முகேஷ் சந்திரகர். பிறந்தது 4 ஜூலை 1991 அன்று. சத்தீஸ்கர் மாநிலம், பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பசகுடா என்ற கிராமம். பத்தாண்டுகளுக்கும் மேலாக இதழியலில் இருந்தவர். என்டிடிவியில் சுயாதீனமாகப் பணிபுரிந்து வந்தார். அத்துடன், சொந்தமாக பஸ்தார் ஜங்ஷன் எனும் பெயரில் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வந்தார். அந்த சேனலில் 1.59 லட்சம் சந்தாதாரர்கள் இருந்தனர். அவர்களுக்காகத் தனிப்பட்ட கவனத்துடன் பொறுப்பாக செய்திகள் வெளியிட்டு வந்தார்.

சுற்றுச்சூழல் சேதம், நக்சல் பிரச்னை, ஊழல் என்று யாரும் போகாத இடங்களுக்குச் சென்று புதிய கோணங்களில் செய்தி சேகரிப்பவர். இதற்காகவே, இவருடைய பஸ்தாதர் ஜங்ஷன் சேனலுக்கு பல பிரத்தியேக நேயர்கள் இருந்தனர்.

டிசம்பர் 2024. முகேஷ் சந்திரகர் மத்வேண்டி பகுதிக்குச் சென்றிருந்தார். அங்கே ஆறு மாத குழந்தையொன்று சண்டையில் இறந்திருந்தது. வேலையை முடித்துவிட்டு திரும்பும்போது, புதிதாகப் போடப்பட்ட கங்காலூர் மிர்தோர் சாலையின் நிலையைக் கண்டார். ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்ட சாலை அது. ஆனால் அரைகுறையாக, தரக்குறைவாக, கட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து என்டிடிவியில் பணிபுரியும் தனது நண்பரும் நிருபருமான நிலேஷ் திரிபாதியுடன் இணைந்து, ‘ஒப்பந்ததாரர் யார்? எவ்வளவு தொகை? இதே அளவுக்கு ஒரு தரமான சாலையை அமைக்க நியாயமாக ஆகும் செலவு என்ன?’ என்று விளக்கி அந்த ஊழலை ஆவணப்படுத்தினார்.

உலகம் கிறிஸ்துமஸ் கொண்டாடிக்கொண்டிருந்த நாளில் (டிசம்பர் 25, 2024) அந்தச் செய்தி என்டிடிவியில் ஒளிபரப்பானது. விளைவு, அடுத்த நாளே அரசு விசாரணையைத் தொடங்கியது. ஒப்பந்ததாரர் விசாரணைக்கு உள்ளானார். அங்கிருந்துதான் முகேஷ்மீது திரும்பியது கோபம்.

அந்த ஒப்பந்ததாரர் பெயர் சுரேஷ் சந்திரகர். இவர் முகேஷ் சந்திரகரின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில் வேறு, உறவு வேறு என்று வேறுபடுத்த முகேஷுக்கு மட்டும்தான் தெளிவிருந்தது போலும். அடுத்த 5 நாட்களுக்குள் இந்தக் கோபம் பகையாக வளர்ந்தது.

அன்று புத்தாண்டு. ரிதேஷ் சந்திரகரிடமிருந்து அழைப்பு. (ஒப்பந்ததாரர் சுரேஷின் தம்பி). ‘வாருங்கள், சாப்பிட்டபடி பேசுவோம்.’ பீஜாப்பூரில் உள்ள சாத்தன்பரா பகுதியில் சுரேஷ் சந்திரகரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்தச் செய்தி வெளியீட்டால் நம் குடும்பத்துக்குள் நடந்த பிரச்சினை குறித்துப் பேசுவோம் என்று சொல்லி அழைத்ததாக பின்னர் ஆர்எஸ்எஃப் அமைப்பின் விசாரணையில் சொல்லப்பட்டது. ஆனால், அந்த வாக்குவாதம் எப்படி முடிந்தது என்பதைச் சொல்ல யாருமில்லை.

இந்தியா டுடே வெளியிட்ட உடற்கூராய்வு அறிக்கையின்படி, தலையில் 15 இடங்களில் எலும்பு முறிவுகள். 5 விலா எலும்பு முறிவுகள். கழுத்து முற்றிலுமாக ஒடிந்திருந்தது. கம்பியால் இதயம் துளைக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திலேயே இறந்துபோனார் முகேஷ்.

இறந்த உடலை கழிவுநீர் தொட்டிக்குள் வைத்து மூடினர். அதன் மேல், புதிதாக சிமெண்ட் கலவை ஊற்றி நிரந்தரமாக மூடினார்கள். அது நிரந்தரம் என்று நினைப்பு. இப்படிச் செய்தால் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று எண்ணியிருக்கலாம்.

ஹைதராபாத் சென்றுவிட்டார் சுரேஷ். ரிதேஷும் சத்தீஸ்கரில் இல்லை. ஆனால், புத்தாண்டு இரவன்று சொல்லிவிட்டுப் போன தன் சகோதரன் வராததால் 2ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்தது முகேஷின் குடும்பம்.

கடைசியாக எங்கு போகிறார் என்று சொல்லிவிட்டுப் போனதால், நேரடியாக அங்கு சென்று ஆய்வு செய்தது காவல்துறை. ஜனவரி 3ஆம் தேதி, சுரேஷின் இல்லத்தில் இருந்த கழிவுநீர்த் தொட்டியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் முகேஷ்.

ஒப்பந்ததார சகோதரர்கள் ரிதேஷ் சந்திரகர், தினேஷ் சந்திரகர், மேற்பார்வையாளர் மஹேந்திர ரம்டேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கியக் குற்றவாளியான சுரேஷ் சந்திரகர் தப்பி ஓடினார். காவல்துறை விடவில்லை. ஜனவரி 7 அன்று ஐதராபாத்தில் சுரேஷையும் கைது செய்தது.

ஆக மொத்தம் 4 பேர் கைது. இதற்காக 11 உறுப்பினர்கள் கொண்ட எஸ்ஐடி அமைக்கப்பட்டது. விரைவான பணி. அத்துடன், அப்போதைய சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ்சாய், முகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்தார்.

ஆனால் வழக்கின் நிலை என்ன? வழக்கமாகவே வழக்கின் நிலை பத்திரிகையாளர் கொலை விவகாரங்களில் மந்தமாக இருக்கும் என்பது நடைமுறை. இந்த வழக்கில் கொஞ்சம் வேகம்தான். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்த 3 மாதங்களுக்குள் அதாவது மார்ச் 18, 2025 அன்றே பீஜாப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. விவரங்களும் பின்னணி தொடர்புகளும் மிக அதிகம் என்று பேசப்பட்டன. மொத்தமாக சுமார் 1,200 பக்கங்கள். எழுபதுக்கும் மேற்பட்ட சாட்சிகள் இருந்தன. சொல்வதற்கு அவ்வளவு இருந்தது அந்த வழக்கில்.

நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சுரேஷ் சந்திரகர், ரிதேஷ் சந்திரகர், தினேஷ் சந்திரகர், மஹேந்திர ரம்டேக். இந்த வழக்கைக் கையாண்ட சிறப்புப் புலனாய்வு படையின் தலைவரும் கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான மயங்க் குர்ஜார், ‘டிஜிட்டல் மற்றும் நேரடி ஆதாரங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டன. நான்கு குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை கிடைக்க உறுதியாக உழைப்போம்’ என்று கூறினார்.

இன்னும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. 30 ஜூலை 2025 அன்று, முகேஷ் சந்திரகர் கொல்லப்பட்டு 7 மாதங்கள் கழித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சாலை கட்டுமான ஊழலில் நேரடிப் பங்கு வகித்தவர்கள். இரண்டு ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்கள், இரண்டு தற்போதைய தலைமைப் பொறியாளர்கள், ஒரு துணைப்பிரிவு அதிகாரி, ஒரு துணை பொறியாளர்.

எனவே, இது வெறும் உறவினர்களுக்கு இடையிலான பிரச்னை அல்ல. அப்படிப் பேசி, இந்தக் கொலையை மடைமாற்ற நடந்த முயற்சிகளுக்கு பதிலளித்தன இந்தத் தொடர் கைது நடவடிக்கைகள்.

இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா இரண்டும் கடுமையாகக் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்று அறிக்கை வெளியிட்டன. ‘குறிப்பாக, புலனாய்வு மற்றும் களப் பணியில் ஈடுபடும் நிருபர்களை அரசு பாதுகாக்க வேண்டும்’ என்று கோரின.

‘சத்தீஸ்கர் ஏற்கெனவே இந்திய நிருபர்களுக்கு மிகவும் ஆபத்தான மாநிலங்களில் ஒன்று. 2024ஆம் ஆண்டிலும் இங்கே நிருபர்கள்மீது வன்முறை நடந்தது. இந்தக் கொலை அதன் தொடர்ச்சி’ என்று ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் சொன்னது.

பத்திரிகையாளர் பாதுகாப்பு விவகாரத்தில் உலக அரங்கில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமானது. அதிலும் முகேஷ் சந்திரகர் கொலை, 2025ஆம் ஆண்டில் உலகிலேயே முதல் பத்திரிகையாளர் கொலை என்பது இன்னும் கூடுதல் அவமானம்தான்.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. மேலதிக விவரங்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. குடும்பம் நீதிக்காகக் காத்திருக்கிறது. நீதி, தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *